Tamil Bayan Points

17) லஞ்சம்

நூல்கள்: இஸ்லாமியப் பொருளாதாரம்

Last Updated on March 12, 2022 by

17) லஞ்சம்

லஞ்சத்துக்குத் தடை

இஸ்லாத்தில் லஞ்சம் வாங்குவது அறவே தடுக்கப்பட்டுள்ளது. யாரிடம் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதோ அவர்களுக்கு முறையாக ஊதியம் அளிக்கப்படுகிறது. அவர்கள் எந்தப் பணியைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டார்களோ அந்தப் பணியைச் செய்து கொடுக்க மக்களிடம் பெறப்படும் கையூட்டுதான் லஞ்சம் எனப்படும்

குடும்ப அட்டை, பாஸ்போர்ட் போன்ற அத்தியாவசியங்களுக்குக்கூட லஞ்சம் வாங்குகிறார்கள். தொழில்களுக்கும் கட்டடங்கள் கட்டவும் அனுமதி அளிக்க லஞ்சம் வாங்குவது சர்வசாதாரணமாகி விட்டது. முஸ்லிம்கள் இது போன்ற பொறுப்புகளில் இருந்தால் அவர்கள் ஒருபோதும் லஞ்சம் வாங்கக் கூடாது.

அவர்களில் அதிகமானோர் பாவத்திற்கும், வரம்பு மீறலுக்கும், தடுக்கப்பட்டதை உண்பதற்கும் விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்வது மிகவும் கெட்டது. அவர்களின் பாவமான கூற்றை விட்டும், விலக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும், வணக்கசாலிகளும், மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.

(திருக்குர்ஆன்:5:62,63.)

سنن أبي داود
3541 – حدَّثنا أحمدُ بنُ عمرو بن السَّرْحِ، حدَّثنا ابنُ وهب، عن عُمر بنِ مالك، عن عُبيد الله بنِ أبي جعفر، في خالد بن أبي عِمرانَ، عن القاسم  عن أبي أُمامةَ، عن النبيَّ -صلَّى الله عليه وسلم- قال:
“مَنْ شَفَعَ لأخيه شَفَاعةً، فأهدى له هديةً عليها فَقَبِلَهَا، فقد أتى باباً عظيماً من أبواب الرِّبا”

 

ஒருவர் தன் சகோதரருக்காகப் பரிந்துரை செய்து அதற்காக அவருக்கு ஒரு அன்பளிப்பு வழங்கப்பட்டு அதை அவர் ஏற்றுக் கொண்டால் அவர் வட்டியின் மிகப் பெரிய வாசலுக்கு வந்துவிட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல் : அபூதாவூத்

سنن أبي داود
3580 – حدَّثنا أحمدُ بن يونسَ، حدَّثنا ابنُ أبي ذئب، عن الحارث بن عبد الرحمن، عن أبي سَلَمة عن عبدِ الله بن عمرو، قال:
لَعَنَ رسولُ الله – صلَّى الله عليه وسلم – الراشِيَ والمُرْتَشِيَ

 

லஞ்சம் வாங்குபவன் லஞ்சம் கொடுப்பவன் ஆகிய இருவரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

நூல்கள் : அபூதாவூத், திர்மிதி, அஹ்மத்

பணம் கொடுத்து வேலை தேடுவது குற்றமா?

அரசு வேலை கிடைக்க வேண்டுமானால் அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் லஞ்சம் கொடுக்காமல் நடக்காது என்ற நிலை உள்ளது. லஞ்சம் கொடுத்து வேலை தேடுவது கூடுமா என்பது குறித்தும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பிறர் பொருளை நம்முடையதாக ஆக்கிக் கொள்வதற்காக ஒரு பொருளை அதிகாரிகளுக்கோ நீதிபதிகளுக்கோ கொடுத்தால் அது கட்டாயம் தடுக்கப்பட்டதாகும். இப்படி கொடுப்பதுதான் லஞ்சம் எனப்படும். இவ்வாறு கொடுப்பதும் குற்றம். வாங்குவதும் மாபெரும் குற்றமாகும்.

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்!

(திருக்குர்ஆன்:2:188.)

