Tamil Bayan Points

19) 20,21வது வசனங்கள்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

20,21வது வசனங்கள்

20. அந்நகரத்தின் கடைக்கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து, “என் சமுதாயமே! தூதர்களைப் பின்பற்றுங்கள்!” என்றார்.

21. உங்களிடம் கூலியைக் கேட்காத நேர்வழி பெற்றோரைப் பின்பற்றுங்கள்.

சிரமத்தை தாங்கிக்கொண்டு பிரச்சாரம் செய்தல்

இவ்வசனங்களிலும் முஸ்லிம்களுக்கு பல அறிவுரைகள் அடங்கியுள்ளது.

அம்மனிதர் ஊரின் கடைசி பகுதியில் இருந்தாலும் சிரமத்தை பொருட்படுத்தாமல் மக்களிடம் வந்து தூதர்களுக்கு பக்க பலமாக நிற்கிறார். நல்ல விஷயங்களை மக்களுக்கு கூறுகிறார். நாமும் இது போன்று மார்க்கத்திற்காக வெகுதூரம் செல்வதை சிரமமாக கருதாமல் மார்க்கத்தை எடுத்து கூறவேண்டும்.

விரைந்து நன்மை செய்தல்

மேலும் 20 வது வசனத்தில் “அந்நகரத்தின் கடைக் கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்தார்” என்று உள்ளது. மக்கள் தீமை செய்வதை கண்டவுடன் தாமதமின்றி விரைவாக வந்து சத்தியத்தை எடுத்துச் சொல்கிறார்.

நாம் ஏதேனும் தீமையை கண்டால் “பிறகு தடுத்துக்கொள்வோம்” என்று தாமதித்து விடாமல் உடனடியாக விரைந்து தடுக்கவேண்டும் என்பதை இவ்வசனம் கற்றுத்தருகிறது.

நபி (ஸல்) அவர்களும் இவ்வழிமுறையை கடை பிடித்துள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் என்னுடைய நோன்பு பற்றித் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல்தலையணையை எடுத்துப் போட்டேன். அவர்கள் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! (இதைவிட அதிகமாக நோற்க அனுமதியுங்கள்!)” என்றேன்; அவர்கள் “ஐந்து நாட்கள்!” என்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே…!” என்றேன்; “ஒன்பது நாட்கள்!” என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே…! என்றேன்; “பதினொரு நாட்கள்!” என்றார்கள். பிறகு, “தாவூத் நபி (அலை) அவர்களின் நோன்புக்கு மேல் (சிறப்புடையதாக) எந்த நோன்பும் இல்லை; அது வருடத்தின் பாதி நாட்களாகும்! எனவே, ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பீராக!” என்றார்கள்.

நூல் புகாரி-1980

ஒரு நபித்தோழர் மார்க்கத்தின் வரையறை கடந்து விட்டார் என தெரிந்தவுடன் எவ்வித கால தாமதமுமின்றி நபி (ஸல்) அவர்கள் விரைந்து வந்து அவருக்கு சரியான வழியை காட்டுகிறார்கள்.

கூலி கேட்காத நேர்வழி பெற்றோரை பின்பற்ற வேண்டும்

மேலும் 21 வது வசனத்தில் “உங்களிடம் கூலியைக் கேட்காத நேர்வழி பெற்றோரைப் பின்பற்றுங்கள்.” என்று அந்த நல்லடியார் கூறியதாக உள்ளது.

பொதுவாக நேர்வழியைதான் மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். வழிகேட்டை செய்துவிடக் கூடாது. மேலும் மக்களிடம் கூலியை எதிர் பார்க்கமால் மார்க்கத்தை சொல்லவேண்டும் என்பதையும் இதில் விளங்கலாம். அனைத்து இறைத்தூதர்களும் இதே கருத்தை கூறினார்கள்.

நான் உங்களிடம் இதற்காக எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே உள்ளது.

(அத்தியாயம்:26 : 127.) 

நபி (ஸல்) அவர்களும் இதை கூறுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

“உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்டதில்லை. அது உங்களுக்கே உரியது. எனது கூலி அல்லாஹ்விடம் தவிர வேறு (எவரிடமும்) இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்” என்று கூறுவீராக!

(அத்தியாம் : 34 : 47.) 

மார்க்கத்தை பிரச்சாரம் செய்யும்போது கூலிக்காக பிரச்சாரம் செய்கிறாரோ? என்ற எண்ணம் மக்களிடம் வந்துவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு கூறுமாறு அல்லாஹ் பணிக்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் தன் தோழர்களிடமும் இவ்வாறு கட்டளையிட்டுள்ளார்கள்.

