Tamil Bayan Points

11) பேரண்டம் படைக்கப்பட்டது எதற்காக?

நூல்கள்: திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

Last Updated on February 24, 2022 by

அத்தியாயம் 10

பேரண்டம் படைக்கப்பட்டது எதற்காக?

சென்ற அத்தியாயத்தில் மனிதனை ஒரு சமூக விலங்காக கொள்வது தவறு எனக் கண்டோம். மனிதன் தன்னுடைய உயிரியல் அமைப்பில் விலங்கைப் போன்ற வனாக இருப்பினும் அவனுடைய வாழ்கையைப் பொருத்த வரை இரண்டு இலட்சியங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று அவனுடைய உலகியல் வாழ்க்கையை அமைதிக்கு அடிப் படையாக அமைத்தலாகும். அவனுடைய சமூக வாழ்க்கை இந்த இலட்சியத்தை நிறைவேற்றுவதற்காக அமைக்கப்பட்ட தாகும். மனித வாழ்க்கையின் மற்றொரு இலட்சியம் அவனுடைய ஆன்மாவைத் தூய்மைப் படுத்தலாகும். இந்த இரண்டாவது இலட்சியமே ஆன்மீகத் தலத்தில் ஒரு உயிரினத்திற்கு மனிதன் எனும் தகுதியை வழங்குகிறது.

(உயிரியல் அடிப்படையில் ஓர் உயிரினத்தின் மனிதனாகும் தகுதிக்கு “பகுத்தறிவே (புத்திமதி – Intellect) போதுமானதாகும் என முன்னர் கண்டோம்.)

உலகில் தோன்றும் பகுத்தறிவுள்ள உயிரினங்கள் யாவுக்கும் உயிரியல் அடிப்படையில் மனிதனாகும் தகுதி உண்டென்றாலும் அவர்களில் ஒரு சிறுபான்மையினர் மட்டுமே ஆன்மீகத் தலத்தில் மனிதனாகும் தகுதியை உருவாக்கிக் கொள்கின்றனர். மனிதனுக்குள் இருக்கும் தனிநபர் சிறப்பில்பே அவர்களை ஆன்மீக தலத்தில் மனிதனாக ஆக்கும் தகுதியையோ அல்லது மனிதனாக அல்லாமல் (விலங்கினும் கீழானதாக) ஆக்கும் தகுதியையோ உருவாக்குகிறது.

இம்மாபெரும் பேண்டம் என்பது ஓர் உயிரினத்தை மேற்கூறிய இலண்டு தலங்களிலும் மனிதனாக்குவதில் இன்றியமையாத பங்களிக்கிறது. அதோடு உயிரியல் தலத்தில் மனிதனாக இருப்பவரை ஆன்மீக தலத்தில் மனிதனாக்குவதற்கு இம்மாபெரும் பேரண்டம் மிக மிக இன்றியமையாததாகும்.

மனிதனின் படைப்புத் திறன்

நாம் இப்போது உயிரியல் தலத்தில் மனித வாழ்க்கைக்கு பேரண்டம் எவ்வாறு இன்றியமையாத வகையில் பயன் படுகிறது என்பதைப் பார்ப்போம். உயிரியல் தலத்தில் மனிதனின் வரைவிலக்கணம் அவனொரு “பகுத்தறிவுள்ள உயிரினம் (Intelligent Being) என முன்னர் கண்டோம். அவன் பெற்றுள்ள இந்த பகுத்தறிவு எனும் பிறவிக்குணம் அவனை ஓயாமல் கற்கச் செய்து கொண்டிருக்கிறது. கல்வியின் மீது அவன் கொண்டுள்ள இந்த அடக்க முடியாத ஆர்வம் அவனை எப்போதும் புதியபுதிய விபரங்களை – அதுவரை அவன் அறியாதிருந்தவைகளைக் – கற்பவனாக மாற்றி முடிவில் ஏனைய உயிரிங்கள் எதற்கும் இல்லாத படைக்கும் திறனைப் பெற்றவனாக (மெய்யான படைப்பாளன் – ஒருபொருளை முழுமையாகப் படைக்கும் திறனுள்ளவன் – இறைவன் ஒருவனே என்பதை கவனத்தில் கொள்க) அவனை உயரச் செய்கிறது.

