Tamil Bayan Points

18) 18,19வது வசனம்.

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

18,19வது வசனம்

18. “நாங்கள் உங்களைக் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம். நீங்கள் விலகிக் கொள்ளவில்லையானால் உங்களைக் கல்லால் எறிந்து கொலை செய்வோம். எங்களிடமிருந்து துன்புறுத்தும் வேதனை உங்களுக்கு ஏற்படும்” என்று (அவ்வூரார்) கூறினர்.

19. “உங்கள் கெட்ட சகுனம் உங்களிடமே உள்ளது. நீங்கள் அறிவுரை கூறப்பட்டாலுமா (எங்களை மிரட்டுவீர்கள்)? இல்லை! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாக இருக்கிறீர்கள்” என்று (தூதர்கள்) கூறினர்.

சகுனம் பார்த்தல் இஸ்லாத்தில் இல்லை

இவ்வசனங்களில் அத்தூதர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நடந்த உரையாடல் இடம் பெற்றுள்ளது. தாங்கள் விரும்பாத கருத்தை கூறியதால் தூதர்களை கெட்ட சகுனமாக அம்மக்கள் கருதினர். இம்மூன்று தூதர்களுக்கு மட்டுமில்லாமல் மூஸா (அலை) போன்ற மற்ற தூதர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

அவர்களுக்கு ஏதேனும் நன்மை வந்தால் “அது எங்களுக்காக (கிடைத்தது)” எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு தீங்கு ஏற்படுமானால் மூஸாவையும் அவருடன் உள்ளவர்களையும் பீடையாகக் கருதுகின்றனர். “கவனத்தில் கொள்க. அவர்கள் பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்லை.”

(அல்குர்ஆன் : 7 : 131.)

தாங்கள் விரும்பாத செயல்கள் தங்களுக்கு ஏற்பட்டால் அதை தூதர்களோடு இணைத்து துர்சகுனமாக கருதுவார்கள். “இவர்களால்தான் இந்த தீய விஷயங்கள் நடக்கிறது” என்று கூறி அவமதிப்பார்கள். நன்மை நடந்தால் தங்களோடு அதை இணைத்துக் கொள்வார்கள். இவ்வாறு கெட்ட சகுனமாக தூதர்களை கருதும் பழக்கம் பல சமுதாயத்திடம் இருந்துள்ளது.

மேலும் ஸாலிஹ் நபியின் சமுதாயமும் இவ்வாறு கூறியுள்ளனர்.

47. உம்மையும், உம்முடன் இருப்போரையும் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் கெட்ட சகுனம் அல்லாஹ்விடமே உள்ளது. மாறாக நீங்கள் சோதிக்கப்படும் கூட்டமாக உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் : 27:47.) 

இறைவன் இவர்களின் சகுணம் பற்றிய கூற்றை அடியோடு மறுக்கின்றான்.

“கவனத்தில் கொள்க. அவர்கள் பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்லை.” என்று கூறி, நன்மை, தீமை அனைத்தும் தன்னிடமிருந்தே வருகிறது என அல்லாஹ் கூறுகிறான்.

தூதர்களும் உங்கள் கெட்ட சகுனம் உங்களிடமே உள்ளது. நீங்கள் அறிவுரை கூறப்பட்டாலுமா? இல்லை! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாக இருக்கிறீர்கள்” என்று கூறி, இது போன்ற சகுனம் பார்த்தல் இஸ்லாத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறார்கள். ஆனால் முஸ்லிம்களிடையே சகுனம் பார்க்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது.

சிலர் திருமண அழைப்பிதழ்களில் சகுனத்தை அடிப்படையாக கொண்டு இன்ன நல்ல நேரத்தில் திருமணம் நடைபெறும் என்று குறிப்பிடுவார்கள். பாதையில் பூனை குறுக்கே சென்றால் கெட்ட நேரம் என்றும், பல்லி விழுந்தால் இன்ன அர்த்தம் என்று பலவாறாக சகுனம் பார்க்கிறார்கள். இவை அனைத்துமே தவறு என நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. “ஸஃபர் மாதம் பீடை என்பதும் கிடையாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி-5757

ஆரம்பத்தில் அரபுகள் பறவை சகுனம் மட்டுமே பார்த்து வந்தனர். பிறகு பல சகுனங்களை அதிகப் படுத்துக் கொண்டனர். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் “பறவை சகுனம் கூடாது என்று குறிப்பிடுகிறார்கள். எனினும் அனைத்து சகுனமும் கூடாது என்பதுதான் இதன் கருத்தாகும்.

ஃபஃல் என்றால் என்ன?

இஸ்லாத்தில் சகுனம் அனுமதிக்கப்படவில்லை. எனினும் ஃபஃல் என்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்’ என்று சொன்னார்கள். மக்கள், “நற்குறி என்பதென்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அது நீங்கள் செவியுறும் நல்ல சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள்.

நூல் புகாரி-5754

ஃபஃல் என்பது நல்லவற்றை சொல்வதற்குரிய வார்த்தையாகும். உதாரணமாக ஒருவரை நோய்நலம் விசாரிக்க செல்லும்போது “அல்லாஹ் நாடினால் குணமாகிவிடும். எந்த சிரமும் இல்லை” என்று ஆறுதலான வார்த்தைகளை கூறுவோம். இது ஃபஃல் என்பதாகும்.

மேலும் திருமணங்களுக்கு செல்லும்போது “அல்லாஹ் நாடினால் இருவரும் நீண்டகாலம் வாழ்வீர்கள்” என்று நல்ல வார்த்தைகளை கூறுவதும் ஃபஃல் என்பதாகும். ஆனால் சிலர் இதை தவறாக விளங்கிக் கொண்டு “பால் கிதாப்” என்ற பெயரில் “வருங்காலத்தை கணித்து கூறுகிறோம்” என்று கூறி, மக்களை ஏமாற்றுகின்றனர். இது ஃபஃல் அல்ல. ஏமாற்று வேலையாகும். மார்க்க அடிப்படையில் ஹராமாகும். இதை அறியாத மக்கள் தவிர்ந்து கொள்ளவேண்டும்.

கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்பவர்கள்

மேலும் சகுனம் பார்க்காமல் இருக்கும் மக்களுக்கு மறுமையில் மிகப்பெரும் சிறப்புகளை அல்லாஹ் வழங்குவான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள். தம் இறைவ(ன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவ)னையே சார்ந்திருப்பார்கள்.

நூல் புகாரி-6472

இச்செய்தியில் ஓதிப்பார்ப்பதையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வார்த்தைகளை கூறி ஓதிப்பார்ப்பவர்களை இது குறிக்காது. அவர்கள் கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்லலாம். மாறாக அனுமதிக்கப்படாத, இணைவைத்தலான வார்த்தைகளை கூறி ஓதிப்பார்ப்பவர்கள்தான் சொர்க்கம் செல்லமுடியாது. எனவே வாழ்வில் நடைபெறுகின்ர நன்மை, தீமைகளனைத்தும் அல்லாஹ்வின் வதிப்படிதான் நடக்கிறது. சகுனத்தின்படி அல்ல என்று உறுதியாக நம்ப வேண்டும்.