Tamil Bayan Points

12) 12 வது வசனத்தின் விளக்கம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

12 வது வசனத்தின் விளக்கம்

12. இறந்தோரை நாமே உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும், அவர்களது அடிச்சுவடுகளையும் பதிவு செய்கிறோம். ஒவ்வொரு பொருளையும் தெளிவான ஏட்டில் வரையறுத்து உள்ளோம்.

இறந்தோரை நாமே உயிர்ப்பிப்போம் என இவ்வசனத்தில் கூறுகிறான். நாம் உயிர்ப்பிப்போம் என்று கூறுவதற்கும் நாமே உயிர்ப்பிப்போம் என்று கூறுவதற்கும் சற்று வேறுபாடு உள்ளது. நாம் உயிர்ப்பிப்போம் என்று கூறினால் பிறரும் உயிர்ப்பிப்போம் என்ற கருத்தை அது மறுக்காது. மாறாக நாமே உயிர்ப்பிப்போம் என்று கூறினால் பிறர் எவரும் உயிர்ப்பிப்போம் என்ற கருத்தை அது மறுத்துவிடும்.

உதாரணமாக குர்ஆனின் முதல் அத்தியாயமாகிய ஃபாத்திஹாவில் “(எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது. உன்னைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டோம் என்பதற்குதான் இவ்வாறு கூறப்படும். இதற்கு மாற்றாக உன்னை வணங்குகிறோம் என்று கூறினால் வேறு யாரையும் வணங்கமாட்டோம் என்ற பொருள் அதில் கிடைக்காது. அது போன்றுதான் மேற்படி 12 வது வசனத்திலும் “நாமே உயிர்ப்பிப்போம் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் உயிர்ப்பித்தல் என்ற பண்பு அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியதாகும்.

இப்ராஹீம் நபி மன்னனிடம் பிரச்சாரம் செய்தல்

இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் நாட்டு மன்னனிடம் பிரச்சாரம் செய்யும்போது அல்லாஹ்வின் உயிர்ப்பித்தல் என்கிற பண்பை கூறி பிரச்சாரம் செய்கிறார்கள்.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்’ என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்’ என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!’ என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏகஇறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்:2:258.)

மேற்கண்ட வசனத்தில் உயிர்ப்பித்தல் என்கிற தன்மையை அல்லாஹ்விற்கு மட்டும் உரியது என்று இப்ராஹீம் நபி அவர்கள் உறுதியாக ஏற்று பிரச்சாரம் செய்ததை காணலாம். இவ்வாறு கூறும்போது அம்மன்னன் விதண்டாவாதம் செய்தான். பிறகு அவனை வாயடைக்க செய்யும் விதமாக கிழக்கில் அல்லாஹ் உதிக்கச்செய்யும் சூரியனை மேற்கில் உதிக்கச்செய் என கேட்கிறார்கள். அப்போது அவன் வாயடைத்து போய்விட்டான். எனவே நாமும் இது போன்று உறுதியாக நம்பவேண்டும்.

இறைத்தூதர்களின் பிரச்சார வழிமுறைகள்

உலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் மூன்று விதமான பிரச்சார வழிமுறைகளை கடைபிடித்துள்ளார்கள்.

  1. இறைவன் ஒருவன்தான் அவனுக்கு யாரையும் இணைவைக்காதீர்கள்.
  2. எங்களை இறைத்தூதர் என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.
  3. மரணத்திற்கு பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது என நம்புங்கள்

ஆகிய மூன்று விஷயங்களை உள்ளடக்கிதான் பிரச்சாரம் செய்தார்கள்.

எனினும் அவர்களுடைய சமூகத்தாரில் சிலர் இதை ஏற்றாலும் இறைநிராகரிப்பாளர்களாகிய பலர் மறுத்தனர். அல்லாஹ் ஒருவன் என்பதை ஏற்கமறுத்து பல தெய்வங்கள் இருப்பதாக வாதிட்டனர். தாங்கள் இறைத்தூதர்கள் என்று கூறிய போது “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள்தான் என்று கூறி ஏற்க மறுத்தனர்.