அவன் இதுவரை படைத்துள்ள இலட்சக் கணக்கான வெவ்வேறு பொருட்களில் தொலை நோக்கி என்பதும் ஒன்றாகும். இந்த தொலை நோக்கியின் உதவியைக் கொண்டு எந்த காலக்சி மனித வாழ்க்கைக்கு போதுமானது எனக் கூறிக் கொண்டிருக்கிறார்களோ அந்த காலக்சியையும் தாண்டி அதற்கப்பால் உள்ள கோடிக் கணக்கான காலக்சி களில் இப்போதே ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறான். அவன் படைத்த நிறமாலை நோக்கி எனும் கருவியைக் கொண்டு அந்த காலக்சியிலுள்ள நட்சத்திரங்களில் என்னென்ன தனிமங்கள் இருக்கின்றன என்பதை இந்த பூமியில் இருந்து கொண்டே ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஹார்வர்டு ஆராய்ச்சிக் கல்லூரியைச் (Harward collage of Observatory) சார்ந்த திருமதி. ஹென்ரிட்டா எ. லெவித் (Miss. Hendritta S. Levith) என்பவரின் கற்கும் திறமை நட்சத்திரங்களின் ஒளியில் காணப்படும் ஏற்றஇறக்கங்களும் (Fluctuation) அததற்குரிய காரணமும் கண்டுபித்ததின் வாயிலாக விஞ்ஞானிகளின் தொலைநோக்கியில் சிக்கும் ஏனைய காலக்சிகளின் நட்சத்திரங்கள் கூட எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பதை அளவுநாடாவைப் (Measuring tap) பயன்படுத்தாமலே அல்லது தலையைச் சுற்ற வைக்கும் கணித விதிகளையோ சமன்பாடுகளையோ பயன்படத்தாமல் மிக எளிதாகக் கண்டுபிடிப்பதற்கு ஒரு பிழையற்ற நடைமுறை சாத்தியமான வழிமுறையைக் கண்டுபிடித்துத் தந்தது.

எட்வின் ஹப்பிள் எனும் அறிவியலாரின் கல்வித் திறன் பேரண்டத்திலுள்ள காலக்சிகளெல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று ஒயாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றன என்பதையும் அவைகளின் நகர்வுக்கான விதியையும் (காலக்சிகள் நம்மிடமிருந்து தொலைவாகச் செல்லச் செல்ல அத்தொலை களுக்கேற்ற நேர்விகிதத்தில் (Directly Proportional) அவற்றின் நகரும் வேகம் அதிகரிக்கிறது எனும் விதி) கண்டுபிடித்தது.

மானிடனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் திருக்குர்ஆன் கூறிய கல்வித்திறனை அடையாளம் காண்பதற்காக கூறப்பட்ட சில உதாரணங்களே இவைகளாகும். இதைப் போன்று ஏராளமான ஆய்வுகள் பால்வழி மண்டலத்திற்கு அப்பாலுள்ள காலக்சிகளில் இப்போதே நடந்து வருகின்றன. இந்த நிலையில் நமது பேரண்டம் ஒரேஒரு காலக்சியை மட்டுமே உள்ளடக்கியதாக இருந்திருப்பின் மேற்கூறப் பட்டதும் கூறப்படாததுமாகிய ஆய்வுகள் பலவும் மனிதனால் நிகழ்த்த முடிந்திருக்குமா?

மானிடனின் கல்வித்திறன் எக்காலமும் முன்னேற்றப் பாதையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளிலேயே பூமியில் தோன்றப் போகும் எதிர்காலச் சந்ததியினர் எவ்வளவு கண்டுபிடிப்புகளை சிகழ்த்தக் கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு சிந்ததித்தால் நமது பேரண்டம் ஒரேஒரு காலக்சியோடு முவுற்று இருந்திருப்பின் எதிர்காலச் சந்ததியினர்களால் கூட அவர்களின் கல்வித் திறனை நமது காலக்சிக்கு அப்பால் செயல்படுத்த முடியாது என்பதில் ஐயமில்லை. இந்த விளக்கங்கள் யாவும் இம்மாபெரும் பேரண்டத்திற்கு பதில் ஒரே ஒரு காலக்சி மட்டுமே இருந்திருந்தால் அந்த காலக்சி மானிடனின் கல்வித் திறனை முழுமையாகப் பயன்படுத்தி அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்படவில்லை என்பதே அதன் பொருளாகும்.

