Tamil Bayan Points

12) கேள்விக் கணைகள்!

நூல்கள்: திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

Last Updated on February 24, 2022 by

அத்தியாயம் 11

கேள்விக் கணைகள்!

“கடவுளுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்பதே மனிதர்களிடமிருந்து கடவுள் எதிர்பார்ப்பதாக இருந்தால் எல்லா மனிதர்களையும் அப்படிப்பட்டவர்களாகவே கடவுள் படைத்திருக்கலாமே! ஏன் கடவுள் அவ்வாறு செய்ய வில்லை?

ஆத்திகர்களை விமர்சிப்பதற்காக நாத்திகர்கள் பரவலாக எழுப்பி வரும் தாத்வீகமான கேள்வியே இதுவாகும். மேலோட்டமாகப் பார்க்கும் போது நியாயமாகத் தோன்றும் இக்கேள்வி குறையுள்ளதாகும். ஏனெனில் இறைவனுடைய கட்டளைக்கு ஒரு போதும் ஒரு விதத்திலும் மாறு செய்யாமல் வாழக் கூடியவர்களை இறைவன் ஏராளமாகப் படைத் துள்ளான். ஆனால் அவர்கள் மனிதர்கள் என்று அழைக்கப் படுவதில்லை.

அவ்வாறு அழைப்பது தவறாகும். ஏனெனில் பொருட்களின் இயல்புகள் வேறுபடும் போது பெயர்களும் வேறுபட வேண்டும். மனிதனைப் படைத்த இறைவன் அவனுக்குக் கற்றுத் தந்த முதல் கலையே பெயர்சூட்டும் கலையாகும் என்பது இறைவனின் வேதநூலாம் திருக் குர்ஆனில் காணலாம் (2:31). இறைவனின் கட்டளைகளை மட்டுமே சிரமேற்கொண்டு இம்மியளவும் அவனுக்கு மாறு செய்யாமல் செயற்படும் அப்படைப்பினங்களின் பெயர் `வானவர்கள் (Angels) என்பதாகும். எனவே இறைவனுக்குக் கட்டுப்படும் இயல்பை மட்டுமே கொண்டவர்களாக மனிதர்களை இறைவன் படைத்திருக்கக் கூடாதா? எனும் நாத்திகக் கேள்வி அர்த்தமற்றதாகும். அப்படியானால் உண்மையிலேயே மனிதர்களிடமிருந்து இறைவன் எதை எதிர்பார்க்கிறான்?

சுயமாக விரும்பி கட்டுப்படுதல்

இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழவும், கட்டுப்படாமல் வாழவும் கூடிய இயல்புடன் தான் நாடிய அளவு படைப்பினங் களைப் படைத்து அவர்களில் சுய விருப்பப்படி இறைவ னுக்குக் கட்டுப்பட்டு வாழ விரும்புகின்றவர்கள் அவ்வாறு வாழ்ந்து காட்டுவதற்காகவும் யார் இறைவனுக்குக் கட்டுப் படாமல் தான் தோன்றிகளாக வாழ விரும்புகிறார்களோ அவர்கள் அதற்கேற்றபடி வாழ்ந்து காட்டுவதற்காகவும் படைக் கப்பட்டவர்களே மனிதர்கள் என்ற பெயரில் அறியப்படுபவர் கள் ஆவார்கள். எனவே மனிதர்களில் இறைவனுக்குக் கட்டுப் பட்டு வாழாமல் இருப்பவர்கள் தோன்றுவது ஒருகாலும் இறைவனுடைய இயலாமைக்குக் காரணமாகாது.

இதைப் போன்று இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தவர் களை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்வதும், இறைவனை நிராகரித்து வாழ்பவர்களை நரகத்திற்கு இட்டுச் செல்வதும் அவர்கள் தேர்ந்து கொண்ட வாழ்க்கை நெறிகளின் இயல்பே அன்றி இறைவன் யாருக்கும் அநீதி செய்வதானால் இல்லை.

சுருங்கக் கூறின் சுயமாக விரும்பி இறைவனுக்கு அடி பணிந்து தங்கள் வாழ்க்கையை அர்பணிக்கத் தயாரானவர் களுக்கு அதைச் செயல்படுத்தவும் இறைவனை நிராகரித்து விட்டு விருப்பம் போல் உலக சுகங்களை அனுபவிக்க விரும்பு கின்றவர்களுக்கு அதைச் செயல்படுத்தவும் படைக்கப்பட்ட இனமே மனித இனமாகும். அவர்களுக்காகவே இப்பேரண்ட மும் படைக்கப்பட்டது.

இதற்குப் பிறகு பரலோகமும் படைக் கப்பட போகிறது. இவ்விரண்டு உலங்களிலும் இறைவன் இடுகிற பணிகளை எவ்விதக் குறைபாடும் இன்றி நிறைவேற் றும் இயல்பைக் கொண்ட மற்றொரு படைப்பினத்தையும் இறைவன் படைத்தான். அப்படைப்பினமே இறைவன் இட்ட பணிகளை இம்மியளவும் பிசகாமல் செய்யும் இயல்புடன் படைக்கப்பட்ட வானவர்களாவர்.

அர்த்தமுள்ள சோதனை

நமது பகுத்தறிவின் நோக்கு நிலையிலிருந்து பார்க்கும் போது வானவர்களைப் போல் இறைவனுக்குக் கட்டுப்படும் இயல்பை மட்டுமே பெற்றவர்களாக மனிதன் படைக்கப் படாமல் இருந்ததற்கு இரண்டு பிரதானமான காரணங்களைக் கூறலாம். முதலாவதாக இறைவனுக்குக் கட்டுப்படும் இயல்பை மட்டுமே குணமாகக் கொண்டு ஓர் உயிரினம் படைக்கப்பட்டால் இறைவனுக்குக் கட்டுப்படும் விஷயத்தில் அவையாவும் மில்லிமீட்டருக்கு மில்லி மீட்டர் ஒரே மாதிரி யாகவே இருந்து விடும்.

அதன் பிறகு இவைகளுக்கிடையில் சோதனைகளை இறக்குவதில் அர்த்தமில்லை. ஆனால் இறைவன் தமக்குக் கட்டுப்படுவோரையும் கட்டுப்படாதவர் களையும் சோதித்தறிய நாடியதால் அதற்கேற்ற குணத்தை இயல்பாகக் கொண்டவனாக மனிதனைப் படைத்தான்.

இரண்டாவதாக எந்த உயிரினங்களின் இயல்பு இறைவனுக்குக் கட்டுப்படுதல் என்பதை மட்டுமே செய்யக் கூடியதாக இருக்குமோ அந்த உயிரினங்கள் மேற்கொள்ளும் கட்டுப்படுதல் வெறும் யாந்த்ரீகத் தன்மை வாய்ந்ததாக இருக்குமே அன்றி மானசீகமானதாக இருக்க முடியாது. ஆனால் மானசீகமாக (மனப்பூர்வமாக விரும்பி) இறைவனின் கட்டளைக்கு அடிபணியும் உயிரினங்கள் தோன்றுவதை சாத்தியமாக்க வேண்டும் என இறைவன் நாடியதால் மனித இனத்தை அவன் படைத்தான். இதன் காரணமாகவே இறைவனுக்குக் கட்டுப்பட்டோ அல்லது கட்டுப்படாமலோ வாழும் இயல்பை அவன் மனிதனுக்கு வழங்கினான்.

