Tamil Bayan Points

15) 14 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

14வது வசனம்

14. அவர்களிடம் இருவரை தூதர்களாக நாம் அனுப்பிய போது அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு வலுப்படுத்தினோம். நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்று அவர்கள் கூறினர்.

தூதர்களின் பணிகள்

மேற்கண்ட வசனத்தில் பல தகவல்கள் உள்ளது. அல்லாஹ்விடமிருந்து வேதத்தை வாங்கிக் கொடுப்பது மட்டும்தான் தூதர்களின் பணி வேறெதுவும் இல்லை என்று சிலர் நினைக்கின்றனர். இவ்வசனம் அதை மறுக்கிறது. வேதத்தை கொடுப்பது மட்டும்தான் தூதர்களுடைய பணி என்றிருந்தால் இரண்டு தூதர்கள் வேதத்தை கொடுத்த உடன் அல்லாஹ் நிறுத்தியிருப்பான்.

மாறாக மக்கள் இருவரை பொய்யென கருதியபோது அடுத்து மற்றொரு தூதரை அனுப்புகிறான். வேதத்தை வழங்குவது மட்டுமின்றி அதை தெளிவுபடுத்தவேண்டும் என்பதே இதற்கு காரணமாகும்.

மூஸா நபியும் ஹாரூன் நபியும்.

மூஸா (அலை) அவர்களை பனூ இஸ்ராயீல் மக்களுக்கு தூதராக அல்லாஹ் அனுப்பியபோது தன்னுடைய உதவிக்காக தன் சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களையும் தூதராக அனுப்புமாறு அல்லாஹ்விடத்தில் மூஸா (அலை) கேட்கிறார்கள். இதை பின்வரும் வசனங்களில் காணலாம்.

“என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!” என்றார்.

எனது பணியை எனக்கு எளிதாக்கு!

எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு!

(அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஏற்படுத்து!

அவர் மூலம் என்னைப் பலப்படுத்து!

எனது பணியில் அவரையும் கூட்டாக்கு!

நாங்கள் உன்னை அதிகமாகத் துதிப்பதற்காக.

உன்னை அதிகமாக நாங்கள் நினைப்பதற்காக.

நீ எங்களைப் பார்ப்பவனாக இருக்கிறாய் (என்றார்.)

“மூஸாவே! உமது கோரிக்கை ஏற்கப்பட்டது” என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன்: 20 : 25 முதல் 36 வரை.) 

மூஸா (அலை) அவர்களுக்கு இயல்பாகவே பேச்சு தெளிவானதாக இருக்காது. இதனால் மக்களுக்கு வேதத்தை விளக்கிக்கூற முடியாததால் தன் சகோதரர் ஹாரூனை தூதராக அனுப்புமாறு கேட்கிறார்கள்.

“என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பிவை! அவர் என்னை உண்மைப் படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்).

(அத்தியாயம் : 28 : 34.)

வேதத்தை வழங்குவது மட்டுமின்றி அதை விளக்குவதும் தூதர்களின் கடமை என்பதால்தான் மூஸா (அலை) அவர்கள் ஹாரூன் (அலை) அவர்களையும் உதவிக்காக அழைக்கிறார்கள்.

இது போன்றுதான் யாசீன் அத்தியாத்தின் 14 வது வசனத்தில் உள்ள சம்பவமும் உள்ளது.

இரு தூதர்களை அனுப்பி மக்கள் அவர்களை நிராகரித்தபோது மேலும் ஒரு தூதரை மக்களுக்கு வேதத்தை விளக்க வேண்டும் என்பதற்காகவே அனுப்புகிறான். எனவே தூதர்களின் பணியில் வேதத்தை தெளிவுபடுத்துவதும் அடங்கும். இங்கே இந்த தூதர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

பெயர் கூறப்படாத தூதர்கள்.

சில வசனங்களில் தூதர்களுடைய பெயர்களை அல்லாஹ் கூறுகிறான். இது நமது சான்றாகும். இப்ராஹீமின் சமுதாயத்திற்கு எதிராக இதை அவருக்கு வழங்கினோம். நாம் நாடியவருக்குத் தகுதிகளை உயர்த்துவோம். உமது இறைவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.

அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் வழங்கினோம். அனைவருக்கும் நேர்வழி காட்டினோம். அதற்கு முன் நூஹுக்கும் அவரது வழித் தோன்றல்களில் தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன், ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ், இஸ்மாயீல், அல்யஸஃ, யூனுஸ், லூத் ஆகியோருக்கும் நேர் வழி காட்டினோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு கூலி வழங்குவோம். அனைவரும் நல்லோர்கள். அனைவரையும் அகிலத்தாரை விட சிறப்பித்தோம்.

