Tamil Bayan Points

2) சந்திக்கும் வேளையில்

நூல்கள்: சந்திக்கும் வேளையில்

Last Updated on January 2, 2020 by

சந்திக்கும் வேளையில்

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது பல்வேறு சொற்கள் மூலம் முகம கூறுகின்றனர். சந்திக்கப்படுபவர் முக்கியமான நபர் என்றால் அவரது காலில் விழுதும், கூனிக் குறுகுவதும் சிலருக்கு வழக்கமாக உள்ளது. ஆனால் இஸ்லாம் கற்றுத் தரும் முகமன் மனிதனின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படாதவகையிலும், சம நிலையில் அன்பு செலுத்துவதற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளது என்பதையும், ஸலாம் கூறும் ஒழுங்குகளையும் கீழ்க்காணும் தலைப்புக்களில் தெளிவாக விளக்கும் நூல்.

  • இஸ்லாத்தின் முகமன் ஸலாம்
  • ஸலாம் கூறுவதால் கிடைக்கும் பயன்கள்
  • பல வகைச் சொற்கள்
  • ஸலாம்
  • ஸலாமுன் அலை(க்)க
  • அஸ்ஸலாமு அலை(க்)க
  • ஒருவருக்கு ஒருமை, பலருக்கு பன்மை
  • ஸலாமுக்குப் பதிலுரைத்தல்
  • சிறந்த முறையில் மறுமொழி கூற வேண்டும்
  • ஸலாம் சொல்லி அனுப்புதல்
  • ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?
  • ஸலாமின் ஒழுங்குகள்
  • மலஜலம் கழிக்கும் போது ஸலாம் கூறக் கூடாது
  • ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் ஸலாம் கூறலாம்.
  • முஸாஃபஹா கைகுலுக்குதல்
  • கட்டியணைத்தல்
  • கைகளை முத்தமிடுதல்
  • காலில் விழுதல்
  • வழிகேடர்களின் ஆதாரங்கள்
  • எழுந்து நின்று மரியாதை செய்வது 

இதில் ஒவ்வொருன்றாக நாம் எடுத்துக் கொள்வோம்.. 

இஸ்லாத்தின் முகமன் ஸலாம்

மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது பல்வேறு வகையில் முகமன் கூறிக் கொள்கின்றனர். இந்த முகமன்களில் இஸ்லாம் கூறும் முகமன் பல வகையில் சிறந்து விளங்குவதைப் பிற மதத்து நடுநிலையாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது வணக்கம் என்றும் நமஸ்தே என்றும் மற்றும் இந்தப் பொருளில் அமைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியும் முகமன் கூறுகின்றனர். நாம் சிந்திக்கும் போது இதில் பல குறைபாடுகள் உள்ளதைக் காணலாம்.

வணக்கம் என்றால் வணங்குதல், அல்லது மரியாதை செய்தல் எனப் பொருள். ஒருவர் வணங்குகிறார் என்றால் மற்றவர் வணங்கப்படுகின்றார். இருவரும் வணக்கம் என்று சொல்லும் போது அது பொருளற்றதாகி விடுகிறது. இருவரும் சம நிலையில் இருக்கும் போதாவது ஏதாவது கூறிச் சமாளிக்க முடியும்.

ஒருவர் மிகவும் மரியாதைக்குரியவராகவும் மற்றவர் தாழ்த்தப்பட்ட நிலையிலும் இருந்தால் உயர்ந்தவர் கூறும் வணக்கம் பொய்யாகி விடுகிறது. உயர்ந்த நிலையில் உள்ளவர், தாழ்ந்தவரை வணங்கவும் மாட்டார். தன்னை விட மேம்பட்டவராக நினைக்கவும் மாட்டார்.

அது போல் ஆங்கிலக் கலாச்சார ஊடுறுவல் காரணமாக நல்ல காலை. நல்ல பகல், நல்ல மாலை, நல்ல இரவு என்றெல்லாம் கூறும் வழக்கம் பரவிவிட்டது. இது எல்லா நேரத்திலும் சொல்ல முடியாத முகமனாகவுள்ளது.

