Tamil Bayan Points

16) பறிக்கப்படும் மானம் கிழிக்கப்படும் முகம்

நூல்கள்: நாவை பேணுவோம்

Last Updated on July 12, 2023 by

பறிக்கப்படும் மானம் கிழிக்கப்படும் முகம்

புறம் எவ்வளவு பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் ஏதோ நேரப்போக்கிற்காக பேசிக்கொள்கிறோம். ஆனால் புறம் பேசுவதின் மூலம் ஒருவரின் மானம் விஷயத்தில் விளையாடுகின்றோம் அவரை தேவையில்லாமல் அவமானப் படுத்துகின்றோம் என்பதை வசதியாக மறந்து விடுகிறோம் மற்றவர்களின் மானத்தை புறம் பேசி பறித்தவர்களின் கதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். 

நான் மிஃராஜிக்கு கொண்டு செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தார்களை கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பு உலோகத்தினாலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் தங்கள் முகங்களையும் உடம்பையும் கீறிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் என்று ஜிப்ரீல் அவர்களிடம் வினவினேன். இவர்கள் தான் புறம் பேசுவதின் மூலம் மக்களின் இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னும் மக்களின் மானங்களில் விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்று கூறினார். 

அறிவிப்பவர் : அளஸ் (ரலி)

நூல் : ஆபூதாவூத்-4235

நாம் சாதரணமாய் கருதுகின்ற புறம் பேசுதல் என்ற தீமை அதன் விளைவுகள் இவ்வுலகோடு நின்று விடாது. நமது மறுமை வாழ்க்கையையும் நாசப்படுத்துகின்றது. மறுமையில் தண்டனையை பெற்றுத்தருவதோடு நிறுத்திக் கொள்கின்றதா? இல்லையில்லை அதற்கு முன் மண்ணறையிலும் வேதைனையை பெற்றுத்தருகின்றது பல கடுமையான தண்டனைகளை புறம் பேசுதல் ஏற்படுத்துகின்றது என்பதை ஒவ்வொரு முஸ்லிமான ஆண்களும் பெண்களும் எண்ணிப்பார்க்க வேண்டும். 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலுள்ள ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள் அப்போது சவக் குழிகளுக்குள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரு மனிதர்களுடைய ஒலத்தைச் செவியுற்றர்கள். அப்போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள் ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை என்று சொல்லிவிட்டு ஆம்!

(ஒரு வகையில் இறைவனிடம் அது பெரிய பாவச் செயல்தான்) இவ்விருவரில் ஒருவரோ தம் சிறுநீரிலிருந்து (தமது உடலையும் உடையையும் மறைக்காமலிருந்தார். மற்றொருவரோ. (புறம் பேசி) கோள் சொல்லிலித் திரிந்துகொண்டிருந்தார் என்று கூறிவிட்டு ஒரு (பச்சை) பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச்சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு சவக்குழியின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள் அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவ்விரு மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம் என்று பதிலளித்தார்கள்

நூல் : புகாரி-26