Tamil Bayan Points

13) உண்மையான சகோதரத்துவம்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

உண்மையான சகோதரத்துவம்

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«تَرَى المُؤْمِنِينَ فِي تَرَاحُمِهِمْ وَتَوَادِّهِمْ وَتَعَاطُفِهِمْ، كَمَثَلِ الجَسَدِ، إِذَا اشْتَكَى عُضْوًا تَدَاعَى لَهُ سَائِرُ جَسَدِهِ بِالسَّهَرِ وَالحُمَّى»

ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஒர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டு விடுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: புகாரி : 6011 முஸ்லிம் : 5044

விளக்கம்: ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் தம் சகோதரர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மிக அழகிய உதாரணத்துடன் நபிகளார் விளக்கியுள்ளார்கள். ஒருவருக்குத் தலைவலி வருமானால், தலைக்குத் தானே வலிக்கிறது என்று கால் சும்மா இருப்பதில்லை. மருத்துவரிடம் செல்கிறது. வாய் மருத்துவரிடம் தலைவலியைப் பற்றி முறையிடுகிறது. கையும் தன் பங்குக்கு மாத்திரையை எடுத்து வாயில் போடுகிறது.

இப்படி உடலில் ஒரு உறுப்புக்குக் கஷ்டம் ஏற்படும் போது, எப்படி அனைத்து உறுப்புகளும் அற்கு உதவி செய்கிறதோ அதைப் போன்று ஒரு முஃமினுக்குச் சிரமம் என்றால் எல்லா இறை நம்பிக்கையாளர்களும் ஒன்றிணைந்து அவருக்கு உதவ வேண்டும். பொருளாதாரத்தில், உடல் உழைப்பில் என்று எல்லா வகையிலும் உதவி செய்து இறை நம்பிக்கையாளன் என்பதை நிரூபிக்க வேண்டும்.