Tamil Bayan Points

24) 28, 29வது வசனங்கள்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

28, 29வது வசனங்கள்

அவருக்குப் பின் அவரது சமுதாயத்திற்கு எதிராக ஒரு படையை வானத்திலிருந்து நாம் இறக்கவில்லை. (அவ்வாறு) இறக்குவோராகவும் நாம் இருந்ததில்லை.

29. அது ஒரே ஒரு பெரும் சப்தமாகவே இருந்தது. உடனே அவர்கள் சாம்பலானார்கள்.

அந்த நல்லடியாருடைய மரணத்திற்கு பிறகு அல்லாஹ்வின் படையினர்களாகிய வானவர்களை இறக்கி அல்லாஹ் அவர்களை தண்டிக்கவில்லை. மாறாக பெரும் சப்தத்தை அனுப்பி தண்டிக்கிறான். ஏனெனில் வானவர்கள் அல்லாத வேறு வழியிலும் அல்லாஹ் தண்டிக்க வல்லவன். அதை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இந்த தண்டனையை வழங்குகிறான்.

மேலும் வானவர்களை நாம் அனுப்பவில்லை என இங்கு கூறப்படுவதற்கு சில காரணங்கள் உண்டு. ஏனெனில் பல்வேறு நிகழ்வுகளில் வானவர்கள் எனும் தன் படையினர்களை அல்லாஹ் அனுப்பியுள்ளான். அவற்றை விட்டு இதை பிரித்து காட்டுவதற்குத்தான் இவ்வாறு கூறுகிறான்.

உதாரணமாக இஸ்லாத்தின் பெரிய போர்களில் ஒன்றான பத்ர் போரில் முஸ்லிம்களுடைய எண்ணிக்கை முன்னூற்றி சொற்பத்தையே அடைந்தது. ஆனால் எதிரிகளுடைய எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் பத்ருகளத்தில் வானவர்களை அனுப்பி அல்லாஹ் உதவி செய்தான்.

நீங்கள் தாழ்ந்த நிலையில் இருந்த போது அல்லாஹ் “பத்ரு’க்களத்தில் உங்களுக்கு உதவி செய்தான். எனவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்!

“(விண்ணிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவியது உங்களுக்குப் போதாதா?” என்று நம்பிக்கை கொண்டோருக்கு நீர் கூறியதை நினைவூட்டுவீராக!

அது மட்டுமல்ல! நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சும் போது திடீரென்று அவர்கள் உங்களிடம் (போரிட) வந்தால் போர்க்கலை அறிந்த ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.

(அல்குர்ஆன் : 3:123,124,125.) 

இது போன்றே பலரையும் அழிப்பதற்காகவும் வானவர்களை இறக்கி வைப்பான். அவற்றை 9 வது அத்தியாயம் 25, 26 மற்றும் 40 ஆகிய வசனங்களில் காணலாம்.

எனினும் இந்த மூன்று இறைத்தூதர்களுகம் மற்றும் அந்த நல்லடியாரும் பிரச்சாரம் செய்த கூட்டத்தினரை அவ்வாறு அழிக்காமல் பெரும் சப்தத்தின் மூலமே அழித்துள்ளான். அதையே இவ்வசனத்தில் அல்லாஹ் தெரிவிக்கின்றான்.