Tamil Bayan Points

28) 33, 34, 35 வது வசனங்கள்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

33, 34, 35 வது வசனங்கள்

33. இறந்த பூமி அவர்களுக்கு ஓர் சான்று. அதை நாம் உயிர்ப்பிக்கிறோம். அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர்.

34, 35. அதில் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை அதன் கனிகளை அவர்கள் உண்பதற்காக ஏற்படுத்தினோம். அதில் ஊற்றுகளையும் பீறிட்டு ஓடச் செய்தோம். அதை அவர்களின் கைகள் தயாரிக்கவில்லை. அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?

இதில் 33 வது வசனத்தில் உள்ள இறந்த பூமியை உயிர்ப்பித்தல் என்பது பற்றி முந்தைய வசனங்களின் விளக்கத்திலேயே நாம் பார்த்துவிட்டோம்.

அதைத் தொடர்ந்து 34, 35 வது வசனங்களில் பேரீட்சை, திராட்சை போன்றவற்றை வழங்கியதை எடுத்துக் கூறி தனக்கு ஏன் நன்றி செலுத்தாமல் இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்புகிறான். இதை கருத்தை மேலும் சில வசனங்களிலும் பிரதிபலிக்கிறான்.

உணவைப் பற்றி சிந்தித்தல்

நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா?

நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?

நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம். “நாம் கடன்பட்டு விட்டோம்! இல்லை! நாம் தடுக்கப்பட்டு விட்டோம்” என்று (கூறி) அப்போது கவலையில் ஆழ்ந்து விடுவீர்கள்.

(அல்குர்ஆன் : 56:63,64,65,66,67.)

இது ஓர் அழகிய நினைவூட்டலாகும்

உண்ணும் உணவை நாம் பயிரிட்டாலும் அதை முளைக்கச் செய்வது அல்லாஹ்வின் விருப்பம்தான். “தான் விரும்பாவிட்டால் அதை முளைக்காமல் செய்து விடலாம் என்றிருந்தும் கூட நான் அதை முளைக்கச் செய்கிறேன். ஆனால் நீங்கள் எனக்கு நன்றி செலுத்தமால் இருக்கிறீர்களே?” என சிந்திக்கும் வகையில் அல்லாஹ் கேட்கிறான்.

குடிநீரை பற்றி சிந்தித்தல்

மேலும் குடிநீரை பற்றியும் சிந்திக்குமாறு அல்லாஹ் கூறுகிறான்.

நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா?

நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நன்றி செலுத்த மாட்டீர்களா?

(அல்குர்ஆன் : 56 : 68,69,70.) 

குடிக்கும் நீரை அல்லாஹ் நினைத்தால் உப்பு நீராக ஆக்கிவிடலாம்.

அவ்வாறு ஆக்கினால் நாம் மிகவும் சிரமத்திற்கு ஆட்படுவோம். பல அன்றாட தேவைகள் நிறைவேறாமல் போய்விடும். அப்படி செய்துவிடாமல் தண்ணீரை சிறந்த முறையில் வழங்கும் தனக்கு ஏன் நன்றி செலுத்தாமல் இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்புகிறான். எனவே இவற்றை உணர்ந்து அல்லாஹ்வுக்கு உரிய முறையில் நன்றி செலுத்தவேண்டும்.

நீரூற்று

மேலும் 34, 35 ஆகிய வசனங்களில் பேரீட்சை பற்றியும் ஊற்றுக்களை பற்றியும் கூறுகிறான்.

உதாரணமாக இன்றைய மக்கா நகரம் எவ்வித விவசாயத்திற்கும் தகுதி இல்லாத பாலைவனமாகும். எனினும் பல கனி வகைகள் அங்கே கிடைக்கிறது. மேலும் தண்ணீர் ஊறுவதற்கு சாத்தியமில்லாத இடத்தில் ஜம்ஜம் எனும் நீருற்றை உருவாக்கி அத்தாட்சியை ஏற்படுத்தியுள்ளான். இத்தகைய அருட்கொடைகளை உரிய முறையில் நினைவு கூறுமாறும் கூறுகிறான்.

நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன்.

(அல்குர்ஆன் : 14 : 34.) 

எண்ணமுடியாத அளவிற்கு அருட்கொடைகளை பெற்றுக் கொண்டு மனிதன் அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன் :100: 6.) 

எனவே மேற்கண்ட அத்தாட்சிகளை நினைவு கூர்ந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தவேண்டும்.