Tamil Bayan Points

11) ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம் ஃகைரில்…

நூல்கள்: திருமறையின் தோற்றுவாய்

Last Updated on February 23, 2022 by

ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம்

ஃகைரில் மஃக்லூபி  அலைஹிம் வலள்ளால்லீன்

இது ஃபாத்திஹா அத்தியாயத்தின் கடைசி வசனமாகும். இறைவா! எவருக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழியை எங்களுக்குக் காட்டுவாயாக! (உனது) கோபத்திற்கு ஆளானவர்களின் வழியையும், வழிதவறியவர்களின் வழியையும் எங்களுக்குக் காட்டாதே என்பது இதன் கருத்தாகும்.

ஸிராதல் முஸ்தகீம் எனும் நேர்வழியைக் காட்டுவாயாக! என்று தன்னிடம் பிரார்த்திக்குமாறு கற்றுத் தந்த அல்லாஹ் அதைத் தொடர்ந்து வரும் மேற்கண்ட வசனத்தில் ஸிராதுல் முஸ்தகீம் எனும் நேர்வழி எதுவென்பதை இரத்தினச் சுருக்கமாக விளக்குகின்றான். ஸிராதுல் முஸ்தகீம் என்பது மூன்று அம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்கிறான்.

  1. இறைவனது கோபத்திற்கு ஆளானவர்களின் வழியாக அது இருக்கக் கூடாது.
  2. தவறான பாதையில் சென்றவர்களின் வழியாகவும் அது இருக்கக் கூடாது.
  3. மாறாக இறைவனின் நல்லருள் பெற்றவர்களின் வழியாக இருக்க வேண்டும்.

நாம் செல்லக் கூடிய வழி இந்த மூன்று அம்சங்களைக் கொண்டதாக அமைந்துள்ளதா? என்பதை அறிந்து கொள்வது நாம் செல்லும் வழி நேர்வழி தானா என்பதைத் தெளிவாக அறிய உதவும் என்பதால் அது பற்றிய விபரத்தைக் காண்போம். இறைவனது கோபத்திற்கு ஆளானவர்கள் யார்? அவர்கள் இறைவெறுப்புக்குரியவர்களாக ஏன் ஆனார்கள்? என்ற விபரங்களை முதலில் விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.

கோழைகள் இறைவனின் கோபத்திற்குரியவர்களாவர்

நம்பிக்கை கொண்டோரே! முன்னேறி வரும் (ஏக இறைவனை) மறுப்போரை நீங்கள் சந்திக்கும் போது அவர்களுக்குப் புறங்காட்டி ஓடாதீர்கள்

(அல்குர்ஆன் 8:15)

நியாயமான காரணங்களுக்காகக் களத்தில் இறங்கிய பின் எவன் உயிருக்குப் பயந்து பின் வாங்குகின்றானோ அவன் இறைவனது கோபத்திற்குரியவன் என்று அல்லாஹ் இங்கே அடையாளம் காட்டுகின்றான். உயிருக்கு அஞ்சியவர்களும், கோழைகளும் இறைவனது கோபத்திற்குரியவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிய வருகின்றது.

அக்கிரமத்தையும், அநீதியையும் காணும் போது அதற்கெதிராகப் போராட வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இது போன்ற அறப்போரில் மடிந்து விட்டால் மறுமையில் இதற்கு வழங்கப்படும் பரிசுக்கு ஈடு இல்லை என்றெல்லாம் இஸ்லாம் கூறுகின்றது. அக்கிரமமும், அநீதியும், தீமைகளும் தலைவிரித்தாடும் போது அதைக் கண்டும் காணாதிருக்க முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை.

