Tamil Bayan Points

16) எத்தி வைக்கும் யுக்திகள் – 2

நூல்கள்: பயான் செய்யும் முறைகள்

Last Updated on March 14, 2022 by Trichy Farook

எத்தி வைக்கும் யுக்தி -2   

ஏகத்துவத்தை எடுத்துச் சொல்ல வெட்கம் தடையாகலாமா?

தாயீக்கள் (அழைப்பாளர்கள்) மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக எவ்வளவு சிரமங்களை எதிர் கொள்கிறார்கள் என்பதைப் பற்றியும் தங்களது சொற்பொழிவுகளை அவர்கள் எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் கடந்த தொடரில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இந்த தொகுப்பில் நாம் காண இருக்கின்றோம்.

மார்க்கத்தை எத்தி வைக்க வெட்கம் தடையாக இருக்கக்கூடாது.

வெட்க உணர்வை இஸ்லாமிய மார்க்கம் வரவேற்கின்றது. அகிலத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட அண்ணல் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அதிகம் வெட்கப்படுபவர்களாகவும், வெட்க உணர்வைப் பிறருக்கு வலியுறுத்துபவர்களாகவும் இருந்துள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் அதிமான கிளைகளைக் கொண்டதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையே.

நூல்: புகாரி-9

அபுஸ் ஸவ்வார் அல்அதவீ (ரஹ்) அவர்கள் கூறினார்: இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள், “நாணம் நன்மையே தரும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-6117

அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும்  அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர்.

நூல்: புகாரி-3562

இருப்பினும் மார்க்கத்தை அறிந்து கொள்வதற்கோ, அதனை எத்தி வைப்பதற்கோ வெட்க உணர்வு தடையாக இருந்துவிடக் கூடாது. கடுமையாக வெட்க உணர்வு கொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே இல்லறம், மாதவிடாய், கணவன் மனைவி உறவு தொடர்பாக ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்குவது போன்ற விஷயங்களை எவ்விதத் தயக்கமும் இன்றி எடுத்துரைத்துள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் மனைவியின் (இரு கை, இரு கால் ஆகிய) நான்கு அங்கங்களுக்கிடையில் வீற்றிருந்து உள்ளீடு செய்து விட்டாரானால் அவர் மீது குளியல் கடமையாகி விடுகிறது. (விந்து வெளியாகா விட்டாலும் சரியே!)

நூல்: புகாரி-291

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரிஃபாஆ அல் குரழீ (ரலி) அவர்களின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து,  “நான் ரிஃபாஆவிடம் (அவருடைய மண பந்தத்தில்) இருந்தேன். பிறகு, அவர் என்னை மணவிலக்கு செய்து மணவிலக்கை முடிவானதாக்கி விட்டார்.  ஆகவே, நான் அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் (ரலி) அவர்களை மணந்து கொண்டேன்.

அவரிடம் இருப்பதெல்லாம் (உறுதி யின்றித்  தொங்கும்) முந்தானைத் தலைப்பைப் போன்றது தான் (அவர் ஆண்மை குறைந்தவர்)” என்று கூறினார்.  நபி (ஸல்) அவர்கள், “நீ ரிஃபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா?

(தற்போதைய உன் கணவரான)  அவரது இனிமையை நீ சுவைக்காத வரையிலும் உனது இனிமையை அவர் சுவைக்காத வரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்வ தென்பது முடியாது” என்று கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்து கொண்டிருந்தார்கள். 

காலித் பின் சயீத் பின் ஆஸ் (ரலி) அவர்கள், தமக்கு உள்ளே நுழைய அனுமதியளிக்கப்படும் என்று எதிர்பார்த்த வண்ணம் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள், “அபூபக்ரே! இந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் எதைப் பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கேட்க மாட்டீர்களா?” என்று (வாசலில் நின்றபடியே) சொன்னார்கள்.

நூல்: புகாரி-2639

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்த போது) எட்டியது. உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்” என்று கூறினார்கள். பிறகு,

இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?

சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?

குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்? அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்” என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவரா யிற்றே!” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும்.

குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது அவனது நீர் (விந்து உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவனது சாயலில் பிறக்கின்றது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளது சாயலில் பிறக்கின்றது” என்று பதிலளித்தார்கள். (உடனே) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்” என்று கூறினார்கள்.

பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்” என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார்கள்.