(அல்குர் ஆன் : 6 : 83 முதல் 86 வரை.) 

மற்ற சில வசனங்களில் இன்னும் சில தூதர்களுடைய பெயர்கள் கூறப்பட்டுள்ளன. எனவே இவர்கள் மட்டும்தான் உலகிற்கு அனுப்பபட்ட தூதர்கள் என சிலர் நினைக்கின்றனர். இது தவறாகும்.

சிலர் ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் தூதர்கள் என்றும் நினைக்கின்றனர். ஏனெனில் அஹ்மத் என்ற நூலில் இடம் பெறக்கூடிய 21257 வது ஹதீஸில் இந்த எண்ணிக்கை கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்தியை அறிவிப்பவர்களில் ஒருவரான அலீ பின் யஜீத் என்பவரை பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்.

இமாம் புகாரி அவர்கள் “(முன்கருல் ஹதீஸ்) என்றும் அபூ ஜீர்ஆ அர்ராஜீ அவர்கள் “இவர் பலமானவர் அல்ல என்றும் நஸாயீ அவர்கள் “ஹதீஸ்துறையில் இவர் விடப்படவேண்டியவர்” என்றும் குறைகூறியுள்ளனர். மற்றொரு அறிவிப்பாளராகிய முஆத் பின் ரிஃபாஆ என்பவரை பற்றியும் இமாம்கள் விமர்சித்துள்ளனர். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாக உள்ளது.

இது போன்று தூதர்களுடைய எண்ணிக்கையை வரையறுப்பதற்கு நமக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. எனவே நாம் இதை பற்றி வரையறுக்கக்கூடாது. மேலும் குர்ஆனில் உள்ள சில வசனங்களில் தூதர்களுடைய பெயர்களை கூறாமலேயே அவர்களை பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

(முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்.

(அத்தியாயம் :  4 : 164.) 

இதே போன்றுதான் யாசீன் அத்தியாயத்தின் 14வது வசனத்தில் கூறப்பட்டுள்ள மூன்று தூதர்களுடைய பெயர்களும் கூறப்படவில்லை. எனவே குர்ஆனில் பெயர் கூறப்படாத தூதர்களும் உலகிற்கு அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களுக்கு பின் இறைத்தூதர்களா?

யாசீன் அத்தியாயத்தின் 14 வது வசனத்தில் மூன்று தூதர்கள் என ஒன்றுக்கும் மேற்பட்ட தூதர்கள் ஒரே சமுதாயத்திற்கு அனுப்பியதாக அல்லாஹ் கூறுகிறான். சிலர் இதை ஆதாரமாக கொண்டு இந்த சமுதாயத்திற்கு தூதருக்கு பின் தூர் என அல்லாஹ் அனுப்பியது போல நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி என்பவரை தூதராக அனுப்பினான் என்று கூறுகின்றனர். இது தவறாகும்.

ஏனெனில் நபி (ஸல்) அவர்களுக்கு பின் தூதர்கள் வர முடியாது என்றும் இஸ்லாம் கூறுகிறது. நபியவர்களுக்கு பின் நபித்துவ வாசல் அடைக்கப்பட்டுவிட்டது என மார்க்கம் கூறுகிறது. இந்த வசனத்தை வைத்துக் கொண்டு முஹம்மது நபி ஸல் அவர்களுக்கு பின் இறைத்தூதர் வரலாம் என வாதிடும் இவர்கள் இவற்றை கவனிக்க தவறிவிட்டார்கள்.

அபூ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார் நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் (மார்க்க விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக) ஐந்தாண்டுகள் (தொடர்பை ஏற்படுத்தி) அமர்ந்திருந்தேன்.

(ஒரு முறை) அபூ ஹுரைரா(ரலி) கூறினார். ‘பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘அவர்கள் வரும்போது நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் உத்திரவிடுகிறீர்கள்?’ என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு, ‘அவர்களில் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (செய்ய வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள்.) அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ் அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் கேட்க விருக்கிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 நூல் : புகாரி-3455.

நபி (ஸல்) அவர்கள் எனக்கு பிறகு எந்த தூதரும் வரமாட்டார்கள் என உறுதியாக கூறிவிட்டார்கள். இதை விட தெளிவாக நபி (ஸல்) அவர்கள் மற்றொரு செய்தியில் கூறியுள்ளார்கள்.

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை (தாம் திரும்பிவரும்வரை தமக்குப்) பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், “குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக்கொள்வதற்காகவா என்னை விட்டுச்செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு யாதெனில்) எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை” என்று சொன்னார்கள்.

