Tamil Bayan Points

22) அப்துல் சத்தார் சாஹிப்

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

Last Updated on October 29, 2023 by

22) அப்துல் சத்தார் சாஹிப்

சுதந்திரம் நமது பிறப்புரிமை பூரண சுயராஜ்ஜியமே லட்சியம் என்று முழங்கிய கலகக்காரர் திண்டுக்கல் அப்துல் சத்தார் சாஹிப்.

1941 ஆம் ஆண்டு தொடங்கிய தனி நபர் சத்தியாக்கிரகத்தை நடத்தி 500 ரூபாய் அபராதமும் ஒராண்டு கால சிறைத் தண்டனையும் அனுபவித்தவர். விடுதலை பெற்று வெளியில் வந்த சில நாட்களிலே, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைதாகி தஞ்சை, வேலூர், கண்ணனூர் என பல ஊர் சிறைகளைப் பார்த்து வந்தார்.

1915 ஆம் ஆண்டு பூரண சுயராஜ்ஜியம் கோரி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மதுரையே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு முன்னோடியாக செயல்பட்ட அப்துல் சத்தார் சாஹிப் அவர்கள் மதுரையில் இண்டர் மீடியட் படித்துக் கொண்டிருந்தபோது காந்தியின் அறிவிப்பைக் கேள்விப்பட்டார்.

மகன் படித்து பட்டதாரியாக வருவான் என அவரது தந்தை காத்துக் கொண்டிருந்த நேரத்தில் தந்தையின் ஆசையைப் பொய்யாக்கி விட்டு கல்லூரிப் படிப்பை கை கழுவி விட்டு காந்தியின் இயக்கத்தில் கால் பதித்தார் காலம் முழுக்க அதிலே கரைந்து போனார்.(வி.போ.மு, வி.என்.சாமி பக் 749-750)

இவ்வாறு நாட்டு விடுதலைக்காக கல்வியை இழந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை ஏராளம். அரசின் கோப்புகளிலும் அந்தக் கால நூல்களிலும் காலத்தின் வெளிச்சம் படாமல் கரையான் அரித்துக் கிடக்கின்றன இதுபோன்ற இன்னும் பல தகவல்கள்.

1920 – 21 ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசின் அறிக்கையில்,

இந்தக் கல்வியாண்டில் கிலா பத் இயக்கத்தின் தாக்கத்தால் முஸ்லிம் மாணவர்கள் 4,420 பேர் குறைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

1922 ஆம் ஆண்டு கல்வித்துறை இயக்குனர் அறிக்கையில்..

(1918 ஆம் ஆண்டு முஸ்லிம் மாணவர்களைக் கருத்தில் கொண்டு சென்னை மாகாண அரசால் சென்னையில் துவங்கப்பட்ட) மதரஸாயே ஆஸம் கல்வி நிறுவனத்தில் 1922 ஆம் ஆண்டில் வெறும் 21 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். இதில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால் மூடி விடுவதே சிறந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.((ஆஸம்) தியாகத்தின் நிறம் பச்சை பேராசிரியர் அப்துஸ் ஸமது பக். 90-91)

கல்விச் சாலைப் புறக்கணிப்பில் முஸ்லிம்கள் காட்டிய கடுமையை இவ்விரண்டு அறிக்கையின் மூலம் மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

கல்வி கற்க வேண்டும் என்ற விழிப்புணர்வே மிகக் குறைவாக இருந்த காலகட்டம். குழந்தைகளைப் படிக்க வைக்க வசதியுள்ளவர்களின் எண்ணிக்கையும் அப்போது மிகக் குறைவு. அந்தக் காலத்தில் ஒரே ஒரு ஆண்டில் சென்னையில் மட்டும் 4,420 மாணவர்கள் பள்ளி கல்லூரிகளை விட்டு வெளியேறியிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய தியாகம்? எப்படிப்பட்ட புரட்சி?

மற்ற சமூகங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த புறக் கணிப்பைப் போல இதை எடுத்துக் கொள்ள முடியுமா? முஸ்லிம்கள் குறைவாக இருந்த சென்னையிலே நிலைமை இப்படியிருந்தால் முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக இருந்த வங்காளம் போன்ற இடங்களில் போராட்டமும் புறக்கணிப்பும் எந்த அளவிற்கு உக்கிரமாக இருந்திருக்கும்? என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

முஸ்லிம்கள் தாமாகவே விரும்பி வலிய சுமந்து கொண்ட சுமை இன்றும் கூட அவர்களின் தோள்களை அழுத்திக் கொண்டிருக்கிறது. அதனை அகற்றுவதற்கு மனமற்றவர்கள் தான் இந்தியாவின் அரியணையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்று தலைவர்களின் அறை கூவலை தரைமீது வீசிவிட்டு கல்வி நிலையங்களுக்குள் கருத்தூன்றி படித்தவர்கள் இன்று வளமான வாழ்வுக்கு வாரிசாகிப் போனார்கள். ஆலம் விழுதென நாட்டைத் தாங்கிப் பிடித்தவர்கள் ஆழக் குழிதோண்டி அதற்குள்ளே அமிழ்ந்து போனார்கள்.

