Tamil Bayan Points

2) ஆன்மாக்களின் உலகம்

நூல்கள்: மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா?

Last Updated on December 20, 2022 by Trichy Farook

2) ஆன்மாக்களின் உலகம்

மனிதன் மரணித்து விட்டால் அவனது செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன. மரணித்தவனால் சிந்திக்கவும், செயல்படவும் முடியாது என்பதைக் கண்கூடாக நாம் காண்பதால் இதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை.

அதனால் தான் இறந்தவரை நாம் அடக்கம் செய்கிறோம். அவரது சொத்துக்களை வாரிசுகள் பிரித்துக் கொள்கிறார்கள். அவரது மனைவியை மற்றவர்கள் மணந்து கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் எல்லா முஸ்லிம்களும், முஸ்லிமல்லாத மக்களும் சரியான கருத்திலேயே இருக்கிறார்கள்.

மனிதன் மரணித்த பின்னர் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவான் என்றும், உயிர்ப்பிக்கப்படும் வரை பர்ஸக் எனும்  ஆன்மாக்களின் உலகில் மனிதன் வாழ்கிறான் என்று முஸ்லிம்களாகிய நாம் நம்புகிறோம். மரணித்த மனிதர்கள் ஆன்மாக்களின் உலகில் உயிருடன் உள்ளனர் என்பதை முஸ்லிம்களில் பலரும் பலவாறாகப் புரிந்து கொள்கின்றனர்.

ஆன்மாக்களின் உலகில் இருந்து கொண்டு இவ்வுலகில் நடப்பதை அவர்கள் கவனித்துக் கொண்டு உள்ளனர். நாம் பேசுவதைச் செவிமடுக்கின்றனர். இறந்தவர்கள் மகான்களாக இருந்தால் நமது தேவைகளை நிறைவேற்றி வைக்கும் அளவுக்கு ஆற்றல் பெற்றவர்களாக இருக்கின்றனர் என்று சில முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

இந்த நம்பிக்கை தான் தர்கா வழிபாட்டுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

இறந்த பின்னர் இன்னொரு உலகத்தில் உயிருடன் உள்ளனர் என்ற அடிப்படை சரியானது தான். ஆனால் அங்கே இருந்து கொண்டு இவ்வுலகில் நடப்பதை அறியவோ, பார்க்கவோ, கேட்கவோ, மற்றவருக்கு உதவவோ இயலாது என்பதுதான் சரியான நிலைபாடாகும்.

இன்னொரு உலகில் வாழும் மனித உயிர்கள் இவ்வுலகில் உள்ளவர்களுடன் எந்தத் தொடர்பும் கொள்ள முடியாது என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அவற்றை முதலில் அறிந்து விட்டு, மாற்றுக் கருத்து உள்ளவர்கள் எடுத்துக் காட்டும் ஆதாரங்களும், வாதங்களும் எப்படி தவறானவை என்பதை இரண்டாவதாக அறிந்து கொள்வோம்.

உறுதி செய்யப்பட்ட நபியின் மரணம்

நல்லடியார்கள் என்று கருதப்படுபவர்களை மரணித்து விட்டதாக நாம் கருதக் கூடாது என்பதும், அவர்கள் உயிருடன் தான் உள்ளனர் என்பதும் சிலரது நம்பிக்கை.

இது முற்றிலும் இஸ்லாத்துக்கு எதிரான நம்பிக்கையாகும். ஏனெனில் நல்லடியார்களில் முதலிடத்தில் உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே மரணித்து விட்டார்கள் என்று திருக்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றன.

3:144 وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ  ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ‌ؕ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ‌ؕ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْـــًٔا‌ ؕ وَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ‏

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

(திருக்குர்ஆன்:3:144.)

6:162 قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏
6:163 لَا شَرِيْكَ لَهٗ‌ۚ وَبِذٰلِكَ اُمِرْتُ وَاَنَا اَوَّلُ الْمُسْلِمِيْنَ

“எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்” என்றும் கூறுவீராக!

(திருக்குர்ஆன்:6:162, 163.)

21:34 وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّنْ قَبْلِكَ الْخُـلْدَ‌ ؕ اَفَا۟ٮِٕن مِّتَّ فَهُمُ الْخٰـلِدُوْنَ‏

(முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருப்பவர்களா?

(திருக்குர்ஆன்:21:34.)

39:30 اِنَّكَ مَيِّتٌ وَّاِنَّهُمْ مَّيِّتُوْنَ

(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே.

(திருக்குர்ஆன்:39:30.)

