Tamil Bayan Points

27) 32வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

32வது வசனம்

32. அனைவரும் ஒட்டுமொத்தமாக நம்மிடம் ஒன்று திரட்டப்படுவார்கள்.

உலகில் வாழும்போது மனிதர்கள் இறைவனை மறந்து வாழக் கூடாது என்பதற்காக மறுமையில் தன்னிடம் ஒன்று திரட்டப்படுவதை அல்லாஹ் நினைவூட்டுகிறான். இதை பல வசனங்களில் குறிப்பிடுகிறான்.

மறுமையில் ஸூர் ஊதப்படுதல்

ஸூர் ஊதப்படும் நாளில் பல கூட்டங்களாக வருவீர்கள்.

(அல்குர்ஆன் : 78 : 18.) 

அது ஒரே ஒரு சப்தம் தான்! உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள்.

(அல்குர்ஆன் 79 : 13,14

உறவுகள் முறிந்து விடும்

உலகில் இருந்த எந்த உறவு முறைகளும் அந்நாளில் இருக்காது. உலகில் நம்மை காப்பாற்ற பாடுபட்டவர்கள் அந்நாளில் உதவ மாட்டார்கள். அனைவரும் அரவணைப்பின்றி தனித்து விடப்படுவோம்.

ஸுர் ஊதப்படும் போது அவர்களிடையே அந்நாளில் எந்த உறவுகளும் இருக்காது. ஒருவரை யொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 23 : 101.) 

நண்பர்களும் பகைவர்களாக மாறிவிடுவார்கள்

உற்ற நண்பர்களாக இருந்தோரில் (இறைவனை) அஞ்சி நமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருந்தோரைத் தவிர (மற்றவர்கள்) அந்நாளில் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன் : 43 : 67,68.) 

உலகில் ஒருவருக்கொருவர் உதவி செய்த நண்பர்கள் கூட உதவாமல் தன்னுடைய நலனை மட்டும் கருதுமளவிற்கு அந்நாள் மிகவும் பயங்கரமானதாகும்.

இதை பற்றி நபி (ஸல்) அவர்களும் விளக்குகிறார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘நீங்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் ‘இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்’ என்று கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி-6527.

பிறர் நிர்வாணமாக இருந்தால் கூட கண்டுகொள்ளாத அளவிற்கு மிகவும் சிரமமான நாள் என எச்சரிக்கிறார்கள்.

மேலும் சூரியன் மிக மிக அருகில் கொண்டு வரப்பட்டு தன்னுடைய பாவங்களுக்கேற்ப வியர்வையில் தத்தளிப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்…’ மேலும் கூறினார்கள்: வியர்வை வழிந்து மனிதனின் பாதிக் காதை அடையும் அளவுக்கு மறுமை நாளில் சூரியன் மனிதனுக்கு மிக அருகில் வந்துவிடும். இந்நிலையில் மக்கள் ஆதம்(அலை) அவர்களிடமும் பிறகு மூஸா(அலை) அவர்களிடமும் பிறகு முஹம்மத்(ஸல்) அவர்களிடமும் வந்து அடைக்கலம் தேடுவார்கள்.

ஸஹீஹ் புகாரி-1474 1475.

வழிப்போக்கன் போன்று இருக்க வேண்டும்.

இவ்வாறு மறுமையை பற்றி எச்சரித்தது மட்டுமின்றி உலகத்தை மீதான மோகத்தை குறைக்கும் வகையிலும் நபி (ஸல்) அவர்கள் போதனை செய்துள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.

ஸஹீஹ் புகாரி-6416.

இறைவனை நம்பிக்கை கொண்டவர்கள் இந்த எச்சரிக்கைப் படி வாழவேண்டும். உலகில் உள்ள வசதிகளை ஒரு வழிப்போக்கன் போன்று கருதவேண்டும். எந்நேரத்திலும் இறை நினைவோடு வாழவேண்டும். மறுமையை மட்டும் நமது இலக்காக கருதவேண்டும். பொதுவாக நபித்தோழாக்ள் மறுமையை இலக்காக கொண்டு வாழ்பவர்களாகதான் இருந்தார்கள். அத்தகைய நபர்களுக்கே நபி (ஸல்) அவர்கள் மறுமை சிந்தனையை ஊட்டிக் கொண்டேயிருந்தார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) “ஆலியா”வின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள், செத்துக் கிடந்த, காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த ஆட்டை எடுத்து, அதன் (சிறிய) காதைப் பிடித்துக்கொண்டு, “உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக்காசுக்குப் பகரமாக வாங்கிக்கொள்ள விரும்புவார்?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில், இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க, இது செத்துப் போயிருக்கும் போது எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்)?” என்று கேட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்” என்று சொன்னார்கள். 

ஸஹீஹ் முஸ்லிம்-5664.

ஓர் உயிரற்ற ஆட்டை மதிப்பற்றதாக கருதுவதைப் போன்றுதான் உலகத்தையும் கருதவேண்டும். மேலும் இவ்வுலக ஆசையில் மயங்கிவிடக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள்.

உலக ஆசையில் மூழ்கிவிடக் கூடாது

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘பனூ ஆமிர் இப்னு லுஅய்’ குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான அம்ர் இப்னு அவ்ஃப் அல் அன்சாரீ(ரலி) எனக்குக் கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து ஜிஸ்யா வரியை வசூலித்து வரும்படி அனுப்பினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மஜூஸிகளான) பஹ்ரைன் வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு அலா இப்னு ஹள்ரமீ(ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா(ரலி) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா(ரலி) வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் நபி(ஸல்) அவர்களிடம் செல்ல, அது ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்துவிட்டது.

நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்துத் திரும்ப, அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் நபி(ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு, ‘அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார்’ என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்’ என்று கூற, அன்சாரிகள், ‘ஆமாம், இறைத்தூதர் அவர்களே!’ என்று பதிலளித்தார்கள்.

‘எனவே, ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்துவிட்டதைப் போல் உங்களையும் அது அழித்து விடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி-3158.

உலகத்தின் ஆசைகளை துறந்து அல்லாஹ்விற்காக வாரி வழங்கிய தன் தோழர்களிடமே நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினால் நம்முடைய நிலையை நாம் யோசிக்கவேண்டும்.

எனவே ஒருநாள் நாமனைவரும் இறைவன் முன்னிலையில் ஒன்று திரட்டப்பட்டவர்களாக நிற்போம் என்னும் மறுமை சிந்தனையை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த சிந்தனை இல்லாத காரணத்தால்தான் அதிகமான தவறுகள் நடக்கிறது. ஒருவர் மற்றவரை ஏமாற்றுகிறார். மோசடி செய்கிறார். இவற்றை தவிர்த்து கொள்வதற்காகதான் மறுமையில் அல்லாஹ்விடம் ஒன்று திரட்டப்படு வோம் என யாசீன் அத்தியாயத்தின் 32 வது வசனத்தில் நினைவூட்டுகிறான்.