யார் தனது பொருட்களை பிறரிடமிருந்து காக்கும் போராட்டத்தில் கொல்லப்படுகின்றாரோ அவரும் ஷஹீத் (உயிர்த் தியாகி) என்று நபிகள் நயயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூல்: புகாரி – 2480

ஒரு பொருள் நமக்குச் சொந்தமானது என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது. அல்லது முஸ்லிம் சமுதாயத்திற்குச் சொந்தமானது என்று திட்டவட்டமாகத் தெரிகின்றது. அதை அநியாயமாக எவரேனும் பறித்துக் கொள்ள முயன்றால் அதை மீட்கும் போராட்டத்தில் மடிந்து விட்டாலும் அவன் ஷஹீத் எனும் உயர் பதவியை அடைகின்றான்.

தனக்குச் சொந்தமான ஒரு பொருளை அநியாயமாக எவரேனும் பறிக்க முற்படும் போது அந்தப் பொருளின் மதிப்பு உயர்ந்ததா? அல்லது தனது உயிரின் மதிப்பு உயர்ந்ததா? என்றெல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. உயிரை விட எந்தப் பொருளும் மதிப்பு மிக்கவை அல்ல என்பதில் ஐயம் இல்லை.

அப்படி இருந்தும் நபியவர்கள் இப்படி எல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. கணக்குப் பார்த்திருந்தால் மேற்கண்ட பொன்மொழியைச் சொல்லி இருக்க மாட்டார்கள்.

பொருட்களை மீட்பதற்காகப் போராடி மடிய வேண்டாம். உயிரைக் காப்பாற்றிக் கொண்டு பொருட்களைப் பறிக்க வருபவனிடம் கொடுத்து விடுங்கள் என்று நபிகள் நயயகம் (ஸல்) கூறாமல் அதை மீட்கும் போரில் உயிரைப் பறிகொடுப்பவனுக்கு மகத்தான அந்தஸ்தை வாக்களிக்கின்றார்கள்.

அசத்தியத்திற்கெதிரான போராட்டங்களில் லாப நட்டக் கணக்குப் பார்க்க முடியாது. அக்கிரமத்தைக் கண்ட பிறகு வாளாவிருந்தால், அக்கிரமத்திற்குப் பணிந்தால் அக்கிரமம் மேலும் தலைவிரித்தாடும் நிலை ஏற்படும். நபிகள் நயயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி மிக அழகாகச் சொன்னார்கள்.

தனது குதிரையின் முதுகின் மீது தயார் நிலையில் இருந்து கொண்டு எங்காவது அக்கிரமமோ, அநியாயமோ நடக்கக் கண்டால் தனது குதிரையின் மீது பறந்து சென்று மரணம் தான் ஏற்படும் என்று தெரிந்தே அந்தத் தீமையைத் தடுக்க முயல்பவன் மனிதர்களில் மிகவும் சிறந்தவன் என்று நபிகள் நயயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் – 3503

மரணம் நிச்சயம் என்று தெரிந்த நிலையில் அக்கிரமத்தை எதிர்த்துப் போராடுபவனே முஸ்லிம்களில் சிறந்தவன். அவனே உண்மையான முஸ்லிம். இப்படியெல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால் உலகில் எந்த அறப்போராட்டமும் நடக்காது. நடந்திருக்காது. அக்கிரமம் மேலும் துணிவு பெறும். நியாயவான்கள் நேர்மையாளர்கள் அஞ்சி வாழும் நிலை ஏற்படும்.

முஸ்லிம்கள் நடத்தும் அறப்போராட்டங்கள் நியாயத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இஸ்லாத்தை ஒரு ஜாதியாக எண்ணி, தன் இனத்தவர் செய்யும் அக்கிரமங்களை நியாயப்படுத்தவோ தவறு நம்மவர்களின் மீது இருக்கும் போது அவர்களுக்காகப் போராடவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நியாயம் அல்லாத எந்தப் போராட்டத்திலும் முஸ்லிம்கள் ஈடுபடக் கூடாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். திடீரென்று இரண்டு மூன்று பேர் பயங்கர ஆயுதங்களுடன் எழுந்து கொள்ளையடிக்க முற்படுகிறார்கள். அந்தப் பேருந்தில் பயணம் செய்யும் அறுபது பேரும் பதுமைகளாக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். நாட்டில் அன்றாடம் நடந்து வரும் நிகழ்ச்சி இது. பகிரங்கமாகக் கொள்ளையடிக்க வருகிறான். அப்பாவி மக்களை அச்சுறுத்துகிறான்.

