Tamil Bayan Points

22) தீமை செய்தவரை நன்மை செய்து தண்டித்தவர்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

Last Updated on July 9, 2022 by Trichy Farook

22) தீமை செய்தவரை நன்மை செய்து தண்டித்தவர்

அபூபக்ர் (ரலி) அவர்களின் உறவினரான மிஸ்தஹ் என்பவர் ஆயிஷா (ரலி) அவர்களின் மீது அவதூறு கூறிய போது அபூபக்ர் (ரலி) அவர்கள் கண்ணீர் வடித்து கடுமையான துன்பத்திற்கு ஆளானார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

(என் விஷயத்தில் அவதூறு பரவியதை நினைத்து என் வீட்டில்) நான் அழுதேன். என் தந்தை (அபூபக்ர்) வீட்டிற்கு மேலே (குர்ஆன்) ஓதிக் கொண்டிருந்தார். என்னுடைய (அழும்) குரலை அவர் கேட்டு கீழே இறங்கி வந்தார். என் தாயிடத்தில் ஆயிஷாவிற்கு என்ன ஆனது? என்று கேட்டார்.

ஆயிஷா விஷயத்தில் சொல்லப்பட்ட (அவதூறான) விஷயம் ஆயிஷாவிற்குத் தெரிந்து விட்டது. (அதனால் அழுகிறாள்) என்று என் தாய் கூறினார். அப்போது (என் தந்தையின்) கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. என் அருமை மகளே நீ உன் வீட்டிற்கே நீ திரும்பிச் செல்ல வேண்டும் என்று சத்தியமிட்டுக் கூறினார். நான் (நபி (ஸல்) அவர்களின் இல்லத்திற்கு) திரும்பி வந்து விட்டேன்.

நூல் : திர்மிதீ-3180 (3104)

ஆனாலும் பின்பு அவரை மன்னித்து அவருக்குக் கொடுத்து வந்த உதவித் தொகையை அபூபக்ர் (ரலி) அவர்கள் தொடர்ந்து கொடுத்து வந்தார்கள். திருக்குர்ஆன் அவர்களை தீங்கு செய்தவருக்கும் நன்மை செய்யும் மனிதராக மாற்றியது.

உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

(என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒரு போதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிட மாட்டேன் என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள்.

அப்போது அல்லாஹ் உங்களில் செல்வம் மட்டும் தயாள குணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம் எனும் (24 : 22 ஆவது) வசனத்தை அருளினான்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆம் அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறிவிட்டு மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கனவே தான் செலவிட்டு வந்ததைத் தொடரலானார்கள். மேலும் அல்லாஹ்வின் மீதாணையாக அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்த மாட்டேன் என்றும் கூறினார்கள்.

நூல் : புகாரி-6679