Tamil Bayan Points

15) குற்றவாளிக் கூண்டில்

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

Last Updated on October 29, 2023 by

15) குற்றவாளிக் கூண்டில்

1858 ஜனவரி 27. அன்று டெல்லி செங்கோட்டையில் பகதூர் ஷாவின் மீதான விசாரணை ஆரம்பமானது. எந்த மரபுகளும் பேணப்படாத ஒரு விசாரணை. ஆங்கிலேயர்களின் நீதிமன்ற நடைமுறைகளோ, சர்வதேசச் சட்டங்களோ, மன்னர்களாக இருந்த வர்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளோ, குறைந்த பட்ச மனித மாண்புகளோ எதையும் கணக்கில் கொள்ளாத ஒரு விசாரணை.

விசாரணையின் முடிவில், ஆயுள் முழுவதும் இவர் அகதியாகவே வாழவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டு மனைவி மக்களோடு ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். ((இ.சு.பெ.இ.ப) பக். 203,204)

வாழ்வின் பெரும் பகுதியை செல்வச் செழிப்பில் கழித்த அந்தப் பெருமகன், தனது அந்திம காலத்தில் வறுமையோடு போராடும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரது ஏழ்மைக்காக கொஞ்சம் இரக்கம் காட்டிய ஆங்கில அரசு, அவருக்கு செய்ய முன் வந்த அனைத்து உதவிகளையும் அடியோடு மறுத்து விட்டார்…

பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம் வாழ்ந்த மொகலாயப் பேரரசின் கடைசி வாரிசு, முதல் இந்தியச் சுதந்திரப் போரின் விடிவெள்ளி சிராஜீத்தீன் பகதூர் ஷா ஜஃபர் 1862 ஆம் ஆண்டு தனது எண்பத்தி ஏழாவது வயதில் ரங்கூனிலே காலமானார்.

நான் பிறந்து வாழ்ந்த என் இந்திய மண்ணில் எனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் அதற்கு மட்டும் கொஞ்சம் நிலம் கிடைத்தால் போதும் என்ற அவரது ஆசையும் அவரைப் போலவே மண்ணுக்குள் புதையுண்டுப் போனது.