Tamil Bayan Points

18) பெண்வீட்டு விருந்தும் வரதட்சணையே

நூல்கள்: வரதட்சணை ஒரு பெண் கொடுமை

Last Updated on February 2, 2023 by

பெண்வீட்டு விருந்தும் வரதட்சணையே

வரதட்சனை வாங்குவது எவ்வாறு மார்க்கத்திற்கு முரணான காரியமோ அது போன்று பெண்வீட்டு விருந்தும் மார்க்கத்திற்கு முரணாண காரியமாகும். ஆண் பெண்ணுக்கு மனக்கொடை கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண்ணிடமிருந்து எதையும் வாங்கக் கூடாது என்ற தடை இந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது.

இதே போன்று திருமணத்துக்கென்று வலீமா என்ற விருந்தை ஆண் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண் வீட்டு விருந்து கூடாது என்ற தடை இந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது. திருமணத்தில் பெண் வீட்டார் மீது எந்தச் செலவையும் இஸ்லாம் சுமத்தவில்லை. ஆனால் இன்றைக்கு சமுதாயத்தில் பெண்வீட்டார் மீது தேவையற்ற சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்தச் சுமைகளை தங்களுடைய கடமைகளாக எண்ணிக் கொண்டு பெண் வீட்டினர் செய்து வருகின்றனர். இவற்றைச் செய்யாவிட்டால் சமுதாயத்தில் அது அவமானம் என்றோ மாப்பிள்ளை வீட்டார் கோபப்படுவார்கள் என்றோ கருதி சிரமத்துடன் செய்பவர்களும் இருக்கின்றார்கள். பெண்வீட்டு விருந்து என்பது இந்தச் சுமைகளில் ஒன்றாகும். 

ஊருக்காக பெண் வீட்டு விருந்து

திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டார் தனியாகவும் பெண் வீட்டார் தனியாகவும் விருந்து போடும் வழக்கம் சில ஊர்களில் நடைமுறையில் உள்ளது. மாப்பிள்ளை வீட்டார் தனக்கு வேண்டியவர்களை அழைத்து தனியே விருந்து போடுவார். இது போன்று பெண் வீட்டார் தனக்கு வேண்டியவர்களை அழைத்து தனியாக விருந்து போடுவார்கள். இந்த முறையும் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டதாகும்.

இஸ்லாமில் பெண் வீட்டு விருந்து என்பதே கிடையாது. திருமணத்தில் ஒரே ஒரு விருந்து முறையை மட்டுமே இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. அது திருமணத்தை முன்னிட்டு மாப்பிள்ளை கொடுக்கும் வலீமா விருந்தாகும். இதைத் தவிர வேறு விருந்தை திருமணத்தில் இஸ்லாம் காட்டித் தரவில்லை.

ஆனால் இன்றைக்கு மாப்பிள்ளை கொடுக்க வேண்டிய வலீமாவைப் போன்று பெண் வீட்டு விருந்து என்பது திருமணத்தில் இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது. இது இல்லாமல் திருமணம் இல்லை என்கின்ற அளவிற்கு சில ஊர்களில் எழுதப்படாத சட்டமாகவே இது சமூகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

எந்த அளவிற்கென்றால் பெண் வீட்டாருக்கும் சேர்த்து நாங்கள் விருந்தளிக்கின்றோம் என மாப்பிள்ளை வீட்டார் ஒத்துக் கொண்டால் கூட பெண் வீட்டார் இந்த விருந்தைக் கைவிடுவதில்லை. நடத்தியே தீர வேண்டும் என்று நினைக்கின்றனர்.

ஏனென்றால் பெண் வீட்டார் விருந்து போடா விட்டால் அது தனக்கும் தனது குடும்பத்துக்கும் கேவலம் என்று பெண் வீட்டார் கருதுகின்றனர். பெண் வீட்டார் தங்களுக்கு வேண்டியவர்களை அழைத்து திருமண விருந்து கொடுக்காவிட்டால் அவர்களைக் கஞ்சர்களாகவும் கேவலமாகவும் சமுதாயம் பார்ப்பதே இதற்குக் காரணம். எனவே தான் சக்தி உள்ளவர்களும் சக்தி இல்லாதவர்களும் இந்த விருந்தை எப்பாடுபட்டாவது நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டில் பல வருடங்களாக பாடுபட்ட சம்பாதித்த செல்வத்தை ஒரு நாளில் ஊருக்கெல்லாம் சாப்பாடு போட்டு அழித்துவிடுகிறான். ஊருக்கு சாப்பாடு போட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இப்படி யாரும் செலவழிக்கமாட்டான். திருமணத்தில் இவ்வாறு சாப்பாடு போடுவது கடமையாகும். போடாவிட்டால் ஊர் அசிங்கமாக பேசும் என்ற நிர்பந்தத்தின் காரணமாகவே இவ்வாறு செய்கிறான். இத்தகைய பெண்வீட்டு விருந்து என்பது வரதட்சணையை விட கொடுமையானதும் கொடூரமானதாகும்.

மணப்பெண்ணின் வாழ்க்கைக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் கணவன் பெண் வீட்டாரிடம் எதையும் கேட்டு வாங்குவதே கூடாது என்கிற போது மணப் பெண்ணுக்கு எந்த வகையிலும் பலன் தராத ஊர் மக்கள் பெண் வீட்டாரிடமிருந்து உணவை எதிர்பார்ப்பது நிச்சயம் வரதட்சணையை விட கொடுமையானது தான். எனவே பெண் வீட்டு விருந்து என்பது ஒருவரின் பொருளை அநியாயமான முறையில் உண்பதற்குச் சமமான குற்றமாகும்.