21:34 وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّنْ قَبْلِكَ الْخُـلْدَ‌ ؕ اَفَا۟ٮِٕن مِّتَّ فَهُمُ الْخٰـلِدُوْنَ

21:35 كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ؕ وَنَبْلُوْكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً‌  ؕ وَاِلَيْنَا تُرْجَعُوْنَ‏

(முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருப்பவர்களா? ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

(திருக்குர்ஆன்:21:34, 35.)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்து விட்டார்கள் என்பதை இவ்வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது நாம் அன்பு வைத்திருப்பதால் அவர்கள் மரணிக்கவில்லை என்று முடிவு செய்ய நம் மனம் விரும்புகிறது என்பது தான் நபிகள் நாயகம் மரணிக்கவில்லை என்று நாம் நம்புவதற்குக் காரணம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நபித்தோழர்கள் நம்மை விட அதிகமான நேசித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது இது போன்ற குழப்பம் அவர்களுக்கும் ஏற்பட்டது. அந்தக் குழப்பம் அன்றைக்கே தீர்க்கப்பட்டு விட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

صحيح البخاري –

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَاتَ وَأَبُو بَكْرٍ بِالسُّنْحِ، – قَالَ: إِسْمَاعِيلُ يَعْنِي بِالعَالِيَةِ – فَقَامَ عُمَرُ يَقُولُ: وَاللَّهِ مَا مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: وَقَالَ عُمَرُ: وَاللَّهِ مَا كَانَ يَقَعُ فِي نَفْسِي إِلَّا ذَاكَ، وَلَيَبْعَثَنَّهُ اللَّهُ، فَلَيَقْطَعَنَّ أَيْدِيَ رِجَالٍ وَأَرْجُلَهُمْ، فَجَاءَ أَبُو بَكْرٍ ” فَكَشَفَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم فَقَبَّلَهُ، قَالَ: بِأَبِي أَنْتَ وَأُمِّي، طِبْتَ حَيًّا وَمَيِّتًا، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يُذِيقُكَ اللَّهُ المَوْتَتَيْنِ أَبَدًا، ثُمَّ خَرَجَ فَقَالَ: أَيُّهَا الحَالِفُ عَلَى رِسْلِكَ، فَلَمَّا تَكَلَّمَ أَبُو بَكْرٍ جَلَسَ عُمَرُ،
3668 – فَحَمِدَ اللَّهَ أَبُو بَكْرٍ وَأَثْنَى عَلَيْهِ، وَقَالَ: أَلا مَنْ كَانَ يَعْبُدُ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ، وَمَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ فَإِنَّ اللَّهَ حَيٌّ لاَ يَمُوتُ، وَقَالَ: {إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ} [الزمر: 30]، وَقَالَ: {وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ} [آل عمران: 144]، قَالَ: فَنَشَجَ النَّاسُ يَبْكُونَ، قَالَ: وَاجْتَمَعَتِ الأَنْصَارُ إِلَى سَعْدِ بْنِ عُبَادَةَ فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ، فَقَالُوا: مِنَّا أَمِيرٌ وَمِنْكُمْ أَمِيرٌ، فَذَهَبَ إِلَيْهِمْ أَبُو بَكْرٍ، وَعُمَرُ بْنُ الخَطَّابِ، وَأَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ، فَذَهَبَ عُمَرُ يَتَكَلَّمُ فَأَسْكَتَهُ أَبُو بَكْرٍ، وَكَانَ عُمَرُ يَقُولُ: وَاللَّهِ مَا أَرَدْتُ بِذَلِكَ إِلَّا أَنِّي قَدْ هَيَّأْتُ كَلاَمًا قَدْ أَعْجَبَنِي، خَشِيتُ أَنْ لاَ يَبْلُغَهُ أَبُو بَكْرٍ، ثُمَّ تَكَلَّمَ أَبُو بَكْرٍ فَتَكَلَّمَ أَبْلَغَ النَّاسِ، فَقَالَ فِي كَلاَمِهِ: نَحْنُ الأُمَرَاءُ وَأَنْتُمُ الوُزَرَاءُ، فَقَالَ حُبَابُ بْنُ المُنْذِرِ: لاَ وَاللَّهِ لاَ نَفْعَلُ، مِنَّا أَمِيرٌ، وَمِنْكُمْ أَمِيرٌ، فَقَالَ أَبُو بَكْرٍ: لاَ، وَلَكِنَّا الأُمَرَاءُ، وَأَنْتُمُ الوُزَرَاءُ، هُمْ أَوْسَطُ العَرَبِ دَارًا، وَأَعْرَبُهُمْ أَحْسَابًا، فَبَايِعُوا عُمَرَ، أَوْ أَبَا عُبَيْدَةَ بْنَ الجَرَّاحِ، فَقَالَ عُمَرُ: بَلْ نُبَايِعُكَ أَنْتَ، فَأَنْتَ سَيِّدُنَا، وَخَيْرُنَا، وَأَحَبُّنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذَ عُمَرُ بِيَدِهِ فَبَايَعَهُ، وَبَايَعَهُ النَّاسُ، فَقَالَ قَائِلٌ: قَتَلْتُمْ سَعْدَ بْنَ عُبَادَةَ، فَقَالَ عُمَرُ قَتَلَهُ اللَّهُ “،

(நபியவர்கள் மரணித்த போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, “எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் “அல்லாஹ் (என்றும்) உயிராய் இருப்பவன்; அவன் இறக்க மாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.

மேலும், “(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே’ என்னும் (39:30) இறை வசனத்தையும், “முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்’ என்னும் (3:144) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள்.

