Tamil Bayan Points

28) பணப் பை

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

Last Updated on October 29, 2023 by

28) பணப் பை

உதாரணத்திற்கு சில:

1887ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகாசபைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பத்ருத்தீன் தயாப்ஜி தலைமை தாங்கினார். தலைமையுரையாற்றிய தயாப்ஜி, கட்சிப் பணிகளுக்காக பொருளுதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தார்.

உடனே தமிழகத்தைச் சேர்ந்த முஹம்மது அப்துல்லா பாதுஷா இரு நூறு ரூபாய் வழங்கினார்(விடுதலைப் போரில் முஸ்லிம்கள், வி.என்.சாமி பக் 431-439).

இருநூறு என்ற உடன் இது என்ன ஒரு பெரிய தொகையா? என அற்பமாகக் கருதிவிடக் கூடாது. அவர் கொடுத்த காலத்தில் அதற்கான மதிப்பு அதிகம். நூறு ரூபாய் செலவில் பிரம்மாண்டமான திருமணங்கள் நடந்த காலம்!

முக்கியத்துவம் வாய்ந்த குடியிருப்புப் பகுதிகளில் நூறு ரூபாய் கொடுத்து சொந்தமாக வீடுகளும் நிலங்களும் வாங்கப்பட்ட காலம்! நான்கு ரூபாய், ஐந்து ரூபாய்க்கு ஒரு பவுன் தங்கநகை விற்பனை செய்யப்பட்ட காலம். எனவே அவர் கொடுத்த தொகை அவர் கொடுத்த காலத்தில் ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதன் தன் வாழ்நாள் உழைப்பையே கொடுத்ததற்குச் சமம்.

1921 ஆம் ஆண்டு காந்தி தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். செப்டம்பர் 21 இல் மதுரை வந்த போது அவரிடம் போராட்ட நிதியாக பணமுடிப்பு ஒன்று வழங்கப்பட்டது. வழங்கியவர்கள் மதுரை முஸ்லிம் வாலிப சங்கத் தோழர்கள்.

(இ.வி.போ.த.மு, பக் 54)

1927-ல் சென்னை மக்கள் பூங்காவிலுள்ளஎஸ்.ஐ.ஏ.ஏ. மைதானத்தில்நடந்த பொதுக்கூட்டத்தில் பணமுடிப்பு வழங்கப்பட்டது. சென்னை டிராம்வே யூனியன் தொழிலாளர்களிடம் திரட்டப்பட்ட போராட்ட நிதியை அதன் தலைவர் எஸ்.ஏ. ஷாஃபி முஹம்மது காந்தியிடம் வழங்கினார்.

(இ.வி.போ.த.மு, பக் 54)

1934-ல் பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி, காந்தியடிகள் தேனி மாவட்டம் கோம்பைக்கு வந்தார். ஏழ்மை வாழ்வும் எளிமைக் கோலமும் கொண்ட அவ்வூர் முஸ்லிம்கள் காந்தியைச் சந்தித்து, இங்குள்ள முப்பது குடும்பத்தார் சார்பில் இருபது ரூபாய் நிதி திரட்டியிருக்கிறோம். இந்தச் சிறு நிதியை ஹரிஜன நிதிக்காக நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று காந்தியிடம் வழங்கினர்.

(வி.போ.த.மு, பக் 57)

அதே பயணத்தில் கம்பம் வந்தபோது ஆங்கூர் இராவுத்தர் என்றழைக்கப்படும் சி.ஏ.அப்துர் ரஹ்மான் அவர்களிடமிருந்து ஹரிஜன நிதிக்காக பெரும் பணத்தை காந்திஜி பெற்றுச் சென்றார்.

(இ.வி.போ.த.மு, பக் 116).

1920 ஆகஸ்ட் 16ல் கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தஞ்சை மாவட்டம் ராஜகிரி முஸ்லிம்களிடம் திரட்டப்பட்ட தொகையை அப்துல் மஜீத் சாஹிப் கிலாபத் நிதியாக காந்தியிடம் ஒப்படைத்தார்.

