Tamil Bayan Points

23) 25, 26, 27 வது வசனங்கள்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

25, 26, 27 வது வசனங்கள்

25. நான் உங்கள் இறைவனை நம்பி விட்டேன். எனக்குச் செவி சாயுங்கள்! (என்றும் கூறினார்).

26, 27. சொர்க்கத்திற்குச் செல் என்று (அவரிடம்) கூறப்பட்டது. அதற்கவர் “என் இறைவன் என்னை மன்னித்ததையும் மரியாதைக்குரியோரில் என்னை ஆக்கியதையும் எனது சமுதாயத்தினர் அறிந்து கொள்ளக் கூடாதா?” என்றார்.

இதில் 25 வது வசனம் வரை நல்லடியார் சொன்ன அறிவுரைகளை அல்லாஹ் கூறிவிட்டு 26 வது வசனத்தில் “சொர்க்கத்திற்குச் செல் என்று (அவரிடம்) கூறப்பட்டது. “என கூறுகிறான். மக்களுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தவரை திடீரென்று சொர்க்கத்திற்கு செல் என்று கூறினால் இடையில் நடந்த சம்பவங்கள் என்ன? என்ற கேள்வி இதை படிப்பவர்களுக்கு ஏற்படும்.

உயிர் தியாகிகளுக்கு நேரடி சொர்க்கம்

அசத்தியத்திலிருந்தவர்கள் இவருடைய அறிவுரையை, பிரச்சாரத்தை பொறுத்து கொள்ள முடியாமல் இவரை கொலை செய்துவிட, தன் உயிரை அல்லாஹ்வுடைய பாதையில் தியாகம் செய்து விடுகிறார்.

பொதுவாக மரணமடைபவர்களுக்கு “பர்ஸக்” எனும் மண்ணறை வாழ்க்கை, மண்ணறையின் விசாரணை போன்றவற்றிற்கு பிறகுதான் மறுமையில் சொர்க்கம், நரகம் தீர்மானிக்கப்படும். ஆனால் அல்லாஹ்வின் பாதையில் உயிரை தியாகம் செய்தவர்களுக்கு “பர்ஸக்” எனும் வாழ்க்கையின்றி எவ்வித கேள்வி கணக்கின்றி நேரடியாக சொர்க்கம் செல்லுமாறு அல்லாஹ் கட்டளையிடுவான்.

இந்த நல்லடியார் தன் உயிரை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக தியாகம் செய்ததால் இவ்வாறு கட்டளையிடுகிறான். இதுதான் இடையில் நடந்த சம்பவமாகும். இதை சொர்க்கத்திற்கு செல் என்ற இறைவசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக கொல்லப்பட்டோர் நேரடியாக சொர்க்கம் சென்றாலும் மனித வடிவத்தில் செல்ல மாட்டார்கள். மாறாக பறவையின் உடலுக்குள் இவர்களுடைய உயிரை செலுத்தி விரும்பியவாறு சுற்றித்திரிய அனுமதியளிக்கப்படும். இதை பின்வரும் சான்றுகளின் மூலம் அறியலாம்.

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர்” (3:169) எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம்.

அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறைஅரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.

அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, “நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள்தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!” என்று கூறுவர். இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது.

எதையேனும் கேட்காமல் நாம் விடப்படமாட்டோம் என்பதை அவர்கள் காணும்போது, “இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒருமுறை கொல்லப்படவேண்டும்” என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும்போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம்-3834.

அறியாத மக்களின் மறுமை வாழ்க்கை மீதான அக்கறை!.

அந்த நல்லடியாரிடம் “சொர்க்கத்திற்கு செல்” என்று அல்லாஹ் கூறியவுடன் தன்னை கொலை செய்த சமுதாயத்தை பற்றி கவலைப்படுகிறார். தன்னை அல்லாஹ் மன்னித்ததை அறிந்து அவர்கள் நேர்வழிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார். இந்த குணம் பிரச்சாரம் செய்பவர்களிடம் அவசியம் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களும் இந்த குணத்தை கொண்டிருந்தார்கள்.

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘(தாங்கள் காயமடைந்து) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்துண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான் உ ன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது ‘அகபா (தாயிஃப்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும்.

ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். ‘கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இருந்தார்கள்.

அவர்கள் என்னை அழைத்து, ‘உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்’ என்று கூறினார்கள்.

உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு மீது சலாம் சொல்லி, பிறகு, ‘முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரண்டு மருங்கிலுமுள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)’ என்று கூறினார்.

உடனே, ‘(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன் (எனவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)’ என்று சொன்னேன்.

ஸஹீஹ் புகாரி-3231.

சுய நினைவை இழக்கும் அளவுக்கு தன்னை தாக்கினாலும் அவர்களும் நேர்வழி பெறவேண்டும் என்றே நபி (ஸல்) அவர்கள் விரும்பியுள்ளார்கள்.

நபியவர்கள் மட்டுமின்றி அபூபக்ர் (ரலி) அவர்களும் இவ்வாறே விரும்பியுள்ளார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியது.

“என் சமுதாயத்தில் நான்கு இலட்சம் நபர்களை சொர்க்கத்திற்கு அனுப்புவதாக அல்லாஹ் எனக்கு வாக்கு கொடுத்துள்ளான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! (போதாது) மேலும் அதிகப் படுத்துங்கள்” என்றார்.

நபியவர்கள் தன் கையை இணைத்து “இவ்வாறு (மக்களை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைப்பான்)” என்றார்கள். (மீண்டும்) அபூபக்ர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! (போதாது) மேலும் அதிகப் படுத்துங்கள்” என்றார். நபியவர்கள் (மீண்டும் தன் கையை இணைத்து) “இவ்வாறு (மக்களை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைப்பான்) என்றார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் “அபூபக்ரே! போதும் (இதற்கு மேல் கேட்காதீர்) என்றார்.

அபூபக்ர் (ரலி) “உமரே! என்னை விட்டுவிடு, அல்லாஹ் நம் அனைவரையும் சொர்க்கத்தில் நுழைப்பது உம்மிடம் இல்லை” என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் “(இல்லை) அல்லாஹ் நாடினால் தன் படைப்பினம் (முழுவதையும்) ஒரே பிடியில் சொர்க்கத்தில் நுழைத்து விடுவான்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “உமர் உண்மை கூறிவிட்டார்” என்றார்கள்.

அஹ்மத்-12718

தன்னை எதிர்ப்பவர்களும் சொர்க்கம் செல்லவேண்டும் என்று விரும்பியதால்தான் அபூபக்ர் மற்றும் உமர் (ரலி) ஆகியோர் இவ்வாறு கூறுகின்றனர்.

இந்த எண்ணத்துடன்தான் தவ்ஹீத் ஜமாஅத் ஜமாஅத் மக்களிடம் செயல்பட்டு வருகிறது. தன்னை விமர்சனம் செய்பவர்களும் நேர்வழிக்கு வர வேண்டும் என விரும்புகிறது. தவறான பிரச்சாரத்தை மக்களிடம் செய்கின்ற சில ஆலிம்கள் மட்டும்தான் சத்தியத்தை மறைக்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் அறியாமல்தான் உள்ளனர். அவர்களும் சொர்க்கம் செல்ல வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

நல்லடியாரின் பெருந்தன்மை

மேலும் தன்னை கொலை செய்தவர்களாக இருப்பினும் அவர்களை பற்றி நல்லடியார் கவலை கொள்கிறார். இக்கவலையின் மூலம் தன் பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறார். இன்றைக்கு பலரிடம் இந்த குணம் காணப்படுவதில்லை. அல்லாஹ் பெருந்தன்மையை ஆர்வமூட்டுகிறான்.

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.

பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது.

(அல்குர் ஆன் : 41:34,35.) 

ஒருவர் நமக்கு தீமை செய்தாலும் நாம் நன்மை செய்ய வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான். இவ்வாறு பெருந்தன்மையோடு நடப்பவர் மகத்தான் பாக்கியம் வழங்கப் பட்டவர் என்றும் கூறுகிறான். மேலும் நபி (ஸல்) அவர்களும் பெருந்தன்மையை கடைபிடித்துள்ளார்கள்.

தன்னை கொல்ல நினைத்தவர்களிடம் பெருந்தன்மை!.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பியபோது அவர்களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள். தம் வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண்விழித்துப் பார்த்தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி நின்றிருந்தார்.

நபி(ஸல்) அவர்கள், ‘இவர் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது (நான் மரத்தில் தொங்க விட்டிருந்த என்னுடைய) வாளை எனக்கெதிராக உருவினார். நான் கண்விழித்துப் பார்த்தபோது இவரின் கையில் உறையிலிருந்து உருவிய (என்னுடைய) வாள் இருந்தது. இவர், ‘என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார்?’ என்று கேட்டார். நான் ‘அல்லாஹ்’ என்று (மூன்று முறை) கூறினேன்’ என்றார்கள். அந்த கிராமவாசி (அங்கே) அமர்ந்திருந்தும் கூட, அவரை நபியவர்கள் தண்டிக்கவில்லை.