மறுமை வாழ்க்கையை பற்றி கூறும்போது உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை என கூறி ஏற்க மறுத்தனர். இதை பல வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

“நாங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும் போது உயிர்ப்பிக்கப்படுவோமா?” என்று கேட்கின்றனர்.

(அல்குர்ஆன்:23 : 82.)

“நாங்கள் மரணித்து, மண்ணாக ஆனாலுமா? இது (அறிவுக்கு) தூரமான மீளுதல் ஆகும்” என்று கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்:50 : 3.)

இதே போன்று இவர்கள் கேட்டதை குர்ஆனில் 37: 14 மற்றும் 56: 47 போன்ற பல வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

இத்தகைய கேள்விகளுக்கு அல்லாஹ் தத்துவார்த்த ரீதியாக பதில்களை கூறுகிறான். அவற்றை பார்ப்பதற்கு முன்பாக மீண்டும் உயிர்ப்பித்தல் பற்றி நபிமார்கள் மற்றும் நல்லடியார்கள் கேட்ட கேள்விகளையும் பார்ப்போம்.

இப்ராஹீம் நபி அவர்களின் கேள்வி

மீண்டும் உயிர்ப்பித்தல் பற்றி இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட கேள்வியை அல்லாஹ் கூறுகிறான்.

“என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!’ என்று இப்ராஹீம் வேண்டிய போது, “நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?’ என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் “அவ்வாறல்ல! மாறாக எனது உள்ளம் அமைதியுறவே.’ என்றார். “நான்கு பறவைகளைப் பிடிப்பீராக! அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக! பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக! பின்னர் அவற்றை அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராக’ என்று (இறைவன்) கூறினான்.

(அல்குர்ஆன்:2:260.)

இப்ராஹீம் நபியவர்கள் அல்லாஹ்வை உறுதியாக நம்பியிருந்தார்கள். எனினும் உயிர்பித்தல் பற்றி சற்று தெளிவுக்காகதான் இவ்வாறு கேட்டார்கள். அதை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வும் செய்லமுறையாக அவர்களுக்கு புரியவைத்துள்ளான்.

நல்லடியார் கேட்ட கேள்வி!

இதே போன்று ஒரு நல்லடியாரும் கேள்வி கேட்டுள்ளார்.

அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. “இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?’ என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து “எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?’ என்று கேட்டான். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்’ என்று அவர் கூறினார்.

“அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்துவிட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!’ என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது “அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்’ எனக் கூறினார்.

(அல்குர்ஆன்:2:259.)

வறண்ட பூமியை அல்லாஹ் எவ்வாறு உயிரூட்டுவான் என்று இந்த நல்லடியார் அவ்வூரை கடந்து செல்லும் போது கேட்கிறார். இவருக்கு புரியவைப்பதற்காக அவரையே மரணிக்கச்செய்து பிறகு உயிர்கொடுத்து எழுப்பி “நீர் எத்தனை வருடம் கழித்திருப்பீர்” என கேட்கிறான். அதற்கவர் “ஒரு நாள், அல்லது ஒரு நாளின் சிறுபகுதி” என பதிலளிக்கிறார். பிறகு அவருடைய இறந்துவிட்ட கழுதையையும் உயிர்கொடுத்து எழுப்பி அவருக்கு புரியவைக்கிறான். எனவே மீண்டும் உயிர்பித்தல் அல்லாஹ்வுக்கு மிகவும் இலகுவானதுதான் என்பதை இவற்றின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

நல்லடியார்களின் கேள்வியும் இறைமறுப்பாளர்களின் கேள்வியும்

மீண்டும் உயிர்ப்பித்தலை பற்றி நபிமார்கள், நல்லடியார்கள் போன்றோர் கேட்டதற்கும் இறைமறுப்பாளர்கள் கேட்டதற்கும் வேறுபாடு உள்ளது. நல்லடியார்கள் உயிர்பித்தலை பற்றி அறிந்து கொள்வதற்காகவும் உள்ளம் நிம்மதியடைவதற்காகவும் கேட்கின்றனர். மறுப்பதற்காக கேட்கவில்லை.