(வி.போ.த.மு, பக் 88)

1933 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி வட ஆற்காடு மாவட்டம் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஜில்லா போர்டின் தலைவர் நவாப் சி. அப்துல் ஹகீம் அவர்களைப் பார்த்து, அரிஜன நிதி எங்கே? பீகார் பூகம்ப நிதி எங்கே? என்று காந்தி கேட்டார்.

நாங்கள்அதற்காக வசூலிக்கவில்லையே என்ற பதிலைக் கேட்ட காந்தி, மேஜையை ஓங்கி தட்டியவராக பணம் வராமல் இங்கிருந்து நான் புறப்படமாட்டேன் என்றார். உடனே என் பங்காக இருநூறு ரூபாய் தருகிறேன் என்றார் நவாப் அப்துல் ஹகீம். அப்போதும் திருப்தியடையாத காந்தி, மேற்கொண்டு வாங்க வேண்டியதை நான் மதராஸ் வரும்போது உங்களிடம் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறிச் சென்றார்.

(வி.போ.த.மு, பக் 794)

1938ல் இவரது மறைவுக்காக தமிழக சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்த மாகாணப் பிரதமர் (அப்போது பிரதமர்தான் முதல்வர் இல்லை) ராஜாஜி அன்றிலிருந்து பதினேழு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்தார்.

மலபார் மாப்பிள்ளாக்களின் புரட்சியின்போது அப்துல் ஹகீம் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். சாதி மத வேறுபாடு காட்டாமல் எந்தவொரு சாக்குப் போக்கும் சொல்லாமல் உடனடியாக ஒரு பெருந்தொகையை அள்ளிக் கொடுத்தார் இந்த வள்ளல் பெருமகன் என வாழ்த்திப் பேசினார் ராஜாஜி.

(வி.போ.த.மு, பக் 795)

நவாப் அப்துல் ஹகீமிடம் பணியாற்றியவர் யாகூப் ஹஸன் சேட். இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர். கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட அனைத்து வகையான போராட்டங்களிலும் பங்கெடுத்தவர்.அதற்காக பலமுறை சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர்.

இவரது வருமானத்தை வைத்தே வாழ்க்கை நடத்த வேண்டிய நிலையில் இருந்த இவரது குடும்பத்தார், யாகூப் ஹஸன் ஒவ்வொரு முறை சிறை செல்லும் போதும் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.

இதை அறிந்த நவாப் அப்துல் ஹகீம் அவர்கள் இவர் நாட்டுக்காக சிறைக் கொடுமையைச் சுமக்கும் போதெல்லாம் அவரது குடும்பத்தின் பொருள் சுமையை நான் சுமந்து கொள்கிறேன் என்று சுமந்து கொண்டார்.

தனக்காக உழைத்தபோது கொடுத்த பணத்தை விட நாட்டுக்காக உழைத்தபோது அதிகம் கொடுத்தார். இது யாகூபின் குடும்பத்திற்கு நவாப் செய்த உதவியல்ல! நாட்டின் விடுதலைக்காக அவர் செய்த பொருளுதவி.

(வி.போ.த.மு, பக் 792)

காந்தியின் தலைமையில் கிலாபத் இயக்க நிதி திரட்டுவதற்காக அலி சகோதரர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்த காலம். அப்போது திருச்சியைச் சேர்ந்த மிகப் பெரும் தோல் வணிகரும் திருச்சியில் இன்று கம்பீரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ஜமால் முஹம்மது கல்லூரியின் நிறுவனர்கள் இருவரில் ஒருவரும் இந்திய சாம்பர்ஸ் ஆப் காமர்ஸின் தலைவருமான ஜமால் முஹம்மது இராவுத்தரை தலைவர்கள் அனைவரும் கூட்டாக வந்து சந்தித்தனர்.

அவருடைய பங்காக எவ்வளவு தரப் போகிறாரோ என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு காரியத்தை அவர் செய்தார்.

