Tamil Bayan Points

13) திக்கற்றோருக்கு விருந்தளித்தவர்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

Last Updated on October 1, 2022 by Trichy Farook

13) திக்கற்றோருக்கு விருந்தளித்தவர்

நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அபூதர் (ரலி) அவர்கள் மக்காவிற்கு வந்த போது இணைவைப்பாளர்கள் அவரைத் தாக்கிக் கொடுமைப்படுத்தினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களுக்கு உணவளிப்பதற்காக தம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். சிரமப்படுவோரைத் தம் இல்லத்திற்கு அழைத்து வந்து விருந்தோம்பும் உயரிய பண்பும் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் இருந்தது.

அபூதர் (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

ஓடுகள் எலும்புகள் அனைத்தையும் எடுத்து வந்து மக்கள் என்னைத் தாக்கினார்கள். நான் மயக்கமுற்று விழுந்தேன். பிறகு நானாக மயக்கம் தெளிந்து எழுந்த போது சிவப்பு நிற சிலையைப் போன்று இருந்தேன். பிறகு நான் ஸம்ஸம் கிணற்றுக்கு வந்து என் உடலில் படிந்திருந்த இரத்தத்தைக் கழுவினேன். ஸம்ஸம் தண்ணீரை அருந்தினேன். இவ்வாறு நான் அங்கு முப்பது நாட்கள் தங்கியிருந்தேன்…..

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே இன்றிரவு இவருக்கு உணவளிக்க எனக்கு அனுமதி அளியுங்கள் என்று கேட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் கதவைத் திறந்து எங்களுக்காக தாயிஃப் நகர உலர்ந்த திராட்சையை அள்ளித் தரலானார்கள். அதுவே நான் மக்காவில் உண்ட முதல் உணவாகும்.

நூல் : முஸ்லிம்-4878 

வீட்டிற்கு வந்த விருந்தாளியின் மனம் வேதனைப்படுமாறு பேசி விரட்டுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அப்படியே விருந்தளித்தாலும் செல்வந்தர்கள், வேண்டியவர்கள் தனக்கு உதவியவர்களுக்குத் தான் விருந்தளிக்கிறார்கள்.

ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் பட்டினியால் வாடியவர்களுக்கு மனமுவந்து விருந்தளித்தார்கள். வந்தவரை வலியுறுத்தி சாப்பிட வைக்காததால் தம் குடும்பத்தாரையும் திட்டுகிறார்கள். இதன் காரணத்தால் அல்லாஹ் அவர்களுடைய உணவில் அள்ள அள்ள குறையாமல் இருக்கும் வண்ணம் பரகத்தைக் கொடுத்தான்.

அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

திண்ணைத் தோழர்கள் ஏழ்மை வயப்பட்ட மனிதர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் இருவருக்குரிய உணவு யாரிடத்தில் உள்ளதோ அவர் மூன்றாமவரை அழைத்துச் செல்லட்டும். நான்கு பேருக்குரிய உணவு இருந்தால் ஜந்தாவது ஆறாவது நபர்களாக திண்ணைத் தோழர்களை அழைத்துச் செல்லட்டும் எனக் கூறினார்கள். அபூபக்ர் மூன்று நபர்களை அழைத்துச் சென்றார்.

அபூபக்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களுடன் இரவு உணவு அருந்திவிட்டு இஷாத் தொழும் வரை அங்கேயே தங்கிவிட்டு இரவில் அல்லாஹ் நாடிய அளவு கழிந்த பின் (வீட்டிற்கு) வந்தார்கள். உங்கள் விருந்தினரை விட்டு விட்டு எங்கே தங்கி விட்டீர் என்று அவர்களது மனைவி கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) இன்னும் நீ அவர்களுக்கு இரவு உணவு அளிக்கவில்லையா? என்று திருப்பிக் கேட்டார்கள். உணவை வைத்த பின்பும் நீங்கள் வரும் வரை அவர்கள் உண்ண மறுத்து விட்டனர் என்று மனைவி கூறினார். (என் தந்தை கோபிப்பார் என்று அறிந்த) நான் சென்று ஒளிந்து கொண்டேன்.

அறிவிலியே. மூக்கறுபடுவாய் என்று ஏசினார்கள். பிறகு மகிழ்வற்ற நிலையில் சாப்பிடுங்கள். அல்லாஹ்வின் மேல் ஆணையாக ஒரு போதும் நான் சாப்பிட மாட்டேன் என்று (தம் குடும்பத்தாரை நோக்கிக்) கூறினார்கள். நாங்கள் உணவின் ஒவ்வொரு கவளத்தையும் எடுத்துச் சாப்பிடும் போது அதன் அடிப்புறத்திலிருந்து அதை விட அதிகமாக வளர்ந்து கொண்டே இருந்தது. முன்பிருந்த அளவு அல்லது அதை விடவும் அதிகமான உணவைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் பனூஃபிராஸ் சகோதரியே இது என்ன? என்று (தம் மனைவியிடம்) கேட்டார்.

அதற்கவர் என் கண்குளிர்ச்சியின் மேல் ஆணை இதன் காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் முன்பிருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாக உணவு உள்ளது என்றார். பிறகு அபூபக்ரும் சாப்பிட்டார்கள். சாப்பிட மாட்டேன் என்று சத்தியம் செய்தது ஷைத்தானிடமிருந்து ஏற்பட்டுவிட்டது என்று கூறிவிட்டு ஒரு கவளத்தை எடுத்து உண்டார்கள். பின்பு நபி (ஸல்) அவர்களிடம் எஞ்சிய உணவை எடுத்துச் சென்றார்கள். காலை வரை அது அங்கேயே இருந்தது.

நூல் : புகாரி-602