ஆனால் இறைமறுப்பாளர்கள் மறுப்பதற்காக கேட்கின்றனர். நாங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படமாட்டோம். இவ்வுலக வாழ்ககையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை என்று கருதி கேட்டனர். நல்லடியார்கள் அவ்வாறு கேட்கவில்லை. இதுதான் இரு சாரார் கேட்டதற்கும் உள்ள வேறுபாடாகும்.

தத்துவார்த்த ரீதியான பதில்கள்

மேலும் இறைமறுப்பாளர்களுடைய கேள்விகளுக்கு தத்துவார்த்த ரீதியாகவும் அல்லாஹ் பதிலளிக்கிறான்.

இரண்டாவது முறை உயிர்பிப்பது சுலபமானது.

“இறந்துவிட்ட மனிதனை இரண்டாவது முறையாக எப்படி உயிர்பிக்கமுடியும்” என்பதுதான் இறைமறுப்பாளர்களுடைய கேள்விகளில் பிரதானமானதாகும். இதற்கு பின்வருமாறு அல்லாஹ் பதிலளிக்கிறான்.

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். “எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?” என்று கேட்கிறான்.

“முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்:36:78,79.)

எந்த ஒரு பொருளையும் முதலில் படைப்பதுதான் சிரமமானதாகும். இரண்டாவது முறையாக படைப்பது சுலபமானதாகும். மனிதன் ஒரு பொருளை சிரமப்பட்டு படைக்கிறான். அதற்காக பல ஆய்வுகளை செய்து அதை உருவாக்குகிறான். ஆனால் இரண்டாவது முறையாக அதை உருவாக்குவதற்கு எவ்வித சிரமுமில்லாமல் முன்னால் செய்த விதிகளின்படி இலகுவாக உருவாக்குகிறான்.

உதாரணமாக விமானத்தை முதலில் கண்டுபிடிக்கும்போது பல ஆய்வுகள் செய்து பல நாட்கள் எடுத்துக்கொண்டிருப்பான். அதற்கு பிறகு சில நாட்களிலேயே அதை கண்டுபிடித்துவிடுகிறான். அற்பப்படைப்பினமாக இருக்கின்ற மனிதனுக்கே இது இயலுமானால் அவனை படைத்த சர்வ வல்லமை படைத்த ஏக இறைவனாகிய தனக்கு மிக சுலபமானதாகும் என தத்துவார்த்த ரீதியாக விளக்குகிறான்.

மூலக்கூறில்லாமல் படைத்தான்!.

மனிதன் தாயின் கருவறையில் உருவாவதற்கு முன்பு எந்த நிலையில் இருந்தான் என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்.

நம்மில் 50 வயதுடையவரிடத்தில் 40 வருடத்திற்கு வருடத்திற்கு முன்பு நீங்கள் எப்படி இருந்தீர்?” என்று கேட்டால் “10 வயதில் நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தேன் என கூறுவார். அதே நபரிடம் 60 வருடத்திற்கு முன்பு எப்படி இருந்தீர்” என்று கேட்டால் எந்த பொருளாகவும் இருக்கவில்லை” என்று கூறுவார். எந்த ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் மனிதனை அல்லாஹ் படைத்தான். இத்தகைய ஆற்றலுடைய அல்லாஹ்வுக்கு படைத்த மனிதனை மீண்டும் படைப்பது எளிதானதுதான். இதையும் அல்லாஹ் விளக்குகிறான்.

குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு பொருளாக (கூ ட) இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா?

(அல்குர்ஆன்:76 : 1.)

மூலக்கூறில்லாமலேயே மனிதனை படைத்த தனக்கு மீண்டும் உயிர்ப்பித்தல் மிகமிக எளிதானதுதான் என்பதை விளக்குவதற்காக இத்தகைய வசனங்களை அல்லாஹ் கூறுகிறான். இறைமறுப்பாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இது போன்று பல விதங்களில் அல்லாஹ் பதிலளிக்கிறான்.