வரிசைப்படியும், முன்னுரிமை அடிப்படையிலும் கிடைக்க வேண்டிய உரிமைகளை முன்னரே பெற்றுக் கொள்வதற்காக கொடுக்கப்படும் தொகையும் லஞ்சம்தான். நமக்கு முன்னால் காத்திருப்பவரைப் பின்னால் தள்ளி விட்டு நாம் முன்னால் அடைந்து கொள்வது முறைகேடாகும். மற்றவரின் உரிமை பறிக்கப்படுவதற்காக கொடுக்கப்படுவதால் இதுவும் லஞ்சம்தான்.

தகுதியின் அடிப்படையில் பங்கிடப்படும் உரிமைகளில் குறைந்த தகுதி உள்ளவர் பணத்தைக் கொடுத்து அதிகத் தகுதி உள்ளவரைப் பின்னால் தள்ளிவிட்டு அந்த இடத்தை அடைந்தால் அதுவும் குற்றமாகும். நம்மை விட அதிகத் தகுதி உள்ளவர் காத்திருக்கும்போது அவரைப் பின்னால் தள்ளிவிடுவதற்காகக் கொடுக்கப்படும் பணமும் லஞ்சம்தான். இதை வாங்குவதும் கொடுப்பதும் குற்றமாகும்.

மற்றவர்களின் உரிமையைப் பாதிக்காத வகையில் நம்முடைய உரிமையைப் பெறுவதற்காக பல நேரங்களில் பணம் கொடுத்தாக வேண்டியுள்ளது.

மின் இணைப்பு பெற வேண்டும். வீடு கட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும். நமக்குச் சேர வேண்டிய உரிமையைப் பெற வேண்டும் என்றால் இது போன்ற காரியங்களைச் செய்து தருவதற்காக பணம் கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. இப்படி கொடுக்கும் பணத்தின் மூலம் நாம் யாருடைய உரிமையையும் பறிப்பதில்லை. நம்முடைய உரிமையைத்தான் அடைந்து கொள்கிறோம்.

பணம் வாங்காமல் இதைச் செய்வதற்காக அதிகாரிகளுக்கு ஊதியம் அளிக்கப்படுவதால் மக்களிடம் எதையும் பெற்றுக் கொள்ளாமல்தான் அவர்கள் செய்து கொடுக்க வேண்டும். அவர்களின் கடமையைச் செய்வதற்காக பணம் வாங்கினால் அது மார்க்கத்தில் குற்றமாகும். கடமையைச் செய்வதற்காக ஒரு முஸ்லிம் லஞ்சம் வாங்க அனுமதி இல்லை.

சாதிச் சான்றிதழ் வாங்குதல் போன்ற காரியங்களானாலும், வீடு கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் பண்ணுவதாக இருந்தாலும், மின் இணைப்பு பெறுவதாக இருந்தாலும், வேறு எந்தத் துறையில் எந்தக் காரியத்தை சட்டப்படி செய்து தருவதாக இருந்தாலும் இந்தியாவில் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும். இதுதான் எழுதப்படாத சட்டமாக உள்ளது.

பணம் கொடுக்காமல் காரியம் ஆகாது என்ற அளவுக்கு கேடுகெட்டவர்கள் ஆட்சி செய்வதால் அப்போது நம்முடைய உரிமையைப் பெறுவதற்காக பணம் கொடுப்பது நிர்பந்தம் என்ற அடிப்படையில் மன்னிக்கப்படும். பணம் கொடுக்காவிட்டால் ரேஷன் கார்டு கிடைக்காது என்றால் ரேஷன் கார்டு அவசியம் என்பதால் இது நிர்பந்த நிலையாகி விடுகிறது. இல்லாவிட்டால் நம்முடைய அடிப்படைத் தேவைகளை அடைய முடியாமல் போய் விடும்.

கடமையைச் செய்ய லஞ்சம் கேட்பவனைக் கையும் களவுமாக பிடித்துக் கொடுக்க இயலும் என்றால் அதைச் செய்ய வேண்டும். அவ்வாறு இயலாதவர்கள் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்.

பார்க்க : திருக்குர்ஆன் 2:173, 6:119, 6:145, 16:115

வேலைக்கு ஆட்களைச் சேர்த்து விட கமிஷன் வாங்கலாமா?

வேலைக்கு ஆட்களைச் சேர்த்தல், ஆட்களுக்கு வேலை கொடுத்தல் போன்றதை ஒருவர் செய்தால் அது ஒரு உழைப்பாகும். அந்த உழைப்புக்கு கூலி பெறுவதும், கொடுப்பதும் குற்றமாகாது.