உடனே, அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வீட்டினுள் புகுந்து (மறைந்து) கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), “உங்களில் அப்துல்லாஹ் பின் சலாம் எத்தைகைய மனிதர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவர் எங்களில் (மார்க்க) ஞானம் மிக்கவரும், எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.

உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் (பின் சலாம்) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!” என்று சொன்னார்கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வெளியே வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன்.

மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்.” என்று சொன்னார்கள். உடனே யூதர்கள், “இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்” என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.

நூல்: புகாரி-3329

மேலும் மார்க்கச் சட்டங்களைக் கேள்வி கேட்காமல் அறிந்து கொள்ள இயலாது. எனவே இது போன்று கேட்கப்படும் கேள்விகளுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், “எங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக (பெருந்துடக்குடன்) இருக்கும் நிலையில் உறங்கலாமா?” என்று  கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; உங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக (பெருந்துடக்குடன்) இருந்தாலும்  அவர் உளூ செய்துவிட்டு உறங்கலாம்” என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி-287

இல்லறம், மாதவிடாய் போன்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவதற்கு பெண்கள் பெரிதும் தயங்குவார்கள். அந்தத் தயக்கமும் நியாயமானது தான். ஏனெனில் ஆபாசத்தைத் தூண்டக்கூடிய வார்த்தைகளைப் பேசுவதையோ, அந்தரங்கத்தை வெளிப்படுத்திப் பேசுவதோ கூடாது என்பது உட்பட நமது மார்க்கத்தில் நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்க்கச் சட்டங்களை மக்களுக்கு எத்திவைக்கும் நோக்கில் இவ்வாறு பேசுவது தவறல்ல. ஆனால் இதனைப் பேசுவதில் ஒரு சந்தோஷம், ஜாலி என்ற நோக்கில் பேசுவது குற்றமும் தண்டணைக்குரிய செயலுமாகும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

நூல்: புகாரி-6612

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அல்லாஹ்விடம் மாபெரும் நம்பிக்கை(த் துரோகம்) யாதெனில், கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுவிட்டுப் பின்னர் அவளது இரகசியத்தை அவன் (மக்களிடையே) பரப்புவதே ஆகும்.

நூல்: முஸ்லிம்-2833

ஆனால் பிரச்சாரம் என்று வருகின்ற போது மார்க்கச் சட்டங்களைச் சொல்வதற்கு நமக்குத் தயக்கம் அவசியமில்லை. ஏனெனில் ஆயிஷா, உம்மு சலமா, மைமூனா போன்ற நபியவர்களின் மனைவிமார்கள் நபிகளாரின் வீட்டில் நடந்த பல விஷயங்களை அறிவித்துள்ளார்கள். இது போன்ற விஷயங்களில் அவர்கள் தயக்கம் காட்டியிருந்தால் தொழுகை, நோன்பு, மாதவிடாய் பெண்களுக்குரிய சட்டங்கள் மற்றும் கணவன் மனைவி பேணவேண்டிய ஒழுங்கு முறைகள், கடமையான குளிப்பு போன்ற பல மஸாயில் (மார்க்க) சட்டங்களில் தீர்வு தெரியாமல் தவித்திருப்போம்.

மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்குக் குளிப்பதற்காக தண்ணீர் கொண்டு வந்து வைத்தேன். அவர்கள் (முதலில்) தம்மிரு கைகளையும் (மணிக்கட்டுவரை) இரண்டு அல்லது மூன்று தடவை கழுவினார்கள். பிறகு பாத்திரத்திற்குள் கையை நுழைத்து (தண்ணீரை அள்ளி) பிறவி உறுப்பின் மீது ஊற்றி, தமது இடக் கையால் கழுவினார்கள். பிறகு தமது இடக் கையை பூமியில் வைத்து நன்கு தேய்த்துக் கழுவினார்கள்.

பின்னர் தொழுகைக்கு உளு செய்வதைப் போன்று உளு செய்தார்கள். பிறகு தம் கைகள் நிரம்ப மூன்று முறை தண்ணீர் அள்ளித் தமது தலையில் ஊற்றினார்கள். பின்னர் மேனி முழுவதையும் கழுவினார்கள். பிறகு அங்கிருந்து சற்று நகர்ந்து (நின்று) தம் கால்களைக் கழுவினார்கள். பின்னர் நான் அவர்களுக்காகத் துவாலையைக் கொண்டுவந்தேன். ஆனால், அவர்கள் அதை வாங்கி(த் துடைத்து)க்கொள்ள மறுத்து விட்டார்கள்.

