Tamil Bayan Points

21) 23 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

23 வது வசனம்

23. அவனையன்றி வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொள்வேனா? அளவற்ற அருளாளன் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவர்களின் பரிந்துரை எனக்கு எந்தப் பயனையும் அளிக்காது. அவர்கள் என்னைக் காப்பாற்றவும் மாட்டார்கள்.

இஸ்லாத்தின் பார்வையில் மறுமைநாளின் பரிந்துரை

அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுளை ஏற்படுத்தமாட்டேன் என்றும் அல்லாஹ் ஒரு தீங்கை நாடிவிட்டால் வேறு யாரும் பரிந்துரை செய்து தன்னை காப்பாற்ற முடியாது என்பதையும் நல்லடியார் நன்றாக உணர்த்துகிறார். சிலர் அல்லாஹ்வைத் தவிர மற்ற போலி தெய்வங்களிடம் சென்று வணங்குகின்றனர். மேலும் அவை தங்களுக்கு நன்மை செய்யும் என நினைக்கின்றனர்.

இவ்வாறே மக்கத்து காஃபிர்களும் வாதிட்டனர்

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் “அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் : 39:3.) 

இந்த கருத்தையும் நல்லடியார் மறுக்கிறார். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் நமக்கு எந்த நன்மையும் தீமையும் செய்ய இயலாது என பதிவு செய்கிறார்.

பரிந்துரை செய்ய முடியுமா?

மக்கள் நினைப்பது போன்று யார் வேண்டுமானாலும் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்துவிட முடியாது. மாறாக அல்லாஹ் அனுமதித்தவர்களுக்கு மட்டும்தான் அது இயலும்.

அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்?

(அல்குர்ஆன் : 2 : 255.) 

பரிந்துரை செய்பவரையும் பரிந்துரை செய்யப் படுபவரையும் அல்லாஹ்வே முடிவு செய்வான். இதை பின்வரும் சம்பவத்திலிருந்து அறியலாம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் மறுமை நாளில் மக்களை ஒன்று கூட்டுவான். அப்போது அவர்கள் ‘(அதி பயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் கேட்டுக்கொண்டால் நன்றாயிருக்குமே!’ என்று கூறியவாறு (ஆதி மனிதரும் ஆதித் தூதருமான) ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள்.

அவரிடம் ‘அல்லாஹ் தன்னுடைய கையால் உங்களைப் படைத்தான். தன்(னால் படைக்கப்பட்ட) உயிரை உங்கள் உடலுக்குள் ஊதினான். மேலும், தன் வானவர்களுக்கு அவன் கட்டளையிட, அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தனர். எனவே, (இந்தத் துன்ப நிலையிலிருந்து எங்களை விடுவிக்கும்படி) எங்களுக்காக நம் இறைவனிடத்தில் பரிந்துரை செய்யுங்கள்’ என்று கூறுவார்கள்.

அதற்கு ஆதம்(அலை) அவர்கள் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று கூறியவாறு, (உலகில்) தாம் புரிந்தவற்றை அவர்கள் நினைவுகூருவார்கள். பிறகு ‘நீங்கள் (எனக்குப் பின்) முதல் தூதராக இறைவன் அனுப்பிவைத்த நபி நூஹ் அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள். உடனே மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள்.

அன்னாரும் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று கூறி, (உலகில்) தாம் புரிந்தவற்றை நினைவுகூர்ந்து ‘அல்லாஹ் தன்னுடைய உற்ற நண்பராக்கிக் கொண்ட (நபி) இப்ராஹீமிடம் நீங்கள் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.

உடனே மக்கள் அன்னாரிடம் செல்ல, அவர்களும் ‘(நீங்களும் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று கூறியவாறு, தாம் புரிந்த தவற்றை நினைவு கூருவார்கள். பிறகு ‘அல்லாஹ் உரையாடிய (நபி) மூஸாவிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்ல, அவர்களும் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று கூறியவாறு தாம் புரிந்த தவற்றை அவர்கள்நினைவு கூர்ந்தபடி ‘நபி ஈசாவிடம் செல்லுங்கள்!’ என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்வார்கள்.

அப்போது அவர்கள் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை. நீங்கள் இறுதி நபியான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள். ஏனெனில், அவர் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்’ என்று கூறுவார்கள். உடனே மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான் என் இறைவனிடத்தில் அனுமதி கேட்பேன். அவனை நான் கண்டதும் சிரம்பணிந்தவனாக சஜ்தாவில் விழுந்து விடுவேன். அவன் நாடிய நேரம் வரை (நான் விரும்பியதைக் கோர) என்னைவிட்டுவிடுவான்.

பிறகு (இறைவன் தரப்பிலிருந்து) ‘உங்கள் தலையை உயர்த்துங்கள். கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும. சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று என்னிடம் கூறப்படும். உடனே நான் என்னுடைய தலையை உயர்த்தி இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு, நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன் (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான்.

பிறகு அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் சென்று சிரம் பணிந்தவனாக சஜ்தாவில் விழுவேன். அதைப் போன்றே மூன்றாம் முறை அல்லது நான்காம் முறை செய்வேன். இறுதியாகக் குர்ஆன் தடுத்துவிட்டவர்(களான நிரந்தர நரகம் விதிக்கப்பட்ட இறைமறுப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்கமாட்டார்கள்.

என அனஸ்(ரலி) அறிவித்தார். இதன் அறிவிப்பார்களில் ஒருவரான கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அவர்கள், ‘குர்ஆன் தடுத்துவிட்டவர்களைத் தவிர’ என்பதற்கு விளக்கமாக, ‘நிரந்தர நரகம் கட்டாயமாம்விட்டவர்களைத் தவிர’ என்று கூறுவார்கள்.

ஸஹீஹ் புகாரி-6565.

இதே கருத்தை பின்வரும் வசனங்களும் தெளிவுபடுத்துகிறது.

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். காரியங்களை நிர்வகிக்கிறான். அவனது அனுமதியின்றி எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனை வணங்குங்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா?

(அல்குர்ஆன் : 10:3.) 

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் : 10:18.) 

நபி (ஸல்) அவர்களை போன்று யாருக்கு அல்லாஹ் அனுமதியளித்தானோ அவர்தான் பரிந்துரை செய்ய இயலும். இவைதான் 23 வசனத்தின் விளக்கமாகும்.