வறண்ட பூமியை உயிர்பித்தல்

தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்ற பூமியில் எந்த புற்பூண்டுகளும் இல்லாதிருப்பதை நாம் பார்க்கலாம். ஆனால் திடீரென மழை பெய்துவிட்டால் அதிலிருந்து புற்கள் முளைக்கிறது. மரங்கள் முளைக்கிறது. மீன்களும் உருவாகிறது. இதை பார்க்கும்போது நமக்கு சற்று ஆச்சரியமாக இருக்கும். இந்த ஆச்சரியமான நிகழ்வு அல்லாஹ்வின் வல்லமையால் உருவானதாகும். இதை உதாரணமாக கூறி இது போன்றே இறந்துவிட்ட மனிதனையும் படைப்பேன் என அல்லாஹ் விவரிக்கிறான்.

அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைத்து விடுகிறது. இறந்த ஊருக்கு அதைப் பொழிவிக்கிறோம். அதன் மூலம் இறந்த பூமியை உயிர்ப்பிக்கிறோம். மீண்டும் எழுப்புவதும் இவ்வாறே.

(அல்குர்ஆன்:35:9.)

மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு இவ்வுதாரணமும் ஒரு சான்று என்பதை பின்வரும் வசனத்தில் அல்லாஹ் விவரிக்கிறான்.

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம்.

பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் நீங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும்போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.

“அல்லாஹ்வே உண்மையானவன்’ என்பதும், “அவன் இறந்தோரை உயிர்ப்பிப்பான்’ என்பதும், “அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்’ என்பதுமே இதற்குக் காரணம்.

(அல்குர்ஆன் : 22:5,6.)

இந்த வசனத்தினுடைய துவக்கத்திலேயே சந்தேகத்தை தெளிவுபடுத்துகிறோம் என்று துவங்கி பிறகு மண் மற்றும் விந்துத் துளியிலிருந்து மனிதனை படைத்தல், வறண்ட பூமியை மீண்டும் உயிர்ப்பித்தல் ஆகிய இரண்டு உதாரணங்களை கூறி தத்துவார்த்த ரீதியாக விளக்குகிறான்.

மனிதனை விட பிரம்மாண்டமானவற்றை படைத்தல்,

மனிதனை விட பிரம்மாண்டமான வானங்கள், பூமி, மலைகள் போன்றவற்றை படைத்திருக்கிற எனக்கு அற்பப் படைப்பான மனிதனை மீண்டும் படைப்பது எளிதானதுதான் என்றும் கூறுகிறான். பிரம்மாண்டமானவற்றை படைடைத்தவனுக்கு சிறிய பொருளை படைப்பது எளிதுதான் என்று அல்லாஹ் விளக்குகிறான்.

வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றைப் படைப்பதில் சோர்வு ஏதும் அடையாத அல்லாஹ், இறந்தோரை உயிர்ப்பித்திட ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா? ஆம் அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன் : 46 : 33.) 

படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான்.

(அல்குர்ஆன்:79 : 27.)

இதைவிட தெளிவாக நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

மனிதனின் உள்வால் எலும்பு

மனிதன் இறந்துவிட்ட பிறகு அவனுடைய உடல் முழுவதும் மண்ணால் அரிக்கப்பட்ட பிறகு முதுகுத்தண்டின் கீழ்பகுதியில் உள்ள உள்வாழ் எலும்பு மட்டும் அரிக்கப்படாமல் இருக்கும். அந்த எலும்பை வைத்து மீண்டும் மனிதனை அல்லாஹ் எழுப்புவான் என நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமின் மகனின் (மனிதனின் உடலிலுள்ள) அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும்; மனிதனின் (முதுகுத்தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் நுனியைத் தவிர! அதை வைத்தே அவன் (தன் தாயின் கருவறையில் முதன் முதலாக) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை நாளில் படைக்கப்படுவான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் முஸ்லிம்-5661