மானிடனுக்கு வழங்கப் பட்டுள்ள கல்வித் திறனே உயிரியல் அடிப்படையில் மனிதனை மனிதானாக்குகிறது என்பதை முன் அத்தியாயத் தில் நாம் மிக மிக விளக்கமாக ஐயத்திற்கிடமின்றி கண்டுள் ளோம். எனவே சுருங்கக் கூறின் ஓர் உயிரினத்தை இப்போது மட்டுமின்றி அந்த உயிரினம் உலகில் உள்ளளவும் அதை மனிதனாக வாழச் செய்வதற்கு இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையாகும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இப்போது எதிர்கால அறிவியல் உலகம் மனிதனின் தோற்றத்திற்கோ அவனுடைய காலக்சியின் தோற்றத்திற்கோ இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையில்லை என நிரூபித் தாலும் எக்காலமும் வளர்ந்து கொண்டிருக்கும் மனிதனின் கல்வித் திறன் வெளிப்படுவதற்கு இவ்வளவு பெரிய பேரண்டம் இன்றியமையாததாகும் என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை. மேலும் அந்த அறிவின் மூலப் பொருட்களில் ஒன்றாக இப்பேரண்டம் தவிர்க்க முடியாதபடி இடம் பெற்றுள்ளது என்பதும் அதற்குரிய காரணமாகும்.

கல்வித் திறனின் முக்கியத்துவம்

மனிதனின் வாழ்க்கைக்கு என்னென்ன தேவை என்பதை பரிசீலனை செய்யும் போது கல்வியாளர்களில் கூட பலரும் செய்யும் தவறு மனிதனின் உடல் வளர்ச்சிக்கு என்னென்ன தேவை என்பது மட்டுமே சிந்திக்கிறார்கள் என்பதாகும். மனிதனைத் தவிர ஏனைய முப்பது இலட்சம் உயிரினங்களும் (உலகில் இன்றுவரை கண்டுபிடிக்கப் பட்டவை) அவைகளின் உடலமைப்பிற்குரிய அடையாளங் களாக (உடல் அமைப்பிற்கப்பால் எதையும் செய்ய முடியாதவைகளாக) வாழ்வதால் அவைகளின் தேவை களைப் பற்றி சிந்திக்கும் போது அவைகளின் உடல் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பதைப் பற்றி சிந்தித்தால் போதுமானதாகும்.

ஆனால் மனிதனையும் அந்த பட்டியலில் சேர்ப்பது அவனை வெறும் ஒரு சமூக விலங்காக மட்டும் கருத்தில் கொள்வதால் ஏற்படும் தவறாகும். மனிதனுக் கென்று ஒரு உடலமைப்பு உண்டு என்பது உண்மையே எனினும் அவனுக்குள் `கற்கும் திறன் எனப்படும் ஒன்று உண்டு என்பது மனிதனுக்கு உடலமைப்பு உண்டு என்பதை விட பெரிய உண்மையாகும்.

எனவே மனிதனின் தேவை களைப் பற்றி சிந்திக்கும் போது அவனுடைய உடல் வளர்ச்சிக்கு தேவையானவைகளைப் பற்றி சிந்திப்பதை விட மிகுதியாக அவனுடைய கற்கும் திறமையைச் செயல்படுத்து வதற்கு தேவையானவைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாகும். இந்தச் சிந்தனைக்கு மட்டுமே மனிதனுக்கும் இம்மாபெரும் பேரண்டத்திற்கும் இடையிலுள்ள உறவையும் மானிட வாழ்க்கை இம்மாபெரும் பேரண்டத்தின் இன்றியமையா தேவையையும் புரிந்து கொள்ள முடியும்.

