Tamil Bayan Points

24) தனக்கே நன்மை, தீமை செய்ய இயலாத தூதர்

நூல்கள்: மனிதகுல வழிகாட்டி

Last Updated on September 7, 2023 by

தனக்கே நன்மை, தீமை செய்ய இயலாத தூதர்

7:188 قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِىْ نَـفْعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللّٰهُ‌ ؕ وَلَوْ كُنْتُ اَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ ۖ ‌ۛۚ وَمَا مَسَّنِىَ السُّۤوْءُ‌ ‌ۛۚ اِنْ اَنَا اِلَّا نَذِيْرٌ وَّبَشِيْرٌ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ

“அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(திருக்குர்ஆன்: 7:188.)

திருக்குர்ஆன் கூறக்கூடிய இந்த அளவுகோலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒவ்வொருவரும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய ஓர் அளவுகோலாகும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உஹத் போர்க்களத்தில் தாக்கப்பட்டு இரத்தம் சிந்தினார்கள். இந்தத் தீமை தனக்கு வராமல் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் தன்னை தற்காத்துக் கொள்ள முடியவில்லை எனும் போது அவர்கள் மற்றவர்களுக்கு எப்படி தீமையைத் தடுக்க முடியும் என்று ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும்படி இந்தத் திருக்குர்ஆனின் அளவுகோல் அமைந்திருக்கின்றது.

கடவுள் என்றால், ஒருவனுக்கு நன்மையையும் தீமையையும் அளிக்கும் ஆற்றல் கொண்டவன். ஒருவரை, ஒரு பொருளைக் கடவுளாக ஏற்க வேண்டுமென்றால் இந்த அளவுகோலை வைத்தும் அளந்து பாருங்கள். இதற்கு ஒத்துவரவில்லை என்றால் அத்தகையவர்களை, அத்தகையவற்றை கடவுள் பட்டியலிலிருந்து தூக்கி எறிந்து விடுங்கள்.

2:255 اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُۚ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ؕ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ‌ؕ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ‌ۚ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌‌ۚ وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا ‌ۚ وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ‏

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது இருக்கை, வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.

(திருக்குர்ஆன் : 2:255.) 

10:106 وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكَ وَ لَا يَضُرُّكَ‌ۚ فَاِنْ فَعَلْتَ فَاِنَّكَ اِذًا مِّنَ الظّٰلِمِيْنَ‏

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

(திருக்குர்ஆன் : 10:106.)