Tamil Bayan Points

11) காத்துக்கொள்ளும் வழிமுறைகள்

நூல்கள்: ஜின்களும் ஷைத்தான்களும்

Last Updated on December 22, 2022 by Trichy Farook

11) காத்துக்கொள்ளும் வழிமுறைகள்

ஷைத்தான்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள அனைவரும் விரும்புகிறோம். இதற்கான வழிமுறைகள் குர்ஆனும் ஹதீஸ்களும் நமக்கு தெளிவாக கற்றுத்தருகிறது. இவற்றை அறியாத காரணத்தால் இஸ்லாமிய சமூகத்தில் வாழும் பலர் தகடு தாயத்து போன்ற இணைவைப்புக் காரியங்களிலும் சூடமேற்றுதல் திருஷ்டி கழித்தல் முட்டையை உடைத்தல் குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்து குடித்தல் போன்ற மூடநம்பிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாற்று மதத்தினரைப் பார்த்து காப்பியடிக்கப்பட்ட இந்த அனாச்சரங்கள் ஷைத்தானின் செயல்பாடுகளாகும். இவற்றை செய்தால் ஷைத்தானின் வலையில் விழுமுடியுமே தவிர அவனிடமிருந்து ஒரு போதும் காத்துக்கொள்ள இயலாது. பின்வருகின்ற விஷயங்களை கடைபிடிப்பதன் மூலமே ஷைத்தானிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்.

சிறந்த பாதுகாவலன்

ஷைத்தானுடைய சதியிலிருந்து தப்பிப்பதற்கு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவதை விட சிறந்த வழி எதுவும் இருக்க முடியாது. ஷைத்தானை படைத்த வல்ல இறைவன் ஷைத்தானின் தீங்குகளிலிருந்து நம்மைக் காக்கும் சிறந்த பாதுகாவலன் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பின்வரும் வசனங்களை இதையே நமக்கு எடுத்துரைக்கிறது.

8:40 وَاِنْ تَوَلَّوْا فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَوْلٰٮكُمْ‌ؕ نِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ‏

அவர்கள் புறக்கணித்தால் அல்லாஹ் உங்களின் பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவன் சிறந்த பாதுகாவலன். சிறந்த உதவியாளன்.

அல்குர்ஆன் (8 : 40)

4:45 وَاللّٰهُ اَعْلَمُ بِاَعْدَآٮِٕكُمْ‌ؕ وَكَفٰى بِاللّٰهِ وَلِيًّا وَّكَفٰى بِاللّٰهِ نَصِيْرًا

உங்கள் பகைவர்களை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்; அல்லாஹ் உதவி செய்யப் போதுமானவன்.

அல்குர்ஆன் (4 : 45)

7:196 اِنَّ وَلىِّۦَ اللّٰهُ الَّذِىْ نَزَّلَ الْـكِتٰبَ ‌ۖ  وَهُوَ يَتَوَلَّى الصّٰلِحِيْن

“இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வே எனது பொறுப்பாளன். அவனே நல்லோருக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்” (என்றும் கூறுவீராக!)

அல்குர்ஆன் (7 : 196)

2:257 اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ‌ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓـــُٔهُمُ الطَّاغُوْتُۙ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِ‌ؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏

நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் உதவுபவன். இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கு அவர்களைக் கொண்டு செல்கிறான். (ஏக இறைவனை) மறுப்போருக்கு தீய சக்திகளே உதவியாளர்கள். வெளிச்சத்திலிருந்து இருள்களுக்கு அவர்களைக் கொண்டு செல்கின்றனர். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பர்.

அல்குர்ஆன் (2 : 257)

இறைவனிடம் கையேந்துங்கள்

சகல வல்லமையும் படைத்த இறைவனிடத்தில் கையேந்தி பாதுகாப்புத் தேடுமாறு திருக்குர்ஆன் நமக்குக் கற்றுத்தருகிறது. ஷைத்தானிடமிருந்து தப்பிப்பதற்கு அற்புதமான இந்த வழியை விட்டால் வேறு வழி இல்லை.

7:200 وَاِمَّا يَنْزَغَـنَّكَ مِنَ الشَّيْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ‌ؕ اِنَّهٗ سَمِيْعٌ عَلِيْمٌ

ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (7 : 200)

41:36 وَاِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ‌ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏

ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதும் தீண்டுதல் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (41 : 36)

23:97 وَقُلْ رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ

23:98 وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ

“என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்றும் “என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.” என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் (23 : 97)

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ (1) مَلِكِ النَّاسِ (2) إِلَهِ النَّاسِ (3) مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ (4) الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ (5) مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ (6)

(முஹம்மதே!) மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!