அறுபது நபர்களை அக்கிரமக்கார ஐந்து பேர் மிரட்டுகின்றனர். இந்த அக்கிரமத்தைக் கண்ட பின்பும் கற்சிலையாய் அமர்ந்திருக்கும் கோழைகளைக் காண்கிறோம். இந்த அக்கிரமத்தைக் கண்டு கொதித்தெழுந்து அவர்களுக்கெதிராக எவன் போராடத் துணிகின்றானோ அவன் அப்போரில் கொல்லப்பட்டால் அவன் ஷஹீத் எனும் உயர் நிலையை அடைகிறான்.

இப்படி நான்கு பேர் துணிந்து விட்டால் இது போன்ற வழிப்பறிக் கொள்ளைகள் இல்லாது ஒழியும். இந்தக் கட்டத்திலும் கூட வாளாவிருந்து கையில் உள்ளதைக் கழற்றிக் கொடுப்பவனும், பையில் உள்ளதை எடுத்துக் கொடுப்பவனும் இறைவனின் கோபத்திற்கு உரியவனே. நேர்வழியில் இருப்பவன் ஒருக்காலும் அக்கிரமத்திற்குப் பணிய மாட்டான்.

அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சக் கூடியவன் வேறு எந்த சக்திக்கும் அஞ்ச மாட்டான். மறு உலக வாழ்வை மட்டுமே குறியாகக் கொண்டவன் உயிரைப் பற்றிக் கவலைப்பட மாட்டான். அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்!

இறைவா! உனது கோபத்திற்கு ஆளானவர்களின் வழியை எங்களுக்குக் காட்டாதே! என்று பிரார்த்திக்கும் போது இறைவா! எங்களைக் கோழைகளாக ஆக்காதே! கோழைகளின் வழியில் எங்களை நடத்தாதே என்பதும் அதன் பொருளாக அமைந்து விடுகின்றது. கோழைத்தனத்திலிருந்து விடுபவட்டவர்களே ஸிராதுல் முஸ்தகீம் எனும் நேர்வழிக்குரியவர்கள். இறை கோபத்திற்கு ஆளானவர்களின் பட்டியலை மேலும் காண்போம்.

மறுமையைநம்பாதோர்இறைவனின்கோபத்திற்குரியவர்கள்

இவ்வுலக வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து விட்டது எனக் கூறுவோரும், அதனடிப்படையில் தம் வாழ்வை அமைத்துக் கொண்டவர்களும் இறைவனின் கோபத்திற்கு உரியவர்களாவர். மறுமையை நம்பியுள்ளதாகப் பிரகடனம் செய்யும் முஸ்லிம்களில் பலரிடம் இது போன்ற போக்கைக் காண முடிகின்றது.

ஐங்காலமும் தொழுது, நோன்பு நோற்று, இன்ன பிற கடமைகளை நிறைவேற்றக் கூடிய பலர் பகிரங்கமாக பாவச் செயல்களில் ஈடுபட்டு விடுகின்றனர். வட்டி வாங்குவோர் நிரந்தர நரகை அடைவர் எனக் குர்ஆன் கூறுவதை அறிந்த பின்பும் நமது நாட்டில் இதெல்லாம் சாத்தியப்படுமா? என்று கூறி வட்டி வாங்குவோர் உண்மையில் மறுமை நம்பிக்கை இல்லாதவர்களே.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் யாரைக் கோபித்து விட்டானோ அந்தக் கூட்டத்தை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! (ஏக இறைவனை) மறுப்போர் மண்ணறைவாசிகள் (எழுப்பப்படுவார்கள் என்பது) பற்றி நம்பிக்கை இழந்தது போல் இவர்கள் மறுமையைப் பற்றி நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

(அல்குர்ஆன்:60:13.)

