Tamil Bayan Points

14) நபியின் நரகம் கிடைப்பது மெய்

நூல்கள்: நாவை பேணுவோம்

Last Updated on July 12, 2023 by

நபியின் நரகம் கிடைப்பது மெய்

சாதாரணமாக பொய் பேசுவதே எந்த அளவிற்கு நமது மார்க்கத்தில் கண்டிக்கப்பட்டுள்ளது என்பதை அதற்கான கடுமையான தண்டனைகளோடு அலசினோம். அதுவே நமது இறைத்தூதர் ஒப்பற்ற தலைவர் மனிதருள் மாணிக்கமாய் திகழ்ந்த மாற்றாரும் போற்றிப் புகழ்கின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது பொய் கூறினால்… 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் சொல்லாததை நான் சொன்னதாக என் மீது பொய் சொல்லாதீர்கள். ஏனெனில் என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்

நூல் : புகாரி-105

நமது சமுதாயத்தில் உள்ள (போலி) மார்க்க அறிஞர்கள் என்பவர்கள் நபிகள் நாயகத்தின் மீது இல்லாததையும் பொல்லாததையும் கூறி தங்கள் வயிற்றுப்பிழைப்புக்கு வழிகாண்கின்றார்கள். இஸ்லாத்தில் இல்லாத ஏராளமான அனாச்சாரங்களை நபிகளாரின் பெயராலேயே அரங்கேற்றுகின்றனர்.

வவ்லியாக்களிடம் வேண்டுதல் அவர்களுக்காக கந்தூரிகொண்டாடுதல் மீலாது விழா என்ற பெயரில் நபிகளரின் மீது மவ்லித் ஒதுதல் இறந்தவர்களுக்கு பாத்திஹா அதுவே உயிருடன் இருந்தால் பரக்கத் வேண்டி ஸலாத்துன் னாரிய்யா? தஸ்பீஹ் தொழுகை போன்ற மார்க்கம் அனுமதிக்காத பல்வேறு அனாச்சாரங்களை செய்கின்றார்கள்.

இதில் வேதனையான விஷயம் இவற்றையெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே செய்துள்ளார்கள் என்றோ நபிகளார் அனுமதி அளித்துள்ளார்கள் என்று பச்சை பொய்யை இறைத்தூதரின் மீது அவிழ்த்து விடுகின்றார்கள். மற்றவர்கள் மீது பொய் சொல்வதும் இறைத்தூதர் மீதும் பொய் சொல்வதும் ஒன்றாகுமா

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்

அறிவிப்பவர். முகீரா (ரலி)

நூல் : புகாரி-291

நபிகளார் மீது பொய் சொன்னால் நரகில் நுழைவதற்கு இதுவே போதுமான ஒன்று என்பதை தங்களை சுன்னத் ஜமாஅத்தின் போர்வாள் என்று பறைசாற்றிக் கொள்ளும் போலி மதகுருமார்கள் மார்க்க அறிஞர்கள் விளங்கி திருந்தி வரவேண்டும்.