மனிதனின் கல்வித் திறனுக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமா?என இப்போதும் கூட சிலர் ஐயுறக் கூடும். அனால் மனிதனிலிருந்து கற்கும் திறனை எடுத்துவிட்டால் அவன் ஒரு விலங்கைப் போன்றவனாக அன்றி அவன் ஒரு விலங்காகவே மாறி விடுகிறான். ஏனெனில் விலங்கின் உடலமைப்பிலிருந்து மனிதனின் உடலமைப்பு எவ்வகையிலும் சிறப்படைவ தில்லை.

ஆனால் ஏனைய உயிரினங்கள் அவைகளின் உடலமைப்பின் இயற்கை நிலைக்கு (இயல்புக்கு) அடிமைப்பட்டு வாழும் போது மனிதனை மட்டும் அவனுடைய உடலின் இயற்கைக்கு பலவிதத்திலும் கட்டுப்படாமல் வாழச் செய்யும் ஆற்றலை வழங்குவது அவனுக்குள் இருக்கும் கல்வித் திறனாகும் என்பதை அடிவரை இட்டு கருத்தில் கொள்ள வேண்டும்.

இயற்கையை வெல்லும் மனிதன்

மனிதனின் உடலமைப்பு அவனை இயற்கையாகவே நீரில் வாழ அனுமதிப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால் கடலிலேயே வாழும் இயற்கை அமைப்பை உடலில் பெற்றுக் கொண்ட மீன்களால் கூட செல்ல முடியாத ஆழ்கடலின் அடிமட்டங்களுக்கு மனிதன் சென்று வந்து அவன் அவனுடைய உடலமைப்பின் இயற்கைக்கு கட்டுப்பட்டவன் இல்லை என்பதை நிலைநாட்டுகிறான். பறவைகளைப் போன்று காற்றில் பறக்கும் உடலமைப்பை அவன் பெற்றுக் கொள்ளவில்லை. ஆயினும் பறவைகளால் கூட செல்லமுடியாத உயரத்தில் அவன் ஆய்வுக் கூடங்களை (Skylabs) அமைத்துப் பணியாற்றுகிறான்.

மிகப் பெரும் உடல் வலிமையைப் பெற்ற யானைகள் கூட அற்பமான உடல் வலிமையுள்ள மனிதனை மட்டும் தன் முதுகிலேற்றி அவனுடைய கட்டளைக்கு அடிபணிவது யானையின் இயற்கைக் குணத்தால் இல்லை. அதுவும் கூட மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வித் திறனின் ஆற்றலே அன்றி வேறில்லை.

மனிதன் சிறுகச் சிறுக இயற்கையை அடிமைப்படுத்தி தனது ஆற்றலை படிப்படியாக பெருக்கிக் கொண்டே வருகிறான் என்பதற்கு மேற்கண்டவை வெறும் உதாரணங் களாகும். மனிதனை மனிதன் என்ற சொல்லுக்கு தகுதியான வனாக ஆக்குவது அவனுக்குள் இருக்கும் கல்வித் திறமையே என்பதற்கு மேற்கண்டவை போன்று நூற்றுக் கணக்கான உதாரணங்கள் நம் கண்ணெதிரே இருக்கும் போது மனிதனின் கல்வித் திறனுக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமா என்ற கேள்வி அறியாமையாகும் என்பதற்கு இதற்கு மேலும் விளக்கங்கள் தேவையில்லை எனக் கருதுவோம். எனவே ஒரு உயிரினத்தை அவனுடைய உயிரியல் தலத்தில் மனிதனாக்குவதற்கு இம்மாபெரும் பேரண்டம் இன்றியமையாத பங்கு செலுத்துகிறது என்பதிலும் இதற்கு மேல் ஐயம் ஏற்பட வாய்ப்பிருக்காது.

மானிடப் படைப்பின் நோக்கம்

இந்த அத்தியாயத்தில் நாம் இதுவரை கூறியதையும் இதற்கு முந்தைய அத்தியாயத்தில் நாம் விவாதித்தவை களையும் கவனமாகப் பார்வையிடும் ஒருவரால் இறைவன் படைத்த இலட்சக் கணக்கான வெவ்வேறு வகை உயிரினங் களில் ஒன்றை மனிதனாக ஆக்கும் ஒரே நோக்கத்திற்காகவே இம்மாபெரும் பேரண்டம் படைக்கப்பட்டது என்பதைக் காண முடியும். எனவே இயல்பாகவே அவனிடத்தில் கேள்வி ஒன்று எழக்கூடும்.

