Tamil Bayan Points

27) நபிகளாரால் முற்படுத்தப்பட்டவர்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

Last Updated on September 30, 2022 by Trichy Farook

27) நபிகளாரால் முற்படுத்தப்பட்டவர்

மக்களுக்குத் தலைமை தாங்கி தொழவைப்பது ஒரு சிறந்த அந்தஸ்தாகும். இதற்கு மார்க்கத்திலே சில தகுதிகள் சொல்லப்பட்டு இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் அவர்கள் தான் மக்களுக்கு இமாமத் செய்து வந்தார்கள்.

அவர்கள் நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் கிடந்த போது தமக்குப் பதிலாக அபூபக்ர் இப்பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறினார்கள். வேறு யாரையாவது நியமிக்குமாறு மற்றவர்கள் எவ்வளவோ கூறிய போதும் அதை மறுத்து விட்டு அபூபக்ர் தான் இதை செய்ய வேண்டும் என்று உறுதியாகக் கூறிவிட்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் வந்த போது பாங்கும் சொல்லப்பட்டது. அப்போது மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி அபூபக்ரிடம் கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அதற்கு அபூபக்ர் மென்மையான உள்ளமுடையவர். உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்த அவரால் முடியாது என்று சொல்லப்பட்டது. திரும்பவும் நபி (ஸல்) அவர்கள் முதலில் கூறியதையே கூறினார்கள்.

திரும்பவும் அவர்களுக்கு அதே பதிலே சொல்லப்பட்டது. மூன்றாவது முறையும் அவ்வாறே நடந்தது. அப்போது நீங்கள் நபி யூஸுபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) பெண்களைப் போன்று இருக்கிறீர்கள். மக்களுக்கு தொழுகை நடத்துமாறு அபூபக்ரிடம் சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் மீண்டும் கூறினார்கள். அபூபக்ர் (ரலி) வெளியே வந்து தொழுகை நடத்தினார்கள்.

நூல் : புகாரி-664 

தான் நோய்வாய்ப்பட்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை இமாமாகப் பின்தொடர்ந்து அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்து தொழுதுள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயினால் இறந்தார்களோ அந்த நோயின் போது அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து தொழுதார்கள்.

நூல் : திர்மிதீ-362 (330)

அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மரண நோய் ஏற்பட்ட போது சில முஸ்லிம்களுடன் நானும் அவர்களிடத்தில் இருந்தேன். தொழ வைப்பதற்கு வருமாறு நபி (ஸல்) அவர்களை பிலால் அழைத்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழ வைப்பவர் (ஒருவரை தொழவைக்குமாறு) கட்டளையிடுங்கள் என்று கூறினார்கள். எனவே நான் வெளியே சென்றேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களுடன் இருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (அங்கு) இருக்கவில்லை.

நான் உமரே எழுந்து சென்று மக்களுக்குத் தொழ வையுங்கள் என்று கூறினேன். உமர் (ரலி) முன்னால் சென்று தக்பீர் சொன்னார்கள். அவர்கள் சப்தமிட்டு ஓதுபவராக இருந்தார்கள். அவர்களின் சப்தத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது அபூபக்ர் எங்கே? இதை அல்லாஹ்வும் முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இதை அல்லாஹ்வும் முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்கள். (அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்து வருமாறு) அவர்களிடத்தில் ஆளனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் அந்தத் தொழுகையை தொழ வைத்த பிறகு அபூபக்ர் வந்தார். பின்பு அபூபக்ர் மக்களுக்குத் தொழ வைத்தார்.

நூல் : அபூதாவூத்-4660 (4041)