ஸஹீஹ் புகாரி-2910.

அனஸ்(ரலி) அறிவித்தார். யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். ‘அவளைக் கொன்று விடுவோமா?’ என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

ஸஹீஹ் புகாரி-2617.

தன் அரசின் கீழுள்ள பொதுமக்களை யாரேனும் தாக்க முன்வந்தால் அதற்கு பதிலடி கொடுத்த நபி (ஸல்) அவர்கள் தனிப்பட்ட முறையில் தன்னை கொலை செய்ய நினைத்தவர்களை மன்னித்து தன் பெருந்தன்மையை நிரூபித்துள்ளார்கள்.

நபித்தோழர்களின் பெருந்தன்மை!.

தான் மட்டுமின்றி தன்னுடைய தோழர்களையும் இவ்வாறே வார்த்திருந்தார்கள்.

இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்போது அல்லாஹ், “(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தாம்” என்று தொடங்கும் (24:1120) பத்து வசனங்களை அருளினான். (ஆயிஷா(ரலி) கூறினார்:) என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிடமாட்டேன்’ என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள்.

-மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர்(ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். -அப்போது அல்லாஹ், ‘உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்’ எனும் (திருக்குர்ஆன் 24:22 வது) வசனத்தை அருளினான்.

அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்’ என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்’ என்றும் கூறினார்கள்.(ஹதீஸின் சுருக்கம்…)

ஸஹீஹ் புகாரி-6679.

“பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு பெருந்தன்மை வழங்கப்படாது.” என்ற வசனத்திற்கு எடுத்துக் காட்டாக நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் வாழ்ந்துள்ளார்கள். எனவே நாமும் இதிலிருந்து பாடம் பெற்று பெருந்தன்மையோடு நடக்க வேண்டும்.

இறந்தவர்களுக்கு இவ்வுலக தொடர்பு இல்லை

ஒரு சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதரை அம்மக்கள் நிராகரித்தபோது ஒரு நல்லடியார் இறைத்தூதர்களுக்கு ஆதரவாக பேசினார். பிறகு அம்மக்கள் அவரை கொலை செய்துவிட்டனர் என்பதையும் அவருடைய வாழ்வில் நாம் பெறவேண்டிய படிப்பினைகளையும் முன்னர் கண்டோம்.

அவர் கொலை செய்யப்பட்டவுடன் “சொர்க்கத்திற்கு செல்” என்று அவரிடம் கூறப்பட்டபோது “என் இறைவன் என்னை மன்னித்ததையும் மரியாதைக்குரியோரில் என்னை ஆக்கியதையும் எனது சமுதாயத்தினர் அறிந்து கொள்ளக் கூடாதா?” என்று கூறுகிறார். மரணத்திற்கு பிறகு இவருக்கு நடப்பவற்றை மக்கள் அறிமாட்டார்கள் என்பதாலேயே இவ்வாறு கூறுகிறார்.

இதன் மூலம் இறந்துவிட்டவருக்கும் உயிரோடு உள்ளவர்களுக்குமிடையில் எந்த தொடர்பும் இல்லை என்பதை விளங்கலாம்.

உயிர்த்தியாகிகள் மீண்டும் நாங்கள் உலகத்திற்கு சென்று மீண்டும் எங்கள் உயிரை உன் பாதையில் தியாகம் செய்யவேண்டும் என்று அல்லாஹ்விடம் கேட்டபோது அல்லாஹ் அதை மறுத்துவிடுகிறான். இத ன் மூலமும் மேற்கண்ட கருத்தினை விளங்கலாம்.

இறந்தவர் மீண்டும் வரமாட்டார்

யாராக இருப்பினும் அவர் இறந்துவிட்டால் மீண்டும் உலகிற்கு வரமுடியாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். மனிதர்கள் மரணத்தருவாயில் மீண்டும் தனக்கு வாழ்க்கை வழங்குமாறும் தான் அதிகமாக நல்லறங்கள் செய்வேன் என்றும் கேட்பார்கள். ஆனால் அல்லாஹ் அதை மறுத்துவிடுவான்.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன்: 23:99, 100.)