நாத்திக உலகிலிருந்து பரவலாக எழுப்பப்படும் “மனி தனை இறைவனுக்குக் கட்டுப்பட்டவனாகவே படைக்கும் ஆற்றல் இறைவனுக்கு இல்லையா? எனும் கேள்விக்கு சுருக்கமாக விடை கண்டோம். இப்போது ஹாக்கிங் அவர்கள் எழுப்பும் ஓரிரு முக்கியமான வினாக்களைப் பார்ப்போம்.

எதிர்காலத் தலைமுறையினரின் பணி

பேரண்டப் படைப்பு நடைபெற்ற போது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி ஒரு பெரும் புதிராக இருந்ததை ஹாக்கிங் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார். அது இவ்வாறு:

“இப்பேரண்டம் பேரளவில் ஏன் இவ்வளவு சீராக இருக்கிறது? ஏன் இது எல்லா திசைகளிலும் விண்வெளியின் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரியாக உள்ளது? குறிப்பாக வெவ்வேறு திசைகளில் நாம் பார்க்கும் போதும் நுண்ணலை வெப்பப் பின்னணியில் கதிர்வீச்சு கிட்டத்தட்ட ஏன் இந்த அளவு ஒரே மாதிரியாக உள்ளது? இது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலுள்ள மாணவர்களிடம் தேர்வு அறையில் ஒரு கேள்வியைக் கேட்பதற்கு ஓரளவு ஒத்திருக்கிறது.

அவர்கள் அனைவரும் சரியாக ஒரே பதிலைத் தந்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் செய்தித் தொடர்பு கொண்டார்கள் என்பது உறுதி. இருந்த போதிலும் மேலே விவரிக்கப்பட்ட மாதிரியில் முற்காலப் பேரண்டத்தின் பகுதிகள் (Regions) மிக நெருக்கமாக இருந்த போதிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தொலைவான மற்றொரு பகுதிக்கு பெருவெடிப்பிலிருந்து ஒளி செல்வதற்குறிய நேரத்தை பெற்றிருக்க முடியாது.

சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஒளியானது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாது என்றால் வேறு எந்தத் தகவலாலும் செல்ல முடியாது. எனவே முற்காலப் பேரண்டத்தின் வெவ்வேறு பகுதிகள் ஒன்றைப்போல் மற்றொன்று ஒரே வெப்ப அளவைக் கொண்டதாக இருப்பதற்கு விவரிக்கப்படாத ஏதோ ஒரு காரணம் இல்லாமல் அவை ஒரே வெப்பநிலையைக் கொண்டு ஆரம்பம் செய்யப்பட்டிருக்க முடியாது. (பக்கம் : 127-128)

கற்பனைக் கெட்டாத அளவு அதி, அதி விசாலமான இப்பேரண்டம் பேரளவில் எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்பதை இதற்குமுன் இப்புத்தகத்தில் நாம் விளங்கியுள்ளோம். பேரண்டம் இவ்வாறு அமையவேண்டு மென்றால் தேர்வு எழுதும் மாணவர்கள் சில நேரங்களில் ஒரு மாணவனைப் பார்த்து அனைத்து மாணவர்களும் காப்பி அடித்தால் விடைகள் யாவும் ஒரே மாதிரி அமைவதைப் போன்று பேரண்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற தகவல் ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு சென்றிருக்க வேண்டும்.

ஆனால் ஒளியை விட அதிக வேகத்தில் தகவல் சென்றால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதாலும் ஒளியை மீறுகின்ற எந்த வேகமும் பேரண்டத்தில் இல்லை என்பதாலும் பேரண்டம் இவ்வாறு அமைந்ததற்கு நமக்குத் தெரியாத ஏதோஒரு காரணம் இருக்கிறது என்பதே ஹாக்கிங் அவர்களின் மேற்கோளில் காணப்படும் செய்தியாகும்.

இன்றைய மனிதனின் கல்வித்திறனால் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் பேரண்டத்தின் பற்பல இரகசியங்களில் ஒன்றே ஹாக்கிங் அவர்களின் மேற்கோளில் நாம் காண்கி றோம். நம்மால் கண்டுபிடிக்க முடியாத இரகசியங்கள் எதிர் காலத் தலைமுறையினரின் எக்காலமும் வளர்ந்து கொண்டி ருக்கும் கல்வித் திறனைப் பயன்படுத்தி அறிவைப் பெறுக்கு வதற்காக காத்திருப்பவையாகும். அவ்வாறு பெறப்படும் அறிவிலிருந்து பேரண்டதைப் படைத்த இறைவனின் ஆற்றல் அளவிடற்கரியது என்பதை உணர்ந்து அதற்கேற்ப இறைவனை கண்ணியப்படுத்துவதற்கு இப்பேரண்டத்தின் பிரமாண்டமும் அதன் முடிவுறாத இரகசியங்களும் உதவி செய்கிறது.

அதற்கு மாறாக இப்பேரண்டத்தின் தோற்றத் தையும் இதில் தோன்றியுள்ள அனைத்தையும் பற்றிய அறிவையும் இப்போதே நாம் பெற்றுவிட்டால் எதிர்கால சந்ததியினரின் அறிவு வளர்ச்சிக்கு வழியில்லாமல் போய் விடும். இந்த நிலை இறைநூலாம் திருக்குர்ஆனின் கூற்றுக்கு மாற்றமானதாகும். எனவே பேரண்டத்தில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வரும் அறிவியல் உண்மைகள் மட்டு மின்றி கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் உண்மைகளும் இறைமறையாம் திருக்குர்ஆனை மெய்ப்பித்துக் கொண்டு வருகிறது என்பதையே இது நிரூபித்துக் காட்டுகிறது.

நவீன அறிவியல் யுகத்தின் பிரதான வினாக்கள்

இப்போது ஹாக்கிங் அவர்கள் தமது நூலில் எழுப்பி யுள்ள மற்றொரு முக்கியமான வினாவைப் பார்ப்போம். அது கீழ்க்கண்டவாறு போகிறது.

“நமது பேரண்டம் ஏதேனும் ஒரு நேரத்தில் எவ்வாறு இருந்தது என்பது நமக்குத் தெரிந்து விட்டால் காலத்தினுடன் அது எவ்வாறு முன்னேற்றமடையும் என்பதை அநிச்சய தத்துவத்தின் (Uncertainity Principle) எல்லைக்குள் நின்று கொண்டு நமக்குச் சொல்லித்தரும் ஒரு ஜோடி விதிகளை அறிவியல் திறந்து கட்டி இருப்பதாகக் தோன்றுகிறது. இந்த விதிகள் உண்மையிலேயே கடவுளால் கட்டளையிடப்பட்ட தாக இருக்கலாம்.