அல்குர்ஆன் (114)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு) பிரார்த்திப்பார்கள். இறைவா உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து மரணிப்பதை விட்டும் இடிபாடுகளுக்குள் சிக்கி மரணிப்பதை விட்டும் நீருக்குள் மூழ்கி மரணிப்பதை விட்டும் நெருப்பில் கருகி மரணிப்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

மரண வேளையில் ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். உன்னுடைய வழியை விட்டு புறக்கணித்தவனாக நான் மரணிப்பதை விட்டும் (விஷ ஜந்துக்களால்) தீண்டப்பட்டு மரணிப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

அறிவிப்பவர் : அபுல் யசர் (ரலி)

நூல் : நஸாயீ-5531 (5436)

குர்ஆனை ஓதும் போது….

முக்கியமான சில இடங்களில் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடுமாறு இஸ்லாம் கற்றுத்தருகிறது. இதை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் ஷைத்தானின் தீங்குகளை விட்டும் நாம் பாதுகாக்கப்படுவோம்.

16:98 فَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ فَاسْتَعِذْ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ‏

நீ குர்ஆனை ஓதும் போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்!

அல்குர்ஆன் (16 : 98)

கழிவறைக்குள் நுழையும் போது…

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, “இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புகாரி-142 

உடலுறவு கொள்ளும் போது…

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் தன் வீட்டாரிடம் (உடலுறவு கொள்ள) வந்து, “பிஸ்மில்லாஹ் -அல்லாஹ்வின் திருப்பெயரால்- இறைவா! ஷைத்தானை எங்களிடமிருந்து விலகியிருக்கச் செய். எங்களுக்கு நீ அளிக்கும் சந்ததிகளிடமிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்” என்று பிரார்த்தனை புரிந்து, பிறகு அவர்களுக்குச் சந்ததி அளிக்கப்பட்டால் அந்தச் சந்ததிக்கு ஷைத்தான் தீங்கு செய்ய மாட்டான்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி-3271 

காலையிலும் மாலையிலும்

அல்லாஹ்வின் தூதரே காலையிலும் மாலையிலும் ஓத வேண்டியதை எனக்குக் கற்றுத்தாருங்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் உறங்கச் செல்லும் போது அல்லாஹும்ம ஆலிமல் கைபி வஷ்ஷஹாததி ஃபாதிர ஸ்ஸமாவாதி வல்அர்ளி ரப்பி குல்லி ஷையின் வமலீகஹு அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த அவூது மிக மின் ஷர்ரி நஃப்ஸி வமின் ஷர்ரிஷ்ஷைதானி வஷிர்கிஹி என்று சொல்லுங்கள் எனக் கூறினார்கள்.

பொருள் : “அல்லாஹ்வே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்தவனே! அனைத்துப் பொருட்களின் இரட்சகனும் அதிபதியுமானவனே உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். உன்னிடத்தில் என் உள்ளதின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் அவனை இணையாக்குவதை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : திர்மிதீ-3392 (3314)

ஃபஜர் தொழுத பிறகு….

நபியவர்கள் கற்றுக் கொடுத்த ஏகத்துவ வாக்கியத்தை மொழியும் போது அழிவுகளிலிருந்து முஸ்லிம் காக்கப்படுகிறான். ஆனால் இணைவைப்பு என்ற பாவத்தைச் செய்து விட்டால் இந்த பாதுகாப்பு அகன்று நாசமாகி விடுகிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஃபஜர் தொழுகைக்குப் பிறகு இரு கால்களையும் மடக்கியவாறே (வேறு விஷயங்களை) பேசுவதற்கு முன்னால் லாயிலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹூ லாஷரீக்க லஹூ லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீ(த்)து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் என்று பத்து முறை எவர் கூறுகிறாரோ அவருக்குப் பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன.

பத்து பாவங்கள் அவரை விட்டும் அழிக்கப்படுகின்றன. அவருக்காகப் பத்து தகுதிகள் உயர்த்தப்படுகின்றன. அந்த நாள் முழுவதும் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறார். ஷைத்தானிடமிருந்தும் பாதுகாக்கப்படுகிறார். அந்நாளில் அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெந்த பாவத்தாலும் அவரை நாசமாக்க இயலாது.