எங்கெங்கே வேலைகள் உள்ளன என்ற விபரம் அனைவருக்கும் தெரிந்திருக்க முடியாது. அதையே தொழிலாகக் கொண்டவர்களுக்குத்தான் இது சாத்தியமாகும். எனவே இது பற்றி அறிந்தவர்கள் நமக்கு ஒரு வேலையை அறிமுகம் செய்வதற்கு கொடுக்கும் பணம் லஞ்சத்தில் சேராது. இவ்வாறு செய்யும்போது யாருடைய உரிமையையும் நாம் பறிக்கவில்லை. நியாயத்திற்கு எதிராக நாம் பணம் கொடுக்கவுமில்லை. எனவே இது தவறல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தபோது தமக்கு வழிகாட்டியாக ஒருவரை ஏற்படுத்தி அவருக்குக் கூலி கொடுத்தார்கள்.

صحيح البخاري
2263 – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا:
” وَاسْتَأْجَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:89]، وَأَبُو بَكْرٍ رَجُلًا مِنْ بَنِي الدِّيلِ، ثُمَّ مِنْ بَنِي عَبْدِ بْنِ عَدِيٍّ هَادِيًا خِرِّيتًا – الخِرِّيتُ: المَاهِرُ بِالهِدَايَةِ – قَدْ غَمَسَ يَمِينَ حِلْفٍ فِي آلِ العَاصِ بْنِ وَائِلٍ، وَهُوَ عَلَى دِينِ كُفَّارِ قُرَيْشٍ، فَأَمِنَاهُ فَدَفَعَا إِلَيْهِ رَاحِلَتَيْهِمَا، وَوَاعَدَاهُ غَارَ ثَوْرٍ بَعْدَ ثَلاَثِ لَيَالٍ، فَأَتَاهُمَا بِرَاحِلَتَيْهِمَا صَبِيحَةَ لَيَالٍ ثَلاَثٍ، فَارْتَحَلاَ وَانْطَلَقَ مَعَهُمَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ، وَالدَّلِيلُ الدِّيلِيُّ، فَأَخَذَ بِهِمْ أَسْفَلَ مَكَّةَ وَهُوَ طَرِيقُ السَّاحِلِ “

(மக்காவைத் துறந்து, ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்குச் சென்றபோது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் பனூதீல் குலத்தைச் சேர்ந்த பனூ அப்து பின் அதீ, என்பவரை (வழிகாட்டியாகக்) கூலிக்கு அமர்த்தினார்கள். அவர் தேர்ந்த வழிகாட்டியாக இருந்தார். அம்மனிதர் ஆஸ் பின் வாயிலின் குடும்பத்தாரிடம் உடன்படிக்கை செய்திருந்தார்; மேலும், அவர், குறைஷிக் காஃபிர்களின் மார்க்கத்தில் இருந்தார்.

நூல் : புகாரி – 2263

இது போன்ற தரகு வேலைகளில் ஈடுபடுவோர் மற்றவர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு லஞ்சம் கொடுத்து நமக்கு வேலை வாங்கித் தருகிறார்கள் என்பது தெரிய வந்தால் அப்போது அது குற்றமாகும்.

கொடுத்த அன்பளிப்பைத் திரும்பக் கேட்கக் கூடாது

அன்பளிப்பாகக் கொடுத்த பொருளைத் திரும்பக் கேட்கக் கூடாது. அன்பளிப்பாகக் கொடுத்த பின்னர் இருவருக்கும் இடையே பிரச்சனை வந்தால் கொடுத்த அன்பளிப்பை வெட்கமில்லாமல் திரும்பக் கேட்கின்றனர். இவ்வாறு திரும்பக் கேட்க மார்க்கத்தில் அனுமதி இல்லை. அப்படி திரும்பக் கேட்டால் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.

صحيح البخاري
2622 – حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ المُبَارَكِ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَيْسَ لَنَا مَثَلُ السَّوْءِ، الَّذِي يَعُودُ فِي هِبَتِهِ كَالكَلْبِ يَرْجِعُ فِي قَيْئِهِ»

 

தான் அன்பளிப்பாகக் கொடுத்ததைத் திரும்பக் கேட்பவன் தன் வாந்தியைத்தானே திரும்பச் சாப்பிடும் நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி – 2589, 2621, 2622, 3003, 6975

திருமணம், வீடு குடியேறுதல் போன்ற நிகழ்ச்சிகளை ஒட்டி அன்பளிப்புகள் செய்யும் வழக்கம் சமுதாயத்தில் உள்ளது. இதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. ஆனால் நம்முடைய வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளின் போது திரும்பத் தருவார்கள் என்று எதிர்பார்த்துத் தான் இந்த அன்பளிப்புகள் பெரும்பாலும் அமைந்துள்ளன.