நான் “அல்லாஹ்வின் தூதரே! என்னை என் சமுதாத்திற்கு (தொழவைக்கும்) இமாமாக நியமியுங்கள்! என்று கேட்டேன். அதற்கவர்கள் “(சரி) நீ அவர்களின் இமாமாக செயல்படு. பலவீனமானவர்களை (சிரமமில்லாமல்) வழிநடத்து! (பாங்கு) தொழுகை அழைப்பிற்கு கூலி கேட்காத அழைப்பாளரை ஏற்படுத்திக்கொள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் உஸ்மான் இப்னு அபுல் ஆஸ் (ரலி)

நூல் அஹ்மத்-15670

பாங்கு சொல்ல கூலி கேட்க கூடாது என்று கூறி இதன் மூலம் எவ்விதத்தில் மார்க்கப் பணி செய்தாலும் அதற்காக கூலி பெறக் கூடாது என்பதை அல்லாஹ்வின் தூதர் விளக்கிவிட்டார்கள்.

எனினும் சில மார்க்க அறிஞர்கள் பிரச்சாரம் செய்வதற்காக அதற்கன்று கூலி நிர்ணயித்து கேட்கின்றனர். மேடைகளில் உரை நிகழ்த்துவதற்கு குறிப்பிட்ட தொகையும் உள்ளரங்குகளில் பிரச்சாரம் செய்வதற்கு குறிப்பிட்ட தொகை என்றும் வாங்குகின்றனர். சிலர் உள்ளூரில் திருமண நிகழ்ச்சிகளில் உரை நிகழ்த்தினாலும் பல ஆயிரங்களை பெற்றுக் கொள்கின்றனர். இவையனைத்தும் தவறாகும்.

அதே நேரத்தில் ஒருவர் தனது பொருளாதாரத்தை செலவு வெளியூர் சென்று பிரச்சாரம் செய்கிறார் என்றால் அவருக்கு ஏற்பட்ட போக்குவரத்து செலவினை வழங்கலாம். அது மார்க்கம் பேச கூலி வழங்கியதாகாது.

ஒருவர் பள்ளியில் பாங்கும் கூறி, அத்துடன் பள்ளியின் பராமரிப்பு, பொருட்களை பாதுகாத்தல் தண்ணீர் ஏற்பாடு செய்தல் போன்ற மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுதல் போன்ற பணிகளையும் செய்யும் போது அதற்கு பொருளாதாரம் வழங்குவது அனுமதியாகும்.

(இது குறித்து விரிவாக இவ்வசனத்தின் இறுதியில் காண்போம்.)

குர்ஆன் ஓதுவதற்கு கூலி வாங்கலாமா?

இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதுகிறோம் என்கிற பெயரால் அதற்கென்று பணம் வசூலிக்கும் வழக்கம் முஸ்லிம்களிடையே உள்ளது. இதற்கு கத்தமுல் குர்ஆன் என்று கூறிக் கொள்கின்றனர்.

இத்தகைய குர்ஆனை வியாபாரமாக்கும் காரியம் மார்க்கத்தில் உள்ளதல்ல. நபி (ஸல்) அவர்களின் வழியுமல்ல. நபியவர்களுடைய பிள்ளைகளும் மனைவியர்களும் இறந்தபோது ஒருமுறை கூட நபியவர்கள் இவ்வாறு ஓதவில்லை. நபித்தோழர்களும் இவ்வாறு செய்யவில்லை. இது முற்றிலும் பித்அத்தான ஒன்றாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

குர்ஆனை ஓதுங்கள்! அ(தை ஓதுவ)தன் மூலம் சாப்பிடாதீர்கள்.

இதை அப்துர் ரஹ்மான் பின் ஷிப்ல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் அஹ்மத்-14986

“(உங்களுக்கு பின்) ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் அம்பு சீராக வைக்கப்படுவதை போன்று சீராக அதை (குர்ஆனை) ஓதுவார்கள். அவர்கள் (உலகில்) கூலியை எதிர்ப்பார்ப்பார்கள். (மறுமையில்) எதிர்ப்பார்க்க மாட்டார்கள்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் அஹ்மத்-14735

அல்லாஹ்வும் இதை வன்மையாக தடை செய்கிறான்.

உங்களிடம் உள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தும் வகையில் நான் அருளிய (குர்ஆன் எனும் வேதத்)தை நம்புங்கள் ! இதை மறுப்போரில் முதன்மையாகாதீர்கள்! எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்காதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!

(அத்தியாயம் : 2 : 41.) 

எனவே குர்ஆனை ஓதி கூலி கேட்பது தவறு என்பதை இதன் மூலம் விளங்கலாம்.

குர்ஆனை அச்சிட்டு விற்க கூலி பெறலாமா?