நூல்: முஸ்லிம்-528

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (“விடைபெறும்‘ ஹஜ்ஜிற்காகப்) புறப்பட்டுச் சென்றோம். ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் நாங்கள் எண்ணவில்லை. (மக்காவிற்கு அருகிலுள்ள) “சரிஃப்‘ என்ற இடத்தில் நாங்கள் இருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுது கொண்டிருக்கவே, “உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான், “ஆம்‘ என்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (மாதவிடாய்) அல்லாஹ் ஆதமின் பெண் மக்களுக்கு விதியாக்கிய விஷயமாகும். ஆகவே நீ, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் (கிரியைகள்) அனைத்தையும் நிறைவேற்று! ஆனால், இறையில்லம் கஅபாவை மட்டும்  சுற்றி (தவாஃப்) வராதே என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த ஹஜ்ஜின் போது) தம் மனைவியர் சார்பாக மாட்டை அறுத்(து குர்பானி கொடுத்)தார்கள்.

நூல்: புகாரி-294

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போதும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தலை வாரிவிடுவேன்.

நூல்: புகாரி-295

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நான் மாதவிடாயுடன் இருக்கும் போதும் எனது மடியில் தமது தலையை வைத்தபடி திருக்குர்ஆன் ஓதுவார்கள்.

நூல்: புகாரி-297

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு கருப்புப் போர்வைக்குள் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. உடனே நான் (அங்கிருந்து) மெல்ல நழுவி(ச் சென்று மாதவிடாய்(க் கால)த் துணியை எடுத்து (அணிந்து)கொண்டேன் “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?” என்று நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். ஆயினும் அவர்கள் என்னை (தம்மருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தக் கருப்புப் போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்.

நூல்: புகாரி-298

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்.

நூல்: முஸ்லிம்-505

மேற்கண்ட ஹதீஸ்களை நபிகளாரின் மனைவிமார்கள் அறிவித்திருக்கவில்லையென்றால் நாமும் யூதர்களைப் போலவே மாதவிடாய் ஏற்பட்ட நமது பெண்களை ஒதுக்கி வைத்திருப்போம்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர்.

அப்போது, “(நபியே!)  அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். “அது ஓர் (இயற்கை) உபாதை‘ என்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிலக்குற்ற போது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்…” என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, “நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம்‘ என்று கூறினர். எனவே உசைத் பின் ஹுளைர் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர்.

எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன?” என்று கேட்டனர். (இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறிவிட்டது. ஆகவே, (கேள்வி கேட்ட) அவர்கள் இருவர் மீதும் நபியவர்களுக்குக் கோபம் ஏற்பட்டுவிட்டதோ என்று நாங்கள் எண்ணினோம்.

நூல்: முஸ்லிம்-507

வெட்கப்படுவோர் கல்வியைக் கற்க முடியாது என்று கூறப்படுவது போல மார்க்கத்தைக் கற்பதற்கோ பிறருக்குக் கற்றுக் கொடுப்பதற்கோ வெட்கம் ஒரு தடையாக ஆகிவிடக்கூடாது என்பதற்குக் கீழ்க்கண்ட ஹதீஸ் சான்றாகும்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று சொல்லுங்கள்!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று.

அது பேரீச்ச மரம் தான் என்று எனக்குத் தோன்றியது. (மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று) வெட்கப்பட்டுக்கொண்டு (அமைதியாக) இருந்து விட்டேன். பிறகு மக்கள் “அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, “அது பேரீச்ச மரம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன். அதைக் கேட்ட என் தந்தை “நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்” என்றார்கள்.

நூல்: புகாரி-131

வீரியமுள்ள பிரச்சாரம் வீழ்கின்ற தருணங்கள்

சொற்பொழிவுகளில் ஏற்படும் தவறான வார்த்தைப் பிரயோகத்தினால், முறையான பயிற்சியின்மையினால் சிலரது பிரச்சாரம் சில நேரங்களில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி விடுகின்றது. எனவே இது குறித்து பேச்சாளர்கள் அறிந்து கொள்வதும், இவற்றில் கவனம் செலுத்துவதும் அவசியமாகும்.

