Tamil Bayan Points

16) 15 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

15 வது வசனம்

ஒரு ஊருக்கு மூன்று தூதர்களை அல்லாஹ் அனுப்பினான் என்பதைப் பற்றி முன்னர் பார்த்தோம். அந்த ஊர் மக்கள் தூதர்களை மறுத்தபோது கூறிய காரணங்களை 15 முதல் 17 வரை உள்ள வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

15. “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்” என்று கூறினர். 

மனிதர்கள் என்று கூறி மறுத்தனர்

தூதர்கள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களாக இருப்பதால் அல்லாஹ்வின் செய்தி இவர்களுக்கு அருளப்படாது என்று அம்மக்கள் நினைத்தனர். இவர்கள் மட்டுமின்றி மற்ற தூதர்களுடைய சமுதாய மக்களும் இது போன்றே நினைத்தனர். இதை பின்வரும் வசனங்களில் காணலாம்.

அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்தும், ஒரு மனிதர் எங்களுக்கு வழிகாட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏகஇறைவனை) மறுத்துப் புறக்கணித்ததே இதற்குக் காரணம். அல்லாஹ் அவர்களைப் புறக்கணித்தான். அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்.

(அல்குர்ஆன்:64:6.)

“இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்” என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏகஇறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதினார்களோ, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.

“உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நீங்கள் நட்டமடைந்தவர்கள்”

(அல்குர்ஆன் : 23:33,34.) 

நபி (ஸல்) அவர்களையும் மறுத்தனர்

முந்தைய கால மக்கள் மட்டுமின்றி நபி (ஸல்) காலத்து மக்களும் இவ்வாறே நபிகளாரை மறுத்துள்ளனர்.

“இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?” என்று கேட்கின்றனர்.

(அல்குர் ஆன்:25:7.) 

எந்த வித்தியாசமுமின்றி நம்மைப் போன்றே சாப்பிடுதல், குடித்தல் போன்ற அனைத்தையும் செய்து கொண்டு தன்னைத் தூதர் என்று கூறும்போது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதைதான் பிரதானமாக அனைத்து மக்களும் கூறியுள்ளார்கள். ஏதேனும் ஒரு வேறுபாட்டை அவர்கள் எதிர்பார்த்துதான் மறுத்தார்கள்.

வானவர்கள் தூதராக வரவேண்டும் என எதிர்பார்த்தார்கள்

இது மட்டுமின்றி மனிதனை விட தூய்மையான படைப்பினமாக உள்ள வானவர்கள் தங்களுக்கு இறைத்தூதராக வரவேண்டும் என்றும் விரும்பினர்.

94. “மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?” என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது

(அத்தியாயம்:17: 94.) 

தங்களைவிட உயர்ந்த படைப்பினம் தங்களுக்கு தூதராக வரவேண்டும் என்பதே இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக இருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்பபை பூர்த்தி செய்யும் விதமாக பல வழிகளை அல்லாஹ் ஏற்படுத்தினான்.

அற்புதங்களை வழங்கினான்

மார்க்கத்தில் தூதரை சந்தேகமின்றி நம்பவேண்டும் என்றிருந்தாலும் தங்களைப் போன்ற சாதாரண மனிதனை தூதராக ஏற்கமாட்டோம் என அம்மக்கள் கூறியது சற்று நியாயமானதாகவே இருந்தது. ஏனெனில் யாராவது ஒருவர் திடீரென தன்னை தூதர் என்று வாதிட்டால் அவரிடம் உள்ள தனித்தன்மை என்ன? என்பதை பொதுமக்கள் பார்ப்பார்கள்.

அவர்களால் செய்ய இயலாத பல விஷயங்களை தூதர் என வாதிடுபவர் செய்தால்தான் மக்கள் அவரை நம்புவார்கள். அதற்கும் பதிலளிக்கும் விதமாக தூதர்களுக்கு அற்புதங்களை வழங்கி அவர்களுடைய எதிர்பார்ப்புகளை அல்லாஹ் பூர்த்தி செய்தான். சாதாரண மனிதனால் செய்ய இயலாத பல அற்புதங்களை தன் நாட்டப்படி தூதர்களுக்கு வழங்கி அதன் மூலம் மக்களுக்க நம்பிக்கை ஊட்டினான்.

