Tamil Bayan Points

29) சொல்வன்மையும் நெஞ்சுறுதியும்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

Last Updated on September 30, 2022 by Trichy Farook

29) சொல்வன்மையும் நெஞ்சுறுதியும்

சமுதாயத்தைத் தடம் புரள விடாமல் கட்டுக் கோப்புடன் கொண்டு செல்லும் நெஞ்சுறுதியும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டுவதற்குச் சிறந்த நாவன்மையும் பெற்றவர்களாக அபூபக்ர் (ரலி) திகழ்ந்தார்கள்.

நபித்தோழர்களுக்கு மத்தியில் ஆட்சித் தலைவரை தேர்வு செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமுதாயம் பிளவுபடும் நிலை ஏற்பட்ட போது அவர்களது சொல் வன்மையின் காரணத்தினால் தான் சமுதாயத்தை அவர்கள் ஓரணியில் திரட்டினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

உமர் (ரலி) அவர்கள் பேசப் போனார்கள். உடனே அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் மௌனமாக இருக்கச் சொல்லி விட்டார்கள். ( இதைப் பிற்காலத்தில் நினைவு கூறும் போது) உமர் அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக நான் பேச முயன்றது எதற்காக என்றால் நான் எனக்குப் பிடித்த பேச்சு ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தேன்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த அளவிற்குப் பேச மாட்டார்கள் என்று நான் அஞ்சினேன். அதனால் தான் நான் பேச முயன்றேன் என்று கூறி வந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசினார்கள். மக்களிலேயே உறை நயமிக்கவர்களாக அவர்கள் பேசினார்கள்.

நூல் : புகாரி-3668 

இது மட்டுமல்லாமல் நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு நபி (ஸல்) அவர்கள் இன்னும் மரணிக்கவில்லை என்றக் கருத்தில் உமர் (ரலி) அவர்கள் உட்பட பலர் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் கட்டாயம் மரணம் ஏற்படும் என்று கூறும் குர்ஆன் வசனம் அப்போது எவருடைய சிந்தனைக்கும் வரவில்லை.

ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆதாரங்களைக் குர்ஆனில் இருந்து எடுத்துக் காட்டி நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட சமுதாயத்தையும், கொள்கையையும் பாதுகாத்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் ஸ‚ன்ஹ் என்னும் இடத்தில் இருந்து கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித் தான் நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி (ஸல்) அவர்கள் இறந்து வி

ட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள் என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு தங்களுக்கு என் தந்தையும் தாயும் அற்பணமாகட்டும். நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள்.

என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவனின் மீது ஆணையாக அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை உங்களுக்குச் சுவைக்கச் செய்ய மாட்டான் என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள். (வெளியே வந்த பிறகு உமர் (ரலி) அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே நிதானமாயிருங்கள் என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசிய போது உமர் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றிவிட்டு எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும்.

அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன். அவன் இறக்க மாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள். மேலும் நபியே நீங்களும் இறக்கவிருப்பவர் தாம். அவர்களும் இறக்க விருப்பவர்களே என்னும் (39 : 30) என்ற இறை வசனத்தையும் முஹம்மது ஒரு இறைத் தூதரே அன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத் தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே அவர் இறந்து விட்டாலோ அல்லது (போரில்) கொல்லப்பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால்சுவடுகளின் வழியே (பழைய மார்க்கத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா?

(நினைவிருக்கட்டும்) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கிறானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதிபலனை மிக விரைவில் வழங்குவான் என்னும் (3 : 144) இறைவசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டை அடைக்க) விம்மி அழுதார்கள்.

நூல் : புகாரி-36673668

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

அல்லாஹ்வின் மீதாணையாக அபூபக்ர் (ரலி) இவ்வசனத்தை அங்கும் ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) அவர்கள் மூலமாகத் தான் இதை அவர்கள் அறிந்து கொண்டதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள்.

நூல் : புகாரி-1242