Tamil Bayan Points

27) ஏ.டி.கே.ஷெர்வானி

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

Last Updated on October 29, 2023 by

27) ஏ.டி.கே.ஷெர்வானி

உத்திரபிரதேச மாநிலம் அலிகர் மாவட்டம் பிலோனா கிராமத்தின் மிகப்பெரிய ஜமீன் குடும்பம். விடுதலையின் வேட்கையை மிகுந்த வீரியத்தோடு வெளிப்படுத்திய ஷெர்வானி குடும்பம்.

குடும்பத்தின் மூத்தவர் தஸ்ஸதக் அகமத் கான் ஷெர்வானி (ஏ.டி.கே.ஷெர்வானி) லண்டனில் நேருவுடன் பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றியவர். 1914 ஆம் ஆண்டு நாடு திரும்பியதிலிருந்து காங்கிரசே தன் கதியென்று மாறிப் போனவர். ஒத்துழையாமை இயக்கத்தில் அவர் காட்டிய ஈடுபாட்டிற்காக ஆங்கில அரசிடமிருந்து சிறைத் தண்டனையைப் பரிசாகப் பெற்றார்.

ஏ.டி.கே.வின் அடுத்த தம்பி நிசார் அஹம்து கான் ஷெர்வானி தபால் தந்தி துறையில் நல்ல ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒத்துழையாமை இயக்கத்தை ஒத்துக் கொண்டதற்காக பொன்முட்டையிடும் வாத்தைப் பலி கொடுத்தார். பதவியைத் துறந்ததற்காக பிரிட்டிஷாரால் பலவிதத் துன்பங்களுக்கு ஆட்படுத்தப்பட்டார்.

ஏனெனில் ஒத்துழையாமை இயக்க அழைப்பின் பேரில் ஆங்கில அரசின் பதவியை முதன் முதலாக ராஜினாமா செய்தவர் நிசார் அஹமத் கான் ஆவார்.

அதே நேரத்தில் அலிகரில், இண்டர் மீடியட் படித்துக் கொண்டிருந்த ஏ.டி.கே. வின் இரண்டாவது தம்பி ஃபிடா அஹமத் கான் ஷெர்வானி போராட்ட அறைகூவலில் அவரும் தனது கல்லூரிப் படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு வெளியேறி விட்டார்.((வி.போ.மு) வி.என்.சாமி பக் 258)

இதே போன்று காங்கிரஸின் அனைத்து வகைப் போராட்டங்களிலும் முஸ்லிம்களின் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

இவை உதாரணத்திற்கு மட்டுமே இப்படி இன்னும் பல…