மறுமை நம்பிக்கையை இழந்து விட்ட காரணத்தினால் ஒரு சாரார் இறைவனது கோபத்திற்கு ஆளாகி விட்டனர் என்றும், அவர்களை நண்பர்களாகக் கூட ஆக்கி விடலாகாது என்றும் இங்கே அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

இறைவா! உன் கோபத்திற்கு ஆளானவர்களின் வழியில் எங்களை நடத்தாதே என்றால் இறைவா! மறுமை நம்பிக்கையற்றவர்களாக எங்களை ஆக்கி விடாதே என்ற கருத்து இதனுள் அடங்கி விடுவதை மேற்கண்ட விபரங்களிலிருந்து அறியலாம்.

அல்லாஹ் கூறுவது இது தான் எனத் தெரிந்த பின்னரும் அதை ஏற்க மறுப்பவர்களும் அவனது கோபத்திற்கு உரியவர்களாகின்றனர். அல்லாஹ் கூறுவது எதுவானாலும் அதற்கு அப்படியே தலை சாய்ப்பவன் மட்டுமே இறைவனது கோபத்திலிருந்து தப்பிக்க முடியும்.

உண்மையான மார்க்கத்தை எடுத்துச் சொல்வோரை அநியாயமாகத் தாக்குவதும் அவர்களைக் கொல்ல முயல்வதும் கூட இறைவனின் கடுமையான கோபத்திற்குரிய காரியங்களாகும்.

மூஸாவே! ஒரே (வகையான) உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம். எனவே எங்களுக்காக உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! பூமி விளைவிக்கின்ற கீரைகள், வெள்ளரிக்காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன் எங்களுக்கு வெளிப்படுத்துவான் என்று நீங்கள் கூறிய போது, சிறந்ததற்குப் பகரமாகத் தாழ்ந்ததை மாற்றிக் கேட்கிறீர்களா? ஏதோ ஒரு நகரத்தில் தங்கி விடுங்கள்! நீங்கள் கேட்டது உங்களுக்கு உண்டு என்று அவர் கூறினார். அவர்களுக்கு இழிவும், வறுமையும் விதிக்கப்பட்டன.

அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்ததும், நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம். மேலும் பாவம் செய்து, வரம்பு மீறிக் கொண்டே இருந்ததும் இதற்குக் காரணம்.

(அல்குர்ஆன் 2:61)

மூஸா (அலை) காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள் இறைவனது வசனங்களில் நம்பிக்கையிழந்ததினாலும், சத்தியத்தைப் போதிக்கும் நபிமார்களைக் கொல்ல முயன்றதாலும், கொன்றதாலும் இறைவனது கோபத்திற்கு ஆளானார்கள் என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இது பற்றி இன்னும் விரிவாக அல்லாஹ் வேறு இடங்களில் குறிப்பிடுகிறான். நபிகள் நயயகம் (ஸல்) அவர்கள் இறைவனால் தூதராக நியமிக்கப்பட்ட போது அதை இஸ்ரவேலர்கள் தான் நம்ப மறுத்தார்கள். இதே இஸ்ரவேலர்கள் தான் இறுதி நபியின் வருகையை எதிர்பார்த்து, அவர் வந்ததும் அவரை ஏற்று பக்கபலமாக நிற்க வேண்டும் என்பதற்காக முன்னர் மதீனாவில் குடியேறினார்கள்.

தலைமுறை, தலைமுறையாக இறுதித் தூதரின் வருகையை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தனர். இறுதித் தூதரின் அடையாளங்கள் யாவும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வேதங்களிலும், அவர்களின் நபிமார்களின் போதனைகளிலும் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன.

நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள், தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.