நூல்: புகாரி-3668 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்று அன்பின் மேலிட்டால் கருதிய நபித்தோழர்கள், அபூபக்ர் (ரலி) அவர்கள் சான்றுகளை எடுத்துக் காட்டிய பின்னர் தமது முடிவை மாற்றிக் கொண்டார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறிகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள்; உயிருடன் இல்லை என்பதை நபித்தோழர்கள் உறுதியாக அறிந்து கொண்ட காரணத்தினால் தான் அபூபக்கர் (ரலி) அவர்களை ஆட்சியாளராக ஒருமித்து ஏற்றுக் கொண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆன்மாக்களின் உலகில் தான் உயிரோடு உள்ளனர். அவர்கள் மட்டுமின்றி மரணித்த அனைவரும் ஆன்மாக்களின் உலகில் உயிருடன் தான் உள்ளனர். இவ்வுலகைப் பொருத்தவரை அவர்களுக்கு எந்தத் தொடர்பும் உறவும் இல்லை என்பதுதான் இஸ்லாத்தின் நிலைபாடாகும்.

உயிர்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில்!

கைப்பற்றப்பட்ட மனிதனின் உயிர்களைத் தனது கட்டுப்பாட்டில் இறைவன் வைத்திருப்பதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

39:42 اَللّٰهُ يَتَوَفَّى الْاَنْفُسَ حِيْنَ مَوْتِهَا وَالَّتِىْ لَمْ تَمُتْ فِىْ مَنَامِهَا‌ ۚ فَيُمْسِكُ الَّتِىْ قَضٰى عَلَيْهَا الْمَوْتَ وَ يُرْسِلُ الْاُخْرٰٓى اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(திருக்குர்ஆன்:39:42.)

தூக்கத்தின் போதும், மரணிக்கும் போதும் உயிர்களைக் கைப்பற்றிக் கொள்ளும் இறைவன் தூக்கத்தில் கைப்பற்றப்பட்ட உயிர்களை இவ்வுலகில் செயல்படும் வகையில் விட்டு விடுகிறான். மரணித்தவர்களின் உயிர்களை இவ்வுலகுக்கு வர முடியாமல் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறான் என்பதை இவ்வசனத்தில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

இறந்தவர்களின் ஆவிகள் தமது வீடுகளைச் சுற்றிக் கொண்டு இருக்கும் என்றும், மகான்களை நினைவு கூறும் சபைகளில் அவர்களின் உயிர்கள் அங்கே வருகை தரும் என்றும் நம்புவதற்கு மறுப்பாக இவ்வசனம் அமைந்துள்ளது.

இறைவனது கட்டுப்பாட்டை விட்டு தப்பித்து, ஆவிகள் இந்த உலகுக்கு வந்து விடுகின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது.

மீற முடியாத தடுப்பு!

மரணித்தவர்களின் உயிர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இறைவன் அவை இவ்வுலக்குக்கு வரமுடியாதவாறு தடையை ஏற்படுத்தியுள்ளான் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

23:99 حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِۙ‏
23:100 لَعَلِّىْۤ اَعْمَلُ صَالِحًـا فِيْمَا تَرَكْتُ‌ؕ كَلَّا‌ ؕ اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآٮِٕلُهَا‌ؕ وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(திருக்குர்ஆன்:23:99,100.)

இறந்தவர்கள் ஆன்மாக்களின் உலகுக்குச் சென்ற பின் அவர்கள் இவ்வுலகுடன் எந்தத் தொடர்பும் கொள்ள முடியாத வகையில் ஒரு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு  விடும் என்று இவ்வசனம் கூறுகிறது.

மனித உயிர்களை இறைவன் கைப்பற்றிக் கொள்ளும் போது, நல்லறங்கள் செய்வதற்காக மீண்டும் என்னை உலகிற்கு அனுப்பி வை என்று மனிதன் ஒரு கோரிக்கை வைக்கிறான். அந்தக் கோரிக்கை ஏற்கப்படாது என்று இறைவன் மறுக்கிறான்.

ஆன்மாக்களின் உலகில் நபிமார்கள் மட்டுமல்லாமல் இறந்து விட்ட நல்லவர்கள் – தீயவர்கள் என அனைவருமே உயிருடன் தான் உள்ளார்கள். தீயவர்கள் வேதனையை அனுபவிக்கிறார்கள். நல்லோர்கள் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். நபிமார்கள் மேலான உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள்.

ஆனால் ஆன்மாக்களின் உலகில் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் இவ்வுலகில் உள்ளதைப் போன்று இருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்கு இவ்வசனம் சான்றாக உள்ளது.

நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் கட்டுக்காவல்

நல்லவர்களாக இருந்தாலும், கெட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது எல்லா நேரமும் அல்லாஹ்வில் கட்டுக்காவல் இருக்கிறது என்று நபிமொழிகளிலும் ஆதாரம் உள்ளது.

