Tamil Bayan Points

12) அழிக்கப்பட்ட அடையாளங்கள்

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

Last Updated on October 29, 2023 by

12) அழிக்கப்பட்ட அடையாளங்கள்

நகரில் வாழ்ந்த மனிதர்களை மட்டுமல்ல. அவர்களின் கல்வி, கலாச்சாரம், பாரம்பரியம், பொருளாதாரம், வரலாற்றுச் சின்னம் என்று அவர்களின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட அனைத்தையும் அழித்தார்கள்.

தில்லி. திரும்பிய பக்கமெல்லாம் எண்ணூறாண்டு கால இஸ்லாமி யர்களின் சரித்திரத்தை எடுத்துச் சொல்லும் சுவடுகள் நிறைந்த பூமி. கட்டிடங்கள் முதல் கலைப் பொருட்கள் வரை அனைத்திலும் அது பிரதிபலிக்கும். எந்தவொன்றும் மிச்சமிருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு தகர்த்தார்கள்

மஸ்ஜிதே அக்பராபாதி, மஸ்ஜிதே கஷ்மீரி கத்ரா ஆகிய பள்ளிவாசல்களை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள்.((இ.சு.பெ.இ.ப) பக். 900) பகதூர்கர், பரூக் நகர், பாலப்கர், ஜாஜர் ஆகிய நவாப்களின் பெரும் பெரும் அரண்மனைகளைக் கூட பேரழிவின் சின்னங்களாக மாற்றினார்கள்.(Narayani Gupta Delhi between Empires New Delhi 1991 p. 127 (இ.சு.பெ.இ.ப) பக். 901)

மன்னர் ஔரங்கஜேப் முடிசூட்டிக் கொண்ட சாலிமர்பாக் எனும் பசுமைக்குடில் சோட்டா ரங் மஹால், ஹயாத் பக்ஷ் தோட்டம், மெஹ்தப் தோட்டம் அனைத்தும் அடியோடு சாய்க்கப்பட்டது. அழிக்க மனம் வராத இடங்களில்கூட குறைந்த பட்சம் அதிலிருந்த முஸ்லிம்களின் அடையாளங்களையாவது அழித்தார்கள். (James fergussaon History of Indian, Eastern Archiitecture London 1876 p 311 (இ.சு.பெ.இ.ப) பக். 901-902)

பேகம் பாக் என்ற அரசியாரின் தோட்டம் குயின்ஸ் கார்டன் – ராணியின் தோட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லாகூர் தர்வஸா, விக்டோரியா வாசலானது. விலையுயர்ந்த கலைப் பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது.

பளிங்குக் கற்களும் பலம் வாய்ந்த மரங்களும் பெயர்த்து எடுத்து விற்பனை செய்யப்பட்டன.(இ.சு.பெ.இ.ப) பக். 901)…

முஸ்லிம்களின் சொத்துக்களைக் கைப்பற்றி ஏலத்தில் விட்டார்கள். இந்துக்கள், ஜெயின்கள், பங்கர்கள் என முஸ்லிமல்லாத பலரும் அவற்றை வாங்கிப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

பள்ளிவாசல்கள் கூட ஏலத்திலிருந்து தப்பவில்லை. சுன்னாமால் என்ற இந்து வணிகர் பதேபூர் பள்ளிவாசலை ஏலத்தில் எடுத்தார். மகேஸ்தாஸ் என்ற ஜெயினர் மஸ்ஜிதே ஜீனத்தை விலைக்கு வாங்கினார்.(இ.சு.பெ.இ.ப) பக். 904)

பிரசித்தி பெற்ற மார்க்கக் கல்விக் கூடம் மதரஸா ரஹீமிய்யாவும் ஏலத்திற்கு வந்தது. அதை வாங்கிய ராம்ஜிதாஸ் என்ற பனியா தனது வியாபரப் பொருட்களின் சேமிப்புக் கிடங்காக ஆக்கிக் கொண்டார். Farhan Ahmad Nizami Madrasa Scholars And Saints Muslims Response to the British presence in the Delhi and the Upper Daob 1803-1857 Unpublished ph. D Oxford 1983 p 19 (இ.சு.பெ.இ.ப) பக். 907)

பிரசித்தி பெற்ற டில்லி ஜீம்ஆ மசூதி இரண்டாண்டுகள் ஆங்கிலேயரின் இராணுவக் கூடமாகப் பயன்படுத்தப்பட்டது. யாரும் தொழுவதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை.((இ.சு.பெ.இ.ப) பக். 740)

முஸ்லிம்களோடு பன்னெடுங் காலமாகப் பின்னிப் பிணைந்த ஒரு நகரம் முஸ்லிம்களே இல்லாமல் துடைத்தெறியப்பட்டது. டில்லி நகருக்குள் வருவதற்கே முஸ்லிம்களுக்குத்தடை விதிக்கப்பட்டது. (இ.சு.பெ.இ.ப) பக். 903)