Tamil Bayan Points

02) வஹியில் முரண்பாடா?

நூல்கள்: வஹியில் முரண்பாடா?

Last Updated on June 16, 2022 by

2) வஹியில் முரண்பாடா?

உலக மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இறைவனால் வழங்கப்பட்ட புனிதமிக்க இஸ்லாம் மார்க்கத்தின் இறுதித் தூதராக இவ்வுலகுக்கு அனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் திருமறைக் குர்ஆனை நமது வாழ்வியல் வழிகாட்டியாகவும், அதற்குரிய விளக்கமாக தமது வாழ்நாளையும் அமைத்துச் சென்றார்கள்.

நபி (ஸல்) அவர்களினால் வழங்கப்பட்ட இஸ்லாம் மார்க்கத்தின் மூல ஆதாரமாகத் திகழ்வது வஹீ – இறைச் செய்திகளாகும். இறைச் செய்திகள் திருக்குர்ஆன் என்று ஒரு முறையிலும், அதற்கு விளக்கமாக நபியவர்கள் கூறிய செய்திகள் ஹதீஸ் என்று இன்னொரு முறையிலும் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

இந்த இரு செய்திகளில் திருக்குர்ஆன் தான் இஸ்லாத்தின் முதல் அடிப்படை மூல ஆதாரமாகும். அதற்கு விளக்கவுரையாக அமையப் பெற்ற ஹதீஸ்கள் இரண்டாவது மூல ஆதாரங்களாக அமைகின்றன. இந்த இரண்டு ஆதாரங்களையும் இரண்டில் ஒன்று மற்றையதுடன் முரண்படாத வகையிலேயே இறைவன் அருளியிருக்கின்றான். ஒரே ஏக இறைவனான அல்லாஹ்விடமிருந்து அருளப் பெற்ற திருமறைக் குர்ஆனுக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் பேசமாட்டார்கள் என்பது குர்ஆன் கற்றுத் தரும் பேருண்மையாகும்.

53:2 مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوٰى‌ۚ‏

53:3 وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰىؕ‏

53:4 اِنْ هُوَ اِلَّا وَحْىٌ يُّوْحٰ

உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

(அல்குர்ஆன்:53:1,2,3.)

நபி (ஸல்) அவர்கள் மார்க்க விஷயமாக எதனை எடுத்துச் சொன்னாலும் அது வஹீ – இறைச் செய்தியாகத் தான் இருக்கும். அவர்கள் மனோ இச்சைப்படி, தான் நினைத்தவற்றையெல்லாம் பேசவோ, மார்க்கம் என்று கற்றுத் தரவோ மாட்டார்கள் என்பதை மேற்கண்ட அல்குர்ஆன் வசனம் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றது.

4:82 اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ‌ؕ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا‏

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

(அல்குர்ஆன்:4:82.)

41:42 لَّا يَاْتِيْهِ الْبَاطِلُ مِنْۢ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهٖ‌ؕ تَنْزِيْلٌ مِّنْ حَكِيْمٍ حَمِيْدٍ

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.

(அல்குர்ஆன்:41:42.)

திருக்குர்ஆனில் முரண்பாடு இருக்காது என்பதுதான் இறைவேதம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. முரண்பாடு இருப்பது போல் நமக்குத் தோன்றினால் அது நம்முடைய சிந்திக்கும் தன்மையில் ஏற்பட்ட குறைபாடாகத் தான் இருக்க முடியும். இதனால் தான் இவ்வசனத்தில் சிந்திக்க மாட்டீர்களா? என்றும் சிந்தித்தால் முரண்பாடு இல்லை என்பதை அறிந்து கொள்வீர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
புரிந்து கொள்வதில் சிலருக்குத் தெளிவில்லாத காரணத்தால் தான் முரண்பட்ட இரு கருத்துக்களுக்கும் திருக்குர்ஆன் இடம் தருவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

திருக்குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ முரண்பாடு உள்ளது போல் தோன்றினால் அதை எப்படி சீர்படுத்திக் கொள்வது என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும் . ஒட்டுமொத்தமாக திருக்குர்ஆன் எந்தக் கொள்கையை முன்வைக்கிறதோ அந்தக் கொள்கைக்கு மாற்றமாகப் பொருள் கொள்ளும் வகையில் ஒரு வசனம் நமக்குத் தெரிந்தால் அவ்வாறு பொருள் கொள்ளாமல் ஒட்டு மொத்த குர்ஆனிலிருந்து விளங்கும் கொள்கைக்கு ஏற்ற விளக்கத்தைத் தான் அந்த வசனத்துக்குக் கொடுக்க வேண்டும்.