ஆனால் கடவுள் அந்த விதிகளுக்கேற்ப பேரண்டத்தை முன்னேறும்படி விட்டுவிட்டதாகவும் இப்போது அதில் தலையிடுவதில்லை எனவும் தோன்றுகிறது. ஆனால் பேரண்டத்தின் ஆரம்ப நிலையை அல்லது வடி வத்தை அவர் எவ்வாறு தேர்ந்தெடுத்தார். ஆரம்ப நேரத்தின் “எல்லைக் கோட்டு நிலைகள் (Boundary Conditions) என்னவாக இருந்தன?

ஒரு சாதகமான பதில் சொல்வதென்றால் பேரண்டத் தின் ஆரம்ப வடிவம் கடவுள் தேர்ந்தெடுத்ததற்கான காரணங் களை நம்மால் தெரிந்து கொள்ளக் கூடிய எதிர்பார்ப்பிற்கு இடமில்லை. இது நிச்சயமாக எல்லாம் வல்லவனாக இருக்கும் ஒருவரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும். ஆனால் அவர் இப்பேரண்டத்தை இதைப் போன்று நம்மால் புரிந்து கொள்ள முடிகின்ற விதிகளுக்கு ஏற்ப அதை பரிணாமம் அடைய விட்டது எதற்காக? (பக்கம் : 129)

ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட எடுத்துக்காட்டில் இரண்டு கேள்விகள் இடம் பெற்றுள்ளன. ஒரு மகா, மகா பெரிவெடிப்பு சிங்குலாரிட்டி (பெருவெடிப்பு வினோதம்) யிலிருந்தே நமது பேரண்டம் உருவாகி வந்தது என்பதும் பெருவெடிப்பு சிங்குலாரிட்டி என்பது நாம் அறிந்திருக்கும் அனைத்து அறிவியல் விதிகளையும் பயனற்றதாக்கிவிடும் வினோதத் தன்மை வாய்ந்தது என்பதையும் நாம் முதல் அத்தியாயத்தில் கண்டுள்ளோம்.

இந்தப் பின்னணியில் ஹாக்கிங் அவர்கள் கேட்க விரும்பும் முதலாவது கேள்வி என்னவெனில் தொடக்கத்தில் இவ்வளவு பிரமாண்டமான பேரண்டத்தை உருவாக்கும் விதிகளை எல்லாம் கட்டளையிடும் அளவிற்கு மாபெரும் ஆற்றலைக் கொண்ட இறைவன் ஒருவன் இருந்திருந்தால் அதன் பிறகு தன் படைப்பாகிய இப்பேரண்டத்தின் பரிணாமப் போக்கில் தலையிடாமல் விதிகளின்படி பரிணமிப்பதற்காக விட்டு விட்டு ஒதுங்கிக் கொண்டது ஏன்? 

இரண்டாவதாக படைப்பின் தொடக்க நிகழ்ச்சிகள் எந்தெந்த விதிகளால் எப்படி எப்படி நடைபெற்றன என்பதை முற்றிலும் நம்மால் அறிந்து கொள்ள முடியாத விதத்தில் நடைபெறச் செய்த கடவுள் அதன் பிறகு பேரண்டத்தில் நடந்து கொண்டிருப் பவை யாவும் மனிதர்களாகிய நாம் புரிந்து கொள்ளும் அறிவியல் விதிகளின்படி நடைபெறச் செய்வது ஏன்?

இருபதாம் நூற்றாண்டின் கடைசி பகுதியைத் தாண்டி விட்டநாம் இதுவரை பெற்ற விஞ்ஞான அறிவின் பின்னணியில் பார்க்கும் போது இக்கேள்விகள் இரண்டும் பிரதானமானவைகளே என்பதில் ஐயமில்லை. ஆயினும் இக்கேள்விகளுக்கான விடைகள் இதுவரை நாம் கூறிய செய்திகளிலேயே இறைந்து கிடப்பதை சிலரேனும் கவனித் திருக்கக் கூடும். அவைகளை விளக்கமாகக் காண்போம்.

இறை ஆற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டு

பேரண்டத்தின் படைப்பில் இறைவன் அதற்கான விதிகளைக் கட்டளை இட்டதைத் தவிர வேறு எதிலும் தலையிடாமல் இருப்பது அவனுடைய தலையீடு அதில் தேவையில்லை என்பதனால் ஆகும். ஏனெனில் அவனுடைய ஆற்றல் அவ்வளவு மகத்தானது. சாலையில் ஓடிக் கொண்டி ருக்கும் கார் சாலையில் விலகிப் போகாமல் இருப்பதற்காக கார் ஓட்நரின் தலையீடு டீரிங் சக்கரத்தின் மீது (Steering Wheel) எப்போதும் இருந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் இரயில் வண்டியின் ஓட்டுநருக்கு இரயில் வண்டிணயின் மீது இப்படிப்பட்ட தலையீடு தேவையில்லை. இரயில் ஓட்டுன ரின் தலையீடு இல்லாததால் இரயில் வண்டி பாதை விலகுவ தும் இல்லை. இது இரயில் வண்டி ஓட்டத்திற்கான பணிகள் அந்த விதத்தில் சீரமைக்கப்பட்டதன் விளைவாகும். இதைப் போன்று இப்பேரண்டம் மகா பிரமாண்டமானதாக இருந்த போதிலும் அதன் இயக்கத்தை தனது தலையீடு தேவைப்படா மலே நடைபெறச் செய்யும் அளவிற்கு சீரான விதிகளைத் தோற்றுவிக்கும் அதி மகத்தான அபார ஞானம் பெற்றவனாக இறைவன் இருப்பதால் அவன் தொடக்கத்தில் இட்ட விதி களுக்கான கட்டளையே இப்பேரண்டத்தை எப்போதும் இயக்கிக் கொண்டிருக்கிறது.

ஆகவே அவனது கட்டளை யால் நிலைபெற்று நின்று கொண்டிருக்கும் இப்பேரண்டத் தில் அதன் பிறகு அவனது தலையீடு தேவையும் இல்லை. எனவே அவன் தலையிடுவதும் இல்லை.

பேரண்டத்தின் இயக்கத்தில் இறைவன் ஏன் தலையிட வில்லை? எனும் கேள்வி எந்த அளவிற்கு பிறர் கவனத்தை ஈர்க்கிறதோ அதை விடப் பன்மடங்கு அக்கேள்வியின் வாசகங்களில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் அறிவியல் உண்மை திருக்குர்ஆன் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாகும். அதை விளக்குவோம்.

பேரண்டத்தை நிலைநிறுத்தும் ஈடற்ற கட்டளை

ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட வினாவில் இரண்டு அறிவியல் உண்மைகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று பேரண்டத்தின் இயக்கத்தில் இறைவனின் தலையீடு காணப்படவில்லை என்பது. மற்றொன்று இறைவன் இருப் பது உண்மையானால் அந்த இறைவன் கட்டளையிட்ட விதி களே பேரண்டத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பது.

இருபதாம் நூற்றாண்டு வரையிலான அறிவியல் வளர்ச்சியிலிருந்து ஹாக்கிங் அவர்களைப் போன்ற அறிவியல் மேதைகளால் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மை மனிதக் கரங்களால் மாசுபடாத இறைவனின் பரிசுத்தமான வேதநூலாம் திருக்குர்ஆன் 1400 வருடங் களுக்கு முன் கூறியிருப்பதைப் பார்க்கும் போது உண்மையில் சில கணங்களுக்காவது நம்மை நாமே இழந்து விடுகிறோம். அந்த வசனங்கள் வருமாறு :

“அவனது கட்டளைப்படி வானமும், பூமியும் நிலைபெற்று இருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது நீங்கள் பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்:30:25.)