அவ்வாறு செய்யாவிட்டால் அதைச் சொல்லிக் காட்டி மனதைப் புன்படுத்துவதும் சமுதாயத்தில் காணப்படுகிறது. இது போன்ற போலி அன்பளிப்புகளுக்கும் மேற்கண்ட ஹதீஸின் எச்சரிக்கை பொருந்தும். எனவே இது போன்ற போலியான திருமண அன்பளிப்புகளைத் தவிர்க்க வேண்டும்

ஒருவருக்கு நாம் அன்பளிப்பு கொடுக்கிறோம். அவர் தனது நெருக்கடிக்காக அதை விலை பேசுவது நமக்குத் தெரிய வருகிறது. அப்போது அதை நாம் விலை கொடுத்து வாங்குவதற்குக் கூட அனுமதி இல்லை. ஏனெனில் நாம் விலைக்குக் கேட்கும் போது அவர் சந்தை மதிப்பில் விலை கூற மாட்டார்.

அற்பமான விலையையே கூறுவார். இதனால் நாம் கொடுத்த அன்பளிப்பில் சிறு பகுதியை திரும்பப் பெற்றவர்களாகி விடுவோம் என்பதால் இதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

صحيح البخاري 1490 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ،
يَقُولُ: حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَأَضَاعَهُ الَّذِي كَانَ عِنْدَهُ، فَأَرَدْتُ أَنْ أَشْتَرِيَهُ وَظَنَنْتُ أَنَّهُ يَبِيعُهُ بِرُخْصٍ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لاَ تَشْتَرِي، وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ، وَإِنْ أَعْطَاكَهُ بِدِرْهَمٍ، فَإِنَّ العَائِدَ فِي صَدَقَتهِ كَالعَائِدِ فِي قَيْئِهِ»

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்வதற்காக நான் ஒருவருக்கு குதிரையொன்றை (தர்மமாக)க் கொடுத்தேன். ஆனால் அவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) வீணாக்கி விட்டார். எனவே நான் அதை விலைக்கு வாங்க நாடினேன். இன்னும் அவர் மிகக் குறைந்த பணத்திற்கே விற்றுவிடுவார் என்றும் எண்ணினேன்.

எனவே இதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், அதை வாங்காதீர்! உமது தர்மத்தை நீர் திரும்பப் பெற்றுக் கொள்ளாதீர்! அவன் அதை ஒரு திர்ஹத்திற்குத் தந்தாலும் சரியே. ஏனெனில் தர்மத்தைத் திரும்பப் பெறுபவன் தான் எடுத்த வாந்தியை உண்பவனைப் போன்றவனாவான் என்றார்கள்.

நூல் : புகாரி -1490

ஒருவருக்கு நாம் அன்பளிப்பாகக் கொடுத்த பின் அது நம்முடையது நாம் கொடுத்தது என்ற எண்ணம் கூட நமக்கு வரக் கூடாது.

சூது

மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” எனக் கூறுவீராக!

(திருக்குர்ஆன்:2:219.)

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

(திருக்குர்ஆன்:5:90.)

திருக்குர்ஆனில் சூதாட்டத்தை அல்லாஹ் தடை செய்துள்ளான். சூதாட்டம் ஒரு தீயசெயல் என்பதை அதிகமான மக்கள் அறிந்து வைத்துள்ளனர். முஸ்லிமல்லாத மக்களும்கூட சூதாட்டம் ஒரு பாவச்செயல் என்று நம்புகின்றனர். ஆனால் சூதாட்டம் என்றால் என்ன என்பது குறித்து சரியான விளக்கம் அவர்களிடம் இல்லை.

தாயக்கட்டை, சீட்டாட்டம் ஆகியவைதான் சூதாட்டம் என்ற அளவில்தான் சூதாட்டம் பற்றி மக்களின் அறிவு அமைந்துள்ளது. குறிப்பிட்ட விளையாட்டுகள்தான் சூது என்று கருதுவது அறியாமையாகும்.

