Tamil Bayan Points

14) 13 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

13 வது வசனம்

ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்த போது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவீராக! அவர்களிடம் இருவரை தூதர்களாக நாம் அனுப்பிய போது அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு வலுப்படுத்தினோம். நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்று அவர்கள் கூறினர்.

அந்த ஊரார் யார்?

13 வது வசனத்தில் “ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்த போது என்று கூறுகிறான். இதில் அந்த ஊரின் பெயர் என்ன என்ற விபரம் இல்லை. இப்பெயரை அல்லாஹ்வோ அவனது தூதரோதான் சொல்ல முடியும். அவ்விருவரும் சொல்லவில்லை. ஆனால் குர்ஆனுடைய விளக்கவுரை நூல்களில் அது அன்தாக்கிய்யா என்ற ஊராகும் எனக்கூறப்பபட்டுள்ளது.

இது ஷாம் தேசத்திற்கு அருகில் உள்ளது. இன்றைக்கும் இப்பெயருடனே இவ்வூர் அழைக்கப்படுகிறது. இக்கருத்து தப்ஸீர் தப்ரீ பாகம் 20 பக்கம் 500 இல் காணப்படுகிறது. மேலும் இதர விரிவுரை நூட்களிலும் இக்கருத்து காணப்படுகிறது.

அல்லாஹ் ரசூல் கூறாத இது போன்ற பெயர்களை நாம் நம்பக்கூடாது. ஆனால் அதிகமான தப்ஸீர் நூட்களில் இது போன்று தாங்களாக பெயர்களை குறிப்பிடும் வழக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இதை பல இடங்களில் காணலாம்.

கற்பனையான பெயர்கள்.

குர்ஆனுடைய 18 வது அத்தியாயத்தில் குகையில் தஞ்சம் புகுந்த சில இளைஞர்களை பற்றி கூறப்படுகிறது. எனினும் அந்த குகைக்கு எந்த பெயரும் குர்ஆனிலும் ஹதீசிலும் கூறப்படவில்லை. ஆனால் குர்ஆன் விரிவுரை நூட்களில் குகையின் பெயர் “பான்தலூஸ்” என்றும் அவ்வூரின் பெயர் “லவ்ஸ்” என்றும் நகரத்தின் பெயர் “அஃப்சூஸ்” என்றும் இளைஞர்களுடன் சென்ற நாயின் பெயர் “கித்மீர்” என்றும் கூறப்படுகிறது. மேலும் ஜிப்ரீல் (அலை) அவர்களுடைய பெயர் “அப்துல்லாஹ்” என்றும் மீகாயீல் அவர்களுடைய பெயர் “உபைதுல்லாஹ்” என்றும் கூறப்பட்டுள்ளது.

(பார்க்க நூல்: தஃப்ஸீர் மகாதில் பின் சுலைமான் பாகம் 2, பக்கம் 304)

இவ்வாறு கற்பனையாக பெயர்களை கூறுவது நமக்கு தேவையற்றதாகும். அல்லாஹ் கூறாத பெயர்களை நாமாக கூறுவதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. அல்லாஹ் சொல்லாத ஒன்றை நாம் அறிந்து கொள்ளவில்லை என்றால் இதற்காக அல்லாஹ் நம்மை தண்டிக்கப்போவதுமில்லை. எனவே மேற்கண்ட வசனத்தில் உள்ள “ஊர்” என்பதை மட்டும் நம்பினாலே போதுமானது. அது எந்த ஊர் என்று அல்லாஹ் சொல்லாத அடிப்படையில் வரையறுக்கும் செயலை தவிர்ந்து கொள்ள வேண்டும்.