Tamil Bayan Points

17) 16, 17 வது வசனங்கள்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

16, 17 வது வசனங்கள்

16, 17. “நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களே என்பதை எங்கள் இறைவன் அறிவான்; தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர எங்கள் மீது (வேறு எதுவும்) இல்லை” என்று (தூதர்கள்) கூறினர்.

இவ்வரு வசனங்களிலும் அந்த மூன்று தூதர்களும் கூறிய பதில்கள் இடம் பெற்றுள்ளது. இதிலும் நமக்கு பல பாடங்கள் உண்டு.

பிரச்சாரகர்கள் மென்மையாக நடக்கவேண்டும்

பொதுவாக மக்களிடம் பிரச்சாரம் செய்யும்போது அதை அவர்கள் ஏற்கமறுப்பது மட்டுமின்றி நம்மை பொய்யர் என்றும் விமர்சிப்பார்கள். ஏளனமாக பேசுவார்கள். இது போன்ற சூழல்களில் நாம் மென்மையாக நடக்கவேண்டும்.

மக்கள் பொய்யென கருதினாலும் அதை நினைத்து துவண்டுவிடாமல் நாம் சொல்வது உண்மையென்பதை அல்லாஹ் அறிவான் என்கிற உறுதி சத்தியத்தை பிரச்சாரம் செய்வோருக்கு இருக்க வேண்டும். இதை இந்த தூதர்களிடமிருந்து கற்றுக் கொள்ளமுடிகிறது.

மக்கள் அவர்களை பொய்யர் என்று கூறும்போதும் “நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களே என்பதை எங்கள் இறைவன் அறிவான்; என்றுதான் கூறினார்களே தவிர மக்கள் மீது கோபம் கொள்ளவில்லை. ஆனால் நம்மில் சில பிரச்சாரகர்கள் மக்கள் மீது கோபம் கொள்கிறார்கள். அதை நாம் தவிர்த்து கொள்ளவேண்டும்.

நபிமார்களும் மென்மையை கடைபிடித்தனர்

மூஸா (அலை), ஹாரூன் (அலை) ஆகிய இருவரும் ஃபிர்அவ்னிடம் பிரச்சாரம் செய்யும்போது மென்மையாக பேசுமாறு அல்லாஹ் அவர்களுக்கு கட்டளையிடுகிறான்.

இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்! அவன் வரம்பு மீறி விட்டான்.

“அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள்! அவன் படிப்பினை பெறலாம். அல்லது (என்னை) அஞ்சலாம்” (என்றும் கூறினான்.)

(அல்குர்ஆன் 20:43,44.) 

ஃபிர்அவ்ன் என்பவன் இன்றைய மக்களை போன்று அல்லாஹ்வை வணங்கியவன் அல்ல. மாறாக தன்னைத்தானே இறைவன் என்று கூறியவன்.

நானே உங்களின் மிகப்பெரிய இறைவன் என்றான்.

(அல்குர்ஆன்:79 : 24.)

இத்தகைய இறைமறுப்பாளனிடமும் மென்மையாக நடக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகையில் இன்றைய மக்களிடம் கூடுதலாக மென்மையை மேற்கொள்ளவேண்டும்.

ஏனெனில் இன்றைய மக்கள் “தன்னை இறைவன்” என்று கூறவில்லை. மாறாக “சுப்ஹான ரப்பியல் அஃலா” (என்னுடைய உயர்ந்த இறைவன் தூயவன்) என்று அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அறியாமல் இறைபோதனைக்கு மாற்றமான காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள், இவர்களை மென்மையுடன் அணுகி வென்றெடுக்கவேண்டும். என்பதையும் இவ்விரு வசனங்கள் நமக்கு கற்றுத்தருகின்றன.

தெளிவாக எடுத்துச்சொல்லுதல்

மேலும் 17 வது வசனத்தில் “தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர எங்கள் மீது (வேறு எதுவும் இல்லை” என்று (தூதர்கள்) கூறினர். இதில் “எடுத்துச் சொல்வது” என்று இடம் பெறாமல், “தெளிவாக எடுத்துச் சொல்வது” என்று இடம் பெற்றுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்க முக்கிய அம்சமாகும்.

பிரச்சாரம் செய்யும்போது மக்களுக்கு ஏற்றவாறு பூசி மொழுகி பதிலளிக்கக்கூடாது. என்ன சொல்ல வருகிறோம் என்பதே தெளிவில்லாமல் பிரச்சாரம் செய்யக் கூடாது. சொல்வதை தெளிவாக எடுத்துக் கூற வேண்டும் என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.