சூது என்றால் என்ன? சிலர் கூட்டு சேர்ந்து தலைக்கு இவ்வளவு என்று பணத்தைப் போட்டு குறிப்பிட்ட விளையாட்டில் யார் வெல்கிறார்களோ அவர்கள் அனைவரின் பணத்தையும் எடுத்துக் கொள்வதுதான் சூதாட்டமாகும்.

இந்த அம்சம் எந்த விளையாட்டில் இருந்தாலும் அது சூதாட்டத்தில் சேரும். உதாரணமாக பத்துப்பேர் தலைக்கு நூறு ரூபாய் கட்டி ஓட்டப்பந்தயம் நடத்துகின்றனர். அதில் ஜெயிப்பவர் அனைவரது பணத்தையும் எடுத்துக் கொண்டால் அது சூதாட்டத்தில் சேரும். பணம் வைக்காமல் சீட்டாடினால் அது வீணான காரியம் என்பதற்காக கூடாது என்று கூறலாமே தவிர அது சூதாட்டமாகாது. ஏனெனில் இங்கே எந்தப் பணப்பரிவர்த்தனையும் இல்லை.

மற்றவர்கள் ஆடும் ஆட்டத்தில் யார் ஜெயிப்பார்கள் என்பதற்காகப் பணம் கட்டினால்கூட அதுவும் சூதாட்டத்தில் சேரும். சூதாட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட விளையாட்டு அல்ல. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் குறிப்பிட்ட மோசடிதான் சூதாட்டமாகும் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

பரிசளிப்பது சூதாட்டத்தில் சேராது. குறிப்பிட்ட விளையாட்டில் வெற்றி பெற்றவருக்கு பத்தாயிரம் ரூபாய் தருவேன் என்று ஒருவர் அறிவிக்கிறார். விளையாடுபவர் இதில் எந்த முதலீடும் செய்யவில்லை. ஒருவருக்குப் பரிசு கொடுத்தால் போட்டியில் உள்ள மற்றவர்களுக்கு எந்த இழப்பும் இல்லை. போட்டியில் இல்லாத ஒருவர் தனது பணத்தைப் பரிசாக அளிப்பதால் இதில் பணத்தைப் போட்டு பணத்தை எடுத்தல் இல்லை. அப்படி இருந்தால் தான் அது சூதாட்டமாகும்.

எனவே பரிசுகள் பெறுவதும் வாங்குவதும் சூதாட்டமாகாது.

அது போல் தாயக்கட்டையை உருட்டி டைமன்ட் விழுந்தால் உன் பணம் எனக்கு. கிளாவர் விழுந்தால் என் பணம் உனக்கு என்ற அடிப்படையில் இருவரும் பணத்தை வைத்து வென்றவர் எடுத்துக் கொள்வதால் இதுவும் சூதாகும்.

ஒருவரின் பணத்தை நாம் எடுப்பது என்றால் வியாபாரத்தின் மூலம் எடுக்கலாம். அன்பளிப்பு என்ற வகையில் எடுக்கலாம். வாரிசு முறையில் எடுக்கலாம். உழைத்து ஊதியமாக எடுக்கலாம். ஆனால் ஒருவன் ஒரு விளையாட்டிலோ குலுக்கலிலோ வெல்வதால் அடுத்தவனின் பொருளை எடுப்பதில் ஒரு நியாயமும் இல்லை. இதில் தோற்றவன் தன்னுடைய பணத்தை எந்தப் பிரதிபலனையும் பெறாமல் இழப்பதால் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.

இன்னொரு சூது இருக்கின்றது. 10 பொருட்களை வைத்திருப்பார்கள். வை ராஜா வை என்று மக்களை கூவி அழைப்பார்கள். வட்டமாக சுற்றக்கூடிய ஒன்றை வைத்திருப்பார்கள். அதில் 1 ல் நாம் வைப்போம். அது சுற்றி வந்து அந்த 1 ல் நின்றுவிட்டால் நமக்கு அந்த பொருள் கிடைக்கும். 7 ல் நின்றால் கிடைக்காது. இதுவும் சூதில் ஒரு வகை.

இது போல் அதிர்ஷ்டத்தை வைத்து ஒருவர் பொருளை மற்றவர் அடைவதும், ஏதெனும் ஒரு துறையில் ஒருவருக்கு இருக்கும் திறமை அடிப்படையில் ஒருவர் பொருளை மற்றவர் அடைவதும் சூதாட்டத்தில் அடங்கும்.