Tamil Bayan Points

29) 36 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

36 வது வசனம்

36. பூமி முளைக்கச் செய்வதிலிருந்தும் அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன்.

மனிதர்கள் மட்டுமின்றி தாவரங்களிலும் மனிதர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகளை படைத்திருப்பதாக மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

இவ்விஷயம் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் அறியமுடியாததாக இருந்தாலும் இன்றைய காலத்தில் ஆராய்ச்சி செய்து அறியமுடியும்.

இன்றைய அறிவியல் தாவரங்களிலும் ஜோடி உண்டு என்றும் மின்சாரத்திலும் பாசிடிவ், நெகடிவ். மேலும் அணுக்களில் புரோட்டான், எலக்ட்ரான் ஆகிய ஜோடிகள் உண்டு என்றும் கண்டுபிடித்துள்ளனர். அல்லாஹ் கூறுவது போன்று மேலும் பல ஆய்வுகளை செய்து அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகளை கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இவ்வசனம் அமைந்துள்ளது.

மேலும் இந்த வசனத்தின் துவக்கத்தில் “(ஸுப்ஹான) அல்லாஹ் தூயவன்” என்று உள்ளது.

இதில் கூறப்படும் தூய்மை நம்முடைய தூய்மை போன்றதல்ல. அல்லாஹ்வுடைய தூய்மை தவறுகளுக்கு அப்பாற்பட்டது. மனிதனுக்கு இருக்கின்ற எந்த பலவீனங்களும் அல்லாஹ்வுக்கு இருக்காது. தூக்கம், கவலை, பசி, போன்ற எதுவும் இருக்காது.

இது போன்ற அனைத்து பலவீனத்தை விட்டும் தூய்மைப்படுத்துவதற்குதான் “(ஸுப்ஹான) அல்லாஹ் தூயவன்” என்ற வார்த்தை கூறப்படும். எனவேதான் இந்த வார்த்தையை கூறுவதற்கு அதிகமான நன்மைகள் உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை: சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.

பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கின்றேன்.

நூல் புகாரி-6406

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை; நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். (அவை:) 1.சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்). 2.சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்).

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் புகாரி-7563

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் புகாரி-6405

இது போன்ற வார்த்தைகள் நன்மைகளை அதிகமாக பெற்றுத் தரக்கூடியதாகும். எனவே நம்முடைய ஓய்வு நேரங்களில் இவற்றை அதிகமாக கூறவேண்டும்.