இறந்தவர்களுக்கும் இவ்வுலகத்தில் உள்ளோர்க்கும் தொடர்பே இல்லை எனும் போது சில முஸ்லிம்கள் இறந்தவர்களிடம் சென்று உதவி தேடுகின்றனர். அவர்கள் நமக்கு பதிலளிப்பார்கள் என்று நம்புகின்றனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள் உட்பட யாரும் யாருக்கும் அல்லாஹ்மிடருந்து உதவ முடியாது.

(முஹம்மதே!) உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!

(அத்தியாயம் : 26 : 214.) 

மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் இறக்கியவுடன் நபி (ஸல்) அவர்கள் தன் குடும்பத்தாரை அழைத்து எச்சரிக்கை செய்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தூதருடைய அத்தையான ஸுபைர் இப்னு அவ்வாமின் தாயாரே! முஹம்மதின் மகளான ஃபாத்திமாவே! நீங்கள் இருவரும் உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். நான் உங்கள் இருவருக்கும் அல்லாஹ்விடமிருந்து எதையும் வாங்கித் தர முடியாது. என் செல்வத்திலிருந்து இருவரும் நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள். (நான் உங்களுக்குத் தருகிறேன்.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி-3527.

நபி (ஸல்) அவர்களால் கூட யாரையும் காப்பாற்ற முடியாது எனும்போது என்றைக்கோ மரணித்து விட்டவர்கள் தங்களுக்கு உதவி செய்வார்கள் என்று நம்புவது இஸ்லாத்திற்கு எதிரான நம்பிக்கையாகும்.

உயிர்த்தியாகிகளுக்கு மன்னிப்பு

மேலும் 27 வது வசனத்தில் ‘என் இறைவன் என்னை மன்னித்துவிட்டான்” என்று நல்லடியார் கூறுவதன் மூலம் அல்லாஹ்வின் பாதையில் உயிரை தியாகம் செய்தவர்களுக்கு அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும் என்பதை விளங்கமுடிகிறது. எனினும் கடன் மட்டும் அவர்களுக்கு மன்னிக்கப்படாது. இதை நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) எங்களிடையே நின்று, “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே மிகவும் சிறந்ததாகும்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் சென்று கொல்லப்பட்டால், (உங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்)” என்று பதிலளித்தார்கள்.

பிறகு (சிறிது நேரம் கழித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எப்படிக் கேட்டீர்கள் (மீண்டும் சொல்லுங்கள்)?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?” என்று கேட்டார்.

மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம், நீங்கள் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் செல்லும்போது (கொல்லப்பட்டுவிட்டால் உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.) ஆனால், கடனைத் தவிர! ஏனெனில், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் (இப்போதுதான்) இவ்வாறு கூறினார்” என்றார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம்-3830.

இந்த செய்தியில் கடனை பற்றிய எச்சரிக்கை உள்ளது. ஒருவர் செய்கின்ற நல்லறங்களிலேயே உயிர் தியாகம்தான் மிக சிறந்ததாகும். அத்தகைய தியாகத்தை செய்தவருக்கே கடன் மட்டும் மன்னிக்கப் படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இன்றைய மக்கள் சர்வ சாதாரணமாக கடன் வாங்குகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இருந்தாலும் ஆடம்பரம் போன்ற பல காரணங்களுக்காக கடன் வாங்குகிறார்கள். இது மிகவும் ஆபத்தானதாகும். நாம் இதை தவிர்ந்து கொள்ளவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கடனைவிட்டு அதிகமாக அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேடியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின ் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்தனை செய்யும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ரி, வ அஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால், வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா, வஃபித்னத்தில் மமாத்தி. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம்’

பொருள்:

இறைவா! அடக்கக்குழியின் வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் பாதுகப்புத்தேடுகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்ன என்று கூறுவார்கள்.

(இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “தாங்கள் கடன் படுவதிலிருந்து அதிகமாகப் பாதுகாப்புத் தேட என்ன காரணம்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்” என்று பதிலளித்தார்கள்.

நூல் புகாரி-832

மண்ணறை வேதனை, தஜ்ஜாலின் குழப்பங்கள் போன்றவை மிகவும் பாதுகாப்பு தேட வேண்டிய விஷயமாகும். நாம் பயப்படவேண்டிய விஷயமாகும். அதே போன்று கடனையும் ஒப்பிட்டு நபி (ஸல்) அவர்கள் அச்சமூட்டுகிறார்கள்.