صحيح البخاري
1379 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
إِنَّ أَحَدَكُمْ إِذَا مَاتَ عُرِضَ عَلَيْهِ مَقْعَدُهُ بِالْغَدَاةِ وَالعَشِيِّ، إِنْ كَانَ مِنْ أَهْلِ الجَنَّةِ فَمِنْ أَهْلِ الجَنَّةِ، وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ، فَيُقَالُ: هَذَا مَقْعَدُكَ حَتَّى يَبْعَثَكَ اللَّهُ يَوْمَ القِيَامَةِ

உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலுள்ள அவரது இடம் காட்டப்படும். அவர் நரகவாசியாக இருந்தால் நரகிலுள்ள அவரது இடம் எடுத்துக் காட்டப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல் : புகாரி-1290 , 3001, 6034

நல்லடியார்களும், தீயவர்களும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். தினமும் காலையில் ஒரு தடவையும், மாலையில் ஒரு தடவையும் மறுமையில் அவர்கள் அடையவிருக்கின்ற சொர்க்கமும், நரகமும் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று இந்த ஹதீஸ் கூருகிறது.

சுதந்திரமாகச் சுற்றித் திரியுமாறு ஆவிகள் விடப்படவில்லை என்பதை இந்த ஹதீஸில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.

நீண்ட உறக்கத்தில் நல்லடியார்கள்

மனிதன் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட உடன் என்ன நடக்கிறது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கியுள்ளனர்.

سنن الترمذي
1071 – حَدَّثَنَا أَبُو سَلَمَةَ يَحْيَى بْنُ خَلَفٍ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
” إِذَا قُبِرَ المَيِّتُ – أَوْ قَالَ: أَحَدُكُمْ – أَتَاهُ مَلَكَانِ أَسْوَدَانِ أَزْرَقَانِ، يُقَالُ لِأَحَدِهِمَا: الْمُنْكَرُ، وَلِلْآخَرِ: النَّكِيرُ، فَيَقُولَانِ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ؟ فَيَقُولُ: مَا كَانَ يَقُولُ: هُوَ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَيَقُولَانِ: قَدْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ تَقُولُ هَذَا، ثُمَّ يُفْسَحُ لَهُ فِي قَبْرِهِ سَبْعُونَ ذِرَاعًا فِي سَبْعِينَ، ثُمَّ يُنَوَّرُ لَهُ فِيهِ، ثُمَّ يُقَالُ لَهُ، نَمْ، فَيَقُولُ: أَرْجِعُ إِلَى أَهْلِي فَأُخْبِرُهُمْ، فَيَقُولَانِ: نَمْ كَنَوْمَةِ العَرُوسِ الَّذِي لَا يُوقِظُهُ إِلَّا أَحَبُّ أَهْلِهِ إِلَيْهِ، حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ، وَإِنْ كَانَ مُنَافِقًا قَالَ: سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ، فَقُلْتُ مِثْلَهُ، لَا أَدْرِي، فَيَقُولَانِ: قَدْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ تَقُولُ ذَلِكَ، فَيُقَالُ لِلأَرْضِ: التَئِمِي عَلَيْهِ، فَتَلْتَئِمُ عَلَيْهِ، فَتَخْتَلِفُ فِيهَا أَضْلَاعُهُ، فَلَا يَزَالُ فِيهَا مُعَذَّبًا حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ “

இறந்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருத்த நிறமும், நீலநிறக் கண்களும் கொண்ட முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் வருவார்கள். (முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து) “இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதியிருந்தாய்?” என்று கேட்பார்கள். “அவர் அல்லாஹ்வின் தூதரும்  அவனது அடியாருமாவார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்” என்று அந்த மனிதர் கூறுவார்.

“உலகில் வாழும் போதே இவ்வாறு நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்” என்று அம்மலக்குகள் கூறுவார்கள். பின்னர் அவரது மண்ணறை விசாலமாக்கப்பட்டு ஒளிமயமாக்கப்படும். பின்னர் அவரை நோக்கி, “உறங்குவீராக” என்று கூறப்படும். நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறி விட்டு வருகின்றேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், “நெருங்கிய உறவினர்களைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு உறங்கும் புது மாப்பிள்ளை போல் இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக” என்று கூறுவார்கள்.

இறந்த மனிதன் நயவஞ்சகனாக இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அவன், “இந்த முஹம்மதைப் பற்றி மனிதர்கள் பலவாறாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்கின்றேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்று கூறுவான். அதற்கு அவ்வானவர்கள், “நீ இப்படித் தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்” என்று கூறுவார்கள்.

அதன் பின்னர் பூமியை நோக்கி, “இவனை நெருக்குவாயாக” என்று கூறப்படும். அவனது விலா எலும்புகள் நொறுங்குமளவுக்கு பூமி அவனை நெருக்க ஆரம்பிக்கும். அவனது இடத்திலிருந்து அவனை இறைவன் எழுப்பும் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதீ-1071 (991)

நல்லவர்களின் ஆவிகளானாலும், கெட்டவர்களின் ஆவிகளானாலும் அவை ஒருக்காலும் உலகுக்கு வர முடியாது. உலகில் உள்ளவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாது என்பதை இந்த ஹதீஸ் அழுத்தம் திருத்தமாக இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் தெளிவுபடக் கூறுகிறது.

