Tamil Bayan Points

26) 31 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

31 வது வசனம்

அவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்துள்ளோம். அவர்கள் இவர்களிடம் திரும்பி வர மாட்டார்கள் என்பதை இவர்கள் அறியவில்லையா?

அழிக்கப்பட்டவர்கள் மீண்டும் வருவதில்லை

ஏதேனும் ஒரு சமுதாயத்தை அல்லாஹ் அழிக்க நாடினால் தடம் தெரியாத அளவிற்கு அழித்து விடுவான். இதனால் மீண்டும் அவர்கள் வரமுடியாது.

லூத் நபியின் சமுதாயத்தை அழித்தல்

லூத் நபியின் சமுதாயத்தவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டனர். இதை லூத் நபி கண்டித்து பிரச்சாரம் செய்தும் அம்மக்கள் கேட்கவில்லை. ஒரு முறை வானவர்கள் மனித வடிவில் அவர்களிடம் வந்து போது அவர்களையும் தவறாக தீண்ட நினைத்தனர்.

நமது தூதர்கள் லூத்திடம் வந்த போது, அவர்கள் விஷயத்தில் அவர் கவலைப்பட்டார். அவர்களுக்காக மனம் வருந்தினார். “இது மிகவும் கடினமான நாள்” எனவும் கூறினார்.

அவரது சமுதாயத்தினர் அவரிடம் விரைந்து வந்தனர். இதற்கு முன் அவர்கள் தீமைகளைச் செய்து வந்தனர். “என் சமுதாயமே! இதோ என் புதல்விகள் உள்ளனர். அவர்கள் உங்களுக்குத் தூய்மையானவர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனது விருந்தினர் விஷயத்தில் எனக்குக் கேவலத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்! உங்களில் நல்ல ஓர் ஆண் கூட இல்லையா?” என்று கேட்டார்.

“உமது புதல்விகளிடம் எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை என்பதை நீர் உறுதியாக அறிவீர்! நாங்கள் விரும்புவதையும் நீர் அறிவீர்” என்றனர்.

“உங்கள் விஷயத்தில் எனக்குச் சக்தி இருக்கக் கூடாதா? அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா?” என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் : 11:77,78,79,80.) 

அவர்கள் திருந்தாத போது அல்லாஹ் அவர்களுக்கு பேரழிவை ஏற்பத்தினான்.

“லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படுவது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?” என்று தூதர்கள் கூறினார்கள்.

நமது கட்டளை வந்த போது, சுடப்பட்ட கற்களால் அவ்வூரின் மீது கல்மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம்.

(அல்குர்ஆன் : 11:81,82.) 

இது போன்று மிகவும் கொடுமையான தீமைகளை செய்யும்போது முதலில் அல்லாஹ் எச்சரிப்பான். அவர்கள் திருந்தாவிட்டால் இது போன்றே பேரழிவை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

நூஹ் நபியின் சமுதாயத்திற்கு ஏற்பட்ட அழிவு

மேலும் நூஹ் நபியின் சமுதாய மக்கள் சத்தியத்தை ஏற்க மறுத்த போது நபி நூஹ் அலை அவர்கள் எச்சரித்தார்கள். ஆனாலும் அவர்கள் திருந்தவில்லை. இதனால் தண்ணீரில் மூழ்கடித்து அவர்களுக்கு பேரழிவை அல்லாஹ் ஏற்படுத்தினான்.

நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்” என்று அவர் கூறினார்.

“நாங்கள் உம்மைப் பகிரங்கமான வழிகேட்டிலேயே காண்கிறோம்” என அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் கூறினர்.

“என் சமுதாயமே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை. மாறாக நான் அகிலத்தின் இறைவனுடைய தூதன்” என்று அவர் கூறினார்.

“என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். உங்களுக்கு நலம் நாடுகிறேன். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்”

“உங்களை எச்சரிப்பதற்காகவும், நீங்கள் (இறைவனை) அஞ்சவும், உங்களுக்கு அருள் செய்யப்படவும், உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவதில் ஆச்சரியம் அடைகிறீர்களா?” (என்றும் கூறினார்.)

ஆயினும் அவரைப் பொய்யரெனக் கருதினர். எனவே அவரையும், அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம்.நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை மூழ்கடித்தோம். அவர்கள் குருட்டுக் கூட்டமாகவே இருந்தனர்.

(அல்குர்ஆன் : 7: 59,60,61,62,63,64.) 

இத்தகைய அழிவுகளின் மூலம் அனைவரும் படிப்பினை பெற்று நடக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தண்டனையும் விளக்கமும்

ஒரு சமுதாயத்திற்கு இது போன்ற அழிவுகளை எடுத்த மாத்திரத்திலேயே அல்லாஹ் ஏற்படுத்தமாட்டான். மாறாக அதற்கு முன்பு தூதரை அனுப்பி அவர்களை எச்சரிக்கை செய்வான். அதற்கு பிறகும் அவர்கள் அநியாயம் செய்யும் போதுதான் அவர்களை அழிப்பான்.

ஊர்களின் தாய் நகரத்துக்குத் தூதரை அனுப்பாத வரை உமது இறைவன் அழிப்பவனாக இல்லை. அவர்களுக்கு அவர் நமது வசனங்களைக் கூறுவார். ஊரிலுள்ளவர்கள் அநீதி இழைக்காமல் எந்த ஊரையும் நாம் அழித்ததில்லை.

(அல்குர்ஆன் : 28:59.) 

அதே வேளை ஓர் ஊரை அல்லாஹ் அழிக்க நாடும் போது அவர்களை அவ்வழிவிற்கு தகுதியானவர்களாக ஆன பிறகே அவர்களை அழிப்பான். இதுவே அல்லாஹ்வின் வழிமுறையாகும்.

ஓர் ஊரை நாம் அழிக்க நாடும்போது அவ்வூரில் சுகபோகத்தில் மூழ்கியோருக்கு (கட்டுப்பட்டு நடக்குமாறு) கட்டளையிடுவோம். அவர்கள் அதில் குற்றம் புரிவார்கள். எனவே அவ்வூருக்கு எதிராக, (நமது) வார்த்தை உறுதியாகி விடுகிறது. உடனே அதை அடியோடு அழிப்போம்.

(அல்குர்ஆன் : 17:16.) 

சில அழிவுகளில் தீயவர்களுடன் நல்லவர்களும் சேர்ந்து அழிக்கப்படுவார்கள். ஆனால் மறுமையில் நல்லவர்கள் அவர்களுடைய எண்ணங்களின் படி நன்மையோடுதான் எழுப்பப் படுவார்கள்.

ஆயிஷா(ரலி) கூறியதாவது: ‘

ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர்வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!’ என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள்; எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரின் எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்!’ என்றார்கள்.

ஸஹீஹ் புகாரி-2118.

இது போன்ற இறைவனின் புறத்திலிருந்து அழிவுகளை சந்தித்தவர்கள் மீண்டும் வந்து அதை கூறமாட்டார்கள். மாறாக நாம்தான் அதிலிருந்து பெறவேண்டிய படிப்பினையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இவற்றை அல்லாஹ் கூறுகிறான்.