பொருள் : அல்லாஹ் ஒருவனையன்றி வேறு யாரும் வணக்கத்திற்குத் தகுதியானவர்கள் இல்லை. அவனுக்கு எந்த நிகரும் இல்லை. அதிகாரமும், புகழும் அவனுக்கே உரியது. அவன் உயிர்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். எல்லாவற்றின் மீதும் அவன் ஆற்றல் உள்ளவனாக இருக்கிறான்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)

நூல் : திர்மிதீ-3474 (3396)

உறங்கச் செல்லும் முன்…

அல்வலீத் பின் வலீத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதரே எனக்கு பயம் ஏற்படுகிறது என்று (நபி (ஸல்) அவர்களிடம்) நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ உறங்கச் செல்லும் போது அவூது பிகலிமாதில்லாஹித் தாம்மதி மின் கலபிஹி வஇகாபிஹி வஷர்ரி இபாதிஹி வமின் ஹமசாதிஷ்ஷயாதீனி வஅய்யஹ்ளுரூனி என்று கூறு. இவ்வாறு நீ கூறினால் ஷைத்தானால் உனக்கு எந்த தீங்கும் ஏற்படாது. அவனால் உன்னை நெருங்கவே முடியாது.

பொருள் : அல்லாஹ்வின் முழுமையான வார்த்தைகளை கொண்டு அல்லாஹ்வின் கோபத்தை விட்டும் அவனது தண்டனையை விட்டும் அடியார்களின் தீங்கை விட்டும் ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் ஷைத்தான்கள் என்னிடம் வருவதை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

நூல் : அஹ்மத்-23839 (22719)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக் கொண்டேன்; “உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்” என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்……..)

இறுதியில் அவன், “நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்” என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்ன போது,) “அவன் பொய்யனாயிருந்தும், உங்களிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்” என்று கூறினார்கள்.

நூல் : புகாரி-3275 

கெட்ட கனவுகள் ஏற்படும் போது….

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஆகவே, எவரேனும் தாம் விரும்பாத (தீய கனவு) ஒன்றைக் கண்டால் அவர் தமது இடப்பக்கத்தில் மூன்று முறை துப்பட்டும்; ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அவருக்கு அது எந்தத் தீங்கும் இழைத்திட இயலாது. மேலும், ஷைத்தான் என் உருவத்தில் காட்சி தரமாட்டான்.

அறிவிப்பவர் : அபூக(த்)தாதா (ரலி)

நூல் : புகாரி-6995 

ஓரிடத்தில் தங்கும் போது…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கும்போது. “அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக’ என்று கூறினால். அவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்வரை அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.

அறிவிப்பவர் : கவ்லா பின்த் ஹகீம் அஸ்ஸுலமிய்யா (ரலி)

நூல் : முஸ்லிம்-5248 

பள்ளிக்குள் நுழையும் போது

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலிற்குள் நுழைந்தால் அவூதுபில்லாஹில் அளீம் வபிவஜ்ஹிஹில் கரீம் வசுல்தானிஹில் கதீம் மினஷ்ஷைதானிர் ரஜீம் என்று கூறுவார்கள்.

பொருள் : அல்லாஹ்வின் சங்கைக்குரிய முகத்தின் பொருட்டாலும் அவனது நிரந்தரமான அதிகாரத்தின் பொருட்டாலும் எடுத்தெரியப்பட்ட ஷைத்தானிடமிருந்து மகத்துவமிக்க அல்லாஹ்விடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

அறிவிப்பவர் : அம்ர் பின் ஆஸ் (ரலி)

நூல் : அபூதாவூத்-466 (394)

பள்ளியிலிருந்து வெளியேறும் போது….

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தால் (உங்கள்) நபிக்காக சலாத்தை வேண்டிய பிறகு அல்லாஹூம் மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக (இறைவா எனக்காக உனது அருள் வாயில்களை திறந்துவிடு) என்று கூறட்டும். அவர் வெளியே செல்லும் போது (உங்கள்) நபிக்காக சலாத்தை வேண்டிய பிறகு அல்லாஹூம் மஃஸிம்னீ மினஷ்ஷைதானிர் ரஜீம் (இறைவா எடுத்தெரியப்பட்ட ஷைத்தானிடமிருந்து என்னை காப்பாயாக) என்று கூறட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : இப்னு மாஜா-773 (765)

தொழுகையில் குழப்பம் ஏற்பட்டால்….

உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! (நான் தொழுது கொண்டிருக்கும்போது) எனக்கும் எனது தொழுகைக்கும் எனது ஓதலுக்குமிடையே ஷைத்தான் தடையாய் நின்று எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறான்” என்று கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன்தான் “கின்ஸப்’ எனப்படும் ஷைத்தான் ஆவான். அவனை நீங்கள் உணர்ந்தால் அவனிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் கோரி, உங்கள் இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் செய்தபோது, என்னிடமிருந்து அவனை அல்லாஹ் அப்புறப்படுத்திவிட்டான்.

அறிவிப்பவர் : அபுல்அலாஉ அல்ஆமிரீ (ரஹ்)

நூல் : முஸ்லிம்-4431 

கோபம் ஏற்பட்டால்….

நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்து விட்டது. அவருடைய தொண்டை நரம்பு புடைத்துக் கொண்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், “எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும்.

அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும், “ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும்” என்று கூறினார்கள். ஆகவே, மக்கள் அந்த மனிதரிடம், “நபி (ஸல்) அவர்கள், “ஷைத்தானிடமிருந்துஅல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு’ என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள் அதற்கு அவர், “எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டார்.

அறிவிப்பவர் : சுலைமான் பின் சுரத் (ரலி)

நூல் : புகாரி-3282 

கழுதையின் சப்தத்தை கேட்டால்..

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (அதனால் தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கின்றது. (அதனால் தான் கத்துகின்றது.)

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி-3303 

குழந்தைக்காகப் பாதுகாப்புத் தேட வேண்டும்

ஷைத்தானிடமிருந்து நமது குழந்தைகளை பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டினால் அல்லாஹ் குழந்தைகளை பாதுகாப்பான்.

3:36 فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ اِنِّىْ وَضَعْتُهَاۤ اُنْثٰىؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا وَضَعَتْؕ وَ لَيْسَ الذَّكَرُ كَالْاُنْثٰى‌‌ۚ وَاِنِّىْ سَمَّيْتُهَا مَرْيَمَ وَاِنِّىْۤ اُعِيْذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ

அவர் ஈன்றெடுத்த போது, “என் இறைவா! பெண் குழந்தையாக ஈன்றெடுத்து விட்டேனே” எனக் கூறினார். அவர் எதை ஈன்றெடுத்தார் என்பதை அல்லாஹ் நன்கறிவான். “ஆண், பெண்ணைப் போன்றவன் அல்ல. நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டேன். விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித் தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்” எனவும் அவர் கூறினார்.

அல்குர்ஆன் (3 : 36)

” “ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவருடைய மகனையும் தவிர’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்து விட்டு பிறகு, ” நான் இக் குழந்தைக்காகவும் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்னும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும்-என்ற 3:36-வது இறைவசனத்தை ஓதுவார்கள்.

அறிவிப்பவர் : சயீத் பின் முஸய்யப் (ரலி)

நூல் : புகாரி-3431 

நமது பிள்ளைகளுக்காக நாமே குர்ஆன் சூராக்களையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்த துஆக்களையும் வைத்து ஓதிப்பார்க்கலாம்.

நபி (ஸல்) அவர்கள், ஹஸன் (ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். “அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்” எனும் இந்தச் சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல் (அலை) மற்றும் இஸ்ஹாக் (அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள்-என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி-3371

தகடு தாயத்துகளைத் தொங்கவிடுவது இணை வைப்பாகும்

குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட தாளை மடித்து தாவீஸாகத் தயாரித்து கழுத்திலும், கையிலும், இடுப்பிலும் பலர் மாட்டிக் கொள்கிறார்கள். குறிப்பிட்ட சில வார்த்தைகளைச் செம்புத் தகட்டில் எழுதி கடைகளில் தொங்க விடுகிறார்கள். என்னைப் பார் யோகம் வரும் என்று எழுதப்பட்ட கழுதையின் படத்தை கடைகளில் தொங்க விட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் தட்டில் எதையோ எழுதி கறைத்துக் குடிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை கையிற்றின் மீதும் செம்புத் தட்டின் மீதும் தாளின் மீதும் வைத்து விடுவதால் இது இணை வைப்பாகும். நபி (ஸல்) அவர்கள் இதை தடை செய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் (பைஅத் செய்வதற்காக பத்து பேர் கொண்ட) சிறு கூட்டம் ஒன்று வந்தது. அவர்களில் ஒன்பது நபர்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கினார்கள். ஒருவரிடம் உறுதிமொழி வாங்கவில்லை. மக்கள் அல்லாஹ்வின் தூதரே ஒன்பது பேர்களிடத்தில் உறுதிமொழி வாங்கினீர்கள். இவரை விட்டு விட்டீர்களே என்று கேட்டார்கள்.