நிரப்பப்படாத வெற்றுக் காசோலை ஒன்றை எடுத்து அதில் கையெழுத்திட்டு முன்னால் இருந்த ராஜாஜியிடம் நீட்டினார். அவ்வளவு தான் அங்கிருந்த அனைவரும் ஆடிப் போய் விட்டனர். எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் தான் கொடுக்கும் பணம் எவ்வளவு என்பதை அறிந்துதான் கொடுப்பார்கள்.

ஆனால் இவர்? எனது செல்வத்தில் எவ்வளவு தேவையோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார். வெற்றுக் காசோலைக்கு அர்த்தம் அதுதானே! (இ.வி.போ.த.மு, பக் 118 முப்பெரும் வள்ளல்கள் வள்ளல் ஜமால் முஹம்மது அவர்களது பேரர் கு.ஜமால் எழுதியது)

அவரது வள்ளல் தன்மையைப் பார்த்து வாயடைத்துப் போன காந்தி, ஜி.டி.பிர்லாகூட இப்படி வெறுங்காசோலையைத் தந்ததில்லை என்றார். அந்தக் காசோலையில், தலைவர்கள் ஒரு இலட்சம் ரூபாய் நிரப்பி எடுத்துக் கொண்டதாக தகவலறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

(இ.வி.போ.த.மு, பக் 118)

1931ல் லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் காந்தியுடன் இவரும் கலந்து கொண்டார். அதுவும் காந்தியின் வால் பிடித்து ஒட்டிக் கொண்டு அல்ல. பிரிட்டீஷ் பிரதமரிடமிருந்து நேரடியாக வந்த அழைப்பின் பேரில் பங்கெடுத்தார்.

பிரிட்டீஷ் அரசின் மீதான மக்களின் குமுறல்களையும் குற்றச் சாட்டுகளையும் அங்கே பதிவு செய்தார். குறிப்பாக இங்கிலாந்தின் பொருளாதார நடவடிக்கைகளை விமர்சித்தார். இந்தியாவின் இராணுவச் செலவுகளை அதிகரித்துக் கொண்டே செல்வது பெரும் ஆபத்தானது. அதைச் சரி செய்வதற்காக மக்களின் தலையில் வரிச் சுமை ஏற்றப்படுகிறது. எனவே அதை இங்கிலாந்து அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.

மாகாண சட்ட மன்றங்களில் இயற்றப்படும் தீர்மானங்களை மீறுவது, தங்களுக்குப் பிடித்தமில்லாததை இரத்து செய்வது போன்ற அத்து மீறும் நடவடிக்கைகளை ஆங்கில அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.(பேராசிரியர் டாக்டர் கே.எஸ்.உதுமான் முகையதீன் சம உரிமை மாத இதழ்-ஜூன்2010 இ.வி.போ.த.மு, பக் 118 முப்பெரும் வள்ளல்கள்)

வட்டமேஜை மாநாடு என்றாலே அதில் காந்தி பேசப்படுகிறார். மாநாட்டில் பேசிய ஜமால் முஹம்மது மக்களால் அறிந்து கொள்ளப்படாதவராகவே இன்னமும் இருக்கிறார்.

கடல் வணிகத்தில் ஆங்கில ஆதிக்கத்தை வீழ்த்துவதற்காக, சொந்தமாகக் கப்பல் வாங்கி வணிகம் செய்யலாம் என முடிவெடுத்தார் வ.உ.சிதம்பரம் பிள்ளை. அதற்கென ஒரு குழு அமைத்து சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி என்ற பெயரில் 16-11-1906ல் அது பதிவு செய்யப்பட்டது. இக்கம்பெனியின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழ்ந்தவர்கள் முஸ்லிம்களே.

ஒரு பங்குக்கு 25 ரூபாய் வீதம் 40,000 பங்குகள் பெற்று நிறுவனத்தை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அதில் ஹாஜி. ஏ.ஆர். பக்கீர் முஹம்மது சேட் என்ற ஒரேயொரு முஸ்லிம் வணிகர் மட்டுமே தனது கம்பெனியின் சார்பாக இரண்டு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள எட்டாயிரம் பங்குகளை வாங்கினார்.

