Tamil Bayan Points

17) அனுமதி கோருதல்

நூல்கள்: இஸ்லாமிய ஒழுக்கங்கள்

Last Updated on October 28, 2023 by

அனுமதி கோருதல்

வீட்டுக்குள் நுழையும் போது முதலில் ஸலாம் கூற வேண்டும் 

فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا فَسَلِّمُوْا عَلٰٓى اَنْفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ مُبٰرَكَةً طَيِّبَةً‌  ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ

வீடுகளில் நுழையும்போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

(அல்குர்ஆன் 24:61) 

அந்நியரின் வீடுகளில் நுழைய அனுமதி தேவை  

24:27 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ‌ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.

(அல்குர்ஆன் 24:27)

முதலில் ஸலாம் கூறிய பிறகே அனுமதி 

பனூ ஆமிர் குலத்தைச் சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்)அவர்கள் விட்டில் இருக்கும் போது நான் நுழையலாமா? என்று அனுமதி கோரினார். நபியவர்கள் தன்னுடைய பணியாளருக்கு “நீ வெளியே அவரின் பக்கம் சென்று அவருக்கு அனுமதி பெறும் முறையைக் கற்றுக் கொடு. ” அஸ்ஸலாமு அலைக்கும் (என்று முதல் ஸலாம் கூறி பிறகு ) நான் நுழையலாமா? என்று தான் (அனுமதி பெறும் போது)கூற வேண்டும். “என்று அவருக்குச் சொல்” என்று கூறினார்கள். அம்மனிதர் இதனை செவியேற்றார். உடனே அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறி பிறகு நான் நுழையலாமா? என்று அனுமதி கோரினார் நபியவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி), நூல் : அபூதாவூத்-5177 (4508)

அந்நியர் வீடுகளில் அனுமதி வழங்கப்படாவிட்டால் திரும்பி விட வேண்டும் 

فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّىٰ يُؤْذَنَ لَكُمْ ۖ وَإِن قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا ۖ هُوَ أَزْكَىٰ لَكُمْ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ

அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! “திரும்பி விடுங்கள்!” என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

(அல்குர்ஆன் 24:28)

நபி (ஸல்) அவர்கள் ஒருவருடைய இல்லத்திற்குச் செல்லும் போது மூன்று முறை சலாம் கூறி அனுமதி கோருவார்கள். பதில் வந்தால் வீட்டின் உள்ளே செல்வார்கள். இல்லெயென்றால் திரும்பச் சென்றுவிடுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சஃத் பின் உபாதா அவர்களிடம் (வீட்டின் உள்ளே வர) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று சலாம் கூறி அனுமதி கோரினார்கள். சஃத் நபி (ஸல்) அவர்களுக்குக் கேட்காதவாறு (வேண்டுமென்றே) வஅலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹ் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை சலாம் சொல்ல சஃதும் மூன்று முறை பெமானாருக்குக் கேட்காதவாறு பதில்சலாம் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் திரும்பிவிட்டார்கள். சஃத் அவர்களை பின்தொடர்ந்து சென்று அல்லாஹ்வின் தூதரே என்தாயும் தந்தையும் தங்களுக்கு அற்பணமாகட்டும். நீங்கள் கூறிய சலாம் அனைத்தும் என்காதில் விழாமல் இருக்கவில்லை. உங்களுக்குக் கேட்காதவாறு உங்களுக்கு நான் பதில் கூறினேன். உங்களது சலாத்தையும் பரகத்தையும் நான் அதிகம் பெற விரும்பினேன் என்று கூறினார்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : அஹ்மத்-12406 (11957, 14928)

நபி (ஸல்) அவர்கள் பால்அருந்துவதற்காக மிக்தாத் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர்கள் வீட்டில் நுழையும் போது சலாம் கூறியே நுழைந்தார்கள். பின்வரும் ஹதீஸிலிருந்து வேறொரு செய்தியையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். உரத்த குரலால் சப்தமிட்டும் யாருக்கும் கேட்காதவாறு மிகவும் மெதுவாகவும் சலாம் சொல்லக்கூடாது. சலாம் சொல்வதில் நடுநிலையைப் பேண வேண்டும்.

