Tamil Bayan Points

25) 30 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

30 வது வசனம்

30. அடியார்களுக்கு இது நஷ்டமே! அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும் அவரை அவர்கள் கேலி செய்யாமல் இருந்ததில்லை.

மக்களிடம் பிரச்சாரம் செய்த இறைத்தூதர்களை அம்மக்கள் ஏற்றுக் கொள்ளாது கேலி செய்தனர் எனும் கருத்தை இவ்வசனம் எடுத்துக் கூறுகிறது.

தூதர்களை கேலி செய்தல்

இவ்வாறே நூஹ் நபியையும் அவரது சமுதாய மக்கள் கேலி செய்தனர்.

அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். “நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்” என்று அவர் கூறினார்.

“இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதைப் பின்னர் அறிந்து கொள்வீர்கள்!” (என்றும் கூறினார்)

(அல்குர்ஆன் : 11:38,39.) 

நூஹ் நபி மட்டுமின்றி அனைத்து இறைத்தூதர்களும் கேலி செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ, சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை.

(அல்குர்ஆன் : 51:52.) 

மக்கள் இறைத்தூதர்களை கேலி செய்யும் போது அல்லாஹ் அதற்கு பதிலளித்துள்ளான்.

சூனியம் செய்யப்பட்டவர் என்ற விமர்சனத்திற்கு பதில்

நபி (ஸல்) அவர்களை சூனியம் செய்யப்பட்டவர் என்று விமர்சனம் செய்யும் போது அநியாயக் காரர்களே இவ்வாறு சொல்வார் என்று அல்லாஹ் பதிலளித்துள்ளான்

“அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?” என்றும் “சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்” என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

(அல்குர்ஆன் : 25:8.)

பைத்தியக்காரர் என்ற விமர்சனத்திற்கு பதில்.

46. “நீங்கள் இருவர் இருவராகவோ, தனித் தனியாகவோ அல்லாஹ்வுக்காக சற்று நேரம் ஒதுக்கி பின்னர் “உங்கள் தோழருக்கு (எனக்கு) பைத்தியம் எதுவுமில்லை; கடுமையான வேதனைக்கு முன் அவர் உங்களுக்கு எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை” என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தையே உங்களுக்குப் போதிக்கிறேன்” எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் : 34:46.) 

நபி (ஸல்) அவர்களுக்கு பைத்தியம் பீடித்துள்ளது என்று கேலி செய்த போது சாதாரண மனிதனுக்கு இருக்கின்ற சிறிதளவு மனநோய் கூட இல்லை என்று அல்லாஹ் பதிலளிக்கிறான். இப்படி இறைத்தூதர்களை மக்கள் கேலி செய்த போது இறைத்தூதர்கள் சார்பில் அல்லாஹ் பதிலளித்துள்ளான்.

இந்தக் கேலிப்பேச்சால் தனக்கோ தனது தூதர்களுக்கோ எவ்வித நஷ்டமும் இல்லை. மாறாக கேலி செய்யும் “அடியார்களுக்கு இது நஷ்டமே! எனக் கூறி அவர்களுக்கே நஷ்டம் என்று 30 வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

பிரச்சார களத்தில் இருந்தால் இது போன்ற கேலி பேச்சுக்கள் நம்மை பார்த்தும் பேசப்படும். அவற்றை நினைத்து துவண்டுவிடாமல் பொறுமையோடு இருந்து மக்களை வென்றெடுக்க வேண்டும் எனும் ஊக்கத்தை இவ்வசனங்கள் தருகின்றது.