மண்ணறை விசாரணை சில நிமிடங்களில் முடிந்த பின் நல்லவரின் மண்ணறை ஒளி வீசும் வகையில் விசாலமாக்கப்பட்டு உறங்குமாறு நல்லடியாருக்குக் கட்டளையிடப்படும் என்று கூறப்படுகிறது.

தன்னை அல்லாஹ் பொருந்திக் கொண்டதையும், முதல் பரீட்சையில் தான் தேறிவிட்டதையும் அறிந்து கொண்ட நல்லடியார், இந்த நற்செய்தியை எனது உறவினருக்குச் சொல்லி விட்டு வருகிறேன் என அனுமதி கேட்கிறார்.

அனுமதி மறுக்கப்பட்டதுடன் புதுமாப்பிள்ளை போல் ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல் எனக் கூறப்படுகிறது. இது சில மணி நேர உறக்கம் அல்ல. நியாயத்தீர்ப்பு நாள் வரை நீடிக்கும் உறக்கமாகும் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

நல்லடியார் யார் என்பதை நாம் அறிய முடியாது. ஆனாலும் சிலரை நாமாக மகான்கள் என முடிவு செய்து கொள்கிறோம். அந்த முடிவு சரியானது என்று வைத்துக் கொண்டாலும் அவர்களை அழைக்கவோ, பிரார்த்திக்கவோ முடியாது என்பதற்கு இந்த ஹதீஸ் தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது.

ஏனெனில் நல்லவர்கள் கியாமத் நாள் வரை ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர் எனும்போது நமது அழைப்பை எவ்வாறு அவர்கள் செவியுற முடியும்? எவ்வாறு நமக்கு உதவ முடியும்? ஆழ்ந்த உறக்க நிலையில் இருப்பவர்கள் எப்படி நமக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேச முடியும்?

கெட்டவர்களின் ஆவிகள் பேய்களாக உலகில் திரிகின்றன என்ற நம்பிக்கைக்கும் இந்த ஹதீஸ் பகிரங்க மறுப்பாக அமைந்துள்ளது. ஏனெனில் அவர்கள் கியாமத் நாள் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டு அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் உள்ளனர். எனவே அவர்கள் இவ்வுலகுக்கு வந்து ஆட்டம் போட முடியாது என்பதும் இந்த ஹதீஸில் இருந்து தெரிகிறது.

முடிவுக்கு வரும் செயல்பாடுகள்!

மனிதன் மரணித்து விட்டால் மூன்று விஷயங்கள் தவிர அவனது எல்லா செயல்பாடுகளும் முடிவுக்கு வரும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பினவருமாறு விளக்கியுள்ளனர்.

صحيح مسلم مشكول 14 – (1631) حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ يَعْنِي ابْنَ سَعِيدٍ، وَابْنُ حُجْرٍ، قَالُوا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ هُوَ ابْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ

மனிதன் மரணித்து விட்டால் அவன் செய்த நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை ஆகிய மூன்றைத் தவிர அவனது மற்ற செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்-3358

நிலைத்திருக்கும் வகையிலான தர்மங்களைச் செய்து விட்டு ஒருவன் மரணித்து விட்டால், மற்றவர்கள் அதில் பயன் பெறும்போதெல்லாம் இவனுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. கிணறு வெட்டுதல், மரம் நடுதல், நிழற்குடை அமைத்தல் போன்றவற்றைப் பொதுப் பயன்பாட்டுக்கு விட்டுச் செல்வது தான் நிலையான தர்மம் எனப்படும்.

இவற்றைச் செய்தவன் மரணித்து விட்டாலும் இவற்றில் மக்கள் பயனடையும் காலம் வரை இவனுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. ஆகையால் இந்த விஷயத்தில் இவனது செயல்பாடு இன்னும் முடிவுக்கு வரவில்லை.

பயனுள்ள கல்வியைப் பிறருக்குச் சொல்லிக் கொடுத்து ஒருவன் மரணித்து விட்டால் அவனிடம் கற்றவர்கள் மூலம் மற்றவர்கள் பயனடைவார்கள். யாரெல்லாம் இவ்வாறு பயனடைகிறார்களோ அவர்களின் அந்த நன்மையில் இவனுக்கும் ஒரு பங்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். இந்த வகையில் இவனது செயல்பாடு இன்னும் முடிவுக்கு வரவில்லை.

தனது பிள்ளையை நல்ல முறையில் வளர்த்து விட்டு ஒருவன் மரணித்து விட்டால் அந்தப் பிள்ளை இவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் போது அதனால் இவனுக்கு நன்மைகள் சேர்கின்றன. எனவே இந்த விஷயத்திலும் அவனது செயல்பாடுகள் முடிவுக்கு வரவில்லை.

