Tamil Bayan Points

20) 22 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

22 வது வசனம்

22. என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காதிருக்க முடியும்? அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காதிருக்க முடியும்?” என்று அந்த நல்லடியார் கேட்கிறார். இவரது கேள்வியில் இரண்டு கருத்துக்கள் அடங்கியுள்ளது.

அல்லாஹ்வையே நம்மை படைத்துள்ளான். ஆகவே அவனையே நாம் வணங்க வேண்டும். அவனையல்லாத வேறு எதையும் யாரையும் வணங்குதல் கூடாது என்பது ஒன்று.

இன்னொன்று அல்லாஹ்வை நம்பிக்கை கொள்தல் மாத்திரம் போதாது. அவனை வணங்குதலும் அவசியமாகும் என்பதாகும்.

1. வணக்கத்திற்கு தகுதியற்றவற்றை வணங்குவது

2.அல்லாஹ்வை வணங்காமலிருப்பது

இரண்டுமே தவறு என்பதை இந்த வாசகம் உணர்த்துகின்றது. ஒவ்வொரு முஸ்லிமிடத்திலும் அல்லாஹ்வை வணங்காமலிருக்க எனக்கென்ன நேர்ந்தது என்ற சிந்தளை அவசியம் இருக்க வேண்டும். நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் இத்தகைய சிந்தனை இருந்ததை பின்வரும் சம்பவம் உறுதி செய்கின்றது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். ஆகவே நான் “ஏன் இப்படிச் செய்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே?” என்று கேட்டேன். அவர்கள், “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்பவேண்டாமா?” என்று கேட்டார்கள். (தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில்) நபி (ஸல்) அவர்களின் உடல் சதை போட்டபோது அமர்ந்து தொழுதார்கள். “ருகூஉ’ செய்ய நினைக்கும் போது, எழுந்து (சிறிது நேரம்) ஓதுவார்கள். பிறகு, “ருகூஉ’ செய்வார்கள்.

நூல் புகாரி-4837

முன், பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட தாங்கள் ஏன் இறைவணக்கத்தில் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று நபியிடம் கேட்கப்பட்ட போது நான் நன்றி செலுத்தக் கூட்டிய அடியானாக ஆகக் கூடாதா? என்று கேள்வியெழுப்பி நான் எப்படி அல்லாஹ்வை வணங்காமலிருப்பேன்? என்கிறார்கள்.

யாசீன் அத்தியாயத்தில் கூறப்பட்ட நல்லாடியாரிடம் இருந்த அதே சிந்தனை நபிகளாரிடமும் இருந்துள்ளதை இதன் மூலம் அறியலாம்.