மனிதர்கள் நல்ல நிலையில் இருப்பது பாதி என்றால் கவலை துன்பம் போன்ற கெட்ட நிலை பாதியாக உள்ளது. மரண வீட்டிலோ நோயாளியிடமோ, பெரும் நட்டமடைந்தவரிடமோ பரீட்சையில் ஃபெயிலானவனிடமோ நல்ல காலை, நல்ல மாலை என்று கூற முடியாது. அது பொருத்தமாக இருக்காது. ஆனால் இஸ்லாம் கூறும் முகமன் பொய் கலப்பில்லாததாகவும் எல்லா நேரத்துக்கும் ஏற்றதாகவும் அமைந்துள்ளது.

அஸ்ஸலாமு அலை(க்)கும் என்றால் உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று பொருள். திருமண வீட்டுக்கும் சாந்தி தேவை. மரண வீட்டுக்கும் சாந்தி தேவை. இலாபம் அடைந்தவனுக்கும் சாந்தி தேவை. நட்டம் அடைந்தவனுக்கும் சாந்தி தேவை. மனித வாழ்வின் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அனைவரிடமும் பயன்படுத்தத் தக்க ஒரே முகமன் ஸலாம் கூறுதல் மட்டுமே.

ஸலாம் கூறுவதால் கிடைக்கும் பயன்கள்

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுவது சொர்க்கத்தில் கொண்டு சேர்க்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. ஒருவரை ஒருவர் நேசிக்காமல் நம்பிக்கை கொண்டவர்களாக முடியாது. ஒரு செயலைச் செய்தால் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள். அச்செயலை நான் உங்களுக்குக் கூறட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள் என்றனர்.

நூல் : முஸ்லிம் 81

இஸ்லாத்தில் மிகச் சிறந்த நல்லறம் எது? என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணவளிப்பதும், உனக்குத் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும் என விடையளித்தார்கள்.

நூல் : புகாரி 12, 28, 6236

சுய நலம், கோபதாபம் போன்ற தீய குணங்களின் காரணமாக மனிதர்களிடையே சண்டை சச்சரவுகள் நிகழ்வது சகஜம். இத்தகைய சண்டைகள் காலா காலத்துக்கும் நீடிக்கக் கூடாது. கோப உணர்வு அடங்கிய உடன் சமாதானமாகி விட வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.

இதனால் தான் எந்த முஸ்லிமும் இன்னொரு முஸ்லிமுடன் மூன்று நாட்களுக்கு மேல் பகைமையாக இருக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டினார்கள். பகைமையாக இருக்கக் கூடாது என்றால் முன்பு போலவே இருவரும் உடனடியாக நட்புறவாக ஆக வேண்டும் என்பது இதன் பொருளல்ல. பெரும்பாலான உள்ளங்களுக்கு உடனடியாக இது சாத்தியப்படாது. பகைமையைப் படிப்படியாகத் தான் குறைக்க முடியும். அதற்கு முதல் படியாக அமைவது ஸலாம் தான்.

பகைமை கொண்டவராக இருந்தாலும் மூன்று நாட்கள் கடந்து விட்டால் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது முகம் பார்த்து ஸலாம் கூறினால் சமாதானத்தின் முதல் படியில் நாம் ஏறி விடுகிறோம். இது தொடரும் போது நாளடைவில் முழுமையான நல்லிணக்கம் ஏற்பட்டு விடும். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரத்தினச் சுருக்கமாகப் பின் வருமாறு கூறுகிறார்கள்.

ஒரு மனிதன் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைக்கக் கூடாது. இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது இவர் இந்தப் பக்கமும் அவர் அந்தப் பக்கமும் திரும்பிக் கொள்ளக் கூடாது. யார் ஸலாமைக் கொண்டு ஆரம்பிக்கிறாரோ அவரே அவர்களில் சிறந்தவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 6077, 6237