அதற்கு நபியவர்கள் அவர் மீது தாயத்து உள்ளது என்று கூறினார்கள். அப்போது அந்த மனிதர் தன் கையை உள்ளே விட்டு அந்த தாயத்தைக் கழற்றினார். அவரிடத்தில் நபியவர்கள் பைஅத் செய்த பிறகு யார் தாயத்தைத் தொங்க விடுகிறானோ அவன் இணை வைத்து விட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல் : அஹ்மத்-17422 (16781)

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரின் கை புஜத்தில் மஞ்சல் நிற உலோகத்தால் ஆன வளயத்தைக் கண்டார்கள். உனக்கு என்ன ஆனது? இது வென்ன? என்று நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) கேட்டார்கள். அதற்கு அவர் கை புஜத்தில் ஏற்பட்ட நோயின் காரணமாக (இதை அணிந்துள்ளேன்) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) அறிந்து கொள். இது உனக்கு சிரமத்தைத் தவிர வேறெதையும் அதிகப்படுத்தாது. உன்னை விட்டு இது எரிந்துவிடு. இது உன்மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் ஒரு போதும் நீ வெற்றியடைய முடியாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)

நூல் : அஹ்மத்-20000 (19149)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பிரயாணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி,”எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகின்ற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்” என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ பஷீர் அல் அன்சாரீ (ரலி)

நூல் : புகாரி-3005

மார்க்கம் காட்டித்தராத முறையில் ஓதிப்பார்க்கக் கூடாது

ஓதிப் பார்ப்பதற்கு நபி (ஸல்) அவர்களிடம் சிலர் அனுமதி கேட்ட போது ஓதிப் பார்க்கும் முறையைத் தன்னிடம் கூறுமாறு நபியவர்கள் கூறினார்கள். அதில் குறை ஏதும் இல்லை என்று அவர்கள் அங்கீகாரம் அளித்த பிறகே ஓதிப் பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள். எனவே நம் இஷ்டத்திற்கு ஆதாரமில்லாம் மனதில் தோன்றியவாரெல்லாம் ஓதிப்பார்க்கக் கூடாது. எப்படி ஓதிப்பார்க்க வேண்டும் என்று மார்க்கம் கற்றுத் தந்துள்ளது. அந்த அடிப்படையில் ஓதிப் பார்க்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிப்பார்க்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள். அப்போது அம்ர் பின் ஹஸ்ம் குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! தேள் கடிக்காக ஓதிப் பார்க்கும் வழக்கம் எங்களிடம் இருந்தது. (ஆனால்,) தாங்களோ ஓதிப் பார்க்க வேண்டாமெனத் தடை விதித்து விட்டீர்கள்!” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அ(வர்கள் ஓதிப்பார்த்து வ)ந்த வாசகத்தைக் கூறுமாறு கேட்டார்கள். அவர்கள் அ(ந்த வாசகத்)தைக் கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் (இதில்) குறையெதையும் காணவில்லை. உங்களில் ஒருவரால் தம் சகோதரருக்குப் பயனளிக்க முடியுமானால் அவ்வாறே பயனளிக்கட்டும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம்-4426 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (தவறான முறையில்) ஓதிப் பார்க்கிறவர் அல்லது சூடுபோட்டுக் கொள்பவர் (அல்லாஹ்வின் மீது) நம்பிக்கை வைப்பதை விட்டும் விலகி விட்டார்.

அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஃபா (ரலி)

நூல் : திர்மிதீ-2055 (1980)

சூரத்துல் பாத்திஹாவை வைத்து ஓதிப் பார்க்கலாம்.