அவரேதான் கம்பெனியின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். இது குறித்து 20.10.1906 அன்று பாரதியார் தனது இந்தியா பத்திரிக்கையில் இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டார்.

இந்தக் கம்பெனியின் பிரசிடெண்ட் பாலவனந்தம் ஜமீந்தார் மிஸ்டர் பாண்டித் தேவர், மெஸர்ஸ் ஹாஜி. பக்கீர் முகம்மது சேட் கம்பெனியாரே செக்ரடெரிகள், அசிஸ்டண்ட் செகரடெரியாக தூத்துக்குடி வக்கீல் மிஸ்டர் சிதம்பரம் பிள்ளை நியமிக்கப்பட்டிருக்கிறார்.(இந்தியா பத்திரிக்கை 20-10-1906 பாரதியார் தி.நி.ப பக் 107,108)

வ.உ.சி. தன் கவிதைத் தொகுப்பிலும் பக்கீர் முஹம்மதைப் பற்றி உயர்வாகக் குறிப்பிடுகிறார். முதலில் இதற்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இவர்கள் இந்தத் தொழிலில் அனுபவம் இல்லாத புதியவர்கள். எனவே நமது பணமும் அதில் செல்லும் மக்களின் பயணமும் பாதுகாப்பாக அமையுமா என்ற சந்தேகம் மக்களுக்கு இருந்தது. அந்த அச்சத்தைப் போக்கி மக்கள் வருவதற்கு காரணமாக இருந்தவரும் பக்கீர் முஹம்மது தான் என்று வ.உ.சி. கூறுகிறார்.

அணுகிய தந்தாள் ஆஷியாட்டிக் கப்பல்

நணுகிய சரக்கெல்லாம் நயமுறை ஏற்றினர்

பாக்கிய மிகுந்த பக்கிரி முகம்மதை

வாக்கின் வலிமையால் வசப்படச் செய்தான்

வணிகர் பலரையும் வருந்தி அவனிலம்

துணிவோடு சுதேசிய நாவாய்ச் சங்க

நன்மலர் கண்டேன். (இ.வி.போ.த.மு, பக் 95)

ஆங்கிலேயர்கள் சுதேசிக் கப்பலின் போட்டியைச் சமாளிப்பதற்காக சலுகைகளை வாரி இறைத்தனர். பயணக் கட்டணத்தைக் குறைத்தனர். இந்தியா மற்றும் இலங்கையில், இதில் பயணிப்பவர்களுக்கும் சரக்குகளை அனுப்புகிறவர்களுக்கும், இரயில் பயணம் இலவசம் என்று அறிவித்தனர்.

பிரிட்டீஷ் பேரரசு எனும் ஜாம்பவானின் வணிக நிறுவனத்தோடு போட்டியிட்டு ஜெயிக்க முடியாத சுதேசிக் கப்பலும் நேவிகேஷன் கம்பெனியும் நஷ்டத்தில் வீழ்ந்தது.

தூத்துக்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட கப்பலின் பயணம் வெகு சீக்கிரத்திலே முடிந்து போனது. அதில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கிய பக்கீர் முஹம்மது அவர்கள் பெரும் இழப்பைச் சந்தித்தார். அதனால் அவர் அடைந்த துன்பத்தை

வ.உ.சியின்எழுப்பிய பணமெல்லாம்இழுத்த கப்பல்பார்த்தால் கணக்கை பயந்தான் பக்கிரி ஆர்த்தான் இடித்தான் அழுதான் படுத்தான் என்ற வரிகள் கூறுகின்றன.

அழுது துடிக்கும் அளவுக்கு அளவு கடந்த நஷ்டத்தை அனுபவித்தார். ஆங்கில ஆதிக்கத்தை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஏற்பட்ட இழப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது.

