Tamil Bayan Points

16) மக்களிடயே நிலவும் இணைவைப்புகள்-3

நூல்கள்: ஏகத்துவமும் இணை வைப்பும்

Last Updated on January 19, 2023 by

மக்களிடயே நிலவும் இணைவைப்புகள்-3

ஸியாரத் என்ற பெயரில் இணைவைப்பு

மண்ணறைகளைச் சந்தித்து வரும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனென்னறால் மண்ணறைகளை காணும் போது நமக்கு மரணபயம் ஏற்படும். நமது செயல்பாடுகளைத் திருத்தி நல்லவர்களாக வாழ்வதற்கு இந்தப் பயம் உதவும். எனவே எல்லோரும் அடக்கம் செய்யப்படுகின்ற மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் அரங்கேறாத பொது மையவாடிக்குச் சென்று மரண பயத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (1777)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : திர்மிதி (974)

தர்ஹாக்களை சென்று தரிசித்து வருவதற்கு கப்ரு வணங்கிகள் மேற்கண்ட ஹதீஸ்களை ஆதாரம் காட்டுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த ஸியாரத்திற்கும் தர்ஹாக்களுக்குச் செல்வதற்கும் சம்பந்தமே இல்லை.

கப்ருகளை பூசுவதையும், அதன் மேல் கட்டிடங்களை எழுப்புவதையும் நபியவர்கள் தடைசெய்திருக்க தனிப்பட்ட ஒருவருடைய மண்ணறையைப் பூசி அதன் மேல் கட்டிடம் எழுப்பி விதவிதமான இணைவைப்புக்காரியங்களுக்கு இடமாகத் திகழ்வதுதான் தர்ஹா ஆகும்.

கோயில் திருவிழாக்கள் போல் மேளதாளத்துடன் ஆட்டம்பாட்டத்துடன் உரூஸ் விழா தர்ஹாக்களில் நடைபெறும். பெண்களை தவறாக பார்த்து இரசிப்பதற்காகவே இளைஞர் பட்டாளம் அந்த இடத்தை நோக்கி படையெடுக்கும். மார்க்கம் தடுத்த பெரும்பெரும் பாவங்களின் கேந்திரமாக விளங்கும் தர்ஹாக்களுக்குச் சென்றால் நிச்சயம் மரண பயம் வராது. மாறாக இவையெல்லாம் மரணத்தை சிந்திக்கவிடாமல் உலக கவர்ச்சியின் பால் அழைத்துச் செல்லும். இது போன்ற இடங்களுக்கு செல்லக் கூடாது என்பதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேசெய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.

அல்குர்ஆன் (4 : 140)

மரண பயத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக யாரும் தர்ஹாக்களுக்குச் செல்வதில்லை. மாறாக புனிதம் கருதியே அங்கே செல்கிறார்கள். இவ்வாறு புனிதம் கருதி மூன்று இடங்களைத் தவிர வேறு இடங்களுக்கு பயணம் போகக் கூடாது என்று நபியவர்கள் தடை விதித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸô ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெங்கும் (புனிதம் கருதி) பயணம் மேற்கொள்ளப்படாது.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (1189)

நூல் : புகாரி (1189)

தர்ஹாக்கள் இணைவைப்பின் கேந்திரங்கள்

மண்ணறைகள் மண்ணறைகளாகத்தான் இருக்க வேண்டும். அதை பள்ளிவாசல்களாகவோ புனிதத் தலங்களாகவோ கருதுவது இணைவைப்பாகும். யூத கிறிஸ்தவர்கள் நபிமார்களின் மண்ணறைகளைப் புனிதத் தலங்களாகக் கருதிய காரணத்தினால் இறை மறுப்பாளர்களாக ஆனார்கள். தர்ஹாக்கள் என்ற பெயரில் நல்லடியார் என்ற சான்று இல்லாதவர்களுக்கும் குடிகாரனுக்கும் குளிக்காதவனுக்கும் புனிதத் தலங்களை ஏற்படுத்துபவர்கள் சந்தேகமில்லாம் இணைவைப்பவர்களே.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கி விட்ட போது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்தி-ருந்து விலக்கி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தவானாக! தம் இறைத் தூதர்களின் அடக்கத் தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று கூறி, அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்து விடாதீர்கள் என தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (436)