மேற்கண்ட வசனங்கள் ஆகாயத்தையும் பூமியையும் நிலைபெறச் செய்திருப்பது (இயங்கச் செய்து கொண்டி ருப்பது) இறைவனின் கட்டளையே அன்றி அதை நிலைபெறச் செய்யும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் அவனே அவ்வப்போது செய்து கொண்டிருப்பதில்லை என்று கூறுகிறது. இதிலிருந்து பேரண்டத்தை நிலைநிறுத்தும் யாவும் – மிகப் பிரதானமாக விதிகளையும் – அந்தக் கட்டளை உள்ளடக்கி இருந்தது என்பதையும் ஐயத்திற்கிடமின்றி விளங்க முடிகிறது. இதே செய்தியைத்தாம் ஹாக்கிங் அவர்களும் தமது கேள்வியின் வாசகத்தில் கடவுள் பேரண்டத்தை விதிகளுக்கேற்ப முன்னேற விட்டு விட்டதாகவும் இப்போது அதில் தலையிடுவதாகத் தெரியவில்லை என்றும் கூறுகிறார்.

மேலும் ஹாக்கிங் அவர்களின் கேள்விக்கு அடிப்படை யாக அமைந்த வாசகம் பேரண்டப் படைப்பைப் பற்றி முதல் அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசனத்திற்கு நிரூபணமாக அமைந்துள்ளது. அந்த வசனம்,

“அவன் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து “ஆகு! என்றே கூறுவான். உடனே அது ஆகிவிடும்.

((அல்குர்ஆன்:2:117.)

மேலும் மற்றொரு வசனத்தில்,

“ஏதேனும் ஒரு பொருளை அவன் படைக்க நாடும் போது `ஆகு! என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகிவிடும்.

(அல்குர்ஆன்:36:82.)

எதைப் படைப்பதாக இருந்தாலும் இறைவனைப் பொருத்தவரை தொடக்கத்தில் இடுகின்ற ஒரேஒரு கட்டளையே போதுமானது என்று கூறும் திருக்குர்ஆனின் அறிவியலை எந்த அளவிற்கு வார்த்தைக்கு வார்த்தை அதி நவீன அறிவியல் உண்மைகள் நிரூபிக்கிறது என்பதற்கு ஹாக்கிங் அவர்களின் கேள்வியின் வாசகங்கள் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இவ்வளவு அதிமகத்தான அறிவியல் உண்மைகள் எல்லாம் 1400வருடங்களுக்கு முன் உலகில் வாழ்ந்த ஒரு மனிதனின் சுய அறிவைக் கொண்டு கூறப்பட்டவைகளே என நம்புவதற்கு மானிடர் சிலரின் பகுத்தறிவால் எவ்வாறு சாத்தியமாகிறது என்பது உள்ளபடியே பெரும் வியப்பிற்குரிய செய்தியாகும்.

மனித அறிவுக்கு எட்டாததன் முதற் காரணம்

இப்போது ஹாக்கிங் அவர்களின் இரண்டாவது கேள்வியை எடுத்துக் கொள்வோம். பேரண்டத்தின் தொடக்கமாகிய பெருவெடிப்பும் ஆரம்ப வடிவம் மற்றும் எல்லைக்கோட்டு நிலைகளும் நம்மால் விளங்கிக் கொள்ள இயலாத விதத்தில் படைத்த இறைவன் அதன் பிறகு நம்மால் புரிந்து கொள்ளும் விதிகளின்படி இப்பேரண்டத்தை இயக்குவது ஏன்? என்பது அவருடைய இரண்டாவது கேள்வி. நாம் இதை இரண்டு கேள்விகளாக மாற்றி அமைத்து விடை காண்போம்.

எனவே முதல் கேள்வியாக, “பேரண்டப் படைப்பின் தொடக்கம் எவ்வாறு நிகழ்ந்தது? என்பதை நம்மால் கண்டுபிடிக்க இயலாத படி இறைவன் செய்தது எதற்காக? என்பதாக வைத்துக் கொள்வோம். இறைவன் அவ்வாறு செய்ததற்கு இரண்டு காரணங்களை திருக் குர்ஆனிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

முதல் காரணம் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலுள்ள வேற்றுமையை அடிப்படையாகக் கொண்ட தாகும். பெருவெடிப்பும் ஏனைய ஆரம்ப நிகழ்ச்சிகளும் ஒரு பொருளை சூனியத்திலிருந்து படைக்கும் படைப்பின் முழுமையான பணியாகும். இந்த ஞானம் இறைவனின் அடையாளமாகவே திருக்குர்ஆன் கூறுகிறது. சான்றாக :

“அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற உங்கள் தெய்வங் கள் பூமியில் அதனைப் படைத்தன என்பதை எனக்குக் காட்டுங்கள்……!

(அல்குர்ஆன்:35:46.)

“…… அவர்கள் அல்லாஹ் படைத்தது போல் படைத்து அதன் காரணமாக படைத்தது யார் என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன். அவன் தனித்தவன். அடக்கியாள்பவன்.

(அல்குர்ஆன்:13:16.)

மேற்கண்ட வசனங்கள் ஒரு அணுவைக் கூட அல்லது அணுவிற்கே அடிப்படையாக அமைந்த “குவார்க்குகளைக் (Quarks) கூட (இதற்கு மேல் நுண்மையாக இந்தத் தேதி வரை மனிதனால் சொல்ல முடியவில்லை) முழுமையாகப் படைக்கும் ஆற்றல் இறைவனுக்கு மட்டுமே அன்றி வேறு எவருக்கும் இல்லை என்பதையே இவ்வசனங்கள் கூறுகின்றன. ஆற்றலின் தோற்றுவாய் ஞானமாகும் என்பதை நாம் முன்னர் கண்டுள்ளோம்.

எனவே ஒரு பொருளை முழுமையாகப் படைக்கும் ஆற்றல் என்பது இறைவனின் ஞானத்தைச் சார்ந்ததாகும். அந்த ஞானம் படைப்பாளனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை நிலை நிறுத்துவதில் பிரதான பங்கேற்பதால் படைப்பின் தொடக்கப் பணிகள் நாம் விளங்கிக் கொள்ளும் விதத்தில் இறைவன் நடைபெறச் செய்திருக்க வேண்டும் என்பது நடைபெறக் கூடாததாகும்.

இரண்டாவது காரணம்

இரண்டாவது காரணம் இறைவனின் நாட்டத்தைச் சார்ந்ததாகும். மனிதனின் அறிவுக்கு ஒரு எல்லை உண்டு என நாம் முன்னர் கண்டுள்ளோம். இப்பேரண்டததில் இப்போது நிலைநிற்கும் அனைத்து விதிகளையும் அறியும் ஆற்றல் மனிதனுக்கு இருந்தும் கூட அந்த ஆற்றலால் பேரண்டத்தின் தொடக்க நிகழ்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது மனிதனின் அறிவாற்றலின் எல்லைக்கப்பால் உள்ளதாகப் பொருள்படுகிறது.