உரையில் பயன்படுத்துகின்ற குர்ஆன் வசனங்களிலோ, ஹதீஸ்களிலோ தவறிழைத்து விடக் கூடாது. அதற்கேற்றாற் போல் முறையாக குர்ஆன் மற்றும் ஹதீஸ் வாசகங்களைப் பயிற்சி எடுத்த பின்னரே சொற்பொழி வாற்றுவதற்குச் செல்ல வேண்டும். சிலர் குர்ஆன் வசனங்களை, ஹதீஸ் என்றும் ஹதீஸ் வாசகங்களை இது குர்ஆனில் இடம் பெறுகின்றது என்றும் தவறுதலாகப் பயன்படுத்தி விடுகின்றனர்.

மேலும் குர்ஆன், ஹதீஸ் மற்றும் துஆக்களை அரபியில் பயன்படுத்தும் போது தப்பும், தவறுமாகப் பயன்படுத்தி விடுகின்றனர். இது மார்க்க அடிப்படையில் தவறாகும். பேச்சாளர்களுக்குரிய அழகும் கிடையாது

அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கள் அருகில் உரையாற்றினார். அப்போது “யார் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக் கும் கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ அவர் நேர்வழி அடைந்துவிட்டார். யார் அவர்கள் இருவருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் வழிதவறி விட்டார்” என்று குறிப்பிட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீர் ஒரு மோசமான சொற்பொழிவாளர். “யார் அல்லாஹ் விற்கும் அவன் தூதருக்கும் மாறு செய்கின்றாரோ‘ என்று (பிரித்துக்) கூறுவீராக!” என்றார்கள். 

நூல்: முஸ்லிம்-1578

“அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும்’ என்ற வார்த்தையை மீண்டும் பயன்படுத்தும் போது “அவ்விருவருக்கும்’ என்று நபித்தோழர் பேசியதற்குத் தான் இவ்வளவு பெரிய கண்டனத்திற்கு அவர்கள் ஆளானார்கள். இந்த இடத்தில் இவர்கள் செய்த தவறு தான் என்ன என்று உற்று நோக்கும் போது தான் அல்லாஹ்வின் அந்தஸ்தில் அல்லாஹ்வின் தூதரை வைத்துப் பயன்படுத்திவிட்டார்கள் என்ற கருத்து இதில் அடங்குகின்றது.

இந்த ஒரு சான்றே நாம் சொற்பொழிவில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்பதையும், நாம் பயானில் எவ்வளவு தவறுகளைச் செய்கின்றோம் என்பதையும் சிந்திக்கத் தூண்டுகின்றது.

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூச் செய்வது போன்று உளூச் செய்து கொள். பிறகு உன் வலப் பாகத்தின் மீது சாய்ந்து படுத்துக்கொள். பிறகு இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத் தேன். எனது காரியத்தை உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் செய்தேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும் தான் (இவற்றை நான் செய்தேன்).

உன்னை விட்டும் தப்பிச் செல்லவும் உன்னை விட்டும் ஒதுங்கி விடவும் உன்னிடம் தவிர வேறு போக்கிடமில்லை. நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன் “நபி‘யை நான் நம்பினேன்” என்று பிரார்த்தித்துக் கொள்! (இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ இயற்கை நெறியில் (இஸ்லாத்தின் தூய வழியில்) ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக்கொள்!

இந்நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையை திரும்ப ஓதிக் காண்பித்தேன். “நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன்‘ என்ற இடத்தை அடைந்ததும் (“உன் நபியை‘ என்பதற்கு பதிலாக) “உன் ரசூலை‘ என்று (மாற்றிச்) சொல்லிவிட்டேன். (உடனே) நபி (ஸல்) அவர்கள், “இல்லை. (அவ்வாறு சொல்லாதே!) “நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்‘ என்று சொல்” என (எனக்குத் திருத்திச்) சொன்னார்கள்.

நூல்: புகாரி-247

நபி என்ற வார்த்தைக்கும், ரசூல் என்ற வார்த்தைக்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டுமே ஒரே பொருள் தருகின்ற இரு வார்த்தைகளாகும். ஆனாலும் கற்றுக் கொடுத்த அந்த துஆவை அப்படியே வார்த்தை பிசகாமல் பயன்படுத்துமாறு அந்த நபித் தோழருக்கு நபியவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். எனவே உரையில் வார்த்தைகளை பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளைக் கூட நாம் செய்துவிடக்கூடாது.