உம்மு ஹபீபா அவர்களும் உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப்படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்து விடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள் தாம் மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (427)

ஹராம்களின் ஒட்டுமொத்த உருவம்

நபியவர்கள் தடுத்த பல விசயங்கள் தர்ஹாக்களில் அரங்கேறுவதால் ஹராம்களின் ஒட்டுமொத்த உருவமாக தர்ஹாக்கள் பரிணமித்துக் கொண்டிருக்கிறது.

கப்றுகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டிடம் எழுப்புவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் (1765)

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டு விடாதீர்; (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்)

நூல் : முஸ்லிம் (1764)

சந்தனக் கூடு உரூஸ் கொண்டாட்டங்கள்

சந்தனக் கூடு உரூஸ் கொண்டாட்டங்களும் நடுத்தெருவில் கப்பல் இழுப்பதும் கோவில் திருவிழாக்களை காப்பியடித்து உருவாக்கப்பட்டதாகும். இறை மறுப்பாளர்கள் தேரை இழுப்பது போல் கப்ரு வழிபாட்டுக்காரர்கள் கப்பலை இழுக்கிறார்கள்.

இந்த அந்நியக் கலாச்சாரம் இஸ்லாமில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்கு நபியவர்கள் அற்புதமான அரண்களை ஏற்படுத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். மக்களிலேயே சிறந்தவரான முஹம்மத் (ஸல்) அவர்கள் தன்னுடைய மண்ணறையில் விழா கொண்டாடக் கூடாது என்று தடை பிறப்பித்துள்ளார்கள்.

நபியவர்களுடைய மண்ணறையை விழாக் கொண்டாடும் இடமாக ஆக்கிவிடக் கூடாது என்றால் அவர்களின் கால்தூசுக்கும் சமமாகாத முகவரியில்லாத சக்தியற்ற மனிதர்களின் மண்ணறைகளில் விழாக் கொண்டாடுவதற்கு எள்ளளவு கூட அனுமதி கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் வீடுகளை அடக்கத் தலங்கலாக ஆக்காதீர்கள். மேலும் எனது அடக்கத் தலத்தில் விழா எடுக்காதீர்கள். என் மீது சலவாத்துச் சொல்லுங்கள். ஏனென்றால் நீங்கள் கூறும் சலவாத்து நீங்கள் எங்கிருந்தாலும் என்னை வந்தடையும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அபூதாவுத் (1746)

தனது மண்ணறையில் மக்கள் குழும்பிவிடக் கூடாது என்பதற்காக நபியவர்கள் என் மீது சலவாத்துச் சொல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் அது என்னை வந்தடையும் என்று போதிக்கிறார்கள். இதை விளங்காத காரணத்தினால் ஹஜ் என்ற உயர்ந்த வணக்கத்தை புரிபவர்கள் மதீனாவில் உள்ள நபியவர்களின் மண்ணறைக்குச் சென்று அவர்களிடம் பிரார்த்தனை செய்கின்றனர். நபியவர்கள் தாங்கள் சொல்வதைச் செவியுறுகிறார்கள் என்று எண்ணி இந்த இணைவைப்பைச் செய்கின்றனர். நபியவர்கள் மீது நாம் கூறும் சலவாத்தை வானவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பூமியில் சுற்றித் திரியும் வானவர்கள் அல்லாஹ்விற்கு இருக்கிறார்கள். அவர்கள் என் சமூகத்தினரிடமிருந்து சலாத்தை எனக்கு எத்தி வைக்கிறார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : அஹ்மத் (3484)