இம்மூன்றைத் தவிர மனிதனின் எல்லா செயல்பாடுகளும் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்து விட்டார்கள். இறந்தவர் அல்லாஹ்விடம் நல்லடியாராக இருந்தால் கூட அவரால் நமக்கு எந்த உதவியும் செய்ய முடியாது என்பதை இந்த ஹதீஸிலிருந்தும் அறியலாம்.

மரணித்தவர்கள் எதையும் அறிய முடியாது

மனிதன் மரணித்த பின்னும் இவ்வுலகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், இவ்வுலகில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், மரணித்தவர் நல்லடியாராக இருந்தால் அவர் நமது தேவைகளை நிறைவேற்றுவார் என்றும் மார்க்கம் அறியாத சிலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையின் காரணமாகவே தர்காக்களில் வழிபாடுகளும் நடத்துகின்றனர்.

மரணித்தவர் மகானாகவே இருந்தாலும் இவ்வுலகில் என்ன நடக்கிறது என்ற அறிவு கூட அவர்களுக்கு இருக்காது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

10:28 وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِيْنَ اَشْرَكُوْا مَكَانَكُمْ اَنْتُمْ وَشُرَكَآؤُكُمْ‌ۚ فَزَيَّلْنَا بَيْنَهُمْ‌ وَقَالَ شُرَكَآؤُهُمْ مَّا كُنْتُمْ اِيَّانَا تَعْبُدُوْنَ‏
10:29 فَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًۢا بَيْنَـنَا وَبَيْنَكُمْ اِنْ كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغٰفِلِيْن

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தவர்களை நோக்கி ‘நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!’ என்று கூறுவோம். அப்போது அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவோம். ‘நீங்கள் எங்களை வணங்கவே இல்லை’ என்று அவர்களின் தெய்வங்கள் கூறுவார்கள். ‘எங்களுக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். நீங்கள் (எங்களை) வணங்கியதை அறியாதிருந்தோம்’ என்றும் கூறுவார்கள்.

(திருக்குர்ஆன்:10:28, 29.)

மரணித்தவர்களை இறைநேசர்கள் என்று கருதி அவர்களை வழிபாடு செய்பவர்களுக்கு இவ்வசனம் மரண அடியாக அமைந்துள்ளது. மகான்கள்  நமக்கு உதவுவார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இவர்கள் வணங்கியதும், பிரார்த்தித்ததும், காணிக்கை செலுத்தியதும் இன்னும் இவர்கள் செய்த எந்த வணக்கமும் அந்த மகான்களுக்குத் தெரியவே தெரியாது இவ்வசனம் கூறுகின்றது.

‘நீங்கள் எங்களை வணங்கவே இல்லை;  ஒரு வேளை நீங்கள் எங்களை வணங்கி இருந்தால் அது எப்படி எங்களுக்குத் தெரியும்? எனவே நீங்கள் எங்களை வணங்கியது எங்களுக்குத் தெரியாது என்று மறுத்து விடுவார்கள்.

வணங்கியதும், பிரார்த்தித்ததும் அவர்களுக்குத் தெரியாது என்றால் எப்படி அவர்களால் நமக்கு உதவ முடியும் என்பதைச் சிந்தித்தால் சமாதிகளையும், இறந்தவர்களையும் யாரும் வணங்கவே மாட்டார்கள்.

16:21 اَمْوَاتٌ غَيْرُ اَحْيَآءٍ‌ ۚ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்’ என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(திருக்குர்ஆன்:16:21.)

46:5 وَمَنْ اَضَلُّ مِمَّنْ يَّدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَنْ لَّا يَسْتَجِيْبُ لَهٗۤ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ وَهُمْ عَنْ دُعَآٮِٕهِمْ غٰفِلُوْنَ

46:6 وَاِذَا حُشِرَ النَّاسُ كَانُوْا لَهُمْ اَعْدَآءً وَّ كَانُوْا بِعِبَادَتِهِمْ كٰفِرِيْنَ‏

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்.

(திருக்குர்ஆன்:46:5,6.)

இவ்வசனங்களை ஒன்றுக்குப் பல முறை வாசித்துப் பாருங்கள்!

கியாமத் நாள் வரை அழைத்தாலும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள் என்று இதில் கூறப்பட்டுள்ளது. கியாமத் நாள் வரை அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். எனவே அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் அவர்களை அழைத்தால் அவர்கள் பதில் தர முடியாது என்பதையும், அவர்களால் நமக்கு உதவ முடியாது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

அறிவீனர்கள் தங்களைப் பிரார்த்தித்து வந்தனர் என்ற விஷயமே மறுமையில் அல்லாஹ் வெளிப்படுத்திக் காட்டும் போதுதான் அவர்களுக்குத் தெரிகிறது என்பதையும் இவ்வசனத்தில் இருந்து அறியலாம்.

அது மட்டுமின்றி இவர்கள் எங்களை வணங்கவே இல்லை; அவர்கள் எங்களை வணங்கி இருந்தால் அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று கூறி கைவிரித்து விடுவார்கள் என்பதையும் இவ்வசனத்தில் இருந்து அறியலாம்.

