Tamil Bayan Points

25) கேட்பதற்கு ஏற்ற நேரம்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

கேட்பதற்கு ஏற்ற நேரம்

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ، فَيَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ، وَمَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، وَمَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ

ஒவ்வோர் இரவிலும், இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும் போது நமது இறைவன் கீழ் வானிற்கு இறங்கி வந்து, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகின்றான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் – 1386

விளக்கம்:

பிரார்த்தனை என்பது ஒரு வணக்கம். அதை, படைத்த இறைவனிடம் மட்டுமே நாம் கேட்க வேண்டும். அவனிடம் கேட்கும் துஆக்கள் ஏற்கப்படுவதற்கு என்று சில நேரங்களை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். குறிப்பாக மக்களெல்லாம் உறங்கியிருக்கும் ஸஹர் நேரத்தில் நாம் கேட்கும் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். மேலும் பாவம் செய்தவர்கள் அந்த நேரத்தில் பாவமன்னிப்புக் கோரினால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.

மனிதன் வாழ்வில் எத்தனையோ பிரச்சனைகளைச் சந்திக்கிறான். அவற்றைச் சரி செய்வதற்கும், அவனது தேவைகளை நிறைவு செய்வதற்கும் சக்தி படைத்தவன் அல்லாஹ். அவனிடம் பிரார்த்தனை செய்து தம் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு இந்த நேரம் ஏற்றதாகும்.

உலகில் பாவம் செய்யாத மனிதர்கள் யாருமில்லை. உலகின் ஆசாபாசங்களுக்கு அடிமைப்பட்டு, பாவங்களைச் செய்து வரும் மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்படாத வரை மறுமையில் வெற்றி பெற முடியாது. மறுமையின் வெற்றிக்கு வித்திடும் பாவமன்னிப்புக்கு ஏற்ற இந்த நேரத்தில் பாவக் கறையை அகற்றி விடலாம்.