எதையேனும் ஒன்றை பேசித் தான் ஆகவேண்டும் என்பதற்காக இட்டுக் கட்டப்பட்ட செய்திகளைப் பேசிவிடக் கூடாது. மேலும் சொற்பொழிவாற்றுவதற்கு முன்பு நாம் பேசுவதற்கு எடுத்துள்ள ஹதீஸ்கள் சரியான செய்தியா? அல்லது பலவீனமான செய்தியா? என்பதை ஆய்வு செய்த பிறகே சொற்பொழிவாற்ற வேண்டும்.

அரபு மூலத்துடன் வாசித்து பொருள் செய்து உரையாற்றும் ஆற்றலுள்ளவர்கள் குர்ஆன் வசன எண்ணையோ, ஹதீஸ் எண்ணையோ குறிப்பிடாமல் பேசலாம். மூலத்தை வாசித்துக் காட்டியதால் அதில் மக்களின் நம்பிக்கைக்குப் பாதகம் ஏற்படாது.

ஆனால் அரபு மூலத்தை வாசித்துப் பொருள் செய்ய இயலாதவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களைப் பயன்படுத்தும் போது அத்தியாய எண், மற்றும் வசன எண்களையும், ஹதீஸ்கள் எந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவற்றையும் ஹதீஸ்களின் எண்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

இதுவே நமக்கும், மற்ற அமைப்பினருக்கும் உள்ள வித்தியாசமாகும். வசன எண்களையும், ஹதீஸ் எண்களையும் நாம் தவறாகப் பயன்படுத்தினால் அது நமது உரையில் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி விடும்.

பாமர மக்களிடமும் குர்ஆன், ஹதீஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு, அவற்றுக்கான மொழிபெயர்ப்புகள் வெளிவந்துவிட்ட இந்தக் காலத்தில் நாம் கூறும் வசனத்தையோ, ஹதீஸ்களையோ உடனடியாகச் சென்று அதன் மொழிபெயர்ப்புகளில் தேடிப் பார்க்க விழைவார்கள். நாம் குறிப்பிட்ட எண்களில் அந்த வசனம் இல்லாத பட்சத்தில் நமது மொத்த உரையையும் அது சந்தேகத்திற்குரியதாக ஆக்கிவிடும்.

சொற்பொழிவாற்றும் போது நாம் சொல்கின்ற தகவல்கள் உண்மையான செய்திகள் தானா? என்பதை ஆய்வு செய்யாமல் கண்மூடித்தனமாக பேசிவிடக் கூடாது. ஏனெனில் அது வதந்தியைப் பரப்புவதாக அமைந்துவிடும்

பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதைப் பரப்புகின்றனர். அதை இத்தூதரிடமும், (முஹம்மதிடமும்) தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டு சென்றிருந்தால் ஆய்வு செய்வோர் அதை அறிந்து கொள் வார்கள். அல்லாஹ்வின் அருளும், அவனது அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஷைத்தானைப் பின்பற்றியிருப்பீர்கள்.

(அல்குர்ஆன்:4:83.)

மார்க்கத்தை மென்மையான முறையில் பிறருக்கு எத்திவைக்க வேண்டும்

“அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங் கள்! அவன் படிப்பினை பெறலாம். அல்லது (என்னை) அஞ்சலாம்” (என்றும் கூறினான்.)

(அல்குர்ஆன்:20:44.)

தன்னையே கடவுள் என்று கூறிக் கொண்டு தனது ஆட்சிப் பீடத்திற்கு எவரும் வந்துவிடக்கூடாது என்பதற் காக பனூ இஸ்ரவேலர்களின் ஆண் பிள்ளைகளைக் கொன்று குவித்து, அவர்களை அடிமைப்படுத்தி, சித்ரவதை செய்து கொண்டிருந்த கொடுங்கோல் மன்னனான பிர்அவ்னிடம் கூட மென்மையான முறையில் எடுத்துச் சொல்லுங்கள் என்றே மூஸா நபியவர்களுக்கு இறைவன் கட்டளையிடுகின்றான்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கிராமவாசி எழுந்து பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழித்துவிட்டார். உடனே மக்கள் அவரைக் கண்டித்தனர். நபி (ஸல்) அவர்கள் “அவரை விட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றிவிடுங்கள். நீங்கள் நளினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அனுப்பப் பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் செல்லக் கூடியவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-220

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தொன்பது நாட்கள் தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தார்கள். பிறகு “நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்” என்று தொடங்கி, “உங்களிலுள்ள நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை அல்லாஹ் தயார் செய்துள்ளான்” என்று முடியும் (33:28,29) இந்த வசனங்கள் அவர்களுக்கு அருளப்பெற்றன.

இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “ஆயிஷா! நான் உன்னிடம் ஒரு விஷயத்தை முன்வைக்க விரும்புகிறேன். அது தொடர்பாக நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து)விடக் கூடாது என விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அது என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (33:28ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் (உறவைத் துண்டிக்கும்) விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்? இல்லை!

நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே தேர்ந்தெடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “நான் கூறியதைத் தாங்கள் மற்ற துணைவியரில் எவரிடமும் தெரிவிக்க வேண்டாமென உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்களில் எவரேனும் என்னிடம் (நீ சொன்னதைப் பற்றிக்) கேட்டால் நான் அவர்களிடம் அதைத் தெரிவிக்காமல் இருக்க மாட்டேன். அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ள வனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறை நெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்” என்றார்கள்.

நூல்: முஸ்லிம்-2946

நன்மை மற்றும் சொர்க்கத்தின் பக்கம் ஆர்வமூட்டி மக்களின் தவறுகளைத் திருத்தவேண்டுமே தவிர அவர்களைப் பயமுறுத்தி மார்க்கத்தை விட்டுமே விரண்டு ஓடச் செய்துவிடக்கூடாது

அபூ புர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்களையும், முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அவர்களில் ஒவ்வொருவரையும் (யமனின்) ஒரு மாகாணத்திற்கு அனுப்பினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “யமன் இரு மாகாணங்களாகும்” என்று சொன்னார்கள். பிறகு, “(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி கூறுங்கள். வெறுப்பேற்றிவிடாதீர்கள்” என்று (அறிவுரை) கூறினார்கள்.

நூல்: புகாரி-4341

தர்மம் செய்தல், மென்மை யைக் கடைபிடித்தல் போன்ற நம் செயல்களாலும் மார்க்கத்தைப் பிறருக்கு எத்திவைக்கலாம். ஏனெனில் நபிகளாரின் செயல் களினாலும் பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) இரு மலைகளுக்கிடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை (நன்கொடையாகக்) கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கொடுத்தார்கள். அவர் தம் சமுதாயத்தாரிடம் சென்று, “என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ் வின் மீதாணையாக! முஹம்மத் அவர்கள் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்” என்று கூறினார்.

நூல்: முஸ்லிம்-4630

நம்முடைய செயல்கள் இஸ்லாம் காட்டித் தந்த அடிப்படையில் சரியான முறையில் இருக்குமானால் அதைப் பார்த்து முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள முன்வருவார்கள். ஒரு மனிதர் உலக ஆதாயத் திற்காக இஸ்லாத்தை ஏற்றிருந்தாலும், இஸ்லாத்தைத் தழுவிய சிறிது காலத்திற்குள் அவருக்கு இஸ்லாம் இந்த உலகத்தையும் அதிலிலிருப் பவற்றையும் விட மிகவும் உவப்பானதாக ஆகிவிடும்.

அல்லாஹ்வின் தூதருடைய நடவடிக்கைகளைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சுமாமா (ரலி) அவர்களின் சம்பவத்தை இங்கு குறிப்பிடுவது மிகப் பொருத்தமாகும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “நஜ்த்‘ பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் “பனூ ஹனீஃபா‘ குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, “(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய், ஸுமாமாவே?” என்று கேட்டார்கள். அவர், “நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். (என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்” என்று பதிலளித்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார்.

மறு நாள் வந்தபோது அவரிடம், “ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியதுதான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்” என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்) விட்டுவிட்டார்கள்.

மறுநாளுக்கு அடுத்த நாள் வந்தபோது, “நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே!” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், “நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகிறேன்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “ஸுமாமாவை அவிழ்த்து விடுங்கள்” என்று சொன்னார்கள். உடனே ஸுமாமா, பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளி வாசலுக்கு வந்து, “வணக்கத்திற் குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை‘ என்று நான் உறுதி கூறுகிறேன்.

மேலும், “முஹம்மது, அல்லாஹ்வின் தூதர்‘ என்றும் நான் உறுதி கூறுகிறேன்” என்று மொழிந்துவிட்டு, “முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்க வில்லை.

ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்று வரை) உங்கள் மார்க்கத்தை விட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது.

உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர்” என்று சொல்லிவிட்டு, “மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ராச் செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதி யளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், “நீ மதம் மாறிவிட்டாயா?” என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.)

மாறாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி-4372