Tamil Bayan Points

14) சிறந்த இல்லம்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

சிறந்த இல்லம்

 قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«إِذَا قَضَى أَحَدُكُمُ الصَّلَاةَ فِي مَسْجِدِهِ، فَلْيَجْعَلْ لِبَيْتِهِ نَصِيبًا مِنْ صَلَاتِهِ، فَإِنَّ اللهَ جَاعِلٌ فِي بَيْتِهِ مِنْ صَلَاتِهِ خَيْرًا»

உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் (கடமையான தொழுகை) தொழுது முடித்ததும் தமது தொழுகையில் சிலவற்றை (உபரியான தொழுகையை) தமது வீட்டிலும் தொழட்டும். ஏனெனில், அவ்வாறு அவர் தொழுவதால் அவரது வீட்டில் அல்லாஹ் நன்மையை ஏற்படுத்துகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் : 1428

விளக்கம்:

கடமையான தொழுகையை ஜமாஅத்துடன் ஆண்கள் பள்ளிவாசலிலேயே தொழுவது கட்டாயமாகும். ஆனால் கடமையில்லாத தொழுகைகளை வீட்டில் தொழுவதே சிறப்பாகும். கடமையான தொழுகையைத் தவிர, ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகைகளில் சிறந்ததாகும்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (புகாரி 7310)

இவ்வாறு வீட்டில் தொழுவதால், வீட்டில் இறையருள் நிறைந்து கிடைக்கும். அத்துடன் நம் பிள்ளைகளும் நம்மைப் பார்த்துத் தொழுவதற்கு முயற்சி செய்யும். இதனால் வருங்காலத்தில் தொழுகையைப் பேணுபவர்களாக நம் குழந்தைகளை உருவாக்க முடியும் எனவே பள்ளியில் கடமையான தொழுகையை முடித்து விட்டு, நம் இல்லத்தில் உபரியான தொழுகையைத் தொழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

முன் சுன்னத்துக்களையும் வீட்டில் தொழுது விட்டு பள்ளியில் சென்று கடமையான தொழுகையை நிறைவேற்றும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வர முடியாத நேரங்களில் மட்டும் பள்ளியில் உபரியான வணக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம்.