அல்லாஹ்விடம் மரியாதைக்குரியவர்கள் யார்?

மேலும் 27வது வசனத்தில் “அல்லாஹ் என்னை மரியாதைக்குரியவனாக ஆக்கியியுள்ளான் என்பதை என் சமுதாய மக்கள் அறிய வேண்டாமா?” என்றும் நல்லடியார் கூறுகிறார்.

இதன் மூலம் அல்லாஹ் தான் நாடியோரை எந்த விதத்திலும் கண்ணியப்படுத்துவான் என்பதை விளங்கலாம். இந்த நல்லடியார் உலகில் தீயவர்களால் அதிகளவு இழிவு படுத்தப்பட்டார். எனினும் மறுமையில் அல்லாஹ் அவருக்கு கண்ணியத்தை வழங்கிவிட்டான்.

சிலர் உலகில் யாருக்கு பொருளாதாரமும் சகல வசதிகளும் அதிகமாக வழங்கப்பட்டிருக்கிறதோ அவர்தான் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்கு உரியவர் என்று நினைக்கின்றனர். இது தவறாகும் உலகத்தில் கிடைக்கின்ற வசதிகளை வைத்து மறுமை கண்ணியத்தை முடிவு செய்யமுடியாது.

மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச்செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும் போது “என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்” என்று கூறுகிறான்.

அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது “என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்” எனக் கூறுகிறான்.

(திருக்குர்ஆன் : 89:15,16.) 

இவ்வுலகில் இன்பத்தை அளித்தால் அல்லாஹ் தன்னை கண்ணியப்படுத்தியதாகவும், சோதிக்கும் விதமாக துன்பத்தை வழங்கினால் அதை சோதனை என்று விளங்காமல் அல்லாஹ் தன்னை இழிவுபடுத்துவதாகவும் மனிதன் நினைக்கிறான் என அல்லாஹ் கூறுகிறான். மேலும் இந்த சிந்தனை தவறு என்பதையும் எவ்வித வசதியும் இல்லாவிட்டாலும் இறையச்சம் இருந்தால் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான் என்பதை மற்றொரு வசனத்தில் அல்லாஹ் விளக்குகிறான்.

உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

(அத்தியாயம் : 49 : 13.) 

மேலும் இறைவனை அஞ்சுகின்ற நல்லடியார்களுக்கு மட்டும்தான் மறுமையில் மரியாதை உண்டு.

தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர. இனிமையான சொர்க்கச் சோலைகளில் அவர்களுக்கு அறியப்பட்ட உணவும், கனிகளும் உண்டு. அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்.

(அத்தியாயம் : 37 : 40,41,42,43.)

எனவே உலகில் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளை வைத்து அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவர் என்று தீர்மானித்து விடக்கூடாது. தனித்து விடப்பட்டாலும் பிரச்சாரத்தை விட்டுவிடக்கூடாது. இந்த நல்லடியாருடைய வாழ்வில் மற்றுமொரு முக்கியமான பாடமும் உண்டு. ஊர் மக்கள் பல துன்பங்களை அவருக்கு அளித்தபோதும் தனியாக நின்று அதை எதிர்கொள்கிறார்.

சத்தியத்தை எடுத்துச் சொல்லும்போது மற்றவர்களால் நாம் தனித்து விடப்பட்டாலும் நம்முடைய பிரச்சாரத்தை விடக்கூடாது. பலர் நம்மை எதிர்த்தாலும் அதை தாங்கும் வலிமையை அல்லாஹ்விடம் நாம் கேட்கவேண்டும்.

துன்பத்திற்கேற்ப கூலி

மேலும் மார்க்க பிரச்சாரத்தில் ஈடுபடுபவருக்கு அவருடைய துன்பத்திற்கேற்ப அல்லாஹ் கூலி வழங்குவான். அந்த கூலியை நினைத்து துன்பங்களை பொறுத்து கொள்ளவேண்டும் என்பதும் இவரது வாழ்க்கை கற்றுத் தரும் பாடமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மூமினான ஆண் அல்லது பெண்ணுக்கு உடலிலும் பொருளாதாரத்திலும் குழந்தையிலும் சோதனை இருந்துகொண்டே இருக்கும். (இதனால்) இறுதியில் தன் மீது எந்த பாவமுமில்லாமல் அல்லாஹ்வை சந்திப்பார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் அஹ்மத்-7521