இந்த நிலையில் மனிதனுக்கு அதை இறைவன் ஏன் விளங்கச் செய்யவில்லை என்று கேட்டால் இறைவன் மனிதனை மனிதனை விட முன்னேறிய மற்றொரு படைப்பினமாக ஏன் படைக்கவில்லை? என்பதே அதன் அர்த்தமாகும். எந்தெந்த உயிரினங்களை எந்தெந்த ஆற்றலுடன் படைக்க வேண்டும் என்பது படைப்பின் நோக்கத்தை தீர்மானிக்கும் படைப்பாள னின் நாட்டத்தைப் பொருத்ததே என்பதால் மனிதனை இவ்வாறு (அநிச்சய தத்துவம் அனுமதிக்கும் எல்லைக்குட் பட்ட – இதைப் பற்றி நாம் முன்னர் விளக்கியுள்ளோம் – விதத்தில்) படைத்ததும், படைப்பின் முன்தொடக்க நிகழ்ச்சி களை அறியும் அறிவாற்றல் இல்லாமல் மனிதன் இருப்பதும் இறைவனின் நாட்டப்படி நடைபெறுவதாகும்.

மேற்கண்ட காரணங்கள் இரண்டும் அறைவனின் ஆற்றல் எல்லையற்றது என்பதை தெளிவாக்குகிறது. மனித னின் அறிவுக்கு எட்டியவரை பார்க்கும் போது இம்மாபெரும் பேரண்டத்தையே தமது ஒரேஒரு கட்டளையைக் கொண்டு படைக்கும் ஆற்றலையும் அதன் பிறகு அக்கட்டளையி லிருந்து தோன்றிய விதிகளாலேயே இப்போதும் பேரண்டத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் அளவிற்கு இறைவனின் ஆற்றல் ஈடுஇணையற்றது என்பதும் தெரிய வருகிறது.

ஆயினும் இறைவனின் ஆற்றல் நமது அறிவுக்கு எட்டியதை விட மிகப் பெரிதாகும் என்பதே பேரண்டப் படைப்பின் தொடக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதை மனித அறிவால் ஒருகாலும் புரிந்து கொள்ள முடியாமற்போனதிலிருந்து தெரிய வருகிறது.

எனவே இறைவனின் எல்லையற்ற ஆற்றலைப் பற்றிய மேற்கூறப்பட்ட அறிவியல் உண்மைகள் இப்பேரண் டத்தை அறைவன் அழித்து விட்டு மற்றொரு பேரண்டத்தையும் அதில் நம்மையும் தோன்றச் செய்வது இறைவ னுக்கு மிக மிக எளிதான விஷயம் என்பதை அறிவியல் பூர்வமாக நம்மை நம்பச் செய்கிறது. எனவே படைப்பின் முன் தொடக்கப் பணிகளில் நம்மால் விளங்கிக் கொள்ள இயலாத விதிகளை இறைவன் ஏன் பயன்படுத்தினான்? என்ற கேள்விக்கு நாம் விடை கண்டு விட்டதால் ஹாக்கிங் அவர்களின் அடுத்த கேள்விக்குச் செல்வோம்.

குருடன் கை சித்திரம்?

பேரண்டப்படைப்பின் முன் தொடக்கப் பணிகள் எவ்வாறு நடைபெற்றன என்பதை நாம் அறியாத விதிகளால் இறைவன் நடைபெறச் செய்த போதிலும் அதன் பிறகு நடைபெற்ற யாவும் நாம் அறிந்து கொள்ளும் விதிகளைப் பயன்படுத்தி நடைபெறச் செய்தது ஏன்?என்பதற்கு பிரதானமான மூன்று காரணங்களைத் திருக்குர்ஆனிலிருந்து நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. அவற்றுள் முதலாவது காரணம் நாம் இந்த புத்தகத்தில் முன்னர் கூறிபடி இப்பேரண்டம் மனிதனின் உபயோகத்திற்காகப் படைக்கப் பட்டது என்பதாகும். இப்பேரண்டத்தை இயங்கச் செய்யும் விதிகளை எந்த அளவிற்கு மனிதன் பயன்படுத்திக் கொள்கிறான் என்பதைச் சிந்தித்தால் இக்கேள்விக்கு நிறைவான பதிலை அச்சிந்தனையிலிருந்து பெறமுடியும் என்பதில் ஐயமில்லை.

மனிதன் எப்போது நெருப்பைப் பற்ற வைக்கக் கற்றுக் கொண்டானோ அதுவே இயற்கை சக்திகளை மனிதன் தனக்குச் சாதகமாக பயன்படுத்தத் தொடங்கியதன் முதல் கல்வைப்பாகும் என்பது அறிவியலாளர்களின் பரவலான ஒரு கருத்தாகும் என்பதை நாம் அறிவோம். பருப்பொருளை ஆற்றலாக மாற்றும் வினையே “எரிதல் ஆகும். பருப் பொருளை ஆற்றலாக்குவது எப்படி என மனிதன் அறியாமல் இருந்திருந்தால் அவனால் நெருப்பை உருவாக்கியிருக்க முடியாது.

எனவே நெருப்பின் பயன்பாட்டையும் அவனால் அறிந்திருக்க முடியாது. நெருப்பு மனிதனுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை பட்டியலிட்டுக் கூற வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு அனைவரும் அறிந்ததே! சுருங்கக் கூறின் நெருப்பை உருவாக்கும் கலையை நம்மால் கற்றக் கொள்ள இயலாத வகையில் இறைவனே அதன் விதியை வடிவமைப்பு செய்திருந்தால் நாம் இன்றும் கூட விலங்குகளாகவே (சமூகப் பிராணிகளாக – Social Aminals) இருந்திருப்போம் என்பதில் ஐயமில்லை.

மனிதனின் அறிவு படிப்படியாக முன்னேறி நீராவியின் ஆற்றலைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டு தமது வாழ்க்கை வசதிகளை பற்பல வகையில் பெருக்கிக் கொண்டான். காலம் செல்லச் செல்ல வளர்ந்து கொண்டே வந்த மானிடனின் கல்வித் திறன் நியூட்டனின் கண்டுபிடிப்புகளால் உலகின் போக்கையே திருப்பி விட்டது. இயந்திரவியல் தலத்தில் (Mechanical Field) மனிதன் நுழைவதற்கான ஆற்றலை நியுட்டனின் அறிவியல் கண்டுபிடிப்புகள் நமக்கு உருவாக்கித் தந்தது.

ஐன்டீன் அவர்கள் இயற்கை விதியிலிருந்து கண்டு பிடித்த E = Mc2 எனும் சமன்பாடு நமது ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்வதில் பயன்படுத்தப்படுகிறது. தொலை பேசி கள்,ராடார்கள், இராக்கெட்கள், செயற்கைத் துணைக்கோள் கள் மற்றும் மின்சாரம் போன்றவை யாவும் இயற்கை விதிகளை மனிதன் தனக்கு சாதகமாக வசப்படுத்திக் கொள் கிறான் என்பதற்கு வலுவான சான்றுகளாக இருக்கின்றன. இந்த நிலையில் நம்மால் புரிந்து கொள்ள இயலாத விதிகளால் இறைவன் இப்பேரண்டத்தை இயங்கச் செய்திருப் பின் நாம் அவைகளை நமது வசதிக்காக எவ்வாறு பயன்படுத்தி இருக்க முடியும்?