(அல்குர்ஆன் 2:146)

ஆனால் நபிகள் நயயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதராக வருகை தந்த போது ஏற்க மறுத்து விட்டனர். இவர்கள் மறுத்ததற்குக் காரணம், தங்கள் விரும்புகின்ற தங்கள் இனத்தைச் சார்ந்தவரை அல்லாஹ் நபியாக அனுப்பவில்லை என்பது தான். அதாவது அல்லாஹ் கூட இவர்களின் விருப்பத்தின்படியே நடக்க வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்த்தார்கள்.

அல்லாஹ் அருளியதை மறுப்பதற்குப் பகரமாக தங்களையே அவர்கள் விற்பனை செய்வது மிகவும் கெட்டது. அடியார்களில், தான் நாடியோருக்கு தனது அருளை அல்லாஹ் அருளியதில் பொறாமைப்பட்டதே இதற்குக் காரணம். எனவே கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளானார்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்கு இழிவு படுத்தும் வேதனை இருக்கிறது.

(அல்குர்ஆன் 2:90)

இறைவனது கட்டளையில் எதிர்க்கேள்வி கேட்போரும், அதில் ஆட்சேபனை எழுப்புவோரும், அதை நம்ப மறுப்போரும் கடுமையான கோபத்திற்குரியவர்கள் என இங்கே அல்லாஹ் கூறுகிறான். கோபத்திற்கு ஆளானவர்களின் வழியை எங்களுக்கு காட்டாதே! என்றால், உனது கட்டளையை அப்படியே ஏற்கும் பக்குவத்தைத் தருவாயாக என்பது உள்ளடங்கும்.

இரட்டைவேடம் போடுவோரும் இறைவனின் கோபத்திற்கு ஆளானவர்களே!

உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்றைப் பேசுவோரும், இரட்டை வேடம் போடுவோரும் இறைவனது கோபத்திற்கு ஆளானவர்கள் என்று அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.

நயவஞ்சகர்களான ஆண்களையும், பெண்களையும், அல்லாஹ்வைப்பற்றி தீய எண்ணம் கொண்ட இணை கற்பிக்கும் ஆண்களையும், பெண்களையும் அவன் தண்டிப்பதற்காகவும் (இவ்வாறு செய்தான்). தீங்கு தரும் துன்பம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டு, அவர்களைச் சபித்தான். அவர்களுக்கு நரகத்தைத் தயாரித்துள்ளான். அது தீய தங்குமிடமாக உள்ளது.

(அல்குர்ஆன் 48:6)

அல்லாஹ்வைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவனுக்கு இணை வைக்கும் ஆண்களும், பெண்களும் தனது கோபத்திற்குரியவர்கள் என்றும் அது போலவே அல்லாஹ்வைப் புரிந்து கொள்ளாது, அவனைத் தவறாகப் புரிந்து கொண்டு இரட்டை வேடம் போடுவோரும் தனது கோபத்திற்காளானவர்கள் என்றும் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.

உனது கோபத்திற்கு ஆளானவர்களின் வழியில் எங்களை நடத்தாதே என்று பிரார்த்திக்கும் போது இரட்டை வேடம் போடுவோராகவும் இணை வைப்போராகவும் ஆக்காதே என்ற கருத்தும் உள்ளடங்கியுள்ளது. கைரில் மக்லூபி அலைஹிம் என்று கூறும் போது இதுவும் நம் கவனத்திற்கு வர வேண்டும்.

கொலைப் பாதகம் புரிவோரும்

அவனது கோபத்திற்கு ஆளானவர்கள்

தக்க காரணமின்றி கொலைப் பாதகம் புரிவோரையும் தனது கோபத்திற்கு உள்ளானவர்கள் என்று அல்லாஹ் இனம் காட்டுகிறான்.

நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன் 4:93)

இறைவனது கோபத்திற்கு ஆளானவர்கள் யார்? யார்? என்பதை மிகவும் சுருக்கமான முறையில் இன்னொரு இடத்தில் அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.