இறந்தவர்களின் நிலை குறித்து படைத்த இறைவன் சொல்வதை நம்புவதா? மார்க்கத்தை அறியாத மூடர்கள் அவிழ்த்து விட்ட கட்டுக்கதைகளை நம்புவதா என்று சிந்தித்துப் பாருங்கள்!

நபிமார்களுக்கும் இவ்வுலகில் நடப்பது தெரியாது.

மனிதர்களில் மிகச் சிறந்தவர்களும், அல்லாஹ்வின் நல்லடியார்களில் முதல் நிலையில் இருப்பவர்களும் நபிமார்களே! நபிமார்கள் இவ்வுலகில் வாழும் போது அவர்களைப் பின்பற்றிய மக்களில் அதிகமானவர்கள், நபிமார்களின் மரணத்திற்குப் பின் வழிகெட்டுப் போனார்கள். நபிமார்களையே கடவுளாக ஆக்கிக் கொண்டார்கள்.

ஆனால் தமது சமுதாயம் வழிகெட்டுப் போனது மரணித்த நபிமார்களுக்குத் தெரியாது என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவுபடுத்துவதைக் காணுங்கள்!

5:109 يَوْمَ يَجْمَعُ اللّٰهُ الرُّسُلَ فَيَقُوْلُ مَاذَاۤ اُجِبْتُمْ‌ ؕ قَالُوْا لَا عِلْمَ لَـنَا ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ‏

தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில் ‘உங்களுக்கு என்ன பதில் அளிக்கப்பட்டது?’ என்று கேட்பான். ‘எங்களுக்கு (இது பற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன்’ என்று அவர்கள் கூறுவார்கள்.

(திருக்குர்ஆன்:5:109.)

உங்கள் பிரச்சாரத்தை மக்கள் எவ்வாறு எடுத்துக் கொண்டனர் அல்லாஹ் கேட்கும் போது அது பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது; அல்லாஹ்வாகிய உனக்குத்தான் தெரியும் என நபிமார்கள் கூறுவார்கள்.

இதிலிருந்து தெரிய வருவது என்ன? ஆன்மாக்களின் உலகில் நபிமார்கள் உயிருடன் இருந்தாலும் இவ்வுலகில் என்ன நடக்கிறது? தமது கொள்கைகளை ஏற்றவர்கள் யார்? தலைகீழாகப் புரட்டியவர்கள் யார் என்ற விபரத்தை அவர்களால் அறிய முடியவில்லை என்பது தெரிகிறது. நபிமார்களின் நிலையே இது என்றால் அவர்களை விட தகுதியில் குறைந்த சாதாரணமான நல்லடியார்களுக்கு இவ்வுலகில் நடப்பது எப்படித் தெரியும்? அவர்கள் எப்படி நமது பிரார்த்தனையை அறிவார்கள்? எப்படி உதவுவார்கள்? குர்ஆன் மீது நம்பிக்கை உள்ள யாரும் இப்படிக் கருத மாட்டார்கள்.

மரணித்தவர்கள் செவியுற முடியாது

இவ்வுலகில் மனிதர்கள் பேசிக் கொள்வதை மரணித்தவர்களால் செவியுற முடியாது. தங்களையே ஒருவர் அழைத்தாலும் அவர்களால் அதைச் செவியுற முடியாது. இதைத் திருக்குர்ஆன் பல வசனங்களில் தெளிவுபடக் கூறுகிறது.

35:14 اِنْ تَدْعُوْهُمْ لَا يَسْمَعُوْا دُعَآءَكُمْ‌ ۚ وَلَوْ سَمِعُوْا مَا اسْتَجَابُوْا لَـكُمْ ؕ وَيَوْمَ الْقِيٰمَةِ يَكْفُرُوْنَ بِشِرْكِكُمْ ؕ وَلَا يُـنَـبِّـئُكَ مِثْلُ خَبِيْرٍ

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

(திருக்குர்ஆன்:35:14.)

இறந்தவர்கள் செவியுற முடியாது என்று கூறுவதுடன்  நன்கறிந்த என்னைப் போல் உமக்கு யாரும் அறிவிக்க முடியாது என்றும் இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

மரணித்தவரின் நிலை என்ன என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். ஆன்மாக்களின் உலகில் என்ன நடக்கிறது என்பதை எந்த மனிதரும் அறிய முடியாது. இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ்வாகிய நான் கூறுகிறேன் என அல்லாஹ் கூறுகிறான்.

மகான்கள் எங்கள் கோரிக்கையைச் செவிமடுத்து ஆவண செய்வார்கள் என்று கட்டுக் கதைகளை ஆதாரமாகக் கொண்டு நம்புகிறீர்களே இது பற்றி அறிந்தவர்கள் நீங்களா? அல்லாஹ்வாகிய நானா? என அருமையாக அல்லாஹ் இதைப் புரிய வைக்கிறான். இதற்கு மாற்றமான கருத்து கொள்வோர் அல்லாஹ்வை விட தங்கள் முன்னோர்கள் இது குறித்து நன்கு அறிந்தவர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

30:52 فَاِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوْا مُدْبِرِيْنَ

‘நீர் இறந்தோரைச் செவியுறச் செய்ய முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது’

(திருக்குர்ஆன்:30:52.)

