Tamil Bayan Points

11) இணைவைப்பிற்கு எதிராக நபிமார்களின் வீரியப் பிரச்சாரம்

நூல்கள்: ஏகத்துவமும் இணை வைப்பும்

Last Updated on January 19, 2023 by

இணைவைப்பிற்கு எதிராக நபிமார்களின் வீரியப் பிரச்சாரம்

இணைவைப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்காக அதிகமான இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் இணைவைப்பிற்கு எதிராக மக்களிடத்தில் பிரச்சாரம் செய்தார்கள்.

அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம். அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரும் அச்சமுதாயத்தில் இருந்தனர். வழிகேடு உறுதியானவர்களும் இருந்தனர். எனவே பூமியில் பிரயாணம் செய்து பொய்யெனக் கருதியோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனியுங்கள்!

அல்குர்ஆன் (16 : 36)

என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்! என்பதை அறிவிக்காமல் (முஹம்மதே!) உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை.

அல்குர்ஆன் (21 : 25)

அல்லாஹ்வைத் தவிர (எதையும்) வணங்காதீர்கள்! என்று (போதிக்க) அவர்களுக்கு முன்னரும் அவர்களுக்குப் பின்னரும் மக்களிடம் தூதர்கள் வந்தனர்.

அல்குர்ஆன் (41 : 14)

நூஹ் (அலை)

நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன் என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் (7 : 59)

ஹூத் (அலை)

ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா? என்று அவர் கேட்டார்.

அல்குர்ஆன் (7 : 65)

ஸாலிஹ் (அலை)

ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து சான்று வந்துள்ளது. அது உங்களுக்குச் சான்றாக உள்ள அல்லாஹ்வின் ஒட்டகம். அல்லாஹ்வின் பூமியில் அதை மேய விட்டு விடுங்கள்! அதற்குத் தீங்கு இழைக்காதீர்கள். (அவ்வாறு செய்தால்) உங்களுக்குத் துன்புறுத்தும் வேதனை ஏற்படும் என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் (7 : 73)

ஷுஐப் (அலை)

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் (7 : 85)

முஹம்மத் (ஸல்)

வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்! என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்! எனக் கூறி விடுங்கள்!

அல்குர்ஆன் (3 : 64)

நான் நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் யார்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நான் ஒரு நபி என்றார்கள். நான் நபி என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ் என்னை (தனது செய்தியுடன்) அனுப்பி உள்ளான் என்று கூறினார்கள். நான் என்னென்ன செய்திகளுடன் அனுப்பியுள்ளான்? என்று கேட்டேன். அதற்கு இரத்த உறவுகளைப் பேணி வாழ வேண்டும்; சிலை (வழிபாடு)களை ஒழிக்க வேண்டும்; இறைவன் ஒருவனே; அவனுக்கு இணையாக எதுவுமில்லை எனும் செய்திகளுடன் என்னை அனுப்பினான் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அம்ர் பின் அபசா (ரலி)

நூல் : முஸ்லிம் (1512)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன். அல்லாஹ்விற்கு எந்த இணையும் கற்பிக்காமல் அவனை மட்டும் வணங்குவதற்கு மக்களை அழைப்பதற்காக அடியார்களிடத்தில் அல்லாஹ் என்னை அனுப்பியுள்ளான்.

அறிவிப்பவர் : மஹ்மூத் பின் லபீத் (ரலி)

நூல் : அஹ்மத் (22513)

நபிமார்கள் பிள்ளைகளுக்குச் செய்த உபதேசம்

இஸ்லாமை விட்டும் வெளியேற்றக்கூடிய கொடிய பாவமாக இணைவைப்பு இருப்பதால் நபிமார்கள் இணைவைப்பு குறித்து தங்கள் பிள்ளைகளுக்கு எச்சரிக்கை செய்தார்கள்.

யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்? என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள் என்றே (பிள்ளைகள்) கூறினர்.

அல்குர்ஆன் (2 : 133)

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! இணைகற்பித்தல் மகத்தான அநீதியாகும் என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் (31 : 13)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நூஹ் (அலை) அவர்களுக்கு மரணம் நெருங்கிய போது தனது மகனிடத்தில் இணைவைப்பதை விட்டும் உன்னை நான் தடுக்கிறேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : அஹ்மத் (6295)