இது குர்ஆனைச் சரியாக புரிந்து கொள்ளவதற்குரிய முக்கிய வழிமுறையாகும். அதுபோல் சில ஹதீஸ்கள் ஒட்டு மொத்த குர்ஆன் முன்வைக்கும் கொள்கைக்கு மாற்றமாக அமைந்திருக்கின்றன. எந்த வகையிலும் குர்ஆனுடன் ஒத்துப் போகும் வகையில் விளக்கம் கொடுக்க முடியாமல் அவை இருக்கும். அப்போது என்ன செய்வது? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கவே அனுப்பப்பட்டார்கள்.

وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

(திருக்குர்ஆன்:16:44.)

விளக்கம் கொடுக்க அனுப்பப்பட்ட நபியவர்கள் குர்ஆனுக்கு முரணாகப் பேசவோ, நடக்கவோ மாட்டார்கள். அப்படி அவர்கள் பேசியதாக அல்லது நடந்ததாக ஒரு செய்தி கிடைத்தால் அது எந்த நூலில் பதிவு செய்யப்பட்டு,  இருந்தாலும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல: செய்தது அல்ல என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும். இது ஹதீஸ்களை மறுப்பதாக ஆகாது. இதையும் நாம் தெளிவாக விளங்கிக்
கொள்ள வேண்டும்.

ஏனெனில் நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் சமமானவை அல்ல. திருக்குர்ஆனைப் பொறுத்த வரை அனைத்து நபித்தோழர்களும் அது இறைவேதம் என்பதற்குச் சாட்சிகளாக உள்ளனர்.
திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி “இது என் இறைவனிடமிருந்து வந்தது’’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித்தோழர்களும்
சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர். பலர் மனனம் செய்தனர்.

ஹதீஸ்களைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு
ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார்.

ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும், ஓரிருவர் சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது. எவ்வளவு நம்பகமானவர்கள் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மட்டுமின்றி அதற்கு அடுத்த காலத்து ஒட்டுமொத்த மக்களும் “இதுதான் குர்ஆன்” என்று நபித்தோழர்கள் சொன்னதாக அறிவிக்கின்றனர். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள அனைவரும் இதுபோல் அறிவிக்கின்றனர்.

ஹதீஸ்களைப் பொருத்தவரை ஓரிரு நபித்தோழர்கள் தான் அறிவித்துள்ளனர். நபித்தோழர் இப்படிச் சொன்னார் என்று அறிவிப்பதும் ஓரிருவர் தான். நூலாகத் தொகுக்கப்படும் காலம் வரை ஒருவரில் இருந்து ஒருவர் என்ற அடிப்படையில் தான் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டன.

எனவே திருக்குர்ஆன் விஷயத்தில் கடுகளவு கூட சந்தேகம் வராது. ஹதீஸ்களைப் பொருத்த வரை இந்த நிலை கிடையாது. ஆனாலும் நபித்தோழர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் அவற்றை ஏற்றுச் செயல்படுகிறோம். திருக்குர்ஆனுடன் மோதாத வரை இத்தகைய செய்திகளில் சந்தேகம் கொள்ளக் கூடாது. ஒரு ஹதீஸ் திருக்குர்ஆனுடன் மோதும்போது “இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது” என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நபித்தோழர்கள் அரைகுறையாகக் கேட்டதன் மூலம், அல்லது தவறாகப் புரிந்து கொண்டதன் மூலம் இந்தத் தவறு ஏற்பட்டு இருக்கலாம். அல்லது நபித்தோழர்களிடம் கேட்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவரிடம் தவறு நிகழ்ந்திருக்கலாம். அல்லது அதற்கடுத்த தலைமுறையைச் சேர்ந்தவரிடம் தவறு ஏற்பட்டிருக்கலாம்.

ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை: திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது: இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்து விடக்கூடாது. மாறாக குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை நபிமொழி அல்ல என்று மறுக்க வேண்டும். அறிவிப்பாளர்கள் சரியாக இருந்தும் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை நாம் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்பதை நாம் சுயமாக சொல்லவில்லை. இதனை அல்லாஹ்வுடைய தூதரே சொல்லி விட்டார்கள்.

(مسند أمحد بن حنبل )
3794 حَدَّثَنَا أَبُو عَامِرٍ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي حُمَيْدٍ، وأَبِي أُسَيْدٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِذَا سَمِعْتُمُ الْحَدِيثَ عَنِّي تَعْرِفُهُ قُلُوبُكُمْ، وَتَلِينُ لَهُ أَشْعَارُكُمْ، وَأَبْشَارُكُمْ، وَتَرَوْنَ أَنَّهُ مِنْكُمْ قَرِيبٌ، فَأَنَا أَوْلَاكُمْ بِهِ، وَإِذَا سَمِعْتُمُ الْحَدِيثَ عَنِّي تُنْكِرُهُ قُلُوبُكُمْ، وَتَنْفِرُ أَشْعَارُكُمْ، وَأَبْشَارُكُمْ، وَتَرَوْنَ أَنَّهُ مِنْكُمْ بَعِيدٌ فَأَنَا أَبْعَدُكُمْ مِنْهُ»

قال تعليق شعيب األرنؤوط : إسناده صحيح على شرط مسلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதற்கு) உங்களை விட நான் மிகத் தகுதி வாய்ந்தவனே.

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், உங்களது தோல்களும் முடிகளும் விரண்டு ஓடுமானால், அச்செய்தி உங்களுக்குத் தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களை விட அதை விட்டும் நான் மிக தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி) அவர்கள்

நூல்: அஹ்மத்-16058 (15478) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பெயரால் சொல்லப்படும் செய்திகளில் பொய்யானவை கலந்து விடும் என்பதையும், அதை எவ்வாறு கண்டறிவது என்பதையும் இங்கே விளக்குகிறார்கள். எந்தச் செய்தியைக் கேட்கும் போது இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருப்பார்கள் என்று தக்க காரணங்களுடன் ஒருவரது மனசாட்சிக்குத் தோன்றுமோ அது போன்ற செய்திகளைச் சொல்வதற்கு அவர்கள் தகுதியானவர்கள்.

எந்தச் செய்தியைச் செவியுறும் போது தக்க காரணங்களுடன் ஒருவரது மனசாட்சி அதை வெறுக்குமோ, அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று அவரது மனசாட்சிக்குத் தோன்றுமோ அந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாதது: அவர்கள் செய்யாதது என்பதுதான் அந்த வழிமுறை என்று  தெளிவாக விளக்கி விட்டார்கள். அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

25:73 وَالَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوْا عَلَيْهَا صُمًّا وَّعُمْيَانًا

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.

(திருக்குர்ஆன்:25:73.)

குருடர்களாகவும் செவிடர்களாகவும் விழுவது என்றால் என்ன? ஒரு வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது அது பல வசனங்களுக்கு முரணாகத் தெரிகிறது. இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமாகவும் உள்ளது.
மாற்றமாக இருந்தால் இருந்து விட்டு போகட்டும் என்று நம்புவது தான் குருடர்களாக செவிடர்களாக விழுவது என்பதன் கருத்தாக இருக்க முடியும்.

பல வசனங்களுக்கு முரணாக உள்ளதால் முரணில்லாத வகையில் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்காத வகையில் பொருள் கொள்பவர்கள் தான் குருடர்களாகவும் செவிடர்களாகவும் விழாதவர்கள். இறைவனால் வழங்கப்பட்ட வஹீயாக இருக்கின்ற அல்குர்ஆனும், ஹதீஸ்களும் ஒரு போதும் ஒன்றுடன் மற்றொன்று முரண்படாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.