நபி (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் (ஒரு பயணத்தின் போது) ஓர் அரபுக் குலத்தாரிடம் சென்றார்கள். அவர்களுக்கு அக்குலத்தார் விருந்தளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டி விட்டது. அப்போது அக்குலத்தார் (நபித்தோழர்களிடம் வந்து) “உங்களிடம் (இதற்கு) மருந்து ஏதும் உள்ளதா? அல்லது ஓதிப் பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா?” என்று கேட்டனர்.

அதற்கு நபித்தோழர்கள், “நீங்கள் எங்களுக்கு விருந்தளிக்க முன்வரவில்லை. ஆகவே, நீங்கள் எங்களுக்கு (ஒரு) குறிப்பிட்ட கூலியைத் தந்தாலே தவிர (வெறுமனே) உங்களுக்கு நாங்கள் ஓதிப் பார்க்க மாட்டோம்” என்று கூறினர். உடனே, நபித் தோழர்களுக்காக அக்குலத்தார் (முப்பது ஆடுகள் கொண்ட) ஓர் ஆட்டு மந்தையைக் கூலியாக நிர்ணயித்தார்கள். நபித் தோழர்களில் ஒருவர் (எழுந்து சென்று) “குர்ஆனின் அன்னை’ எனப்படும் “அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை ஓதித் தமது எச்சிலைக் கூட்டி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார்.

உடனே அவர் வலி நீங்கி குணமடைந்தார். (பேசியபடி) அவர்கள் ஆடுகளைக் கொண்டு வந்(து கொடுத்)தனர்.  நபித்தோழர்கள், “நபி (ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்காத வரை இதை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது” என்று (தமக்குள்) பேசிக்கொண்டு அவ்வாறே நபி (ஸல்) அவர்களிடம் (வந்து அனுமதி) கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு “அல் ஃபாத்திஹா’ அத்தியாயம் ஓதிப் பார்க்கத் தகுந்தது என்று உமக்கு எப்படித்தெரியும்? அந்த ஆடுகளை எடுத்துக் கொள்ளுங்கள்; எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : புகாரி-5736 

112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை ஓதி ஊதலாம்

நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து, அதில் “குல் ஹுவல்லாஹு அஹத்’, “குல் அஊது பிரப்பில் ஃபலக்’, “குல் அஊது பிரப்பின்னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி-5017 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு விட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் மீது ஊதி, தமது கையை (தம் உடல் மீது) தடவிக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்து போனார்களோ அந்த நோயின் போது, அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்கள் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி (ஸல்) அவர்கüன் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்) மீது தடவலானேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி-4439 

நபியவர்கள் கற்றுக்கொடுத்த பிரார்த்தனைகளை வைத்து…

நோயாளி குணமாவதற்காக செய்ய வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். குழந்தைகள் நோயுறும் போது அவற்றை நாம் ஓதிக் கொள்ள வேண்டும்.

நானும் ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கüடம் சென்றோம். ஸாபித் (ரஹ்) அவர்கள் “அபூஹம்ஸாவே! நான் நோய் வாய்ப்பட்டுள்ளேன்” என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதனால் ஓதிப் பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா?” என்று கேட்டார்கள்.

ஸாபித் (ரஹ்), “சரி (அவ்வாறே ஓதிப் பாருங்கள்)” என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்’ என்று கூறி ஓதிப் பார்த்தார்கள்.

(பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமüப்பாயாக! நீயே குணமüப்பவன். உன்னைத் தவிர குணமüப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமüப்பாயாக.)

அறிவிப்பவர் : அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்)

நூல் : புகாரி-5742 

உஸ்மான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) என்னை அழிக்கின்ற அளவிற்கு எனக்கு வலி ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வலி ஏற்பட்ட இடத்தில்) ஏழு முறை தடவி அவூது பிஇஸ்ஸதில்லாஹி வகுத்ரதிஹீ மின் ஷர்ரீ மா அஜிது என்று கூறு என்று சொன்னார்கள்.

பொருள் : அல்லாஹ்வின் கண்ணியத்தின் பொருட்டாலும் அவனது ஆற்றலின் பொருட்டாலும் நான் அடைந்த தீங்கிலிருந்து (அவனிடம்) பாதுகாப்புத் தேடுகிறேன்.

நான் இவ்வாறு கூறினேன். எனக்கிருந்த வலியை அல்லாஹ் போக்கினான். எனது குடும்பத்தார்களுக்கும் மற்றவர்களுக்கும் இவ்வாறு செய்யுமாறு நான் ஏவிக் கொண்டே இருக்கிறேன்.