நூல் : முஸ்லிம்-4777

ஹாரூனுடைய அந்தஸ்த்தில் அலீ (ரலி) அவர்கள் இருக்கிறார்கள் என்று கூறியதால் நபி (ஸல்) அவர்களுக்கு பின் நபித்துவம் உண்டு என்று யாரும் சந்தேகப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தனக்கு பிறகு எந்த நபியும் இல்லை என்பதையும் சேர்த்து கூறுகிறார்கள்.

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்கு (ஐந்து) பெயர்கள் உள்ளன.

  1. நான் “முஹம்மத்” (புகழப்பட்டவர்) ஆவேன்.
  2. நான் “அஹ்மத்” (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன்.
  3. நான் “மாஹீ” (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் அல்லாஹ் (ஏக) இறைமறுப்பை அழிக்கின்றான்.
  4. நான் “ஹாஷிர்” (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் என் பாதங்களுக்குக் கீழே (என் தலைமையில்) ஒன்றுதிரட்டப்படுவார்கள்.
  5. நான் “ஆகிப்” (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை” என்று கூறினார்கள்.

அவர்களுக்கு அல்லாஹ் “ரஊஃப்” (பேரன்புடையவர்) என்றும் “ரஹீம்” (இரக்கமுடையவர்) என்றும் பெயர் சூட்டியுள்ளான்.

நூல் : முஸ்லிம்-4697

மேற்கண்ட செய்தியிலும் நான் இறுதியானவன். எனக்கு பிறகு எந்த தூதரும் வரமாட்டார்கள் என அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக கூறியுள்ளதால் நபியவர்களுக்கு பிறகு எந்த தூதரும் வரமாட்டார்கள் என்பது உறுதியாகின்றது.

அல்லாஹ்வும் இக்கருத்தை வேறு விதத்தில் கூறுகிறான்.

முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

(அத்தியாயம்: 33 : 40.) 

நபி (ஸல்) அவர்கள் நபிமார்களின் முத்திரையாக இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். ஒரு பொருளுக்கு முத்திரை வைத்துவிட்டால் வெளியிலிருந்து எதையும் உள்ளே வைக்கவும் முடியாது. உள்ளேயிருந்து எதையும் வெளியில் எடுக்கவும் முடியாது.

உதாரணமாக தபால் தலைகளில் அரசாங்கம் முத்திரை வைத்துவிட்டால் அதற்கு பிறகு தபாலிலிருந்து எதையும் சேர்க்கவோ நீக்கவோ முடியாது என்றாகிவிடும். அதே போன்றுதான் நபி (ஸல்) அவர்களும் முத்திரையாக உள்ளார்கள். எனவே அவர்களுக்கு பிறகு நபிமார்கள் யாரும் வரமுடியாது. இதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

“என் சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அவர்கள் அனைவரும் தன்னை நபி என்று வாதிடுவார்கள். (எனினும்) நான்தான் நபிமார்களின் முத்திரையாவேன். எனக்கு பிறகு எந்த நபியும் இல்லை.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் சவ்பான் (ரலி) அவர்கள்

நூல் : திர்மிதி-2145

33 வது அத்தியாயத்தின் 40 வது வசனத்தில் கூறப்பட்டுள்ள முத்திரை என்பதற்கு என்ன பொருள் என்பதை நபி (ஸல்) அவர்கள் இந்த செய்தியில் தெளிவுபடுத்திவிட்டார்கள். இதன் மூலமும் நபியவர்களுக்கு பின் எந்த தூதரும் வரமுடியாது என்பதை அறியலாம்.

அழகிய உதாரணம்.

நபி (ஸல்) அவர்கள்தான் இறுதி நபி என்பதற்கு அழகிய உதாரணம் ஒன்றை நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச்சுற்றிப் பார்த்து விட்டு  ஆச்சரியமடைந்து, “இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?” என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத்தூதர்களில் இறுதியானவன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் புகாரி-3535

மற்ற செய்திகளும் இறுதி நபிதுத்துவத்தை விளக்குகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்;

  1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன்.
  2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்சமும் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது.
  3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன.
  4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
  5. நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன் 
  6. என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் முஸ்லிம்-907

இந்த ஆதாரங்கள் அனைத்தையும் கண்டுகொள்ளாமல் யாசீன் அத்தியாயத்தின் 14வது வசனத்தில் இரண்டு தூதர்களுக்கு அடுத்து ஒரு தூதர் வந்தார் என்பதை மட்டும் கண்டு நபியவர்களுக்கு பின் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி என்ற தூதர் வந்துள்ளார் அல்லது இன்னொருவர் வருவார் என்று கூறுவது மிகப்பெரும் அறியாமையாகும்.