Tamil Bayan Points

12) தலைக் கல்லானது எது?

நூல்கள்: பைபிளில் நபிகள் நாயகம்

Last Updated on July 28, 2022 by

12) தலைக் கல்லானது எது?

பைபிளின் புதிய ஏற்பாட்டில் மத்தேயு சுவிஷேசம் உள்ளது. அதில் இயேசு அவர்கள் அறிவித்துச் சென்ற ஒரு முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட முன்னறிவிப்புகள் இயேசுவுக்குப் பொருந்தாவிட்டாலும் அவை இயேசுவைக் குறிப்பதாக கிறித்தவ அறிஞர்கள் சாதிப்பது வழக்கம்.

ஆனால் இயேசுவே கூறிய முன்னறிவிப்பு குறித்து இத்தகைய சமாதானம் எதையும் அவர்களால் கூற இயலாது. இதோ இயேசு கூறுவதைக் கேளுங்கள்.

இன்னும் ஒரு உவமையைக் கேளுங்கள். வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான். அவன் திராட்சைத் தோட்டம் உண்டாக்கி, அதைச் சுற்றி வேலியடைத்து, அதில் ஆலை கட்டி, கோபுரத்தையும் கட்டி, குடியானவர்களுக்கு அதைக் குத்தகைக்காக விட்டுப் புறதேசத்துக்குப் போயிருந்தான்.

கனிகாலம் சமீபித்த போது, கனிகளை வாங்கி வரும்படி தன் ஊழியக்காரரைக் குடியானவர்களிடம் அனுப்பினான். அவர்களோ அந்த ஊழியக்காரரைப் பிடித்து, ஒருவனை அடித்தார்கள், ஒருவனைக் கொலை செய்தார்கள், ஒருவனைக் கல்லெறிந்தார்கள் பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமாக வேறே ஊழியக்காரரை அனுப்பினான், அவர்களையும் அப்படியே செய்தார்கள்.

கடைசியிலே அவன், என் குமாரனை மதிப்பார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். குடியானவர்களோ தன் குமாரனைக் கண்ட போது, அவன் சுதந்தரவாளி, இவனைக் கொன்று இவன் சுதந்திரத்தை எடுத்துக் கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு, அவனைப் பிடித்து திராட்சைத் தோடடத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலை செய்தார்கள்.

 அப்படியிருக்க, திராட்சைத் தோட்டத்து எஜமான் வரும் போது, குடியானவர்களை என்ன செய்வான் என்று கேட்க, அவர்கள் : அந்தக் கொடியோரைக் கொடுமையாய் அழித்துவிட்டு, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கும் வேறே குடியானவர்களிடம் தோட்டத்தை விடுவான் என்றார்கள்.

இயேசு அவர்களிடம்:

வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே

கோடிக்குத் தலைக்கல்லாயிற்று

அது கர்த்தராலே ஆயிற்று

அது நமது கண்களுக்கு ஆச்சரியம்

என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? ஆகையால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். கேளுங்கள் கடவுள் ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு அதன் கனிகளைத் தரும் ஜனத்திற்குக் கொடுக்கப்படும். இந்தக் கல்லின் மேல் விழுகிறவன் நொறுங்கிப் போவான் இது எவன் மேல விழுமோ அவனை இது நசுக்கிப் போடும் என்றார்

(மத்தேயு 21:33 முதல் 21:44)

என்னே அற்புதமான முன்னறிவிப்பு! நபிகள் நாயகத்தின் வருகையை இரண்டாவது கருத்துக்கு இடமின்றி எவ்வளவு தெளிவாக இயேசு கூறியுள்ளார். என்பதைக் கிறித்தவ நண்பர்களே சிந்தியுங்கள்.

இந்த உவமையில் கூறப்படுவது என்ன? இவ்வுலகம் திராட்சை தோட்டத்துக்கு ஒப்பிடப்படுகிறது. அதன் உரிமையாளனாக கர்த்தர் குறிப்பிடப்படுகிறார்.

மனித சமுதாயத்தினர் திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்திருப்பவர்களுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். அதாவது இந்த உலகத்தை தங்களின் உடமையாக கருதி அவரது கட்டளைப்படியே இவ்வுலகப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உணர்த்தப்படுகிறது.

தோட்டத்தின் உரிமையாளன் குத்தகை வசூலிக்க அனுப்பும் ஊழியக்காரராக தீர்க்கதரிசிகள் ஒப்பிடப்படுகின்றனர். இயேசு உள்ளிட்ட அனைவரும் ஊழியக்காரர்கள் தான் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தீர்க்கதரிசிகளை நம்ப மறுத்தனர், சிலரைக் கொன்று குவித்தனர். கர்த்தர் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது ஊழியரை அனுப்பினார். பின்னர் குமாரனை – இயேசுவை அனுப்பினார். அவரையும் கொன்றுவிடுவார்கள்.

என்றெல்லாம் விளக்கி வந்த இயேசு அவர்கள், தம்மோடு ஊழியர் வருகை முடிந்து விட்டது எனக் கூறவில்லை. மாறாக ”வீடு கட்டுவதற்கு ஆகாதென்று ஒதுக்ப்பட்ட கல்” அதாவது தீர்க்கதரிசிகள் தோன்ற மாட்டார்கள் என்று ஒதுக்கப்பட்ட இஸ்மவேல் கோத்திரம், எதற்கும் உதவ மாட்டார்கள் என்று உலகமே எள்ளி நகையாடும் அளவுக்கு ஈனச் செயல்களில் ஈடுபட்டு வந்த சமுதாயம் – வீடு கட்டும் தலைக்கல்லாகவே மாறும் என்கிறார்கள்.