ஓர் உயிரினத்தை மனிதனாக்குவதன் வாயிலாக (இதை வேறு வார்த்தைகளில் கூறினால்“மனிதனைப் படைப்பதன் வாயிலாக) அவனிடமிருந்து இறைவன் என்ன எதிர்பார்க்கிறான்?என்பதே அக்கேள்வியாகும். உள்ளபடியே கேள்விகளுக்கெல்லாம் பிரதானமாக இருக்கும் தகுதி பெற்ற கேள்வியே இக்கேள்வியாகும். இக்கேள்விக்கு விளக்கமான பதிலை அடுத்த அத்தியாயத்தில் கூறியுள்ளோம். இருப்பினும் இந்த இடத்திற்கு ஒரு சுருக்கமான பதிலை இப்படிக் கூறலாம். “பரலோக வெற்றி பெற்று அழிவிலா இன்பத்தைப் பெற்று என்றென்றும் வாழ்வதற்குத் தகுதி வாய்ந்தவனாக அவன் ஆவதையே அவனிடமிருந்து அவனது இறைவனின் எதிர்பார்ப்பாகும்.

பரலோகத்தில் ஒருவர் வெற்றிபெற வேண்டுமாயின் இவ்வுலக வாழ்க்கையில் அவர் தமது ஆத்மாவைத் தூய்மைப் படுத்த வேண்டும். ஆத்தைத் தூய்மைப்படுத்துதல் என்றால் ஆத்மாவைப் படைத்தவனும் அது குடியிருக்கும் உடலைப் படைத்தவனும் அந்த உடலுக்குத் தேவையானதை நிறைவேற்ற இவ்வுலகைப் படைத்தவனுமாகிய இறைவன் எதை எதைத் தின்மை என்று கூறுகிறானோ அவைகளின் பால் அணுகாமல் இருத்தலும் எவை எவை நன்மை எனக் கூறியுள்ளானோ அவைகளைக் கடைபிடிப்பதில் முழு முயற்சி செய்வதுமாகும்.

ஆத்மாவைத் தூய்மைப்படுத்துவது எவ்வாறு எனப் புரிந்து கொண்டோம். ஆயினும் அதற்கும் பேரண்டம் இவ்வளவு பிரமாண்டமாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று இன்னமும் விளங்காதிருக்கலாம். ஆத்மாவைத் தூய்மைப்படுத்துவதற்குத் தடங்கலாக இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி தெரிந்து கொள்ளும் போது மட்டுமே இப்பேரண்டத்தின் கற்பனையில் அடங்காத பிரமாண்டப் பேருருவம் மனிதனின் பரலோக வெற்றிக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை விளங்க முடியும். எனவே அவை களைப் பற்றிய சில சுருக்கமான செய்திகளைப் பார்ப்போம்.

மறுமையின் நம்பிக்கையில் பேரண்டத்தின் பணி

ஆத்மாவைத் தூய்மைப்படுத்துதல் என்பதை இறைவ னின் கட்டளைக்கு அடிபணிதல் என சுருங்கக் கூறலாம். இதை ஒருவர் செய்ய வேண்டுமானால் அவர் முதலாவதாக தம்மைப்படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை நம்ப வேண்டும். அதை நம்புவதற்கு இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையில்லை என்பது உண்மையாகும். ஏனெனில் இப்பேரண்டத்தைப் போன்று கோடிக் கணக்கான பேரண்டங்கள் படைக்கப்பட்டிருந்தாலும் இறைவனை நம்பாதவர்கள் அப்போதும் இருக்கதாம் செய்வார்கள்.