27:80 اِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوْا مُدْبِرِيْنَ‏

(நபியே!) இறந்தவர்களை உம்மால் கேட்கச் செய்ய முடியாது.

(திருக்குர்ஆன்:27:80.)

35:22 .. وَمَاۤ اَنْتَ بِمُسْمِعٍ مَّنْ فِى الْقُبُوْرِ

(நபியே!) மண்ணறைகளில் இருப்பவர்களை உம்மால் செவியேற்கச் செய்ய முடியாது.

(திருக்குர்ஆன்:35:22.)

சாதாரண மனிதர்கள் இறந்தவர்களை அழைப்பது கிடக்கட்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்தவர்களை அழைத்தால் கூட இறந்தவர்கள் செவியுற மாட்டார்கள் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.

இறந்தவர்கள் செவியுற மாட்டார்கள் என்ற கருத்தை இவ்வசனம் அழுத்தமாகக் கூறி இருக்கும் போது சமாதி வழிபாட்டுக் கூட்டம் இதற்கு ஒரு வியாக்கியானம் கொடுத்து இதன் அர்த்தத்தை அனர்த்தமாக்குகிறது.

அவர்கள் கூறுவது இதுதான்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னபோது அதைச் சிலர் ஏற்கவில்லை. அவ்வாறு ஏற்காதவர்கள் குறித்துத் தான் இவ்வசனம் பேசுகிறது. உங்கள் போதனையை மரணித்த உள்ளம் கொண்ட இவர்கள் செவியுற மாட்டார்கள் என்ற கருத்தில் தான் இது சொல்லப்பட்டுள்ளது. மரணித்தவர்கள் செவியுற மாட்டார்கள் என்பது பற்றி இவ்வசனம் பேசவில்லை எனக் கூறுகின்றனர்.

மரணித்த உள்ளம் கொண்டவர்களைத் தான் இவ்வசனத்தில் இறந்தவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான் என்பது உண்மைதான். இறந்தவர்களுக்கு எவ்வாறு காது கேட்காதோ அது போன்ற நிலையில் காஃபிர்களும் உள்ளனர். எனவே தான் இறந்தவர்களின் நிலையுடன் இவர்களின் நிலையை ஒப்பிட்டு அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

காஃபிர்களை இறந்தவர்களுடன் ஒப்பிட்டுக் கூறி இருப்பதில் இறந்தவர்கள் கேட்க மாட்டார்கள் என்ற கருத்து இன்னும் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது.

மேலும் மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் எப்படி செவியேற்க மாட்டார்களோ அது போல் இவர்களும் உமது போதனையைச் செவியுற மாட்டார்கள் என்று கூறப்படுவதும் இதே அடிப்படையில் தான். அதிகம் பேசாமல் இருக்கும் ஒருவரைப் பற்றி நாம் பேசும்போது இந்த ஊமையனை யாரும் பேச வைக்க முடியாது எனக் கூறுவோம். ஊமையாக இல்லாத, அதிகம் பேசாத மனிதனைப் பற்றித்தான் நாம் இப்படிக் கூறுகிறோம். ஊமையைப் பற்றிப் பேசவில்லை.

ஊமை பேச மாட்டான் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத விஷயமாக உள்ளதால் அது போல் இவனும் இருக்கிறான் என்ற கருத்தில் இவ்வாறு பேசுகிறோம். இந்த மனிதனாவது எப்போதாவது பேசிவிடுவான். ஆனால் உதாரணமாகக் காட்டப்படும் ஊமை எப்போதும் பேச மாட்டான்.

அது போல் தான் இந்த உதாரணமும் அமைந்துள்ளது. செத்தவன் எப்படி செவியுற மாட்டானோ அது போன்ற நிலையில் இவர்கள் உள்ளனர். எனவே உமது போதனையைச் செவியுற மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது உதாரணம் தான்; எனவே இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பதை இது மறுக்க உதவாது என்று யாரேனும் கூறினால், அல்லாஹ் இந்த உதாரணத்தைத் தவறாகக் கூறி விட்டான் என்று சொல்ல வருகின்றார்கள்.

இந்த வசனத்தில் உதாரணமாக அல்லாஹ் கூறினாலும் இதுவல்லாத எத்தனையோ வசனங்களில் இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று நேரடியாகக் கூறப்பட்டுள்ளது.

16:21 اَمْوَاتٌ غَيْرُ اَحْيَآءٍ‌ ۚ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ‏

அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். ‘எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்’ என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(திருக்குர்ஆன்:16:21.)

இந்த வசனத்தில், இறந்தவர்கள் என்பதை உவமையாகக் கூறாமல் நேரடியாகவே அல்லாஹ் கூறுகின்றான். இறந்தவர்கள் என்று மட்டும் கூறாமல், உயிருடன் இருப்பவர்கள் அல்லர் என்றும் சேர்த்துக் கூறுகின்றான். இதற்கு வேற்றுப் பொருள் கொடுக்கவே முடியாது.