Tamil Bayan Points

11) தவ்ஹீதும் , ஷிர்க்கும்

நூல்கள்: இஸ்லாத்தின் அடிப்படைகள்

Last Updated on April 23, 2023 by

பாடம் 10

தவ்ஹீதும் , ஷிர்க்கும்

தவ்ஹீத் என்ற வார்த்தையின் பொருள் என்ன?

தவ்ஹீத் என்ற வார்த்தையின் பொருள் ”ஒருமைப்படுத்துதல்”  அல்லது ”ஏகத்துவப் படுத்துதல்” என்பதாகும்.

தவ்ஹீத் (ஓரிறைக் கொள்கை)  என்றால் என்ன?

அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே இறைவன் அல்லாஹ் ஒருவன்தான். அல்லாஹ்வுக்கு நிகராக எவரும், எதுவும் இல்லை. அல்லாஹ் ஒருவன்தான் வணக்கத்திற்கு தகுதியானவன். அல்லாஹ்வுடைய பண்புகள், ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் வேறுயாருக்கும் இல்லை என்றும் உறுதியாக நம்புவதே தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையாகும்.

 

ஏகத்துவக் க­மாவின் பொருள் என்ன?

ஏகத்துவக் க­மா ”லாயிலாக இல்லல்லாஹ்” என்பதாகும். இதன் பொருள்  வணக்கத்திற்குரிய கடவுள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதாகும்.

அடியார்கள் அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? அல்லாஹ் அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன?

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :  அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யும் கடமை, அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை வணங்குவதாகும். அல்லாஹ் அடியார்களுக்குச் செய்யும் கடமை தனக்கு எதையும் இணை கற்பிக்காதவரை வேதனை செய்யாமல் இருப்பதாகும்.

அறிவிப்பவர் :  முஆத்(ர­)    நூல்: புகாரீ (2856)

”ஷிர்க்” என்ற வார்த்தையின் பொருள் என்ன?

”ஷிர்க்” என்ற வார்த்தையின் பொருள் இணைவைத்தல் என்பதாகும்.

”ஷிர்க்” (இணைவைத்தல்) என்றால் என்ன?

அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை. எதுவும் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள், ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும் அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்த ஒன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் இணை கற்பித்தல் ஆகும்.

பாவங்களில் மிகப்பெரும் பாவம் எது?

பாவங்களில் மிகப்பெரியது இணைவைத்தல் ஆகும்.

 

وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَابُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ(13) سورة لقمان

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது ”என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்” என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 31:13)

 

இணைவைத்தல் பாவத்தை அல்லாஹ் மன்னிப்பானா?

ஒருவன் இணைவைத்த நிலையில் மரணித்துவிட்டால் அந்தப் பாவத்தை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான்.

 

إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ افْتَرَى إِثْمًا عَظِيمًا(48) سورة النساء

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன் 4:48)

 

இணைவைத்தால் நிரந்த நரகமா?

ஆம்! இணைகற்பித்தல் பாவத்தைச் செய்தவருக்கு மறுமையில் நிரந்தர நரகமே தண்டனையாகும்.

 

إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ(72) سورة المائدة

அல்லாஹ்வுக்கு *இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (அல்குர்ஆன் 5:72)

 

இணைவைப்பவர் நல்லறங்கள் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா?

ஒருவர் இணைவைத்த நிலையில் நல்லறங்கள் செய்தால் அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். அவருடைய நல்லறங்கள் யாவும் அழிந்து விடும்.

இணைகற்பிக்காதவர்கள் செய்யும் நல்லறங்களையே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.

 

لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنْ الْخَاسِرِينَ(65) سورة الزمر

”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; (அல்குர்ஆன் 39:65)

 

அல்லாஹ்விற்கு இணைகற்பிக்காமல் மரணித்தவருக்கு சொர்க்கம் நி்ச்சயமா?

 

ஆம்! அல்லாஹ்விற்கு இணைகற்பிக்காமல் ஒருவர் மரணி்த்தால் அவர் நிச்சயம் சுவர்க்கம் செல்வார்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார்.

நூல் : ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ர­)   நூல் : புகாரீ (1238)