எந்த பொருளும் இல்லாமல் அல்லாஹ்வால் மீண்டும் உயிர்ப்பிக்கமுடியும் என்றிருந்தாலும் மனிதன் நம்பத்தகுந்த சான்றாக இந்த உள்வால் எலும்பை அல்லாஹ் வைத்துள்ளான். இவ்வாறு அல்லாஹ் கூறும் பல்வேறு சான்றுகளை சிந்தித்து பார்த்தால் இறந்தோரை உயிர்ப்பிப்பது அல்லாஹ்வுக்கு சுலபமே என்பதை புரியலாம். இவைதான் இறந்தோரை நாமே உயிர்பிக்கிறோம் என்ற 12 வது வசனத்தின் விளக்கமாகும்.

சந்தேகங்களும் விளக்கங்களும்.

உயிர்ப்பித்தல் என்ற பண்பு அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்குமில்லை என துவக்கத்தில் நாம் கூறியிருந்தோம். உயிர்ப்பித்தல் அல்லாஹ்வுக்கு மட்டும் உள்ள பண்பாக இருந்தால் ஈஸா (அலை) அவர்கள் உயிர்ப்பித்ததாகவும், மறுமை நாளின் அடையாளமாக வரும் தஜ்ஜாலும் இறந்தோரை உயிர்ப்பிப்பார்கள் என்றுள்ளதே. இது இவ்வசனத்திற்கு முரணாக அமையுமா? என்ற கேள்விக்கான விடையையும் பார்த்து விடுவோம்.

ஈஸா நபி இறந்தோரை உயிர்ப்பித்தல்.

ஈஸா (அலை) அவர்கள் நபித்துவத்தின் அற்புதமாக இறந்தோரை உயிர்ப்பித்தார்கள் என பின்வரும் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) “உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், தொழுநோயையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது” (என்றார்)

(அல்குர்ஆன் : 03:49.)

“மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல்குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக!

என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண்குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது “இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை” என்று அவர்களில் (ஏகஇறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக!” என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன்:5:110.)

இவ்வசனங்களில் ஈஸா (அலை) அவர்கள் இறந்தோரை உயிர்பித்ததாக அல்லாஹ் கூறுகிறான். இது யாசீன் அத்தியாத்தின் 12 வது வசனத்திற்கு முரணாக உள்ளதே என்று தோன்றலாம். ஆனால் எவ்வித முரணும் இல்லை.

ஏனெனில் ஈஸா (அலை) அவர்கள் இதை சுயமாக செய்யவில்லை. மாறாக அல்லாஹ்தான் வழங்கினான். பொதுவாக நபிமார்கள் மக்களிடம் இஸ்லாத்தை கூறும்போது மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களுக்கு சில அற்புதங்களை வழங்குவான். அந்த அடிப்படையில்தான் ஈஸா (அலை) அவர்களுக்கு இறந்தோரை உயிர்ப்பிப்பதை அற்புதமாக வழங்கியிருந்தான்.

மேலும் ஈஸா (அலை) அவர்கள் இவற்றை தான் விரும்பிய நேரங்களிலெல்லாம் செய்யமுடியாது. அல்லாஹ் நாடும்போது மட்டும்தான் செய்யமுடியும். இது போன்றே அனைத்து நபிமார்களும் அல்லாஹ் நாடும்போது மட்டும்தான் அற்புதங்களை செய்வார்கள். அல்லாஹ்வின் விருப்பப்படிதான் செய்கிறார்கள் எனும்போது அற்புதங்களுக்கு அல்லாஹ்வே சொந்தக்காரனாகி விடுகிறான். இறைத்தூதர்கள் சொந்தமாக எதையும் செய்யவில்லை, செய்யவும் முடியாது என்றாகி விடுகிறது.

பின்வரும் வசனத்தை பாருங்கள்

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன்:13 : 38.)