இக்கருத்தை மேலும் சில வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள் !

(அல்குர்ஆன்: 33 : 70.)

சிலர் இவ்வசனங்களுக்கு மாற்றமாக தெளிவின்றி மார்க்கத்தை எடுத்து சொல்கிறார்கள் மத்ஹப் அடிப்படையிலும் தனித்தனியாக மார்க்க சட்டங்களை வகுக்கிறார்கள். சந்தர்ப்பத்திற்கேற்ப மக்களுக்கு தகுந்தாற்போல் மார்க்க சட்டத்தை மாற்றிமாற்றி கூறுகிறார்கள். இது மிகப்பெரிய தவறாகும். மார்க்கத்தை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாகத்தான் கூறவேண்டும்.

உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

(அல்குர்ஆன்:15 : 94.)

எனவே மக்கள் மனது புண்படாத வகையில் மென்மையாக பிரச்சாரம் செய்யும் அதே தருணத்தில் மக்களின் விமர்சனத்திற்கு அஞ்சி மார்க்கத்தை வளைத்து விடாமல் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும்.

நேர்வழி காட்டுபவன் அல்லாஹ்தான்

மேலும் “தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர எங்கள் மீது (வேறு எதுவும்) இல்லை” என்று தூதர்கள் கூறியதன் மூலம் எடுத்துச் சொல்வதுதான் நம்முடைய கடமை. நேர்வழி காட்டுவது அல்லாஹ்வின் புறத்தில்தான் உள்ளது என்பதையும் அறியலாம். இதற்கு நபி ஸல் அவர்களின் வாழ்க்கையிலேயே பல உதாரண நிகழ்வுகள் உள்ளது.

அபூதாலிப் அவர்களுக்கு நேர்வழி கிடைக்கவில்லை

முஸய்யப் இப்னு ஹஸ்ன் இப்னி அபீ வஹ்ப்(ரலி) கூறியதாவது.

அபூ தாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்துவிட்டபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூ ஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி(ஸல்) அவர்கள், ‘என் பெரிய தந்தையே! ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை’ என்று சொல்லுங்கள். இச்சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களு க்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்’ என்று கூறினார்கள்.

அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும், ‘அபூ தாலிபே! (பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், ‘(என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)’ என்று அவர்களிடம் கூறினார். எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரக்கூடாது என்று) எனக்குத் தடைவிதிக்கப்படும் வரை’ என்று கூறினார்கள்.

அப்போதுதான், ‘இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெளிவாகிவிட்ட பின்பும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும் கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை’ என்னும் (திருக்குர்ஆன் 09: 113) திருக்குர்ஆன் வசனமும, ‘(நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்களால் நேர்வழியில் செலுத்தி விட முடியாது’ என்னும் (திருக்குர்ஆன் 28:56) திருக்குர்ஆன் வசனமும அருளப்பட்டன.

ஸஹீஹ் புகாரி-3884.

இறைத்தூதர்களாகவே இருந்தாலும் நேர்வழி காட்டும் பொறுப்பு அல்லாஹ்விடம்தான் உள்ளது என்பதை இச்செய்தியில் இரண்டாவதாக அருளப்பட்ட வசனத்தின் மூலம் அறியலாம்.

நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து நபிமார்களுக்கும் இதே விதிதான்.

நூஹ் நபியின் மகனுக்கு நேர்வழி கிடைக்கவில்லை

நூஹ், தம் இறைவனை அழைத்தார். “என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்” என்றார்.

“நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்” என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன் : 11:45,46.) 

லூத் நபியின் மனைவிக்கு நேர்வழி கிடைக்கவில்லை

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவ்விரு பெண்களும் அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. “இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!” என்று கூறப்பட்டது.

(அல்குர்ஆன்: 66:10.) 

சிலர் தன் பிரச்சாரத்தை மக்கள் ஏற்காவிட்டால் பெரியளவில் மனச்சோர்வடைகிறார்கள். இத்தனை ஆண்டுகள் பிரச்சாரம் செய்தும் மக்கள் ஏற்கவில்லையே என தளர்ந்து விடுகிறார்கள். அத்தகையவர்கள் இதை கவனிக்கவேண்டும்.