அறிவிப்பவர் : உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி)

நூல் : மாலிக்-2715 (1479)

குழந்தைகளை வெளியில் விடக்கூடாத நேரம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டு விடுங்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : புகாரி-3280 

இறைவனை அதிகம் நினைக்க வேண்டும்

இறைவனை மறந்தவரிடம் ஷைத்தான் நன்கு விளையாடுவான். இறைநினைவு உள்ளவரிடம் ஷைத்தான் நெருங்மாட்டான். எனவே இறைவனை அதிகமாக நினைவுகூற வேண்டும்.

43:36 وَمَنْ يَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَيِّضْ لَهٗ شَيْطٰنًا فَهُوَ لَهٗ قَرِيْنٌ‏

எவர் அளவற்ற அருளாளனின் அறிவுரையைப் புறக்கணிக்கிறாரோ அவருக்கு ஒரு ஷைத்தானைச் சாட்டுவோம். அவன் அவருக்குத் தோழனாவான்.

அல்குர்ஆன் (43 : 36)

13:28 اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ‌ ؕ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.

அல்குர்ஆன் (13 : 28)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் அல்லாஹ்வை நினைவுகூற வேண்டும் என்று உங்களுக்கு வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன். எதிரி ஒருவரை பின்தொடர்ந்து விரட்டிச் செல்கிறான். அவர் பாதுகாப்பான கோட்டைக்குள் நுழைந்து தன்னை எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்கிறார். அல்லாஹ்வை நினைப்பதற்கு உதாரணம் இதுவாகும். அடியான் அல்லாஹ்வை நினைப்பதின் மூலமே தன்னை ஷைத்தானிடமிருந்து காத்துக்கொள்ள முடியும் என்று யஹ்யா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களுக்குக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹாரிஸ் அல்அஷ்அரீ (ரலி)

நூல் : அஹ்மத்-17170 (2790)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை” என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது” என்று சொல்கிறான்.

அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர்கூறாவிட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்” என்று சொல்கிறான்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : முஸ்லிம்-4106 

இறைத்தூதர் கற்றுத்தந்தவாறு நினைக்க வேண்டும்

இன்றைக்கு திக்ர் என்ற பெயரில் பல்வேறு அநாச்சாரங்கள் அறங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இருட்டறையில் கும்பலாக பள்ளிவாசல் அதிறும் அளவிற்கு கத்துகிறார்கள். அல்லாஹ் என்று கூறாமல் ஆஹ் என்றும் ஹு அல்லாஹ் ஹு ஹு அல்லாஹ் என்றும் அர்த்தமில்லாத வார்த்தைகளை கூறி இறைதியானத்தை கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இவையெல்லாம் ஷைத்தானுடைய செயல்களாகும். இவ்வாறு செய்தால் ஷைத்தானின் வலையில் விழலாமே தவிர ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு பெய இயலாது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வார்த்தைகளை கூறுவதன் மூலம் அவனிடமிருந்து பாதுகாப்பு பெற முடியும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் – லா இலாஹ இல்லல் லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் – என்று எவர் ஒரு நாüல் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும்.

அவரது கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவருடைய அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமான (தடவைகள் இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி-3293 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் கூறினார்கள் : லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு என்று காலையில் நீ கூறினால் மாலையில் மறுபடியும் நீ இதை கூறும் வரை ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் எல்லா தீமையிலிருந்தும் உனக்குப் பாதுகாப்பாக அமையும்.

பொருள் : அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகராக யாருமில்லை.

அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி)

நூல் : அஹ்மத்-26551 (25340)

நற்குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்

இறைநம்பிக்கை இறையச்சம் மனத்தூய்மை போன்ற நற்குணங்களை வளர்த்துக்கொண்டால் ஷைத்தான் நம்மை வழிகெடுக்க முடியாது.

15:42 اِنَّ عِبَادِىْ لَـيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطٰنٌ اِلَّا مَنِ اتَّبَـعَكَ مِنَ الْغٰوِيْنَ

எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அல்குர்ஆன் (15 : 42)

16:99 اِنَّهٗ لَـيْسَ لَهٗ سُلْطٰنٌ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ

நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு (ஷைத்தானிற்கு) அதிகாரம் இல்லை.