இன்றைய நவீன காலத்தில் குர்ஆனை பிரதிகளாக அச்சிட்டு விற்கக்கூடிய வழக்கம் உள்ளது. இதற்காக விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. “இது குர்ஆனை விற்பதாக ஆகாதா?” என்று கேள்வி எழலாம். ஆனால் இது தவறல்ல. ஏனெனில் இதில் பெறப்படுகின்ற கூலி குர்ஆனை ஓதுவதற்கல்ல.

மாறாக அச்சுப்பணி, ஊழியர்கள் ஊதியம் இதர செலவீனங்கள் போன்றவற்றுக்காகதான். இவற்றிற்காக கூலி பெறவில்லையென்றால் இப்பணிகள் நடக்காது. நபி (ஸல்) அவர்கள் தடை செய்யாத இது போன்றவற்றுக்காக கூலி பெறுவது தடையல்ல.

இதை தெளிவுபடுத்தும் விதமாக பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

தவ்ராத்தை நாம் அருளினோம். அதில் நேர்வழியும், ஒளியும் இருந்தது. (இறைவனுக்கு) கட்டுப்பட்ட நபிமார்களும், யூத வணக்கசாலிகளும், மேதைகளும் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்கக் கட்டளையிடப்பட்டதாலும், அதற்குச் சாட்சிகளாக இருந்ததாலும் யூதர்களுக்கு அதன் மூலமே தீர்ப்பளித்து வந்தனர். எனவே மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! எனது வசனங்களை அற்பவிலைக்கு விற்று விடாதீர்கள்! அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே (ஏகஇறைவனை) மறுப்பவர்கள்.

(அல்குர்ஆன் : 5:44.) 

யூதர்களை நோக்கி “அற்ப விலைக்கு வசனங்களை விற்காதீர்கள்” என்று கூறுப்படுவதன் நோக்கம் வசனங்களை ஓதுவதற்கென்று கூலி பெறக்கூடாது என்பதுதான். எனவே ஓதுதல் அல்லாமல் அச்சிடுதல் போன்ற செலவீனங்களுக்காக தொகையை பெறுவது தடையல்ல.

ஓதிப்பார்ப்பதற்கு கூலி பெறலாமா?

மேலும் குர்ஆனை ஓதி ஒரு நோயாளிக்கு நிவாரணம் கிடைத்துவிட்டால் அதற்காக ஏதேனும் கூலியை பெறுவது தவறல்ல. இதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

அபூ ஸயீத்(ரலி) கூறியதாவது:

நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

அப்போது அவர்களில் சிலர், ‘இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!’ என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து ‘கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா?’ என்று கேட்டனர்.

அப்போது நபித்தோழர்களில் ஒருவர், ‘ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும் அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!’ என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர்.

நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, ‘அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..’ என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள்.

‘இதைப் பங்கு வையுங்கள்!’ என்று ஒருவர் கேட்டபோது, ‘நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது!’ என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டுவிட்டு, ‘நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.

ஸஹீஹ் புகாரி-2276.

பொதுவாக குர்ஆனை ஓதுவதற்கு கூலி பெறக்கூடாது என்றிருந்தாலும் நோயாளிக்கு ஓதிப்பார்த்து நிவாரணம் கிடைத்துவிட்டால் அன்பளிப்பு போன்று கூலியை பெறுவதை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கிறார்கள்.

ஓதிப்பார்த்தலும் இன்றைய நிலையும்

இன்றைய சூழலில் சில மக்கள் ஆலிம்களிடம் சென்று ஓதிப்பார்த்து கூலியை கொடுக்கின்றனர். இது தவறாகும். ஏனெனில் ஃபாத்திஹா அத்தியாயம் தனக்கு தெரிந்தாலும் கூட குறிப்பிட்ட ஆலிம் அதை ஓதினால்தான் குணம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். அவர் மக்களுக்கு தெரியாத பல வார்த்தைகளை கூறுவதால் மக்கள் ஏமாற்றமடைகின்றனர். இவ்வாறு செய்வது தவறாகும்.

ஃபாத்திஹா அத்தியாயம் தெரியாதவர்களுக்கு ஓதிப் பார்த்து நிவாரணம் கிடைத்தால் மட்டும் கூலி பெறலாம். ஆனால் இன்றைய சூழல் அது போன்றல்ல. தெரிந்தவர்களும் ஆலிமிடம் செல்வது அவரின் மீதுள்ள நம்பிக்கையினால்தானே தவிர குர்ஆனின் மீதான மதிப்பில் அல்ல. மேலும் நிவாரணம் கிடைப்பதற்கு முன்பே கூலியை பேசி பெற்றுக்கொள்வதாலும் இது தவறாகவிடும். எனவே மறுமை நன்மையை எதிர்ப்பார்த்து செய்கின்ற எந்த செயல்களுக்கும் கூலி பெறக்கூடாது.