பள்ளிவாசலுக்குள் இணைவைப்பு

அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காகக் கட்டப்படுகின்ற ஆலயத்திலும் இன்று இணைவைக்கப்படுகிறது. பள்ளிவாசலுக்கு அருகில் மண்ணறைகளைக் கட்டி வைத்துள்ளார்கள். பெரும்பாலான பள்ளிகள் இப்படித்தான் உள்ளது. சில ஊர்களில் பள்ளிக்குள்ளேயே மண்ணறைகள் கட்டப்பட்டு அதை நோக்கி மக்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் அல்லாஹ்வின் படைப்புகளிலேயே தரங்கெட்டவர்கள். மோசமானவர்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மறுமை நாள் வரும் போது உயிருடன் இருப்பவர்களும் மண்ணறைகளை பள்ளிவாசல்களாக ஆக்கிக் கொள்பவர்களும் மக்களிலேயே படுமோசமானவர்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : அஹ்மத் (3929)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அடக்கத் தலங்களை (கப்று) நோக்கித் தொழாதீர்கள்; அவற்றின் மீது உட்காராதீர்கள்.

அறிவிப்பவர் : அபூமர்ஸத் அல்ஃகனவீ (ரலி)

நூல் : முஸ்லிம் (1769)

உங்கள் வீடுகளை தொழுகை நடத்தப்படாத மண்ணறைகளை போன்று ஆக்கி விடாதீர்கள். வீடுகளில் தொழுங்கள் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். இதன் மூலம் மூலம் மண்ணறை உள்ள இடத்தில் தொழக்கூடாது என்பதை உணர்த்துகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களது தொழுகைகளில் சிலவற்றை உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கி விடாதீர்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (432)

அல்லாஹ்வை அஞ்சுவது போல் மற்றவற்றை அஞ்சுதல்

நாம் என்ன செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். எனவே தறுகள் செய்யும் போது அவனுக்கு அஞ்சுகிறோம். அல்லாஹ்விற்கு மாறு செய்தால் அவன் தண்டித்து விடுவானோ என்று பயப்படுகிறோம். இவ்வாறு அல்லாஹ்விற்கு மட்டுமே பயப்பட வேண்டும். தர்ஹாக்களில் நடக்கும் காரியங்கள் அனைத்தும் வழிகேடு என்று தெளிவாகத் தெரிந்தாலும் அதை வெளியில் சொல்வதற்குச் சிலர் பயப்படுகிறார்கள்.

இணைவைப்பைக் கண்டித்துப் பேசுபவர்களுக்கு உறுதுணையாக இவர்கள் இருப்பதில்லை. கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர் நம்மை தண்டித்து விடுவாரோ என்ற பயம்தான் பலரை சிந்திக்க விடாமல் முழுமையான ஈமானுக்கு வரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு இறந்து போனவர்களுக்கு அஞ்சுவது இணைவைப்பாகும். இறந்து போனவர்களால் நன்மை மட்டுமின்றி எந்த தீமையும் நமக்கு செய்ய முடியாது என்றே நாம் நம்ப வேண்டும்.

ஷைத்தானே, தனது நேசர்களை (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் எனக்கே அஞ்சுங்கள்!

அல்குர்ஆன் (3 : 175)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!

அல்குர்ஆன் (3 : 102)

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.

அல்குர்ஆன் (9 : 18)

அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணைகற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) அவன் அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சான்றையும் வழங்காதவற்றை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள் அஞ்சாத போது நீங்கள் இணைகற்பித்தவைகளுக்கு எவ்வாறு நான் அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க அதிகத் தகுதி படைத்தவர் யார்? (என்றும் இப்ராஹீமு; கூறினார்.)

அல்குர்ஆன் (6 : 80,81)

அல்லாஹ்வை நேசிப்பது போல் மற்றவைகளை நேசிப்பது…

இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை கடுமையாக நேசிக்க வேண்டும். யாரையும் நேசிக்காத அளவிற்கு நேசிக்க வேண்டும். துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் அல்லாஹ்வையே நினைவு கூற வேண்டும். ஆனால் தரீக்காவாதிகளும் கப்ரு வழிபாட்டுக்காரர்களும் அல்லாஹ்வை மட்டும் நினைவு கூற வேண்டிய இடங்களில் நேரங்களில் முஹ்யித்தீனையும் அப்துல்காதர் ஜீலானியையும் நினைக்கிறார்கள்.