அல்குர்ஆன் (16 : 99)

7:201 اِنَّ الَّذِيْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰۤٮِٕفٌ مِّنَ الشَّيْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَ‌ۚ

(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள்.

அல்குர்ஆன் (7 : 201)

ஃபஜர் தொழுக வேண்டும்

ஃபஜர் தொழுகை நமக்கு உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்துகிறது. ஃபஜர் தொழுகாவிட்டால் ஷைத்தானின் வலையில் மனிதன் விழுந்துவிடுகிறான். ஷைத்தான் அவனுக்கு சோம்பலையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூனு முடிச்சுகளைப் போட்டுவிடுகிறான். ஒவ்வொரு முடிச்சின்போதும் “இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ உறங்கு’ என்று கூறி (உங்களை விழிக்கவிடாமல் உறங்க வைத்து)விடுகிறான். நீங்கள் (அவனது கூற்றை ஏற்காமல்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது.

நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் தொழுது விட்டால் முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். இல்லையெனில் மனக்குழப்பத்துடனும், சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவீர்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி-1142 

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் பொழுது விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : புகாரி-1144

குர்ஆன் ஓத வேண்டும்

வீடுகளில் நற்காரியங்களை அதிகமாக செய்வதன் மூலம் ஷைத்தானை விரட்டலாம். இது தான் ஷைத்தானை விரட்டுவதற்கான வழியாகும். இதை அறியாத பலர் பல்வேறு விதமான மூடநம்பிக்கைகளிலும் இணைவைப்புக்காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். “அல்பகரா’ எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்-1430 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அல்பகரா’ எனும் (2ஆவது) அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களை (285, 286) எவர் இரவில் ஓதுகின்றாரோ அவருக்கு அந்த இரண்டுமே போதும்!

அறிவிப்பவர் : அபூ மஸ்ஊத் (ரலி)

நூல் : புகாரி-5040

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வானங்கள் மற்றும் பூமியை படைப்பதற்கு இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு அல்லாஹ் ஒரு புத்தகத்தை எழுதினான். அதிலிருந்து இரு வசனங்களை சூரா அல்பகராவின் இறுதியில் அல்லாஹ் அருளியுள்ளான். மூன்று இரவுகள் ஒரு வீட்டில் அவை ஓதப்பட்டால் அவ்வீட்டை ஷைத்தானால் நெருங்க முடியாது.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல் : திர்மிதீ-2882 (2807)

சஜ்தாவை அதிகப்படுத்த வேண்டும்

சஜ்தா செய்யாத காரணத்தால் தான் ஷைத்தான் வழிகெட்டான். அந்த சஜ்தாவை இறைவனுக்கு நாம் அதிகமாக செய்தால் ஷைத்தான் அழ ஆரம்பிக்கிறான். நம்மை விட்டு விலகிச் செல்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஆதமின் மைந்தன் (-மனிதன்) சஜ்தா (சிரவணக்கத்திற்கான) வசனத்தை ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் ஷைத்தான் அழுதவாறே “அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் சிரவணக்கம் செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் சிரவணக்கம் செய்துவிட்டான். அவனுக்குச் சொர்க்கம் கிடைக்கப்போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்குச்) சிரம் பணியும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே, எனக்கு நரகம்தான்” என்று கூறியபடி விலகிச்செல்கிறான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்-133 

தொழும் போது வேறு காரியங்களில் ஈடுபடக்கூடாது

தொழுதுகொண்டிருக்கும்போது திரும்பிப் பார்ப்பது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “அ(வ்வாறு செய்வ)து ஓர் அடியாருடைய தொழுகையை ஷைத்தான் பறித்துச் செல்வ(தற்கு வழிவகுப்ப)தாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி-751

தொழும் போது யாரையும் குறுக்கே செல்லவிடக் கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி-3274 

ஸஃப்பை நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (தொழுகையில்) உங்கள் வரிசைகளை நேராக்குங்கள். நெருக்கமாக நில்லுங்கள். (உங்கள்) கழுத்துகளை நேராக அமைத்துக்கொள்ளுங்கள். முஹம்மதுடைய உயிர் எவனது கைவசம் உள்ளதோ அந்த இறைவனின் மீதாணையாக ஆட்டுக்குட்டிகளைப் போன்று ஷைத்தான்கள் வரிசைகளுக்கிடையில் நுழைவதை நான் காண்கிறேன்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : நஸாயீ-815 (806)