மூன்று தடவைக்கு மேல் அனுமதி கேட்கத் தேவையில்லை, திரும்பி விடலாம்

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ،
وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلاَثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ فَلْيَرْجِعْ»

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பி விடட்டும்.

அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி), நூல் : புகாரி-6245 

பருவ வயதை அடையாதவர்கள் அனுமதி கேட்க வேண்டிய நேரங்கள்

24:58 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِيَسْتَـاْذِنْكُمُ الَّذِيْنَ مَلَكَتْ اَيْمَانُكُمْ وَالَّذِيْنَ لَمْ يَـبْلُغُوا الْحُـلُمَ مِنْكُمْ ثَلٰثَ مَرّٰتٍ‌ؕ مِنْ قَبْلِ صَلٰوةِ الْفَجْرِ وَحِيْنَ تَضَعُوْنَ ثِيَابَكُمْ مِّنَ الظَّهِيْرَةِ وَمِنْۢ بَعْدِ صَلٰوةِ الْعِشَآءِ ‌ؕ  ثَلٰثُ عَوْرٰتٍ لَّـكُمْ‌ ؕ لَـيْسَ عَلَيْكُمْ وَ لَا عَلَيْهِمْ جُنَاحٌۢ بَعْدَهُنَّ‌ ؕ طَوّٰفُوْنَ عَلَيْكُمْ بَعْضُكُمْ عَلٰى بَعْضٍ‌ ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ‌ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏
24:59 وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُـلُمَ فَلْيَسْتَـاْذِنُوْا كَمَا اسْتَـاْذَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன் : 24:58,59)

நாம் செல்லும் வீட்டாருக்கு நம்மைப் பற்றி தெளிவாகக் கூறவேண்டும்

ஜாபிர்(ரலி) அறிவிகின்றார்கள்:  என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், ‘யார் அது?’ என்று கேட்டார்கள்.
அதற்கு நான், ‘நான்தான்’ என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நான் நான் என்றால்…?’ என அதை விரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள்.

நூல் : புகாரி-6250   

பிறருடைய வீடுகளுக்குள் எட்டிப் பார்ப்பதோ ஒட்டுக் கேட்பதோ கூடாது

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ أَبُو القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَوْ أَنَّ امْرَأً اطَّلَعَ عَلَيْكَ بِغَيْرِ إِذْنٍ فَخَذَفْتَهُ بِعَصَاةٍ فَفَقَأْتَ عَيْنَهُ، لَمْ يَكُنْ عَلَيْكَ جُنَاحٌ»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டிற்குள் எட்டிப் பார்த்தபோது அவர் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்துவிட்டால் உன் மீது எந்தக் குற்றமுமில்லை.
 
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி-6902
أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، أَخْبَرَهُ:
أَنَّ رَجُلًا اطَّلَعَ فِي جُحْرٍ فِي بَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِدْرًى يَحُكُّ بِهِ رَأْسَهُ، فَلَمَّا رَآهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَوْ أَعْلَمُ أَنَّكَ تَنْتَظِرُنِي، لَطَعَنْتُ بِهِ فِي عَيْنَيْكَ»
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا جُعِلَ الإِذْنُ مِنْ قِبَلِ البَصَرِ»
 

ஸஹ்ல்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் (அறையின்) கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் (இரும்பாலான) ஈர்வச் சீப்பொன்று இருந்தது; அதனால் தமது தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தபோது ‘என்னை நீ பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால், இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதினாலேயே அனுமதி கேட்க வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டது’ என்று கூறினார்கள்.

நூல் : புகாரி-6901 

அனுமதி பெறாமல் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்ட இடம் 

 لَـيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ مَسْكُوْنَةٍ فِيْهَا مَتَاعٌ لَّـكُمْ‌ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ‏
யாரும் குடியிருக்காத வீட்டில் உங்களின் பொருள் இருந்தால் அங்கே நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான்.
(அல்குர்ஆன் : 24:29.)