எனவே ஈஸா (அலை) உட்பட எந்த நபிமார்களும் தாங்களாக அற்புதங்களை செய்யவில்லை. அல்லாஹ்தான் அவற்றை வழங்குகிறான்.

நபி (ஸல்) அவர்கள் அற்புதங்கள்

மேலும் நபி (ஸல்) அவர்களிடமும் இறைமறுப்பாளர்கள் பல அற்புதங்களை செய்யுமாறு கேட்டார்கள்.

“இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்” என்று கூறுகின்றனர்.

அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும்.

அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும்.

அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) “என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர் ஆன் : 17: 90,91,92,93.)

மேற்கண்டவாறு இறைமறுப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது அவர்கள் அற்புதத்தை செய்யவில்லை. மாறாக “நான் மனிதன்” என கூறுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். நபிமார்கள் நினைக்கும்போதெல்லாம் அற்புதங்களை செய்ய இயலாது. அல்லாஹ் விரும்பினால் தான் செய்யமுடியும். ஏனெனில் நபிமார்களும் சாதாரண மனிதர்கள்தான் என்பத இவ்வசனம் சான்றாகும்.

மூஸா (அலை) அவர்களும் அற்புதங்களும்

மேலும் மூஸா (அலை) அவர்களுக்கு கைத்தடியை அற்புதம் செய்யும் கருவியாக அல்லாஹ் வழங்கியிருந்தான். அதன் மூலம் கடலை பிளந்தார்கள். பாறையை அடித்து தண்ணீர் வரவைத்தாரக்ள். எனினும் மூஸா (அலை) அவர்கள் கைத்தடி பற்றிய அல்லாஹ்வுடைய கேள்விக்கு எவ்வாறு பதில் கூறுகிறார்கள் என பாருங்கள்.

“மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?” என்று இறைவன் கேட்டான்.

“இது எனது கைத்தடி. இதன் மீது ஊன்றிக் கொள்வேன். இதன் மூலம் எனது ஆடுகளுக்கு இலை பறிப்பேன். எனக்கு வேறு பல தேவைகளும் இதில் உள்ளன” என்று அவர் கூறினார்.

(அல்குர் ஆன்: 20 : 17,18.)

அல்லாஹ் கைத்தடி பற்றி கேட்கும் போது இதை ஊன்று கோலாக பயன்படுத்துவேன் என்றும் இலைபறிப்பேன் என்றும் கூறுகிறார்கள். மாறாக விரும்பிய நேரங்களில் அற்புதங்கள் செய்வேன் என கூறவில்லை. ஏனெனில் கைத்தடியின் ஆற்றலால் அவர் அற்புதங்களை செய்யவில்லை. அல்லாஹ்வின் விருப்பத்தால்தான் செய்தார்கள். அதனால்தான் இவ்வாறு பதில் கூறினார்கள். மேலும் தான் விரும்பிய நேரங்களிலெல்லாம் கைத்தடியால் அற்புதங்களை செய்து விடவில்லை. அல்லாஹ் கட்டளையிடும்போதுதான் செய்தார்கள்.

மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது “உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!’ என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்து கொண்டனர். “அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!’ (என்று கூறினோம்)

(அல்குர்ஆன் : 2:60.)

மக்கள் தண்ணீரை கேட்டபோது பாறையில் அடிக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அப்போது மூஸா (அலை) அவர்கள் அடித்தார்கள். பிறகு தண்ணீர் வந்துது. இது போன்றுதான் அனைத்து நேரங்களிலும் அல்லாஹ்வின் கட்டளைப்படி செய்வார்கள்.

எனவே ஈஸா (அலை) உட்பட அனைத்து நபிமார்களும் செய்த அற்புதங்கள் அவர்களுடைய சொந்த ஆற்றலால் நிகழ்ந்தது அல்ல. அல்லாஹ்வின் அனுமதியோடு நிகழ்ந்தவைதான். இதன் படி ஈஸா அலை அவர்கள் செய்த இறந்தோரை உயிர்ப்பித்தல் என்பதும் அல்லாஹ் நிகழ்த்தியதே.