எனவே அது குருடன் கை சித்திரம் போன்று பயனற்றதாகும். இதுவரை நாம் கண்ட அறிவியல் ஆதாரங்களிலிருந்து நம்மால் புரிந்து கொள்ளக் கூடிய விதிகளால் இப்பேரண்டத்தை இறைவன் இயங்கச் செய் திருப்பது திருக்குர்ஆனிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொண்டதைப் போன்று இந்த வானங்களும் பூமியும் இதிலுள்ளவைகளும் மனிதனுக்காகவே படைக்கப் பட்டது என்பதை உண்மை என நிரூபித்துக் கொண்டிருக்கும் அற்புதமான அறிவியல் ஆதாரமாகும்.

இறைவனுக்குத் தேவைகள் இல்லை

இப்பேரண்டத்திலுள்ள காலக்சிகள் எவ்வளவு என்பது இப்போதும் தெரியவில்லையாயினும் இதுவரை கண்டுபிடிக் கப்பட்டவைகளே பத்தாயிரம் கோடிக் கணக்கானவைகளா கும். அவை ஒவ்வொன்றிலும் பத்தாயிரம் கோடிக் கணக்கான நட்சத்திரங்கள். இவ்வளவு பிரமாண்டமான பேரண்டத்தைக் கண்ணுறும் அறிவியலாளர்களில் ஒரு சாராருக்கு இவ்வளவு பெரிய பேரண்டம் எவ்வகையிலும் மனிதனுக்குத் தேவையில்லை என்ற பிரமிப்பு ஏற்படுவதும் அதனால் இறைவன் உண்டென்றால் அந்த இறைவனுக்கு ஏதோ ஒரு வகையில் இப்பேரண்டம் தேவைப்படக் கூடும் என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது.

மனிதன் வெறும் சமூகப் பிராணியாகக் கருதப்படுவதால் தோன்றுகின்ற இந்த எண்ணத்தை இதற்கு மேல் கைவிட வேண்டும் என்பதற் குரிய நியாயமான காரணங்களை இந்நூலில் பல இடங்களில் விளக்கியுள்ளோம். அறிவியல் சமுதாயத்தையும் கருத்தில் கொண்டு இப் பேரண்டத்தின் படைப்பாளன் இறக்கி வைத்த அவனுடைய கடைசி நூலில் கடுகளவும் ஐயத்திற்கும் இடமின்றி அவனுடைய தேவையைப் பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறான்:

“உமது இறைவன் தேவைகளற்றவன்; இரக்கமுள்ளவன்.

(அல்குர்ஆன்:6:133.)

“அல்லாஹ் தன் படைப்பினங்களின் தேவையற்றவன்

(அல்குர்ஆன்:3:97.)

“அல்லாஹ் தேவைகளற்றவன்

(அல்குர்ஆன்:2:112.)

இப்பேரண்டத்தின் படைப்பாளனாம் அல்லாஹ்விற்கு எவ்விதத் தேவைகளும் இல்லை எனக் கூறும் வசனங்கள் திருக்குர்ஆனில் பற்பல இடங்களில் காணப்படுகின்றன. தேவையோடு இருத்தலும் அது நிறைவேறாத போது அழிவுறுதலும் படைப்பினங்களின் குணமாகும். தேவையற்ற சுயம் சம்பூரணனாக (Self Sufficient) இருத்தல் இறைமையின் பண்பாகும். எனவே ஹாக்கிங் அவர்கள் தன் நூலின் இறுத்தியில் எழுப்பிய“Or does it a creator, and if so, does he have any other effect on the universe? And who creater him>” (அல்லது அதற்கு ஒரு படைப்பாளன் தேவையா? அப்படியானால் அவருக்கு இப்பேரண்டத்தின் மீது வேறு ஏதேனும் விளைவுண்டா? மேலும் அவரைப் படைத்தது யார்?) வினாவிற்கு திருக்குர்ஆனிலிருந்தும் அதை நிரூபிக்கும் அறிவியல் ஆதாரங்களைக் கொண்டும் நாம் நிறைவான பதிலைக் கண்டு விட்டோம்.

(கடவுள் உண்டென்றால் அவரைப் படைத்தது யார்? என்ற கேள்விக்கு நாம் இதற்கு முன் மற்றொரு இடத்தில் பதிலளித்துள்ளோம்) எனவே இறைவனின் பிரமாண்டமான படைப்பினமாகிய இப்பேரண்டத்தை இறைவனுக்கு ஏதோ தேவைகள் இருந்து அவைகளை நிறைவேற்றுவதற்காக படைக்கப்பட்டது இல்லை என்றும் இது மனித இனத்திற்கு வசப்படுத்தப்பட்டு அவர்கள் அதை பயன்படுத்திக் கொள்வதற்காகவே படைக்கப் பட்டது என்பதில் இதற்கு மேல் ஐயத்திற்கு இடமில்லை.

நாம் இதுவரை கூறியதிலிருந்து நமது அறிவியல் ஞானத்திற்கு எட்டிய அறிவியல் விதிகளால் இறைவன் இப்பேரண்டத்தை இயங்கச் செய்திருப்பது இப் பேரண்டத்தை திருக்குர்ஆன் கூறியபடி மனித இனத்திற்கு வசப்படுத்தித் தருவதற்காகவே என்பதையும் நம்மால் புரிந்தது கொள்ள முடியாத விதிகளால் இப்பேரண்டம் இயக்கப் படுமாயின் இப்பேரண்டம் நமக்கு வசப்படாது என்பதையும் ஐயமற விளங்கிக் கொண்டோம்.

இரண்டாவது காரணம்

நம்மால் புரிந்து கொள்ள முடியாத விதிகளால் இப்பேரண்டம் இயக்கப்பட்டால் கவலைக்கிடமான மற்றொரு பிரச்சனையை அது தோற்றுவித்து விடும். உயிரியல் நோக்கில் அதுஒரு பிரச்சனையாகவே தோன்றாவிடினும் ஆன்மீகப் பார்வையில் அது மிக மோசமான பிரச்சனையாகும்.