ஈஸா நபிக்கு வழங்கப்பட்ட அற்புதம்

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) “உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், தொழுநோயையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது” (என்றார்)

(அல்குர்ஆன்: 3:49.) 

ஈஸா (அலை) அவர்களை மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக இறந்தோரை உயிர்பிக்கும் அற்புதம் வழங்கப்பட்டிருந்தது.

மூஸா நபிக்கு வழங்கப்பட்ட அற்புதம்

“உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

(அல்குர்ஆன் : 26:63.)

சில நேரங்களில் நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதற்காக மூஸா (அலை) அவர்களுக்கு இது போன்ற அற்புதங்களும் வழங்கப்பட்டிருந்தது.

வானவர்கள் அனுப்பபட்ட நோக்கங்கள்

அம்மக்கள் வானவர்களை தூதர்களாக கேட்டபோது அல்லாஹ் அதை மறுத்து வானவர்கள் தண்டிப்பதற்காகதான் இறக்கப்படுவார்கள் என கூறுகிறான்.

இவருடன் வானவர் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? என அவர்கள் கூறுகின்றனர். வானவரை நாம் அனுப்பி யிருந்தால் காரியம் முடிக்கப்பட்டுவிடும். பின்னர் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன்:6:8.) 

வானவர்களுக்குதான் வானவர்

மேலும் வானவர்களை தூதராக எதிர்ப்பார்த்தபோது “வானவர்களுக்குதான் வானவர்களை தூதராக அனுப்புவேன். மனிதர்களுக்கு அல்ல.” என்றும் கூறுகிறான்.

“பூமியில் வானவர்கள் நிம்மதியாக நடமாடி (வசித்து) வந்தால் அவர்களுக்கு வானத்திலிருந்து வானவரையே தூதராக அனுப்பியிருப்போம்” என்பதைக் கூறுவீராக!

(அத்தியாயம் :17 : 95.) 

வானவரையும் மனிதராகதான் மாற்றியனுப்புவான்

மேலும் மனிதர்களுக்கு வானவரை தூதராக அனுப்பினாலும் அவரை மனிதனாக மாற்றிதான் அனுப்புவதாக இறைவன் தெரிவிக்கின்றான்.

9. வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம். எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தியிருப்போம்.

(அத்தியாயம் : 6:9.)

ஏனெனில் தூதர் அனுப்பப்படும் நோக்கம் வேதத்தை கொடுத்துவிட்டு செல்வது மட்டுமல்ல. மாறாக மனிதனுக்கு எப்படி வாழவேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதுதான். திருமணம், கொடுக்கல், வாங்கல் போன்ற மனித பழக்கவழக்கங்களை கற்றுத்தந்து முன்மாதிரியாக நடப்பதற்குதான் மனிதனை அல்லாஹ் அனுப்புகிறான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

(அத்தியாயம்: 33 : 21.) 

எனவே வானவரை அனுப்பினால் மனிதன் போன்று முன்மாதிரியாக அவர் வாழமுடியாது. மேலும் வானவர் முன்மாதிரியாக நடந்தார் என்று வைத்துக் கொண்டாலும் ” அவர் வானவராக இருந்ததால் அவ்வாறு கட்டுக்கோப்பாக நடந்துவிட்டார். மனிதர்களாகிய எங்களுக்கு அவ்வாறு நடக்கமுடியாது” என்று அம்மக்கள் மறுத்திருப்பர். இதையும் கவனித்துதான் மனிதரை தன் தூதராக அனுப்புகிறான் என்று விளங்கலாம்.

தூதர்கள் கூறிய பதில்கள்

தங்களுக்கு வானவர் தூதராக வந்திருக்க கூடாதா என்று மக்கள் கேட்ட போது தூதர்களும் சில பதில்களை கூறியுள்ளார்கள்.

“நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்” என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

(அல்குர்ஆன் : 14:11.) 

நபி (ஸல்) அவர்களும் இது போன்ற பதிலை கூறியுள்ளார்கள்.

110. “நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணைகற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் : 18:110.) 

எனவே தாங்கள் மனிதர்கள்தான் என்பதையும் எனினும் அல்லாஹ்விடமிருந்து வஹீ அறிவிக்கப் படுவதில் மட்டும் நாங்கள் வேறுபடுவோம் என்பதையும் தூதர்கள் தங்கள் பதில்களாக கூறியுள்ளார்கள்.