Tamil Bayan Points

11) இரத்தமும் சதையும் கடவுளுக்குக் கிடையாது.

நூல்கள்: இயேசு இறை மகனா?

Last Updated on October 30, 2022 by

 

‘கடவுளுக்கு இரத்தமோ, சதையோ, எலும்புகளோ இருக்கக் கூடாது. அவர் ஆவி வடிவிலேயே இருக்க வேண்டும்’ எனவும் பைபிள் கடவுளுக்கு இலக்கணம் கூறுகிறது.

தேவன் ஆவியாக இருக்கிறார்.

(யோவான் 4:24)

இந்த வசனத்தில் கூறப்படும் இலக்கணத்திற்கேற்ப இயேசு இருந்தாரா?

இல்லை என்று பைபிள் அடித்துச் சொல்கிறது.

இயேசுவின் முழு வாழ்க்கையிலும் அவர் ஆவியாக இராமல் மாம்சம், சதை, எலும்பு ஆகியவற்றுடனே இருந்தார்.

அவர் சிலுவையில் அறையப்பட்டபோதும் அவர் இவ்வாறே இருந்தார்.

ஒரு ஆவியைச் சிலுவையில் அறைய முடியாது.

இயேசுவைச் சுட்டிக் காட்டும் ஓவியங்களில் அவர் சிலுவையிலறையப்பட்டு இரத்தம் சிந்தும் நிலையிலேயே தீட்டப்படுகிறார்.

அது மட்டுமின்றி அவர் உயிர்த்தெழுந்த பின்னரும் இதே நிலையிலேயே இருந்திருக்கிறார்.

அவர், அவர்களை நோக்கி, நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான் தான் என்று அறியும் படி என் கைகளையும், என் கால்களையும் பாருங்கள்! என்னைத் தொட்டுப் பாருங்கள்! நீங்கள் காண்கிற படி எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாகியிருக்கிறது போல் ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி தம்முடைய கைகளையும், கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

(லூக்கா 24:38-40)

உயிர்த்தெழுந்த பின்னரும் கூட இயேசு ஆவியாக இல்லை; இரத்தமும், சதையும், எலும்பும் உள்ளவராகவே இருந்தார். இதன் பிறகும் அவரைக் கடவுள் என்று எப்படி நம்ப முடியும்?