இப்பேரண்டத்தை இயக்கும் விதிகள் எதையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியாமலும் அதே நேரத்தில் இப்போதுள்ள பகுத்தறிவு நமக்கு இருக்கவும் செய்தால் இப்பேரண்டம் இறைவனின் தேவைகளுக்காவே படைக்கப் பட்டதன்றி மனிதனுக்காக அது படைக்கப்படவில்லை என மனிதனை நம்ப வைக்கும். மனிதனுக்காக இப்பேரண்டம் படைக்கப்பட்வில்லை என்றால் ஏனைய உயிரினங்களைப் போன்றே மனிதனிடமிருந்தும் இறைவன் எதையும் நாடவில்லை என்ற எண்ணத்தை அது தோற்றுவிக்கும். இறைவனுக்குக் கீழ்படிந்து வாழவே மனிதன் படைக்கப் பட்டான் என்பதற்கு நியாயமான காரணங்கள் இல்லாமல் போனால் மனிதன் மனம் போன போக்கில் விலங்குகளைப் போன்று வாழ்வதற்கு உரிமம் (Licence) வழங்கப்படுவதாக அது அமைந்து விடும். இது மனிதனின் ஆன்மீக வாழ்க் கையை சீரழிக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

இப்பேரண்டத்தின் படைப்பு இறைவனின் சொந்தத் தேவையை பூர்த்தி செய்யப் படைக்கப்பட்டது என்ற எண்ணம் மற்றொரு விதத்திலும் மனிதனுக்கு ஆன்மீக சீரழிவை உண்டாக்கும். எவ்வாறெனில் பேரண்டம் இறைவனின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் படைக்கப் பட்டது என்ற தப்பெண்ணம் இறைவன் தேவையால் கட்டுண்டவனாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஒப்பான தாகும். இறைவனைப் பற்றி இவ்வாறு கூறுவது ஒரு மனிதனைப் பார்த்து நாய் என்றும், கழுதை என்றும் வசைச் சொல் கூறுவதை விட பெரும் குற்றமாகும். ஏனெனில் ஒரு மனிதனை விட நாயும், கழுதையும் எவ்வளவு கீழ்தரமானவை களோ அதை விட இறைவனோடு ஒப்பிடும் போது தேவை களால் கண்டுண்டிருக்கும் ஒருவர் மிகமிக கீழ்தரமானவரா வார்.

இறைவனைப் பற்றி இவ்வாறு எண்ணம் கொள்வது ஆன்மீகத் தலத்தில் மனிதனைச் சீரழித்து விடக் கூடியதாகும். எனவே மனித அறிவுக்கு எட்டாத விதிகளால் இப்பேரண்டம் இயக்கப்பட்டால் அது மனிதனின் ஆன்மீக வாழ்க்கைக்கு எதிரான நடவடிக்கையாக இருந்திருக்கும். அறிவுக்கே தோற்றுவாயாம் இறைவனிடமிருந்து இது போன்ற அபத்தங்கள் ஒரு போதும் நிகழ்வதில்லை.

மூன்றாவது காரணம்

நாம் அறிந்த அறிவியல் விதிகளின் படி இப்பேரண்டம் இயக்கப்படுவதால் நாம் அடையும் மற்றொரு மாபெரும் பயன்பாடு அறிவியல் யுகம் தொடங்கிய பிறகு அதில் வாழும் மக்களுக்கு மெய்யான இறைவனையும் அவனது போதனை களையும் மிகச் சரியாக அடையாளம் காட்டப் பயன்படுகிறது என்பதாகும். பொதுவாக அறிவியல் சமுதாயத்தின் பகுத்தறிவைக் கொண்டு இப்பேரண்டத்திற்கு ஒரு படைப்பாளன் உண்டு என்பதையும் அவனது அறிவும் ஆற்றலும் எல்லையற்றது என்பதையும் வேறு சில இறைமைப் பண்புகளையும் மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும்.

ஆனால் இறைவன் எதற்காக நம்மைப் படைத்தான் என்பதையும் நாம் நிறைவேற்ற வேண்டிய கடமை என்ன என்பதையும் இறைவனுடைய வேதங்களே கற்றுத்தர வேண்டியுள்ளது. ஆனால் வேதங்கள் நிலை எவ்வாறு உள்ளது? என்பதை முன்னுரையில் கூறியுள்ளோம். (தேவைப்படுவோர் மீண்டும் அதைப் பார்வையிடுக)

மனிதக் கரங்களால் தூய்மையற்ற நிலையில் வேதங்கள் (திருக்குர்ஆனைத் தவிர) இருக்கும் நிலையில் மனிதக் கரம் தொடாத தூய்மையான வேதம் உண்டா என்பதைக் கண்டறிய அறிவியல் சமுதாயம் அறிவியல் பார்வையை அளவுகோலாகக் கொள்கிறது. எனவே இந்தச் சமுதாயத்திற்கு அறிவியல் ஆதாரங்களைத் தரும் பொருட்டு ஏராளமான அறிவியல் உண்மைகளை கலப்படமற்ற இறைவனின் தூய்மையான வேதநூல் தன்னகத்தே கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத தேவை ஏற்படுகிறது.

ஆனால் அந்த அறிவி யல் உண்மைகள் அந்தச் சமுதாயத்தின் அறிவியல் அறிவுக்கு எட்டாததாக இருந்தால் அந்த அறிவியல் உண்மைகளை கூறுவதால் எப்பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே இறை வனின் தூய்மையான வேதநூல் எது என்பதை அறிவியல் சமுதாயம் அறிய வேண்டுமானால் வேதநூல் கூறும் அறிவி யல் உண்மைகள் அறிவியல் சமுதாயத்திற்கு எட்டியதாக இருக்க வேண்டும்.

அறிவியல் சமுதாயத்திற்கு அவை எட்ட வேண்டுமானால் இப்பேரண்டம் அறிவியல் சமுதாயத்திற்கு விளங்கும் விதிகளால் இயக்கப்படவும் வேண்டும். இதற்கு ஏராளமான சான்றுகளை நாம் திருமறையில் கண்டுள்ளோம். அவற்றுள் சில : “வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் அவ்விரண்டடையும் நாமே பிரித்தோம் என் பதையும் உயிரிள்ள ஒவ்வொரு பெருளையும் தண்ணீரி லிருந்து அமைத்தோம் என்பதையும் (இத்திருமறை நமது வார்த்தைகள் இல்லை என்று கூறி) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? (21:30) என ஓரிடத்திலும், “சிறகுகளை விரித்தும் சுருக்கியும் தங்களுக்கு மேல் பறக்கும் பறவை களை இவர்கள் பார்க்கவில்லையா?கருணை மிக்க இறைவனைத் தவிர அவைகளை (இடையூறுகளிலிருந்து) தடுத்துக் கொண்டிருக்கவில்லை. (ஆம்!) திண்ணமான அவன் யாவற்றின் மீதும் பார்வையுள்ளவன் (67:19) என மற்றொரு இடத்திலும் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட வசனங்களைப் போன்று மேலும் பற்பல வசனங்களை திருக்குர்ஆனில் நாம் பார்க்க முடியும். இந்த வசனங்களில் ஒரு தனிச்சிறப்பான வார்த்தைப் பிரயோகத்தை திருக்குர்ஆன் பயன்படுத்தி இருப்பது மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். “(திருக்குர்ஆனை) மறுப்பவர் சிந்திக்க வேண்டாமா?; “அவர்கள் பார்க்கவில்லை? என்பன போன்ற பிரயோகங்கள் அறிவியல் சமுதாயத்தையே குறிப்பாக சுட்டுகிறது என்பதையும் அந்த வசனத்தில் கூறப்படுகின்ற அறிவியல் தகவல்கள் உண்மையானால் அந்த அறிவியல் உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு திருக்குர்ஆன் இறைவனின் வேதநூல் என்பதை அச்சமுதாய மக்கள் நம்ப வேண்டும் என்பதே அவ்வசனங்களின் பொருளாகும்.