தேனி, கம்பம் உத்தமபாளையம் பகுதிகளில் கப்பல் கம்பெனிக்கு பங்கு சேர்ப்பதற்காக சுப்பிரமணிய சிவா, சர்க்கரைச் செட்டியார், வ.உ.சி. ஆகியோர் வந்த போது கோம்பையைச் சேர்ந்த உ.ம.சே.முஹைதீன் பிள்ளை சாஹிபு அவர்கள் வந்தவர்களை தமது இல்லத்தில் தங்க வைத்து அக்கம் பக்கத்து தனவந்தர்கள் பலரையும் பங்குதாரர்களாக சேர்த்து விட்டார்.

(தி.நி.ப பக் 106)

ஏ.எம்.செய்யது இப்ராஹீம், திண்டுக்கல் ஏ. அசன் உசைன் இராவுத்தர், இராமநாதபுரம் சீனு அசனுசைன் இராவுத்தர் ஆகியோர் நேவிகேஷன்கம்பெனியின் இயக்குனர்களாக இருந்துள்ளனர். இதிலிருந்தே சுதேசி கப்பலில் முஸ்லிம்களின் பங்களிப்பை உணர்ந்து கொள்ளலாம்.

(இ.வி.போ.த.மு, பக் 96)

போராட்டத் தேவைகளுக்காக புதுப் புது வகைகளில் நிதி திரட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த வகையில் 1943ல் ரங்கூனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நேதாஜிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் போராட்ட நிதிக்காக ஏலம் விடப்பட்டது. அதில் ஒரு மாலையை மூன்று லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தவர் சென்னையில் வாழும் அமீர் ஹம்ஸா.

இவர் நேதாஜியின் நூல்களால் கவரப்பட்டு சுதந்திரப் போரில் குதித்தவர். தனது 21 வயதில் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து நாட்டுக்காக பல போர்க்களங்களை சந்தித்தவர். இவர் ஏலத்திற்குக் கொடுத்த தொகை மாலைக்கு உரியதல்ல. மகத்தான விடுதலைக்காகக் கொடுக்கப்பட்டது.

(தினமணி சுதந்திரப் பொன்விழா மலர் பக் 69 தி.நி.ப பக் 103)

1921 மார்ச் 31 அன்று அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் விஜயவாடாவில் கூடியது. அதில் போராட்ட வகைக்காக திலகர் சுயராஜ்ய நிதி என்ற பெயரில் ஒரு கோடி ரூபாய் நிதியும், கட்சியில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்த்திட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

தேசத்தின் பெருங்கொண்ட பணக்காரர்கள் பலரும் தமது பங்கை வழங்கிக் கொண்டிருந்தனர். ஜெயநாராயணன் இந்து முல்தானி 5 லட்சம், ஏ.பி. காட்ரெஜ் 3 லட்சம், ஆனந்திலால் போதார் 2 லட்சம், சேட் ஜமன்லால் பஜாஜ் ஒரு லட்சம் என பணம் வசூலாகிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் மும்பையைச் சேர்ந்த பஞ்சாலை அதிபர் உமர் சுபஹானி நேரடியாக காந்தியைச் சந்தித்து ஒரு காசோலையை வழங்கினார். அதில் எழுதப்பட்டிருந்த தொகையைப் பார்த்த காந்தி ஒரு நிமிடம் இமை கொட்டவே மறந்திருப்பார். ஏனெனில் இந்தியா முழுவதும் திரட்ட வேண்டும் என்று திட்டமிடப்பட்ட தொகை மொத்தத்தையும் அவர் ஒருவரே அதில் எழுதியிருந்தார்.

அவரது வள்ளல் தன்மையைப் பார்த்து வியந்து போன காந்தி சொன்னார், இந்த நிதியில் நாட்டு மக்கள் அனைவருடைய பங்கும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன், ஆகையால் நீங்கள் கொடுக்க விரும்பும் பணத்தை கொஞ்சம் குறைத்துக் கொடுங்கள் என்றார்.

சென்னையில் அச்சிடப்பட்ட ஆனந்த சுதந்திரம் என்ற நூலின் ஆசிரியர் உதியன் தனது நூலில் இதை நம்ப முடியாத உண்மை என்று வர்ணிக்கிறார்.