தூதர்கள் விரும்பியவர்களுக்கே நேர்வழி கிடைக்கவில்லை எனும்போது நாம் விரும்பியவர்களுக்கெல்லாம் நேர்வழி கிடைக்காதது ஆச்சரியமானதல்ல. ஏனென்றால் நேர்வழி இறையதிகாரத்தில் உள்ளது என்பதை விளங்கவேண்டும். மேலும் அதிகமான மக்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்தால் நன்மைகள் கிடைத்துக் கொண்டேயிருக்கும். பல இறைத்தூதர்கள் பிரச்சாரம் செய்தும் மக்கள் ஏற்காமல் இருந்துள்ளனர்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம் வந்து (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின்போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது தம்முடன் ஒரேயொரு மனிதர் மட்டுமிருந்த இறைத்தூதரும், இரண்டு மனிதர்கள் மட்டுமே தம்முடனிருந்த இறைத்தூதரும், (பத்துப் பேர்களுக்குட்பட்ட) ஒரு சிறுகூட்டம் மட்டுமே தம்முடன் இருந்த இறைத்தூதரும், தம்முடன் ஒருவருமில்லாத இறைத்தூதரும் கடந்து செல்லத் தொடங்கினர்.

அடிவானத்தை அடைத்திருந்த ஒரு பெரும் கூட்டத்தை கண்டேன். அது என் சமுதாயமாக இருக்கும் என எதிர் பார்த்தேன். அப்போது, ‘இது (இறைத்தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது. பிறகு என்னிடம், ‘பாருங்கள்’ என்று சொல்லப்பட்டது. அப்போது அடிவானத்தை அடைத்திருந்த (ஒரு பெரும்) மக்கள் திரளை பார்த்தேன். மீண்டும் என்னிடம், ‘இங்கும் இங்கும் பாருங்கள்’ என்று சொல்லப்பட்டது.

அப்போது நான் அடிவானத்தை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். அப்போது, ‘இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்’ என்று சொல்லப்பட்டது.

ஸஹீஹ் புகாரி-5752.

மேற்கண்ட செய்தியில் பல பாடங்கள் உள்ளது. இவர்களெல்லாம் பல ஆண்டுகள் பிரச்சாரம் செய்த இறைத்தூதர்களாவர். சில இறைத்தூதருடைய பிரச்சாரத்தை ஒருவர் கூட ஏற்றுக்கொள்ளாத நிலை இருந்தும் தூதர்கள் இடைவிடாது, சோர்வுறாது பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள்.

உதாரணமாக நூஹ் (அலை) அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். அவர்களிடம் அம்மக்கள் கூறியது.

“நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண் டு வாரும்!” என்று அவர்கள் கூறினர்.

(அல்குர்ஆன் : 11:32.)

இது போன்ற வார்த்தைகளை தாங்கிக்கொண்டு தொள்ளாயிரத்து ஐம்பது வருடங்கள் வாழ்ந்து பிரச்சாரம் செய்தும் ஒரு கப்பலில் ஏறும் அளவிற்குதான் கூட்டம் இருந்தது. ஆனால் நம்மிடம் ஒரே சந்தேகத்தை பலமுறை கேட்டால் பொறுத்துக் கொள்வது சிரமமாக கருதப்படுகிறது. இக்குணத்தை மாற்றிக் கொண்டு நபிமார்கள் போன்று பொறுமையை கடைபிடிக்கவேண்டும்.

இஸ்லாத்தில் இல்லாத முரீது வியாபாரம்

கடந்த காலங்களில் சில முஸ்லிம்கள் முரீது என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத சில விஷயங்களை செய்தார்கள்.

முரீது (நாடுபவர்) எனும் சாதாரண நபர் ஷேக் (ஆசிரியர்) எனப்படுபவரிடம் சென்று உறுதிமொழி எடுப்பார். இந்த உறுதிமொழியின் மூலம் தன்னை தனது ஆசான் பக்குவப் படுத்துவார், தன் மனதை தீமையிலிருந்து மாற்றிவிடுவார் என்றும் நம்புவார். இது முற்றிலும் தவறாகும். இது போன்ற முறை இஸ்லாத்தில் இருந்திருந்தால் யாசீன் சூராவில் கூறப்பட்டுள்ள நபிமார்கள் மக்களை மாற்றியிருப்பார்கள்.

ஆனால் அவர்களுக்கு இயலவில்லை. மேலும் “தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர எங்கள் மீது (வேறு எதுவும்) இல்லை’ என கூறுகிறார்கள். இதன் மூலம் யாராலும் மனித மனங்களை நேர்வழியின் பால் அழைத்து செல்ல முடியாது. அந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும்தான் உள்ளது. வேறு எந்த மனிதனுக்கும் இல்லை என்பதை விளங்கலாம்.