நாம் உங்களுக்கு வழங்கியவற்றில் தூய்மையானதை உண்ணுங்கள்! இங்கே வரம்பு மீறாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) எனது கோபம் உங்கள் மீது இறங்கும். எவன் மீது எனது கோபம் இறங்கி விட்டதோ அவன் வீழ்ந்து விட்டான்.

(அல்குர்ஆன் 20:81)

எல்லா விதமான அக்கிரமமும், வரம்பு மீறலும் யாருக்கு வாடிக்கையாகிவிட்டதோ அவர்களனைவரும் இறைவனது கோபத்திற்கு ஆளானவர்களே.

இறைவா! உனது கோபத்திற்கு ஆளானவர்களின் வழியில் எங்களை நடத்தாதே எனும் போது இவ்வளவும் நம் உள்ளத்தில் பதிய வேண்டும். இத்தகையோர் வழியில் நடத்தாதே என்ற எண்ணமும் நமக்கு ஏற்பட வேண்டும்.

வலள்ளால்லீன்

தவறான பாதையில் சென்றோரின் வழியையும் எங்களுக்குக் காட்டாதே என்பது வலள்ளால்லீன் என்பதன் கருத்தாகும். தவறான வழியில் சென்றோரைப் பொதுவாக இங்கே குறிப்பிட்டாலும் திருக்குர்ஆன் நெடுகிலும் எத்தகையோர் தவறான வழி சென்றோர் எனத் தெளிவாகவும் அவன் அடையாளம் காட்டுகிறான்.

பிறரது விருப்பத்துக்காகவும், அவர்களை அனுசரிக்க வேண்டுமென்பதற்காகவும் உண்மையை விட்டும் விலகிச் செல்பவர்களை வழிகெட்டவர்கள் என்கிறான்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்போரை வணங்குவதை விட்டும் நான் தடுக்கப்பட்டுள்ளேன் என்று கூறுவீராக! உங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்ற மாட்டேன். (பின்பற்றினால்) வழி தவறி விடுவேன். நேர் வழி பெற்றவனாக ஆக மாட்டேன் என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன் 6:56)

தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக்கிக் கொண்டவனைப் பார்த்தீரா? தெரிந்தே அவனை அல்லாஹ் வழி கெடுத்தான். அவனது செவியிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டான். அவனது பார்வையின் மீது மூடியை அமைத்தான். அல்லாஹ்வுக்குப் பின் அவனுக்கு வழி காட்டுபவன் யார்? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

(அல்குர்ஆன் 45:23)

இந்த வசனமும் 33:36, 6:119, 28:50 வசனங்களும் வழிகெட்டவர்கள் யார் என்று விளக்கும் வசனங்களாகும்.

அல்லாஹ்வின் பாதையைக் கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழி கெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோர் மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கே இழிவு படுத்தும் வேதனை உள்ளது.

(அல்குர்ஆன் 31:6)

வீணான கதைகள், வெட்டிப் பேச்சுக்கள் ஆகியவற்றில் மூழ்கிக் கிடப்பவர்களும் வழிகெட்டவர்களே என்று இனம் காட்டுகின்றான். தங்களின் மார்க்க நடைமுறைகளுக்கு திருக்குர்ஆனையும், நபிமொழியையும் சான்றுகளாகச் சமர்ப்பிக்காமல் தங்களின் முன்னோர்களையும், சமகாலத்தவர்களையும், முன்னோடிகளாகக் கொண்டவர்களும் வழிகெட்டவர்களே.