சுதந்திர கமிஷன் அறிக்கைகளே இதற்கு ஆதாரம்.

சிறுபான்மையினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோர் குறித்து ஆராய்வதற்காக இந்திரா காந்தியின் ஆட்சியில் அமைக்கப்பட்ட கோபால் கமிஷன், 1995 ஆம் ஆண்டு போலீஸ் இராணுவப் பணிகளில் சிறுபான்மையோரின் பங்கு குறித்து ஆராய்ந்த தேசிய சிறுபான்மையினர் ஆணைய அறிக்கை, திட்டக் குழுவின் சிறுபான்மையினர் துணைக்குழு 1996 ஆம் ஆண்டு வழங்கிய சிறுபான்மையினர் குறித்த தகவல் திரட்டு, 2005 மார்ச் 9 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நீதிபதி இராஜேந்திர சச்சார் தலைமையில் அமைக்கப்பட்ட முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார ஆய்வுக் குழு, 2005 மார்ச் 15 இல் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட மொழி மற்றும் மதச் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம். (இழப்பதற்கு ஏதுமில்லை. அ.மார்க்ஸ், பக் 32-52 வெளியீடு பெருவளநல்லூர் மற்றும் லால்குடி சாந்தி நகர் முஸ்லிம் ஜமாஅத்)

இந்த அனைத்து அமைப்புகளுமே முஸ்லிம்களின் பிந்தங்கிய நிலையை அரசுக்குப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றன. படங்கள் எத்தனை வந்தாலும் முஸ்லிம்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

மேலும் புறக்கணிப்பில் முஸ்லிம்கள் முன்னோடிகளாக விளங்குவதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் அறைகூவலாக மட்டும் முஸ்லிம்கள் கருதவில்லை. அதையும் தாண்டி இஸ்லாமிய மார்க்கத்திற்குச் செய்யும் தொண்டாக – கடமையாக நினைத்தார்கள். ஆங்கிலேயர்களை தமது மார்க்கத்தையே அழிக்க வந்த விரோதியாகப் பார்த்தார்கள்.

மார்க்கத் தீர்ப்பு என்ற பெயரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு பிரகடனங்களை வெளியிட்டார்கள். ஆங்கிலேயர்களால், இந்தியாவிற்கு அறிமுகமாகிய அனைத்தையும் மார்க்கத்தின் பெயரால் தடை செய்தார்கள். அவனது மொழி, உடை, சிகையலங்காரம் அனைத்துமே ஆபத் தானது என்று அச்சமூட்டினார்கள்.

ஆங்கிலம் கற்பதும், பேண்ட் அணிவதும் கிராப் வெட்டி- முடியை அலங்கரித்துக் கொள்வதும் ஹராமானது (தடுக்கப்பட்டது) என்று கூறினார்கள்.

ஆங்கிலேயர்களின் கல்வி நிலையங் களைப் புறக்கணித்த மாணவர்களுக்கு மாற்றுக் கல்வித் திட்டமாகத்தான் நாடு முழுவதும் மதரஸாக்கள் எனும் மார்க்கக் கல்விக் கூடங்கள் முளைத்தன.

இந்த மதரஸாக்களில் ஆங்கிலேயர் வெறுப்பும், எதிர்ப்புமே அதிகமாக ஊட்டி வளர்க்கப்பட்டது. மாதம் ஒருமுறை மொட்டையடிப்பது வலியுறுத்தப்பட்டது, பேண்ட் அணிவது முற்றிலுமாக தடுக்கப்பட்டு கைலி உடுத்துவது கடமையாக்கப் பட்டது, ஆங்கிலத்தின் வாடை கூட வந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. இவையனைத்தும் கடுமையாகப் பின்பற்றப்பட்டன.

அன்று தொடங்கிய இந்தப் பயணம் இன்றும் கூட நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து வெளியாகும் ஆலிம்களிடம் இன்றும் அதன் தாக்கத்தை உணர முடியும். கைலி கட்டுதல், ஜுப்பா அணிதல், மொட்டையடித்தல் ஆகிய அனைத்தும் அதன் பிரதி பிம்பங்களே.

இந்தப் போர் துவங்கி 90 ஆண்டுகள் ஓடி விட்டன. அது முடிந்து 60 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இப்போதும் அதன் தாக்கம் தொடர்கிறது என்றால் முஸ்லிம்கள் சுதந்திரப் போரில் எந்த அளவிற்கு உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் உண்மை விசுவாசத்துடன் பங்கெடுத் திருப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

நாட்டு விடுதலைக்காக உருவாகி, அன்பையும்அமைதியையும் போதித்துக் கொண்டிருக்கும் மத்ர ஸாக்களை தீவிரவாதக் கூடங்கள் என கொச்சைப்படுத்துபவர்களை என்ன வென்று சொல்வது?