ஆனால் அந்த வசனங்களில் கூறப்பட்ட செய்தி உண்மைதாமா என அறிவியல் சமுதாயம் விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் பேரண்டத்தின் முன் தொடக்க நிகழ்ச்சி களுக்குப் பிறகு பேரண்டத்தின் இயக்கம் எவ்வாறு நடைபெற்றது என்பதையும் அந்த இயக்கத்தைத் தோற்று விக்கும் விதிகள் எவை என்பதையும் அறிவியல் சமுதாயத் தின் அறிவுக்குப் புரியும்படி இருக்கவேண்டுமல்லவா? எனவே திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அறிவியல் உண்மை கள் உலக மக்களுக்கு படிப்படியாக நிரூபித்துக் காட்டி அறிவியல் பார்வையில் அணுகினாலும் திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகளே என்பதை அறிவியல் சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டுமாயின் மனிதனுக்குப் புரிந்து கொள்ளும்படியான விதிகளின்படி இப்பேரண்டம் இயக்கப் படவேண்டும் என்பது இன்றியமையாததாகும்.

இதர வேதங்கள் பாதுகாக்கப்படாதது ஏன்?

இம்மாறையால் அதை வழங்கிய இறைவன் தற்போதும் செய்து காட்டிக் கொண்டிருக்கும் மற்றொரு அற்புதம் யாதெனில் இந்த வேதநூலைப் பாதுகாக்கும் பணியை இறைவனே செய்து கொண்டிருப்பதாகும். (பார்க்க 15:9) இதைக் கேள்விப்படும் சகோதர மதங்களைச் சார்ந்த சிலர், “நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் குர்ஆனுக்கு முன் இறங்கிய வேதங்கள் எதையும் இறைவன் பாதுகாக்காமல் குர்ஆனை மட்டும் பாதுகாப்பது ஏன்? எனக் கேட்கின்றனர். அவர்களின் நியாயமான இக்கேள்விக்கு அதை விட நியாய மான பதிலைக் கூறுவது இந்த இடத்தில் பொருத்தமான தாகும்.

திருக்குர்ஆனுக்கு முன் இறக்கப்பட்ட இறைவனின் ஏனைய வேதங்கள் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவினருக் காகவும், ஒரு குறிப்பிட்ட கால அளவில் மட்டுமே செயல்பட வேண்டிய நிலைகளைக் கொண்டவையுமாகும். எனவே இவ்வேதங்களின் பாதுகாப்பை இறைவனே ஏற்றுக் கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவ்வேதங்களில் அவனே மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.

அவனே மாற்றப் போகும் வேதங்களை அவன் எதற்குப் பாதுகாக்க வேண்டும்? மேலும் விரிவஞ்சிச் சுருங்கக் கூறினால் இறைவனே பாதுகாப்பதாக ஒரு வேதம் அறிவிக்கப்பட்ட (அல்லது கருதப்பட்ட) பிறகு அந்த வேத புத்தகத்தில் கூறப்பட்டதற்கு மாற்றமான மற்றொரு சட்டத்தை மற்றொரு தூதர் வாயிலாக மற்றொரு வேதநூலில் கூறப்படுவது அந்த இறைத்தூதரையும் அவர் கொண்டு வந்த இறைவேதத்தையும் மக்கன் நிராகரிப்பதற்கு துணைபுரியுமே அன்றி அப்புதிய வேதத்தைப் பின்பற்றுவதற்குத் துணை புரியாது.

ஆனால் திருக்குர்ஆன் வேதங்களின் பட்டியலில் கடைசியானது. இது உலகிற்கிறங்கி 1400வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் எவ்வளவு நூற்றாண்டுகள் இவ்வுலகம் இருக்கப் போகின்றதோ அவ்வளவு காலத்திற்கும், உலக மக்கள் அனைவருக்கும் இது இறைவனின் வேதநூலாக நிலைநிற்க வேண்டியது. எனவே இந்நூல் பாதுகாக்கப்பட்டே ஆக வேண்டும். அதில் கலப்படங்கள் கலந்து விடாமல் அந்த நூல் தூய்மையாக, பரிசுத்தமாக, பரிசுத்தம் என்ற சொல்லின் முழுமையான அர்த்தத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

இப்பணியைச் செய்யும் ஆற்றல் இவ்வுலக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு திருக்குர்ஆனை நாம் களங்கப்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டாலும் அவர்களால் அது இயலாத காரிமாகும். ஏனெனில் உறுதிமொழி எடுத்துக் கொண்டவர் மறைந்து போய் அவர்களுக்குப் பின் வரக்கூடியவர்கள் என்ன செய்வார்கள் என்பது யாருக்குத் தெரியும்?எனவே அப்பணியைச் செய்யும் பொறுப்பை அல்லாஹ்வே எடுத்துக் கொண்டான். இதுவே இறைவன் பல வேதநூல்களை உலகிற்குத் தந்திருந்த போதும் அந்நூல்கள் எதன்மீதும் செய்யாத இம்மாபெரும் அற்புதத்தை திருக் குர்ஆன் மீது செய்துகாட்டியிருப்பதற்குரிய காரணமாகும்.

திருக்குர்ஆனைப் பற்றிய திருத்தூதரின் மதிப்பீடு

திருக்குர்ஆனைப் பெற்றுத் தந்த இறைத்தூதர் முஹம்மத் (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாகட்டும்) பற்பல அற்புதங்களைக் காட்டிய வரலாற்றை நபிமொழி நூல்களில் காணலாம். ஆனால் திருக்குர்ஆனுக்கு முன்னால் அந்த அற்புதங்கள் குறிப்பிடும்படியாக இல்லை என உணர்த்தும் அவருடைய அறிவிப்பு ஒன்று இவ்வாறு கூறுகிறது.

“மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக அற்புதங்கள் வழங்கப்படாமல் தூதர்களுக்கிடையில் ஒரு தூதரும் இருந்ததில்லை. ஆனால் எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் அல்லாஹ் எனக்குத் தந்த இறைவெளிப்பாடாகும். எனவே மறுமை நாளில் வேறு எந்தத் தூதரையும் விட என்னுடைய பின்பற்றாளர்கள் அதிகமாக இருப்பார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்

(ஸஹீஹ் புகாரி 4981, 7274)

தமக்கு வழங்கப்பட்ட மாபெரும் அற்புதமாக திருக் குர்ஆனை திருத்தூதர் அவர்கள் குறிப்பிடும் போது திருக் குர்ஆனின் பெயரோடு தம்மால் செய்து காட்டப்பட்ட எந்தஒரு அற்புதத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் அவரோ ஏனைய தூதர் களுக்கு வழங்கப்பட்டதைப் போன்ற அற்புதங்கள் வழங்கப் பட்டிருந்தார் என்பது நபிமொழிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து திருக்குர்ஆன் எனும் அற்புதம் அவ்வளவு மக்கதத்தானதும் ஈடுஇணை அற்றது மாகும் என்பதை அறியலாம். திருக்குர்ஆன் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட அற்புதங்கள் சிலவற்றையே இந்நூலில் நாம் இதுவரை கண்டுவந்தோம். அவைகளை காய்தல் உவத்தலின்றி சிந்திப்பீர்களாக! இந்த நூலின் முதல் தொகுதி (First Volume) முடிவுரையுடன் நிறைவடைகிறது.