முழுநேர மார்க்க பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கலாமா?

யாசீன் அத்தியாயத்தின் 21 வது வசனத்தில் “உங்களிடம் கூலியைக் கேட்காத நேர்வழி பெற்றோரைப் பின்பற்றுங்கள்.” என்பதற்கு விளக்கம் கூறும்போது மார்க்கத்தை பிரச்சாரம் செய்பவர்கள் கூலி கேட்கக் கூடாது. அது தவறாகும் என்று விளக்கியிருந்தோம்.

அப்படியானால் பள்ளிவாசலில் இமாமாக அல்லது முஅத்தீனாக இருப்பவர்களுக்கு மாதாரந்திர சம்பளம் வழங்கப்படுகிறதே இது சரியானதா?” என்ற சந்தேகம் எழலாம். பொதுவாக மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதற்கு கூலி வாங்கக்கூடாது என்பதுதான் விதியாகும். எனினும் மார்க்கம் சார்ந்த விஷயங்களுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்து, வேறு எவ்வித வருமானமும். இல்லாமல் இதையே முழுநேர பணியாக செய்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கலாம் என்பதை குர்ஆன் ஹதீஸிலிருந்து அறியமுடிகிறது.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

(அல்குர்ஆன் : 2:273.) 

பொருள் திரட்டி வருமானம் பார்க்க இயலாதவாறு அல்லாஹ்வுடைய மார்க்கப் பணிகளிலேயே தங்களை தடுத்துக் கொண்டவர்களுக்கு மக்களிடம் பெறப்படுகின்ற பொருளாதாரத்திலிருந்து ஊக்கத் தொகை வழங்கலாம் என்பதை இதன் மூலம் அறியலாம்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த நிகழ்வும் இதை கூறுகிறது.

அம்ர் இப்னு சலிமா(ரலி) கூறியதாவது:

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், ‘மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?’ என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், ‘அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத்தூதராக) அனுப்பியிருப்பதாக… அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்… கூறுகிறார்’ என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக்காட்டி) கூறுவார்கள்.

உடனே நான் அந்த (இறை) வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போன்று ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்திருந்தார்கள். எனவே, அவர்கள், ‘அவரை அவரின் குலத்தா(ரான குறைஷிய)ருடன்விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)’ என்று கூறினார்கள்.

மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, ‘அல்லாஹ்வீன் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி(ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள், ‘இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள்.

தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்’ என்று கூறினார்கள்’ எனக் கூறினார்கள். எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை.

எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும்போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது.

எனவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ‘உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார். எனவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

ஸஹீஹ் புகாரி-4302.

அல்லாஹ்வின் வசனங்களை மனனம் செய்வதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்ததால் ஏற்ப்ட்ட வறுமையை போக்க மக்கள் அவருக்கு ஆடையை அளித்திருக்கிறார்கள். இதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். மேலும் தர்மங்களை எத்தகையவர்களுக்கு வழங்கலாம் என்பதை அல்லாஹ் கூறுகிறான்.

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்:9:60.)

வசதிபடைத்தவர்கள் ஜகாத் வழங்குவது கடமையாகும். ஜகாத் தொகையிலிருந்தே வசூலிப்பவருக்கு வழங்கலாம் என்பதை இவ்வசனம் அனுமதிக்கின்றது.

எனவே பள்ளிவாசல் இமாம், முஅத்தீன், ஜகாத் வசூலிப்பவர் போன்று மார்க்கத்திற்காக முழுநேர பணியாளர்களாக இருப்பவர்கள் தாங்களாக முன்வந்து பொருளாதாரத்தை கேட்பது சுயமரியாதைக்கு ஏற்றதல்ல என்பதால் நாமே ஊதியம் வழங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதுதான் என்பதை மேற்கண்ட சான்றுகளின் அடிப்படையில் அறியலாம்.

உதாரணமாக போரில் வெற்றி பெறும்போது எதிரிகள் விட்டுச்செல்லும் கனீமத் பொருட்களை நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு பங்கு வைத்து கொடுப்பார்கள். அதுவும் மேற்கண்ட அடிப்படையில்தான். மேலும் இமாமாக அல்லது முஅத்தீனாக பணிபுரிவருக்கு ஜந்து நேரம் தொழவைத்தால் அதிக ஊதியம் என்றும் அதற்கு குறைவாக தொழவைத்தால் குறைந்த ஊதியம் என்றும் வழங்கப்படுவதில்லை. மாறாக அவருடைய அர்ப்பணிப்புக்குதான் ஊதியம் வழங்கப்படுகிறது. தொழுகைக்காக வழங்கப்படுவதில்லை என்பதால் இது மார்க்கத்தில் அனுமதிக்கப்படதாகும்.