உங்களுக்கு முன் சென்று விட்ட சமுதாயங்களான ஜின்கள் மற்றும் மனிதர்களுடன் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்! என்று (அவன்) கூறுவான். ஒவ்வொரு சமுதாயமும் அதில் நுழையும் போது தம் சகோதர சமுதாயத்தைச் சபிப்பார்கள். முடிவில் அவர்கள் அனைவரும் நரகத்தை அடைந்தவுடன் எங்கள் இறைவா! இவர்களே எங்களை வழி கெடுத்தனர். எனவே இவர்களுக்கு நரகமெனும் வேதனையை இரு மடங்கு அளிப்பாயாக! என்று அவர்களில் பிந்தியோர், முந்தியோரைப் பற்றிக் கூறுவார்கள். ஒவ்வொருவருக்கும் இரு மடங்கு உள்ளது. எனினும் நீங்கள் அறிய மாட்டீர்கள் என்று (அவன்) கூறுவான்.

(அல்குர்ஆன் 7:38)

அவர்கள் தமது முன்னோர்களை வழிகெட்டவர்களாகவே கண்டனர். அவர்களின் அடிச்சுவடுகளிலேயே இவர்களும் இழுக்கப்படுகின்றனர். முன்னோர்களில் அதிகமானோர் இவர்களுக்கு முன் வழிகெட்டிருந்தனர். அவர்களிடம் எச்சரிப்போரை அனுப்பினோம். தேர்வு செய்யப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர எச்சரிக்கப்பட்டோரின் முடிவு எவ்வாறு அமைந்தது என்று கவனிப்பீராக!

(அல்குர்ஆன் 37:69 – 74)

நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன? என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம் என்று அவர்கள் கூறினர். நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 21:52 – 54)

பெரியவர்கள், மகான்கள் என்பதை அல்லாஹ் தான் முடிவு செய்ய முடியும் என்பதைக் கூட உணராமல் இவர்களாகவே சிலருக்கு அவ்லியாப் பட்டம் வழங்கி அவர்களை கண்மூடி பின்சென்றவர்களும் வழிகேடர்களேயாவர்.

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக! (எனவும் கூறுவார்கள்.)

(அல்குர்ஆன் 33:66 – 68)

அல்லாஹ் வழங்கிய மகத்தான பாக்கியமான பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பவர்களும் வழிகேடர்களே.

அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்து விட்டான். உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன்; அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள் என்று அவன் (இறைவனிடம்) கூறினான்.

அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். அவர்களுக்கு அவன் வாக்களிக்கிறான். ஆசை வார்த்தை கூறுகிறான். ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தையே வாக்களிக்கிறான். அவர்கள் தங்குமிடம் நரகம். அதிலிருந்து தப்பிக்கும் வழியை அவர்கள் காண மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 4:118 – 121)

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.

(அல்குர்ஆன் 16:125)

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.

(அல்குர்ஆன் 7:179)

இங்கே குருடராக இருப்பவர் மறுமையிலும் குருடராகவும், வழி கெட்டவராகவும் இருப்பார்.

(அல்குர்ஆன் 17:72)

அவர்களில் பெரும்பாலோர் செவியுறுகிறார்கள் என்றோ, விளங்குகிறார்கள் என்றோ நீர் நினைக்கிறீரா? அவர்கள் கால்நடைகள் போன்றே தவிர வேறில்லை. இல்லை! (அதை விடவும்) வழி கெட்டவர்கள்.

(அல்குர்ஆன் 25:44)

இறைவனின் பேரருளில் நம்பிக்கை இழந்தவர்களும் (15:56), பெரும்பான்மையை பின்பற்றுபவர்களும் (6:116) வீண் தர்க்கத்தில் ஈடுபடுபவர்களும் (11:48, 25:9), பாவங்களில் மூழ்கிவிடுபவர்களும் (26:99), வீண் விரயம் செய்பவர்களும் (40:34) வழிகேடர்களே என்கிறான்.

வளல்லால்லீன் எனக் கூறும் போது இறைவா! இத்தகைய செயல்களை விட்டும் எங்களைக் காத்து நல்லவர்களின் பாதையில் நடக்கச் செய்வாயாக என்று உணர்ந்து கூற வேண்டும்.