அதற்குரிய காரணத்தை (இறைவனை நம்புவதில் நாத்திகச் சிந்தனைகளுக்குத் தடையாக இருப்பவைகளை) முன்னர் நாம் கண்டுள்ளோம். ஆயினும் ஒருவர் இறைவனுக்கு அடிபணிந்து வாழ வேண்டுமென்றால் அவருக்குப் பரலோக வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்பட வேண்டும். இந்தப் பிரச்சனையில் தாம் நமது பேரண்டத்தின் கற்பனைக் கெட்டா பேருருவம் தொடர்பு கொண்டுள்ளது.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகிற்கு முடிவு காலம் ஒன்று உண்டு என்றும் அப்போது இப்பேரண்டத்தை அழித்துவிட்டு இதை விடச் சிறந்த மற்றொரு பேரண்டத்தை இறைவன் படைப்பான் என்றும் அப்பேரண்டத்திலேயே சொர்க்கமும், நரகமும் இறைவனின் விசாரணை மன்றமும் அமைய இருக்கிறது என்றும் அப்பேரண்டமே பரலோகமாகும் என்றும் ஒருவர் நம்ப வேண்டும். அங்கு நடைபெறும் இறைவனின் நீதிமன்ற விசாரணையில் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தவர்கள் முடிவே இல்லாத சொர்க்கத்தின் சுக வாழ்விற்கும் இறைவனுக்குக் கட்டுப்படாதவர்கள் முடிவே இல்லாத நரக வாழ்க்கைகும் ஆளாக்கப்படுவார்கள் என்பதையும் அவர் நம்ப வேண்டும்.

ஆனால் உலகில் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் இறைவனை நம்புகின்ற போதிலும் பரலோக வாழ்க்கையில் அவர்களில் பெரும் பாலானோர் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதே உண்மை யாகும். இறைவனிடம் நம்பிக்கை கொண்ட பிறகும் பரலோகத்தில் நம்பாமலிருப்பதற்கு இறைவனின் அபாரமான ஆற்றலைப் புறக்கணிப்பது ஒரு பிரதான காரணமாகும்.

மனிதனுடைய விஞ்ஞான அறிவு வளர்ச்சி அடையாமல் இருந்தபோது இறைவனுடைய ஆற்றல் அபாரமானது என்பதில் நம்பிக்கை கொள்வதற்கு அவன் வாழும் பூமியும் அந்த பூமியில் உள்ளவைகளும் அவனுடைய வெறும் கண்களால் அவன் கண்ட வானமும்,சூரியன், சந்திரன், நட்சத்திராதிகளுமே போதுமானதாக இருந்தது. ஆயினும் மனிதனின் கல்வித் திறன் அவனுடைய விஞ்ஞான அறிவை படிப்படியாக வளரச் செய்து அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் காலக்சியையும் ஊடுருவிப் பார்க்கும் ஆற்றலைப் பெறும் போது அந்த காலக்சிக்கப்பால் ஒன்றுமே இல்லாதிருப்பின் இறைவனின் ஆற்றலை விளங்கிக் கொள்வதில் அவனுக்குப் பெரும் பிழை ஏற்பட்டு விடக் கூடும்.

அந்தப் பிழையான எண்ணம் மறுமைக்கான நேரம் வரும்போது இறைவன் இப்பேரண்டத்தை அழித்துவிட்டு இதனினும் சிறந்த மற்றொரு பேரண்டத்தைப் படைக்க ஆற்றல் பெற்றவன் எனும் நம்பிக்கையையும் பாதிக்கக் கூடியதாகவே இருக்கும். இதற்கு மாறாக மனிதனின் விஞ்ஞான அறிவு வளர வளர அவன் உருவாக்கும் தொலைநோக்கிகளின் பார்வைத் திறனும் வளர வளர பேரண்டங்களில் உள்ள காலக்சிகளின் எண்ணிக்கைகளும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே சென்றால் இறைவனின் ஆற்றலைப் பற்றிய அறிவியல் சமுதாயத்தின் மதிப்பீட்டில் கூட பிழை ஏற்படுவதற்கு அறவே வாய்ப்பு ஏற்படப் போவதில்லை. இறைவனின் ஆற்றலைப் பற்றிய இந்த பிழையற்ற சிந்தனை பரலோக வாழ்க்கையி லுள்ள நம்பிக்கைக்கு அறிவியல் சமுதாயத்திற்கு பலமான அடிப்படையும் அத்தாட்சியுமாகும்.

