Tamil Bayan Points

14) இரக்க குணமுள்ளவர்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

Last Updated on October 1, 2022 by Trichy Farook

14) இரக்க குணமுள்ளவர்

இயற்கையாகவே அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் மென்மையான போக்கும் இரக்கத்தன்மையும் ஆழப்பதிந்திருந்தது. அதனால் தான் கொடுமை செய்யப்பட்ட பிலால் (ரலி) அவர்களை விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள். ஏழை எளியோர்களுக்குப் பொருளுதவியும் செய்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் இரக்க குணத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறுவதைக் கவனியுங்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் சமுதாயத்தில் என் சமுதாயத்தின் மீது அதிக இரக்கமுள்ளவர் அபூபக்ர் ஆவார். அல்லாஹ்வுடைய விஷயத்தில் அவர்களில் கடுமையானவர் உமராவார்.

நூல் : திர்மிதீ-3790 (3724)

தம்மை அழிக்க நினைப்பவர்களாக இருந்தாலும் அவர்கள் மீதும் இரக்கப்பட்டு மன்னித்து விடும் உயரிய மனப்பான்மையை அபூபக்ர் (ரலி) அவர்கள் பெற்றிருந்தார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

பத்ருப் போர் (முடிந்த போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அடிமைகள் விஷயத்தில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? என்று (மக்களிடம்) கேட்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அல்லாஹ்வின் தூதரே (இவர்கள்) உங்கள் கூட்டத்தினர்; மற்றும் உங்கள் குடும்பத்தினர். இவர்களை விட்டுவைத்து (திருந்துவதற்கு) அவகாசம் அளியுங்கள் என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே இவர்கள் உங்களை (ஊரை விட்டும்) வெளியேற்றி உங்களைப் பொய்யர் என்று கூறினார்கள். எனவே தாமதப்படுத்தாமல் அவர்கள் பிடரிகளை வெட்டி விடுங்கள் என்று கூறினார். அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே அதிகமான விறகுகளைக் கொண்ட பள்ளத்தாக்கைக் கவனித்து அதிலே அவர்களைச் செலுத்தி அவர்கள் மீது நெருப்பை மூட்டி விடுங்கள் என்று கூறினார்கள்.

அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் (அப்துல்லாஹ் பின் ரவாஹாவைப் பார்த்து) உமது உறவை நீ முறித்து விட்டாய் என்று சொன்னார்கள். சிலர் அபூபக்ர் (ரலி) அவர்களின் கூற்றையும் சிலர் உமர் (ரலி) அவர்களின் கூற்றையும் சிலர் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களின் கூற்றையும் தூக்கிப் பிடித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவர்களுக்கு எந்தப் பதிலும் தராமல் மக்களிடத்தில் வந்து இந்த விஷயத்தில் சிலரது உள்ளங்களை பாலை விட அல்லாஹ் மென்மையாக்கி விடுகிறான். சிலரது உள்ளங்களை கல்லை விடவும் கடினமாக்கி விடுகிறான் என்று கூறி விட்டு (பின் வருமாறு) சொன்னார்கள்.

அபூபக்ரே நீர் இப்ராஹிமைப் போன்றவராவீர். யார் என்னைப் பின்பற்றினாரோ அவர் என்னைச் சார்ந்தவர். எனக்கு யாராவது மாறுசெய்தால் (இறைவா) நீயே (அவரை) மன்னிப்பவனாகவும் கருணையுள்ளவனாகவும் இருக்கிறாய் என்று இப்ராஹிம் கூறினார். இன்னும் அபூபக்ரே நீர் ஈஸாவைப் போன்றவராவீர். ஈஸா கூறினார். (இறைவா) அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்கள். அவர்களை நீ மன்னித்தால் நீயே மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறாய்.

நூல் : அஹ்மத்-3632 (3452)

அனைத்து மக்களும் நரகத்திற்குச் சென்று விடாமல் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற ஆசை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் இருந்தது. என் சமுதாயத்தின் மீது அபூபக்ர் தான் அதிக இரக்கம் உள்ளவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை அபூபக்ர் (ரலி) அவர்கள் நிரூபித்தும் காட்டினார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

எனது சமுதாயத்தில் 4 லட்சம் பேரை சொர்க்கத்தில் நுழைவிப்பதாக அல்லாஹ் எனக்கு வாக்களித்தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே எங்களை (இன்னும்) அதிகப்படுத்துங்கள் என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தம் கைகளை இணைத்து இவ்வளவு (பேரை அல்லாஹ் அதிகப்படுத்துவான்) என்று சொன்னார்கள். அப்போதும் அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே எங்களை அதிகப்படுத்துங்கள் என்று கூறினார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் தம் கைகளை இணைத்து இவ்வாறு (அல்லாஹ் மக்களை சுவர்க்கத்தில் அள்ளிப் போடுவான்) என்றார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் அபூபக்ரே போதும் (நிறுத்துங்கள்) என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் உமரே என்னை விட்டு விடுங்கள். எங்கள் அனைவரையும் அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்வதினால் உமக்கு ஒன்றுமில்லை என்று கூறினார்கள்.

அல்லாஹ் நாடினால் தன் (அனைத்து) படைப்பினங்களையும் ஒரே கையில் (எடுத்து) சொர்க்கத்தில் நுழையச் செய்து விடுவான் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். உமர் சரியாகச் சொன்னார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அஹ்மத்-12695 (12234)