Tamil Bayan Points

11) கண்டித்து திருந்துபவர் யார்?

நூல்கள்: பைபிளில் நபிகள் நாயகம்

Last Updated on July 27, 2022 by

11) கண்டித்து திருந்துபவர் யார்?

இயேசு இவ்வுலகை விட்டு விடை பெறும் இறுதிக் கட்டத்தில் தம் சீடர்களுக்கு பல்வேறு அறிவுரைகளைக் கூறினார். அந்த அறிவுரைகளுடன் தான் சென்ற பிறகு என்ன நிகழும் என்பதையும் கூறினார். இனி நிகழும் என்று அவர் அறிவித்தவற்றில் நபிகள் நாயகம் வருகையும் அடக்கமாகும்.

இதோ புதிய ஏற்பாட்டில் உள்ள யோவான் 16:5 முதல் 16:15 முடிய உள்ள வசனங்களில் அந்த முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது.

இப்பொழுதே என்னை அனுப்பினவரிடம் போகிறேன். எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கம் நிறைந்திருக்கிறது. ஆனாலும் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நான் போய்விடுகிறது உங்களுக்கு நலம், நான் போகாதிருந்தால் சகாயரானவர் உங்களிடம் வரமாட்டார்.

போவேனேயாகில் அவரை உங்களிடம் அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதபடியால் பாவத்தைக் குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாத படி நான் என் பிதாவினிடம் போகிறபடியால் நீதியைக் குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயத்தீர்க்கப்பட்டபடியால் நியாயத் தீர்ப்பைக் குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.

இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்பொழுதோ நீங்கள் அவைகளைத் தாங்க முடியாது. சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் சுயமாய்ப் பேசாமல், வரப் போகிறவைகளை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பாராதலால் என்னை மகிமைப்படுத்துவார்.

(யோவான் 16:5-15)

நான் போவதுடன் தீர்க்கதரிசிகளின் வருகை முழுமை பெறாது. இன்னொருவர் வருவார் என்கிறார். அவர் வருதலால் நான் போதுவது நலம் என்கிறார். அதாவது தன்னை விட உயர்ந்தவர் ஒருவர் வர இருந்தால் மட்டுமே நான் போவது நலம் என்று இயேசு கூறியிருக்க முடியும்.

வரக்கூடிய அவர் என்னைப் போல் வலது கண்ணத்தில் அடித்தால் இடது கண்ணத்தைக் காட்டச் சொல்ல மாட்டார். மாறாக உலகைக் கண்டித்துத் திருத்துவார் என்கிறார்.

தயவு தாட்சன்யமின்றி மிகவும் கண்டிப்பான முறையில் திருத்தியவர் நபிகள் நாயகம் தான். திருட்டு, விபச்சாரம், கொலை போன்ற கொடுஞ்செயல்களையெல்லாம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியவர் நபிகள் நாயகம் என்பது உலகறிந்த உண்மை.

”சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்……” என்கிறார்.

மற்ற சிலரைப் போல் வெறும் வணக்க வழிபாடுகளுடன் அவர் நின்றுவிட மாட்டார். பிறப்பு முதல் இறப்பு வரை, விழித்தது முதல் உறங்குவது வரை மனிதன் சந்திக்கும் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்துவார். சகல சத்தியங்களிலும் அனைத்துத் துறைகளிலும் அவர் வழிகாட்டுவார் என்று இயேசு கூறியது அப்படியே நபிகள் நாயகத்துக்குப் பொருந்திப் போகின்றது.

நான் செய்த போதனைகளிலிருந்தும் அவர் எடுத்துரைப்பார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் திருக்குர்ஆனில் இயேசுவின் போதனைகள் உள்ளன. நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளிலும் இத்தகைய போதனைகள் உள்ளன.

நபிகள் நாயகம் அவர்கள் இயேசு கூறியதைப் போல் அவரை மகிமைப்படுத்தினார்கள்.

தந்தையின்றிப் பிறந்தார், குழந்தைப் பருவத்தில் பேசினார். அற்புதங்களை நிகழ்த்தினார். சாத்தானால் தீண்டப்படாமல் இருந்தார். என்றெல்லாம் பலவாறாக இயேசுவை நபிகள் நாயகம் போற்றிப் புகழ்ந்தார்கள். ஆக இந்த முன்னறிவிப்பும் வார்த்தைக்கு வார்த்தை நபிகள் நாயகத்துக்கு அப்படியே பொருந்துகிறது.