வீட்டுச் சுவர்களிலும் கடிதத்தை துவக்கும் போதும் யா முஹ்யித்தீன் யா ரசூலல்லாஹ் என்று எழுதுகிறார்கள். இதையே திக்ருகளாகக் கூறுபவர்களும் இருக்கிறார்கள். அல்லாஹ்வை நேசிப்பதை விட அடியார்களை இவர்கள் நேசிக்கிற காரணத்தினால் இப்படிப்பட்ட இழி செயல்களைச் செய்கிறார்கள். அல்லாஹ்வை நேசிக்கும் பாக்கியத்தை இழக்கிறார்கள். இது இணைவைப்பாகும்.

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும் போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.

அல்குர்ஆன் (2 : 165)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மூன்று தன்மைகள் அமையப் பெறாத) எவரும் இறை நம்பிக்கையின் சுவையை உணர மாட்டார். (அவை:)

  1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
  2. இறை மறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பின் மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.
  3. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்றெதையும் விட அவருக்கு அதிக நேசத்திற்குரியோராவது.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி (6041)

தகடு தாயத்துகளைத் தொங்கவிடுதல்

குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட தாளை மடித்து தாவீஸôகத் தயாரித்து கழுத்திலும், கையிலும், இடுப்பிலும் பலர் மாட்டிக் கொள்கிறார்கள். குறிப்பிட்ட சில வார்த்தைகளைச் செம்புத் தகட்டில் எழுதி கடைகளில் தொங்க விடுகிறார்கள். என்னைப் பார் யோகம் வரும் என்று எழுதப்பட்ட கழுதையின் படத்தை கடைகளில் தொங்க விட்டிருக்கிறார்கள்.

இன்னும் சிலர் தட்டில் எதையோ எழுதி கறைத்துக் குடிக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை கையிற்றின் மீதும் செம்புத் தட்டின் மீதும் தாளின் மீதும் வைத்து விடுவதால் இது இணைவைப்பாகும். நபி (ஸல்) அவர்கள் இதை தடை செய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் (பைஅத் செய்வதற்காக பத்து பேர் கொண்ட) சிறு கூட்டம் ஒன்று வந்தது. அவர்களில் ஒன்பது நபர்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கினார்கள். ஒருவரிடம் உறுதிமொழி வாங்கவில்லை. மக்கள் அல்லாஹ்வின் தூதரே ஒன்பது பேர்களிடத்தில் உறுதிமொழி வாங்கினீர்கள். இவரை விட்டு விட்டீர்களே என்று கேட்டார்கள்.

அதற்கு நபியவர்கள் அவர் மீது தாயத்து உள்ளது என்று கூறினார்கள். அப்போது அந்த மனிதர் தன் கையை உள்ளே விட்டு அந்த தாயத்தைக் கழற்றினார். அவரிடத்தில் நபியவர்கள் பைஅத் செய்த பிறகு யார் தாயத்தைத் தொங்க விடுகிறானோ அவன் இணைவைத்து விட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல் : அஹ்மத் (16781)

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரின் கை புஜத்தில் மஞ்சல் நிற உலோகத்தால் ஆன வளயத்தைக் கண்டார்கள். உனக்கு என்ன ஆனது? இது வென்ன? என்று நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) கேட்டார்கள். அதற்கு அவர் கை புஜத்தில் ஏற்பட்ட நோயின் காரணமாக (இதை அணிந்துள்ளேன்) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) அறிந்து கொள். இது உனக்கு சிரமத்தைத் தவிர வேறெதையும் அதிகப்படுத்தாது. உன்னை விட்டும் இதை எரிந்துவிடு. இது உன்மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் ஒரு போதும் நீ வெற்றியடைய முடியாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)

நூல் : அஹ்மத் (19149)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பிரயாணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகின்ற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும் என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள். 

அறிவிப்பவர் : அபூ பஷீர் அல் அன்சாரீ (ரலி)

நூல் : புகாரி (3005)