அதாவது எந்தத் தீர்க்கதரிசியும் தோன்ற மாட்டார் என்று புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தில் – தலைக் கல் போல் தலை சிறந்த தீர்க்கதரிசி தோன்றுவார் என்று இயேசு தெளிவாகவே முன்னறிவிப்புச் செய்கிறார்.

அது மட்டுமின்றி கடவுளின் ராஜ்ஜியம் – அதாவது வேத வெளிப்பாடு – உங்களிடமிருந்து – அதாவது யூதர்களிடமிருந்து – நீக்கப்படும் குத்தகையை ஒழுங்காகச் செலுத்தும் வேறு ஜனங்களிடம் கொடுக்கப்படும் அதாவது முஸ்லிம் சமுதாயத்திடம் வழங்கப்படும் என்று தெளிவாக இது அறிவிக்கவில்லையா?

”இந்த கல்லின் மேல் விழுகிறவன் நொறுங்கிப் போவான். இது எவன் மேல் விழுமோ அவனை இது நசுக்கிப் போடும்.”

என்ற வாசகமும் கவனிக்கத்தக்கது. அவ்வாறு வரக்கூடிய அந்தத் தீர்கக்தரிசி மற்ற தீர்க்கதரிசிகளைப் போல் இருக்க மாட்டார். மற்றவர்களைக் கொலை செய்தது போல் இவரைக் கொல்ல முடியாது? மாறாக அவருடன் போருக்கு வருபவர்களும் நொறுங்கிப் போவார்கள். அவர் யார் மேல் படையெடுக்கிறாரோ அவர்களும் தோற்றுப் போவார்கள், என்று நபிகள் நாயகத்தின் வலிமையையும் கூறுகிறார்கள்.

இயேசு கூறியதைப் போலவே நபிகள் நாயகம் வலிமை மிக்கவராக – எதிரிகள் அனைவரையும் புறமுதுகிடச் செய்தவராக அதே நேரத்தில் கர்த்தரை மாத்திரம் வணங்கும் சமுதாயத்தை உருவாக்கியவராகத் திகழ்ந்தார்கள் என்பது வரலாற்று உண்மை.

கிறித்தவ நண்பர்களே! நீங்கள் இயேசுவை மதிப்பது உண்மையானால் அவரது போதனைகளில் நபிகள் நாயகம் குறித்த முன்னறிவிப்புகளை திருச்சபைகள் நீக்கிய பிறகும் எஞ்சியிருக்கிற இந்த முன்னறிவிப்பை ஏற்க மாட்டீர்களா?

இந்த இடத்தில் இன்னொரு முன்னறிவிப்பையும் சுட்டிக் காட்டுவது பொருத்தமாகும்.

”வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே கோடிக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்றே”

என்ற வாசகம் பழைய ஏற்பாட்டில் சங்கீதம் 118:22 ல் இடம் பெற்றுள்ளது. இது இயேசுவைக் குறித்த முன்னறிவிப்பு என்று கிறித்தவ அறிஞர்கள் கூறுவது வழக்கம்.

இயேசு வீடு கட்ட ஆகாதென்று ஒதுக்கப்பட்ட கல் ஆகமாட்டார். அவர் பிறப்பே அதிசயமானது. சிறு குழந்தைப் பருவத்திலேயே கடவுளைப் பற்றி பேசியவர். எனவே இது நிச்சயம் இயேசுவைக் குறிக்காது.

மேலும் இயேசுவே தனக்குப் பின் வரப்போகிறவரைக் குறித்து இதே வாசகத்தைப் பயன்படுத்தியிருப்பதால் இரண்டுமே நபிகள் நாயகத்தையே குறிப்பிடுகிறது என்று அடித்துச் சொல்லலாம்.

சிறித்தவ நண்பர்களே! இங்கே நாம் எடுத்துக் காட்டிய வேதவரிகள் நமது கற்பனை அன்று. மாறாக நீங்கள் பரிசுத்த வேதாகமம் என்று நம்பும் வேதத்தின் வரிகளே. இவ்வேதம் பரிசுத்தமானது என்பது உண்மை என்று நீங்கள் நம்பினால் இந்த வேதவரிகள் கூறுவதும் உண்மை தான்.

பல தீர்க்கதரிசிகள் பல சந்தர்ப்பங்களில் இனி வரக்கூடிய தீர்க்கதரிசியைப் பற்றி முன்னறிவித்துள்ளனர். அந்த முன்னறிவிப்பில் தெளிவான அடையங்களையும் கூறியுள்ளார்.

நபிகள் நாயகத்தின் மீது நீங்களே வளர்த்துக் கொண்ட தவறான எண்ணத்தை அகற்றிவிட்டு பைபிளின் இந்த வரிகளையும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையும் ஆய்வு செய்து பாருங்கள்!

நபிகள் நாயகம் நிச்சயம் இறுதித்தூதர் என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது. உள்ளதை உள்ளபடி அறிந்து கொள்ளும் ஆற்றலை கர்த்தர் அனைவருக்கும் அருளட்டும்.