Tamil Bayan Points

28) பெருந்தன்மை

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

பெருந்தன்மை

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«رَحِمَ اللَّهُ رَجُلًا سَمْحًا إِذَا بَاعَ، وَإِذَا اشْتَرَى، وَإِذَا اقْتَضَى»

வாங்கும் போதும், விற்கும் போதும், வழக்காடும் போதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி – 2076

விளக்கம்:

மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்கின்றான். அப்போது பல விஷயங்களில் விட்டுக் கொடுக்காமல் நம் ‘நிலையிலேயே பிடிவாதமாக இருக்கிறோம். குறிப்பாக, விற்பனை செய்யும் போதும், வாங்கும் போதும் விட்டுக் கொடுக்காத நிலையை மேற்கொள்கிறோம். ஆனால் இது போன்ற நிலைகளில் கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் இறைவனின் அருளைப் பெறலாம்.

நம்மிடம் நியாயம் இருந்தாலும், போகட்டும் என்று பெருந்தன்மையோடு விட்டுக் கொடுப்பது இறையருளைப் பெற்றுத் தரும் நமக்குத் தர வேண்டிய பொருளைக் கேட்டு வழக்காடும் போது கொஞ்சம் குறைவாகத் தருவதாகக் கூறினாலும், சரி என்று பெருந்தன்மையோடு விட்டுக் கொடுக்கலாம். இதனால் இறைவனின் அன்பையும் அருளையும் நாம் பெற முடியும்.

ஆனால் மார்க்கம் தொடர்பான விஷயங்களில் நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது ஏனெனில் இது நம் விவகாரம் கிடையாது. அல்லாஹ்வின் மார்க்கத்தில் சமரசம் செய்வதும், விட்டுக் கொடுப்பதும் கூடாது. எனவே மார்க்கம் தொடர்பான விஷயங்கள் அல்லாத மற்ற விஷயங்களில் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.