இம்மையினும் மறுமை பெரிது

மேற்கண்ட இரத்தினச் சுருக்கமான விளக்கத்திலிருந்து இப்பேரண்டத்தை இவ்வளவு பிரமாண்டமான பேருருவத் துடன் படைத்தன் வாயிலாக இறைவனின் ஆற்றல் அபார மானது என்றும் இப்பேரண்டத்தை அவன் அழித்துவிட்டு இதனினும் சிறந்த ஒன்றைப் படைப்பதற்கு அவன் ஆற்றல் பெற்றவன் என்பதற்கு மிக வலுவான ஆதாரமாக அதை ஆக்கியுள்ளான் என்பதையும் ஐயமறத் தெரிந்து கொள் கிறோம்.

இறைவனின் இந்த நடவடிக்கை உள்ளபடியே மனிதனுக்கு பரலோக வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்தி அவனை இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கச் செய்து அவனுடைய ஆத்மாவைத் தூய்மைப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுகிறதன்றோ! இதன் காரணமாகவே ஓர் உயிரினத்தை உயிரியல் அடிப்படையில் மனிதனாக்குவதற்கு இம்மாபெரும் பேரண்டம் தேவையான போதிலும் உயிரியல் அடிப்படையில் மனிதனாக இருப்பவனை ஆன்மீக அடிப்படையில் மனிதனாக ஆக்குவதற்கு இப்பேரண்டம் மிகமிகத் தேவை என்று கூறியதற்குக் காரணமாகும்.

மேலும் பரலோகத்தில் மனிதன் அனுபவிக்கப் போகின்ற இன்ப வாழ்க்கையாயினும் துன்ப வாழ்க்கையாயினும் அதன் தரத்தோடும் எல்லையற்ற அதன் கால அளவோடும் ஒப்பிடும் போது உலக வாழ்க்கை என்பது புறக்கணிக்கத்தக்க வீரியமற்ற சொற்ப நேர நிகழ்ச்சியாகும். எனவே பரலோக வாழ்க்கையில் வெற்றிக்குதவும் நம்பிக்கையை மனிதனுக்குள் உருவாக்கும் அபாரமான இறையாற்றலின் வெளிப்பாடாக இப் பேரண்டத்தை இறைவன் படைத்திருப்பது பரலோக வாழ்க்கையில் மனிதனை வெற்றி அடையச் செய்வதில் பெரிதும் உதவுகிறது என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.

பரலோக வெற்றிக்கு உழைக்கும் குணமே ஆத்மீக அடிப்படையில் ஒருவரை மனிதனாக்கும் காரணியாகும். மனிதனால் சுயமாகத் தீர்மானிக்க முடியாத பரலோக வெற்றிக்குரிய காரியங்களை மனிதனுக்கு ஆத்மாவை வழங்கிய (தனி நபர் சிறப்பியல்பைத் தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் இயல்பை அவனுடைய படைப்பில் அமைத்த) இறைவனால் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

அந்த செய்திகளை மனிதனுக்கு அறிவித்து அவனது படைப்பின் இலட்சியத்தைப் பூர்த்தி செய்வதற்காகவே அவனுடைய கலைக் கல்லூரிகளாக இம்மாபெரும் பேரண்டத்தைப் படைத்து அவன் படிக்க வேண்டிய பாட புத்தகங்களாக வேதங்களை இறக்கி அவனது பேராசிரியர்களாக தூதரையும் வழங்கி மனித குலத்தை இறைவன் மிக மிகக் கண்ணியப் படுத்தினான்.

ஆனால் மனிதர்களில் ஒரு குழுவினர் இதைப் பற்றியயெல்லாம் சிந்திக்காமல் `ஆகாயங்களும் பூமியும் எல்லாம் மனிதர்களுக்காகவே இறைவன் படைத்தான் எனில் பேரண்டம் ஏன் இவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது? என வினவிக் கொண்டிருக்கின்றனர்.

இக்கேள்விக்கு மனிதனுக்காக படைக்கப்பட்ட பேரண்டம் இவ்வளவு பிரமாண்டமானதாகவே இருக்க வேண்டும் எனும் பதிலை ஐயத்திற்கிடமில்லாமல் கண்டு விட்டோம். எனவே அறிவியல் சமூகம் எழுப்பும் அதிமுக்கிய மான வேறு சில கேள்விகளின்பால் இப்போது கவனம் செலுத்துவோம்.