அதன் பிறகு நிதி திரட்டுவதற்காக காந்தி மேற்கொண்ட சுற்றுப் பயணத்தில் உமர் சுபஹானியும் ஒருவராகசேர்த்துக் கொள்ளப்பட்டார். குறிப்பாக அதே ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தமிழகப் பயணத்தில் ராஜாஜி, டி.என்.எஸ்.ராஜன், யாகூப் ஹஸன் ஆகியோருடன் உமர் சுபஹானியும் தமிழகத்திற்கு வருகை தந்தார்(வி.போ.மு பக் 235-236 தி.நி.ப பக் 104,105 ஒரு துணி வியாபாரியின் கதை நிஜாமுத்தீன் ஜமாலி சிந்தனைச் சரம் நவம்பர் 1997 பக் 22,23 ஆனந்த சுதந்திரம் உதியன் 2006 பக் 188)

இதைக் கேள்விப்பட்டு ஆங்கில அரசு கொடுத்த நெருக்கடியால், 3,64,00,000 (மூன்று கோடியே அறுபத்தி நான்கு லட்சம்) ரூபாய் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதை உமர் சுபஹானியின் சகோதரி, பாத்திமா இஸ்மாயீல் மும்பையில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில்தெரிவித்தார். (இ.வி.போ.த.மு, பக் 61)

1943 ஜூலை 2. நேதாஜி பிரகடனம் செய்த ஆஸாத் ஹிந்த்-சுதந்திர இந்தியா எனும் லட்சியத்தை வென்றெடுக்க நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்று ரங்கூனில் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய நேதாஜி மக்களிடம் உதவி கேட்டு கோரிக்கை வைத்தார்.

உடனே கூட்டத்திற்கு வந்திருந்த வணிகர்கள் கூடி எங்கள் வருமானத்தில் பத்து சதவீதத்தை ஆஸாத் ஹிந்துக்காக அர்ப்பணிக்கிறோம் என்றனர்.

உடனே நேதாஜி நாட்டுக்காக இரத்தம் சிந்தும் நமது வீரர்கள் சதவீதத்தில் கணக்குப் பார்த்தா சிந்துகின்றனர்.? பணம் கொடுப்பவர்கள் சதவிகிதத்தில் கணக்குப்போடுகிறீர்களே என்று காட்டமாகக் கேட்டார்.

அதற்கிடையில் மேடைக்கு வந்தார் ஒரு முஸ்லிம் பெரியவர், நேதாஜியின் கையில் ஒரு சீட்டைத் திணித்தார். வாங்கிப் பார்த்தவர் வார்த்தைகளே வராமல் வாயடைத்துப் போனார்.

அப்படி என்ன எழுதப்பட்டிருந்தது என்று கேட்கிறீர்களா? ரங்கூன் நகரில் எனக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் சொத்துக்களை ஆஸாத் ஹிந்துக்காக அர்ப்பணம் செய்கிறேன் என்று எழுதியிருந்தார்.

அந்தப் பெரியவர். வரலாற்றிலே வள்ளல் என்றும் நேதாஜியால் ஹிந்த் சேவக் (இந்தியாவின் சேவகர்) என்றும் வர்ணிக்கப்பட்ட முஹம்மது ஹபீப் அவர்கள்தான் அந்தப் புகழுக்கும் பாராட்டுக்கும் சொந்தக்காரர்.

(நேதாஜியின் வீரப் போர் ஜெய சுப்பிரமணியம் பாகம் – 2 பக் 181 தி.நி.ப பக் 101)

இதுபோல வரலாற்று ஏடுகளில் ஒளிந்து கிடக்கும் தகவல்களெல்லாம் நமக்குச் சொல்கிற உண்மை, விடுதலைப் போர் வரலாற்றின் பொருளாதார முதுகெலும்பாக திகழ்ந்தவர்கள் முஸ்லிம்களே என்ற உண்மையைத்தான்.